உலகம் யாவையும் [சிறுகதை] 3

பகுதி

[ 3 ]

நான் காரி டேவிஸை பார்க்க பின்மதியம் அவரது குடிலுக்குச் சென்றேன். அது திறந்தே கிடந்தது, அவர் இல்லை. அருகில் எங்காவது நிற்பார் என்று நினைத்தேன். கருணாகரன் ‘சாயிப்பு இப்பம் அங்ஙோட்டு போயி’ என்றார். கதவு திறந்து கிடக்கிறதே என்றேன். ‘சாயிப்பினு பூட்டு இல்லா’ என்று சிரித்தார். நான் சாலைக்கு வந்தபோது காரி டேவிஸ் காலையில் அவர் துவைத்து காயவைத்த அந்த காக்கி ஆடையுடன் ஒரு ஜீப்பில் அமர்ந்திருந்தார். ஜீப்பில் வெள்ளை ஆடை அணிந்து நீண்ட தாடி வைத்த ஒரு பிரம்மசாரியும் இருந்தார்.

நான் அருகே சென்றேன். ‘ஹல்லோ’ என்றார். ‘எங்கே செல்கிறீர்கள்?’ என்றேன். ‘மேற்குமலைக்கு. அம்பாதேவி ஆசிரமம் சென்று அங்கிருந்து போய் மேற்கு மலைச்சரிவை பார்க்கப்போகிறேன்’ . ’சரி’ என்றேன். ‘நீயும் வருகிறாயா? ‘ என்றார் ‘வருகிறேன்’ ‘ஏறிக்கொள்’ நான் அப்படியே ஏறிக்கொண்டேன். சொல்லிக்கொள்ளவேண்டாமா என்று அவர் கேட்பாரென நினைத்தேன். சொல்லிக்கொண்டு செல்லும் ஆளே அல்ல போல.

ஜீப் சேறு நிறைந்த சாலைகள் வழியாக குலுங்கிக் குலுங்கிச் சென்றது. காரி டேவிஸ் வெளியே ஓடும் சிறு தகரவீடுகளை, பெரிய பசுக்கள் அசைபோட்டுக்கிடந்த சந்துகளை, நீர்த்தூவிகள் பீரிட்டு பீரிட்டு சுழன்ற உருளைக்கிழங்கு வயல்சரிவுகளை, வேடிக்கை பார்த்தபடி வந்தார். சிறுகுழந்தைகளுக்கு உற்சாகமாக கையை ஆட்டினார். ஒருநாய் குரைத்தபடி ஜீப்பை துரத்தியபோது என்னை நோக்கிச்சிரித்தார். நான் அவரிடம் பேச விரும்பினேன். ஆனால் ஜீப்பில் பேசமுடியாதென்று தோன்றியது. அம்பாதேவி ஆசிரமத்திற்குச் சென்று இறங்கியதும் சடைமகுடம் அணிந்து காவி தரித்த வயோதிகப்பெண்ணான அம்பாதேவி அவரே வந்து காரி டேவிஸை வரவேற்றார். ’ஹரி ஓம்’ என்று சொல்லித் தேவி வணங்கியதும் ’Ohm! The absolute is adorable!’ என்று சொன்னார் காரி டேவிஸ். பின் என்னை நோக்கி கண்ணைச்சிமிட்டினார்.

தேவியுடன் சில உபசாரங்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக வரவிருக்கும் இளம்துறவிக்காக இருவரும் ஆசிரமத்தின் திண்ணையில் காத்திருந்தோம். முற்றம் முழுக்க விதவிதமான மலர்கள் பூத்துக்கனத்து செடிகள் தளர்ந்து வளைந்து நின்றன. இடுப்பில் கைக்குழந்தையை ஏற்றிக்கொண்ட அக்காக்குழந்தைகளைப்போல. நான் ‘உங்களைப்பற்றித்தான் படித்துக்கொண்டிருந்தேன்’ என்றேன். ‘ஆர்வமூட்டுகிறதா?’ என்று கேட்டு காரி டேவிஸ் கண்ணடித்தார். நான் சிரித்தேன். ‘ஆனால் உங்கள் போராட்டம் பற்றி எனக்கு சந்தேகமாக இருக்கிறது’

‘சொல்’ என்றார். ‘நீங்கள் உங்கள் கருத்தை எடுத்துச்செல்ல விரும்பும் நாட்டுக்குச் செல்கிறீர்கள். அங்கே அவர்களின் சட்டங்களை மீறி சிறைசென்று சிறையில் வாழ்கிறீர்கள்…இப்படி சிறைசெல்வதன் மூலம் என்ன அடைய நினைக்கிறீர்கள்?’ காரி டேவிஸ் புன்னகையுடன் ‘சட்டமறுப்பு என்பதை காந்தியின் நாட்டுக்குச் சொல்லவேண்டுமா என்ன? எந்தச் சட்டம் தன் அடிப்படை மனிதத்தன்மைக்கோ ஆன்மீகமேன்மைக்கோ தடையாக ஆகிறதோ அதை மீற எந்த மனிதனுக்கும் உரிமை உண்டு. மீறியாகவேண்டும் என்ற கடமையும் உண்டு’

’ஆனால் நீங்கள் வேறு நாடுகளுக்குச் செல்கிறீர்கள்…’ என்றேன் ‘எனக்கு என ஒரு நாடு இல்லையே’ என்றார். என் கேள்வியை எப்படி முன் வைப்பதென்று தெரியவில்லை. ’நீங்கள் இதை ஒரு போராட்டமாகச் செய்கிறீர்கள். ஆனால் அதை தனிமனிதராக நின்றுசெய்யும்போது விளையாட்டாக ஆகிவிடுகிறது’ என்றேன். அவர் ‘நான் கருத்துக்களை எடுத்துச்செல்கிறேன். ஓர் உலகம் என்ற என் கனவை நான் செல்லும் இடங்களில் விதைக்கிறேன்’ என்றார். ‘அதற்கு ஏன் சிறைக்குச் செல்லவேண்டும்?’ என்றேன்.

‘இந்த உலகமே கருத்துக்களால் ஆனதாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் ஊடகங்கள் பெருகும்தோறும் கருத்துக்கள் வந்து குவிகின்றன. கோடானுகோடி கருத்துக்கள். எல்லா கருத்துக்களுக்குமே அவற்றுக்கான தர்க்கம் உண்டு. ஓரளவு தேவையும் இருக்கலாம். ஆனால் இன்று எவரும் கருத்துக்களை கூர்ந்து கவனிப்பதில்லை. இத்தனை கோடிக் கருத்துக்களில் எந்த கருத்து கவனிக்கப்படும்? எது ஏற்கப்படும்? ஒரு நூலில் பல்லாயிரம் வரிகள் இருந்தால் எந்த வரி புரட்டிச்செல்லும் வாசகன் கவனத்தில் விழும்?’ அவர் என் தோளைத் தொட்டு கூர்ந்து நோக்கிச் சொன்னார் ‘எந்த வரி அடிக்கோடிடப்பட்டிருக்கிறதோ அது….’

‘இளம் நண்பனே, எப்படி ஒருவரியை அடிக்கோடிடுவது? இரண்டே வழிகள்தான். ஒன்று, அதிகாரம் மூலம். இன்று நம்மிடையே பரவலாக இருக்கும் மிகப்பெரும்பாலான கருத்துக்கள் அதிகாரத்தால் முன்வைக்கப்பட்டு பிரச்சாரம் மூலம் நம் தலைக்குள் ஏற்றப்பட்டவை. ஆனால் நாளைக்கான ஒரு கருத்துக்கு அத்தகைய அதிகாரபலம் இருப்பதில்லை. அதை எப்படி அடிக்கோடிடுவது?’ அவர் மீண்டும் என் தோளைத் தட்டினார் ‘தியாகம் மூலம்…அது ஒன்றுதான் வழி. என் கருத்துக்காக நான் சிறைசென்றால் அதை நான் புறக்கணிக்க முடியாத ஒன்றாக முன்வைக்கிறேன். ஒரு கருத்துக்காக ஒருவன் தன் உடைமைகளையும் உயிரையும் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தியாகம்செய்யத் தயாரென்றால் அந்தக்கருத்துக்கு நம்பமுடியாத வல்லமை வந்துவிடுகிறது. அதுதான் காந்திய வழி’

நான் பெருமூச்சு விட்டென். அவர் சொன்னார் ‘நான் ஒரு நாட்டுக்குச் செல்லும்போது அந்த நாட்டைப்பற்றி அறிந்துகொண்டுதான் செல்வேன். ஏற்கனவே அந்த நாட்டில் ஒரு சிந்தனை இயக்கம் இருக்கிறது என்பதை உறுதிசெய்துகொள்வேன். அங்கே சென்று அவர்களின் சட்டத்துக்கு சவால் விடுவேன். நீதிமன்றத்தில் நானே என் தரப்பை முன்வைப்பேன். நாளிதழ்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் எழுதுவேன். நான் சிறையில் இருக்கும் நாளெல்லாம் என் கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருப்பேன். என் கருத்தை அந்த சிந்தனைச்சூழலில் முன்வைக்க எனக்கு இருக்கும் மிகச்சிறந்த வழி அதுதான்’

அந்த இளம்துறவி வந்ததும் நாங்கள் கிளம்பினோம். எமரால்ட் எஸ்டேட்டை ஒட்டிச்சென்ற வனப்பாதை ஒரு கட்டத்தில் மேலே ஏற ஆரம்பித்தது. பிரம்மாண்டமான பச்சைக்குவியல்களாக அமைதியில் ஆழ்ந்து கிடந்தன மலையடுக்குகள். தூரத்து மலை வானத்தை வெட்டும் விளிம்பில் மெல்ல சிறு புள்ளிகளாக வரையாடுகள் நகர்ந்தன. மாலை இன்னமும் சிவக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒளி நன்றாக மங்கி கொஞ்சம் நடுக்கும்படி குளிரடித்தது. நான் கனத்த ஸ்வெட்டர் போட்டிருந்தேன். ஊட்டியில் நான் அதை கழற்றுவதேயில்லை. காரி வெறும் காக்கிஷர்ட் மட்டும்தான் அணிந்திருந்தார்.

எதிர்பாராமல் காரி அவரே பேச ஆரம்பித்தார். ‘இங்கு வருவது வரை சென்ற நாலரை வருடங்களாக தென்னாப்ரிக்காவின் சிறையில் இருந்தேன்’ என்றார். நான் ஒரு நிமிடம் நின்றுவிட்டேன் ‘நாலரை வருடங்களா?’ ‘ஆம். ஏழுவருடம் தண்டனை. ஆனால் விடுதலைசெய்துவிட்டார்கள்’ நான் அவரையே பார்த்தேன். அவர் பேசிக்கொண்டே மலை ஏறினார். ‘இதுவரை தனிமைச்சிறையில் இருந்ததில்லை. இம்முறை தனியாக அடைத்துவிட்டார்கள். நாலரைவருடங்களில் மொத்தமே நூறு சொற்றொடர்கள் கூட பேசவில்லை. எழுத அனுமதி இல்லை. வாசிக்க ஏதும் இல்லை. எந்த ஊடகத்தொடர்பும் இல்லை. முழுமையான தனிமை…’

‘தனிமை ஒரு நல்ல பயிற்சி’ என்று அவர் தொடர்ந்தார். ‘தனிமையில் நாம் சுற்றிலும் உள்ள காற்றில் நம் அகத்தை பிரதிபலித்து பார்த்துக்கொள்கிறோம். நம் மனதில் உள்ள எல்லாம் ஒன்று நூறு பல்லாயிரமாக தெரிய ஆரம்பிக்கின்றன. தன்னை தானே தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு தனிமைதான் பெரிய நரகம். உண்மையில் மிகப்பெரும்பாலான மனிதர்களின் நரகம் தனிமைதான். சார்த்ர் சொன்னது தவறு.நரகம் என்றால் பிறர்தான் என்றார் அவர். அவரை தனிமையில் அடைத்திருந்தால் கருத்தை மாற்றிக்கொண்டிருப்பார்.அவரது No exit நாடகத்தில் தனிமைச்சிறை இல்லை. கூட்டுச்சிறைதான்’

‘என்ன செய்தீர்கள்?’ என்றேன். ‘சிந்தனைசெய்தேன். என் வேதாந்தக்கல்வி முழுக்க அதற்குப் பயன்பட்டது’ என்றார் காரி. ‘தனிமைச்சிறையின் சிக்கல் என்னவென்றால் நமக்கு அங்கே புறவுலகம் இல்லை என்பதுதான். நான் இருந்தது எட்டடிக்கு பத்தடி அறையில். வெள்ளைநிறமான சுவர்கள். இரண்டாள் உயரத்தில் இரு சன்னல்கள். கதவை மூடிவிட்டார்கள் என்றால் நான்குபக்கமும் சுவர்தான். நான் மட்டுமே அதற்குள் இருப்பேன். என் உடலை நான் பார்க்கமுடியாதாகையால் நான் பருவடிவமாக அங்கே இருப்பதே என் பிரக்ஞைக்கு தெரியாது. என் பிரக்ஞை மட்டும் அங்கே தனியாக இருப்பது போல தோன்றும்…

’அதுதான் பிரச்சினை. தூய போதம் மட்டும் இருப்பது. அதற்கு வடிவம் இல்லை. போதம் எப்போதும் புறவுலகப்பொருட்களில் தன்னைப் பிரதிபலித்துத்தான் கண்டுகொண்டிருக்கிறது. வெற்றுச்சுவர்களின் நடுவே தேங்கியிருக்கும் போதம் தன்னைத்தானே விதவிதமாக உணர்வதை மெல்லமெல்ல நிறுத்திக்கொள்கிறது. போதம் என்பது சூழலில் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வுதான். அந்த நிகழ்வு நின்றுபோகும்போது மெல்ல அது கரைந்து போகிறது. போதம் கரைந்ததும் அபோதம் பெரும் சீற்றத்துடன் வெளிவருகிறது. ஒரு வருடத்துக்குள் தனிமைச்சிறையில் அகப்பட்டவன் மனநோயாளி ஆகிவிடுவான்’ காரி சொன்னார்.

‘ஆம், ஹென்றி ஷாரியரின் பாப்பிலோன் நாவலில் வாசித்திருக்கிறேன்’ என்றேன். காரி டேவிஸ் சிரித்தார் ‘ஆம் உலகுக்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்த பிரான்ஸின் கண்டுபிடிப்பு அது…’ மேலும் சிரித்து ‘உலகுக்கு தத்துவத்தை கற்றுக்கொடுத்த இன்னொருநாடுதான் விஷவாயு அறைகளை கண்டுபிடித்தது’ நான் அந்த நேர இறுக்கம் தளர்ந்து சிரித்தேன். ‘நீங்கள் எப்படி அந்த வதையை எதிர்கொண்டீர்கள்?’ என்றேன்.

‘என் போதம் தன்னை உணர்ந்துகொள்ள எனக்கு வெளியே ஓர் உலகம் தேவை. அதைத்தான் வேதாந்தஞானம் மூலம் உணர்ந்தேன்’ என்றார் காரி டேவிஸ். ’ஆனால் வெளியுலகம் என்பது என் அகம் உருவாக்கிக்கொள்வது மட்டுமே. அதையும் வேதாந்தம் சொல்கிறது. அதாவது என் போதத்துக்கு வெளியுலகம் என்ற ஒரு பாவனை தேவை . ஒரு மாயை. அதை உருவாக்கினேன். சாப்பாட்டுத்தட்டை வளைத்து அந்தச்சுவரில் உலகை வரைந்தேன். நான் இருப்பது உலகின் மையம். அந்த இடம் இமயமலையில் ஒரு புள்ளி. அங்கிருந்து கிழக்கு நோக்கி நின்றேன். என் முன்னால் கிழக்காசியாக்கண்டம். பின்னால் ஐரோப்பா. இடதுகைப்பக்கம் ஆர்ட்டிக். வலது கைப்பக்கம் அண்டார்ட்டிக்…’

’ஒவ்வொரு நிலப்பகுதியிலும் உள்ள நகரங்களை மலைத்தொடர்களை ஆறுகளை கடல்களை வரைந்தேன்.அங்குள்ள மனிதர்களைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் உதிரிச்சொற்களில் குறித்து வைத்தேன். அதன் பின் அந்த உலகில் நான் வாழ ஆரம்பித்தேன். நினைத்ததும் ஆல்ப்ஸ் மலைகளில் இருப்பேன். நான்கு காலடி எடுத்து வைத்தால் இமயமுகடு. அங்கிருந்து பசிபிக்கின் ஆழ்கடல்வெளியை நான்கு காலடிகளில் தொட்டு விடமுடியும். அட்லாண்டிக்கில் நின்றுகொண்டு அரேபிய பாலைவனத்தை கைநீட்டி தொடமுடியும். ஒரு விராட புருஷனாக நான் உலகை நிறைத்து பூமியெங்கும் பரவிக்கிடந்தேன்’

’ஒவ்வொரு நாளும் நான் ஒவ்வொரு நிலத்தை தேர்ந்தெடுத்தேன், அங்கே அந்த மனிதர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒருவனாக ஆனேன். பின் அந்த நிலத்தை முற்றிலும் சம்பந்தமில்லாத இன்னொரு நிலத்துடன் இணைத்தேன். ஹான் சீனர்கள் ஸ்வாஹிலி பேசச் செய்தேன். லத்தீனமேரிக்காவில் தமிழ் பண்பாட்டைக் கொண்டு சென்றேன். சியரா லியோனில் கோயம்புத்தூரை கலந்தேன். என் உடல் ஒரு பெரிய மின்கம்பிப்பின்னலாக ஆகியது. என் வழியாக கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டன. மனித உள்ளங்கள் ஒன்றை ஒன்று கண்டுகொண்டன. என் வழியாக நிலங்கள் இணைந்தன. கடல்கள் ஒன்றுக்குள் ஒன்று பொங்கிப்பெருகின.’

’சிலசமயம் நானே ஒரு பெரிய நிலப்பகுதியாக அந்த நிலங்கள் நடுவே விழுந்து கிடந்தேன். என்மேல் மலைகள் எழுந்தன. கடல்கள் அலையடித்தன. என் மலைகளில் இருந்து கடல்களை நோக்கி பேராறுகள் பெருக்கெடுத்தோடின. என் உச்சிகளில் குளிர்ந்த மேகங்கள் ஒளிவிட்டன, என் ஆழங்களில் கண்களில்லா கரிய மீன்கள் இருட்டையே ஒளியாக அறிந்தபடி சிறகலைத்து பறந்தன. என் மேல் பழை பெய்தது. பசுமை புல்லரித்து எழுந்தது. நான் என் உடலின் உப்பையெல்லாம் கனிகளின் இனிமையாக ஆக்கினேன். மலர்களின் வண்ணங்களாகவும் நறுமணங்களாவும் தேனாகவும் மாற்றினேன்’.

’சிலசமயம் பூமியின் மொத்த வேதனையையும் நான் அறிந்துகோண்டு படுத்திருந்தேன். என் மேல் ஆறாத புண்களாக சுரங்கங்கள் திறந்தன. புழுக்கள் போல யந்திரங்கள் குடைந்துசென்றன. என் உயிர்த்திரவங்களும் ஆழத்து வைரங்களும் உறிஞ்சி எடுக்கபட்டன. என் வயிறெங்கும் குப்பைகள் நிறைந்து கனத்தது. . என் குருதி நாளஙளில் அமிலங்கலும் விஷங்களும் ஓடின. என் பிள்ளைகளின் குருதி வழிந்து என் மடி சிவந்தது’.

’அந்த மகத்தான தன்னுணர்வே என்னை அங்கே வாழச்செய்தது. நான் எல்லையற்றவன்,நான் அழியமாட்டேன் என்று எனக்குச் சொன்னது. என்னை துன்புறுத்துபவர்களையும் தாங்கிக்கொள்ளும் மடித்தட்டாக என்னை உணரச்செய்தது. நான் பூமியானேன். எல்லையற்ற கருணையும், எல்லையற்ற துயரமும், எல்லையற்ற அந்தரங்க நெருப்பும் கொண்டவனாக ஆனேன்’.

’திடீரென ஒருநாள் அந்நாட்டு நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. எனக்காக அந்நாட்டு பொதுப்பணியாளார் ஒருவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். என்னைப்பற்றிய செய்திகள் மீண்டும் நீதிமன்றத்திலிருந்து செய்தித்தாள்களுக்கு பெருகின. அதை வெல்ல இருவழிகளே அரசுகளுக்கு உள்ளன. என்னை நாடுகடத்துவது. அல்லது என் கோரிக்கையை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது வழியை தென்னாப்ரிக்கா தேர்வுசெய்தது. நான் என்னை எங்கே அனுப்பவேண்டும் என்ற வினாவுக்கு இந்தியா என்றேன்’.

‘ஏன்?’ என்றேன். ‘நான் சிறையில் இருந்த நாட்களில் நித்யா எனக்கு கடிதம் எழுதியிருந்தார். மாதம் ஒருகடிதம் வீதம் நான்கு வருடங்களும் சலிக்காமல் கடிதமெழுதினார். ஒருகடிதத்துக்கு கூட பதில் வராதபோதும் எழுதினார். அந்தக்கடிதத்தின் நகல்களை பல்வேறு மனிதர்களுக்கு அனுப்பினார். என்னை அத்தனை சீக்கிரம் மறைத்துவிட முடியாதென அவர் அவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தார் .ஒரு கடிதத்தில் அவர் எழுதினார் ‘புதைத்து வைப்பவர்களுக்கு நாய்தான் பெரிய தொல்லை. எத்தனை ஆழத்தில் எப்படி புதைத்து வைத்தாலும் அது வாடை பிடித்து வந்து பிராண்ட ஆரம்பித்துவிடும்’ சொல்லப்போனால் என்னை பிராண்டி வெளியே எடுத்தவர் நித்யா. அவரைப்பார்க்க விரும்பினேன்’

’ஆனால் இந்த மண்ணில் காலெடுத்து வைத்ததும் நான் உணர்ந்தது இன்னும் பெரிய ஒரு காரணத்தை. நான் சுதந்திரத்தை கண்டுகொண்டேன். நான் சுதந்திரத்தை விரும்பினேன். கட்டற்று அலையும் சுதந்திரத்தை. அது இன்று இந்த ஒருநாட்டில் மட்டுமே உள்ளது.’

நான் ஆச்சரியத்துடன் ’அப்படியா?’ என்றேன்? ‘ அமெரிக்காவில்? பிரான்ஸில்?’ அவர் சிரித்து ‘இளம் நண்பனே அங்கெல்லாம் சுதந்திரம் என்ற கருத்து மட்டும் சுதந்திரமாக இருந்தால்போதும் என நினைக்கிறார்கள். அவை கண்காணிப்பு மிகுந்த நாடுகள் . எங்கும் எப்போதும் கேள்விகள். எல்லா வாசல்களிலும் அடையாளச்சீட்டுகள் தேவைப்படும். அங்கே சகமனிதர்கள் நம்மை கண்காணிப்பார்கள். நல்வழக்கங்களை கவனிப்பார்கள். கொஞ்சம் வழக்கத்தை மீறினால்கூட முகம்சுளிப்பார்கள். அங்கே மீறல்களுக்கு இடமுண்டு. ஆனால் அந்த மீறல்களுக்கே ஒரு ஒரு நல்வழக்க மரபு உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்..’

அவர் உரக்கச் சிரித்தார். ‘எளிய மக்கள். எதையும் அமைப்பாக, ஒழுங்காக, சீராக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பழக்கத்தில் இருந்து அவர்களால் இன்னும் விடுபட முடியவில்லை. ஒழுஙற்று கொந்தளிக்கும் இயற்கையின் நிகரற்ற படைப்பூக்கத்தில் இருந்து அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை…’ என் தோளில் கையை வைத்து ‘.இந்த நாட்டில் நான் நுழைந்த முதல்நாள் என் பாஸ்போர்ட்டை ஓர் அதிகாரி பார்த்ததுடன் சரி. . இன்றுவரை ஒரு கேள்வி கிடையாது. ஒரு கட்டுப்பாடு கிடையாது. திறந்து என் முன் போடப்பட்டிருக்கிறது இந்த நாடு’

‘அப்படியானால் இது பாதுகாப்பில்லாத நாடுதானே?’ என்றேன். ‘இல்லை. எந்த ஐரோப்பிய நாட்டை விடவும் இது பாதுகாப்பான நாடு. இங்கே உள்ள குற்றங்களின் எண்ணிக்கை பிரமிப்பூட்டுமளவுக்கு குறைவானது’ அவர் சிரித்து கொச்சையான தமிழ் உச்சரிப்பில் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழிந் அல்லை வாழிய நிலனே’ என்றார். ‘இது திருக்குறள்’என்று சிரித்தார். ‘இல்லை. இது வேறு ஒரு பெண்கவிஞர் எழுதியது. ஔவையார்.பெண் கவிஞரா? ஆம் அப்படித்தான் சொன்னார்கள்’

காரி சொன்னார் ‘…நான் இங்கே ஜூனில் வந்தேன். வற்கலை ஆலுவா தலைச்சேரி கண்ணூர் வழியாக சென்று திரும்பி வந்தேன். மீண்டும் கிளம்பி பெங்களூர் சோமனஹள்ளிக்குச் சென்று வினய சைதன்யாவை பார்த்துவிட்டு அப்படியே கோவா சென்று ஃப்ரெடி சுவாமியை பார்த்தேன். நேராக மும்பை. அங்கிருந்து அஜந்தா எல்லோரா. நேராக காசி. காசியில் ஒருமாதம் இருந்தேன். படித்துறையியிலேயே தங்கியிருந்தேன்.

‘ஆம் நானும் தங்கியிருக்கிறேன்’ என்றேன். ’அங்கிருந்து அலகாபாத்வழியாக கல்கத்தா. அங்கிருந்து புவனேஸ்வர் வந்து சென்னை வந்து திருவனந்தபுரம் போய் தலைச்சேரி போய் கண்ணூர் சென்று எழிமலைக்குச் சென்று பத்துநாட்கள் தங்கியிருந்தேன். அங்கிருந்து மானந்தவாடி வழியாக திரும்பி வந்தேன்’ நான் ஆச்சரியத்துடன் ‘இன்றுகாலை வந்தீர்களே?’ என்றேன். ‘ஆமாம்’ ‘ஆனால் உங்களிடம் ஒரு பைகூட இருக்கவில்லை’ ‘என்னிடம் ஒரு மாற்று உடை இருந்தது, அது போதும்..’

மலையின் உச்சிக்கு ஏறிவிட்டோம். இப்போது மாலை நன்றாக சிவந்து கனிந்துவிட்டிருந்தது. வானத்தில் மேகங்கள் மிகக்குறைவாகவே இருந்தன. ஊட்டியில் அது மிக அபூர்வம். நீலக்கண்ணாடி வளைவுபோல துல்லியமான வானத்தின் கீழே வழுக்கிவிழுந்து குவிந்தவை போல கொஞ்சம் வெண்மேகங்கள் கூரிய நுனிப்பளபளப்பில் குருதியுடன் கிடந்தன.சூரியன் வெப்பமே இல்லாத நீலநிற வட்டமாக வானில் நின்றது. நின்றுபோன மாபெரும் கடிகாரத்தின் அசைவற்ற பெண்டுலம் போல. விளிம்புகளில் இருந்து செவ்வொளி அதிர்ந்து அதிர்ந்து பரவியது.

குளிர்ந்த காற்று செவிமடல்களை மோதியது. எதிர்மலையின் உச்சியில் கிடந்த மிளாக்கள் ஒன்றொன்றாக எழுந்து செவிகளை முன்னால் கோட்டி நின்று எங்களைப் பார்த்தன. விதவிதமான திரும்பல்களில் அவை சிலைகளைப்போல உறைந்து நின்றன. இருமலைகளுக்கும் நடுவே கிடந்த பச்சைமேகக்குவியல் போன்ற சோலைக்காட்டில் இருந்து பறவைக்கூச்சல் எழுந்துகொண்டிருந்தது. அஸ்தமனத்தில் எழும் மெல்லிய நீராவி கலந்த தழைமணம்.

மலையின் நுனியில் ஒரே ஒரு தனிமரம் மட்டும் நின்றது. சில்வர் ஓக், ஆனால் தேயிலைத்தோட்டத்தில் நிற்பதுபோல கிளையில்லாமல் இல்லை. நன்றாக கைவீசி செழித்து காற்றில் குலுங்கி நின்றது. அதன்கீழே சென்று நின்றோம். அதில் பறவைகள் ஏதும் இல்லை. புல்வெளியில் ஒரு பெரிய மான்கூட்டம் மேய்ந்து சென்றிருக்க வேண்டும். புழுக்கைகள் சிதறிக்கிடக்க அதில் சிறிய பூச்சிகள் மொய்த்துப்பறந்தன. அவற்றுக்கு அவை உயிரமுதம். தங்கள் குழந்தைகளின் பிறப்புக்கட்டில், வளர்ப்புத் தொட்டில்.

ஒன்றும் பேசாமல் இளந்துறவி சற்று தள்ளி சென்று அமர்ந்து வான் வளைவை பார்த்து சில நிமிடங்கள் இருந்த பின்னர் கண்களை மூடிக்கொண்டார். சூரியன் பனிக்கட்டியில் சறுக்குவதுபோல நழுவி நழுவி ஆழத்தில் புதைந்தது. வானில் நிறைய சிவப்புக்கோடுகள். அத்தனை மேகப்பிசிறுகள் அங்கே இருப்பதை அப்போதுதான் உணர முடிந்தது. சட்டென்று எதிர்மலையின் மிளாக்கள் ஓடி புதர்களுக்கு அப்பால் மறைந்தன. ஒரே ஒரு செங்கழுகு மட்டும் வானில் வழுக்கி வழுக்கிச் சுழன்றது. ஓரு தனியிறகு போல தன்னிச்சையில்லாமல் இறங்கி சட்டென்று உயிர்கொண்டு சிறகடித்து மேலேறியது.

காரி டேவிஸ் புல் மேல் குந்தி அமர்ந்திருந்தார். அவரது வழுக்கைத்தலை செக்கச்சிவப்பாக இருந்தது, தோலே இல்லாதது போல. மூக்குக் கண்ணாடிச் சில்லுகளில் இரு செவ்வொளித்துளிகள் தேங்கி நின்று ததும்பின. அவர் கனவிலிருப்பது போல தோன்றியது. சூரியனின் வட்டத்தின் மேல் வளைவு மட்டும் எஞ்சியிருந்தது. அந்த தனிப்பருந்து கீழ் வானத்தில் எங்கோ மறைந்தது. ஒரு பறவையின் சில் சில் சில் என்ற ஒலி மட்டும் கேட்டது, எங்கிருக்கிறதென தெரியவில்லை.

கமறும் ஒலி கேட்டு நான் திரும்பிப்பார்த்தேன். காரி டேவிஸ்தான். அவரது தொங்கிய கழுத்துச்சதைகள் அதிர்வதைக் கண்டேன். அவருக்கு சிறிய வலிப்பு ஒன்று வருகிறதா என்று அஞ்சினேன். முகம் ஒரு பக்கமாக கோணி இழுத்துக்கொண்டது. மீண்டும் கமறினார். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு முழங்காலில் தலையை வைத்துக்கொண்டார்.

பின்பு நிமிர்ந்து சூரியன் விட்டுச்சென்ற வெளிச்ச ஈரத்தை மட்டும் பார்த்தார். தலையை அசைத்துக்கொண்டே இருந்தார். கையை ஆட்டி ஏதோ சொல்ல வருவது போல. பின் வழுக்கைத்தலையை வருடிக்கொண்டு மெதுவாக அமைதியானார். கண்களை சில நிமிடங்கள் மூடிக்கொண்டிருந்தார். நான் பார்க்கும் உணர்வு அப்போதுதான் வந்திருக்கும்போல. திரும்பி என்னைப்பார்த்தார். புன்னகையுடன் ‘ மேன், திஸ் இஸ் ஹாரிபிள்’ என்றார்.

நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்தேன். அவர் மேலும் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்துவிட்டு எழுந்தபோது நானும் எழுந்தேன். ‘முதல் சில நிமிடங்களுக்கு உலகின் எல்லையின்மையை உணர்ந்தேன். ஆனால்..’என்றார். தலையை கையால் நீவிக்கொண்டார். பின்பு வேகமான திக்கல்களுடன் ‘…சட்டென்று இந்த உலகம் ஒரு அறை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. மிகச்சிறிய அறை. கைநீட்டி கால்நீட்டினால் நான்கு சுவர்களுக்குள் எல்லா இடங்களையும் ஒரே சமயம் தொட்டுவிடமுடியும். நான்குபக்கமும் மூடப்பட்ட அறை. மீட்பே இல்லாமல் இந்த அறைக்குள் மானுடம் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது…ஜீஸஸ்!’

அந்தச் சொற்களை உள் வாங்கி அதை என் அனுபவமாக ஆக்க எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. உணர்ந்ததும் என் உடல் அச்சத்தால் குறுகியது. அங்கே நிற்க முடியாதென்று தோன்றியது. உடனே ஓடி ஏதாவது சிறிய அறைக்குள் பாதுகாப்பாக அடைபட்டு விடவேண்டும். அப்போதுதான் வெளியே எல்லையற்ற உலகை உணர முடியும். சுதந்திரத்தை அறியமுடியும்

இளம்துறவி ‘ஓம்’ என்று கண் விழித்தார். ஒன்றுமே சொல்லாமல் அவரே மலையிறங்க ஆரம்பித்தார். திரை சரிவதுபோல இருட்டு விழ ஆரம்பித்தது. சோலைக்காடுகள் இருண்டு விட்டன. மலைவிளிம்புகளில் மட்டும் ஊமை ஒளி. மலை உச்சிகளில் கொஞ்சம் ஒளி சிதறிக்கிடந்தது. அதுவும் ஒரு தரைவிரிப்பு சுருட்டப்படுவதுபோல பின்வாங்கிக்கொண்டிருந்தது

மலைப்பாதை ஒரு சிறிய கோடு போல தெரிந்தது. அதன் வழியாக திரும்பி இறங்கினோம். சீவிடுகளின் ஒலியால் இரவு தன் குளிரையும் இருட்டையும் ஓசைகளையும் விண்மீன்களையும் தொகுத்துக்கொள்ள ஆரம்பித்தது. என்னுடன் கனத்து கனத்து கீழிறங்கிய எண்ணங்கள் பாதங்களை தடுமாறச்செய்தன

காரி டேவிஸ் நினைத்துக்கொண்டு நின்று திரும்பி என்னிடம் ‘இதில் நாம் பிரபஞ்சவெளியை வரைந்துகொள்ள வேண்டும்…என்ன?’ என்றார். நான் அவரை வெறுமே பார்த்தேன். அவர் இறங்கிச்சென்றார்.

முந்தைய கட்டுரைஉலகம் யாவையும் [சிறுகதை] 2
அடுத்த கட்டுரைகதைகளின் முடிவில்..