ஜெயகாந்தன்

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி

அன்புள்ள ஜெயமோகன்,

நான் ஜெயகாந்தனின் தீவிர ரசிகன்.

சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்றில் ஜெயகாந்தன் எழுதியதெல்லாம் இலக்கியமே அல்ல என்றும் அவர் பெரியாரின் பிராமண எதிர்ப்பை எதிர்த்தே பிராமணர்களைப் பாராட்டி எழுதினார் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்று அவரைப் பாராட்டி எழுதியதாக அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்.

“முஸ்லிம்கள், பிற மதத்தினர் அனைவரும் இந்தியாவில் வாழ்ந்தால் அவர்களும் ஹிந்துக்களே” என்று ஜெயகாந்தன் சொன்னது உண்மையா?

“பாரிசுக்கு போ” “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” போன்ற நாவல்கள் என்னை பெரிதும் கவர்ந்தவை.

எதையும் நேர்மையாகவும் தர்க்கரீதியாகவும் சிந்தித்து சமூக வளர்சிக்க்காகவும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் எழுதியவர் ஜெயகாந்தன். அவர் எழுதியது எல்லாம் இலக்கியமே அல்ல என்ற குற்றச்சாட்டு எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

அதே சமயம் அவர் பிராமணர்களை மையமாக வைத்து ஏன் நிறைய கதைகளை (அவர்களை உயர்த்தும் விதமாக) எழுதினார் என்ற சிந்தனையும் தோன்றாமல் இல்லை.

தயவு செய்து என் குழப்பத்தை தீர்க்கவும்

அன்புடன்
கோகுல்ப்ரசாத்

அன்புள்ள கோகுல்பிரசாத்,

உங்கள் கடிதத்தில் நீங்கள் ’அவர் இப்படி சொல்கிறாரே’ என்ற வகையில் சிலர் பெயர்களைச் சொல்கிறீர்கள். ஜெயகாந்தனைப்பற்றி ஒருவர் கருத்துச் சொல்ல, நிராகரிக்க, அவருக்கான தகுதி ஒன்று தேவை. அவரது வாசிப்பு, ரசனை, அந்தரங்க நேர்மை என சில அடிப்படைத்தகுதிகள். அது இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அம்மாதிரி குரல்களுக்கு நம் சூழலில் பஞ்சமே இல்லை

ஜெயகாந்தனைப்போன்ற ஒரு முக்கியமான படைப்பாளியைப்பற்றிப் பேசும்போது அவரை ஒட்டுமொத்தமாகக் கணக்கில் கொண்டு அதற்கான விரிவான தர்க்கத்துடன் மட்டுமே பேசமுடியும். ஜெயகாந்தனைப்பற்றி அவ்வாறு நான் எழுதிய நீண்ட கட்டுரை என்னுடைய ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’ நூலில் உள்ளது. அதில் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் விரிவாகப் பேசியிருக்கிறேன். அந்தக்கட்டுரைக்கு மேலே செல்லும் ஒரு கருத்து வந்தால் மட்டுமே நான் விவாதிக்க முடியும். அங்கே இங்கே எழும் அசட்டு ஒற்றை வரிகளை பொருட்படுத்தமுடியாது

ஜெயகாந்தன் இந்திய இலக்கியசூழலில் உருவான முற்போக்கு அலையின் படைப்பாளிகளில் ஒருவர். தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] , பிமல் மித்ரா[பங்காளி] , யஷ்பால் [இந்தி] , முல்க்ராஜ் ஆனந்த் [ஆங்கிலம்] என அவருடன் ஒப்பிடக்கூடிய படைப்பாளிகள் சிலரே. அவர்கள் இந்திய சிந்தனைச்சூழலில் மிகப்பெரிய சலனத்தை உருவாக்கினார்கள். ஒன்று, அடித்தள மக்களை நோக்கிச் சிந்தனைத்தளத்தை திருப்பி வைத்தார்கள். அதன்பொருட்டு இலக்கிய அழகியலையே மாற்றியமைத்தார்கள்.

ஒட்டுமொத்தமாக சமூக வரலாற்றையே ஒடுக்குமுறையின் கோணத்தில் எழுதி நமக்களித்தார்கள். அந்த அஸ்திவாரம் மீது நின்றுகொண்டுதான் நாம் மேலே நவீன இலக்கியத்தை உருவாக்க ஆரம்பித்தோம். ஏன் நவீன அரசியலே அதன்மேல் நின்றுகொண்டு அடையப்பட்டதே. ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் ‘நீதி என்பதற்கு நிகரான சொல்லாக உரிமை என்ற சொல்லை அவர்கள் மாற்றினார்கள்’

இந்தியாவின் இன்றைய சிந்தனையை வடிவமைத்ததில் இந்த முற்போக்கு முன்னோடிகளுக்கு இருக்கும் பங்கு கொஞ்சமேனும் சிந்திக்கும் பழக்கம் உள்ள எவராலும் குறைத்து மதிப்பிடற்குரியதல்ல. இன்று பேசிக்கொண்டிருப்பவர்களில் எவருக்கு அப்படி அரைநூற்றாண்டு கழித்தும் செல்லுபடியாகக்கூடிய ஒரு சாதனை கைவசம் இருக்கும் என்பது மிகமிக ஐயத்திற்குரியது.

ஜெயகாந்தன் முற்போக்கு எழுத்தாளர் என்ற தளத்தில் இருந்து இன்னும் ஒரு படிக்கு முன்னகர்ந்து தனிமனிதன் என்ற கருத்தை சமூகத்தில் நிலைநாட்ட பிரம்மாண்டமான தொடர் விவாதம் ஒன்றை உருவாக்கிய படைப்பாளி. சாதியாக ,மதமாக, குடும்பமாக மட்டுமே சிந்திக்கத்தெரிந்த; தனிமனிதன் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த தமிழ்ச்சமூகத்தை நோக்கி ஜெயகாந்தன் முன்வைத்த தனிமனித சிந்தனைக்கான அறைகூவல் சாதாரணமானதல்ல. ‘அந்தரங்கம் புனிதமானது’ ‘சமூகம் என்பது நாலுபேர்’ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்று அவரது தலைப்புகளே அந்த சிந்தனைகளை ஒரு மந்திரம் போலக் கொண்டு சென்றன.

சொல்லப்போனால் சமூகத்தை நோக்கிப் பேசுவது, பதிலுக்கு சமூகத்தைத் தன்னை நோக்கிப்பேசவைப்பது என்ற சவாலை தமிழில் நிகழ்த்திய ஒரே கலைஞன் ஜெயகாந்தன். அவருக்கு முன்பும் பின்பும் எவருக்கும் அது சாத்தியப்படவில்லை. பிறர் தங்கள் கேளிக்கைத்திறனால் வணிகப்பிரபலம் பெற்றிருந்தார்கள். அவர்களுக்கென கருத்தியல் ஏதும் இருக்கவில்லை. ஒருகாலத்தில் சிந்திக்கும் இளைஞர்களின் மனம் ஜெயகாந்தனுடன் மோதி ஏற்று விலகி உருவாகி வந்தது. அந்த நிலையை இனிமேல்கூட ஒருவர் அடைய முடியுமா என்றும் சந்தேகமாக இருக்கிறது.

அந்த உரையாடலே அவரது இலக்கு. அதற்காக அவர் வணிக ஊடகங்களை நோக்கிச் சென்றார். ஓர் உரையாடலில் உரையின் தரமும் தன்மையும் எதிர்த்தரப்பை ஒட்டியே உருவாகிறது. ஆகவே ஜெயகாந்தனின் பலகதைகள் நேரடியானவையாக அப்பட்டமானவையாக உள்ளன. அவை சொற்பொழிவாற்றுகின்றன. அறைகூவுகின்றன. விவாதிக்கின்றன.

ஆனால் அந்தத் தளத்தையும் மீறி ஆழமான கலை வெற்றி கூடிய படைப்புகளாக எப்படியும் பதினைந்து இருபது கதைகள் அவருடைய புனைவுலகில் உள்ளன. கண்டிப்பாக இரு நாவல்களைச் சொல்லலாம். ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம், சிலநேரங்களில் சில மனிதர்கள். இக்கதைகள் இன்றும் நீடிக்கும் கலைநுட்பங்களுடன் இன்னும் வாசித்து தீராதவையாக உள்ளன. தமிழில் வேறு எந்த பெரிய படைப்பாளியும் அடைந்த கலைவெற்றியும் ஏறத்தாழ அவ்வளவுதான். ஆகவே ஜெயகாந்தனை செல்லாகாசு ஆக்கும் தரத்துடன் தாண்டிச்சென்ற எவரும் இங்கே இல்லை.

ஜெயகாந்தன் என்றுமே உறுதியான கோட்பாட்டு இரும்புத்தூணாக இருந்ததில்லை. நெகிழ்ச்சியும் வேகமும் கொந்தளிப்பும் குழப்பங்களும் கொண்ட கலைஞனாகவே இருந்திருக்கிறார். அவரது அரசியலைப் பார்த்தால் அந்த குழப்பங்கள் அனைத்தையும் காணலாம். அவரில் நாம் காணும் முரண்பாடுகள் அனைத்தும் இந்த தனிமனித ஆளுமை, அந்த ஆளுமை வெளிப்படும் அரசியல் சார்ந்தவையே. அவப்போது உணர்ச்சிகரமான நிலைபாடு எடுத்து நேர் மறுபக்கம் செல்கிறார். உடனே இப்பக்கம் வந்தும் விடுகிறார்.பலசமயம் அது தனிமனித உறவு சார்ந்தது.

அவர் இடதுசாரி. ஆனால் பின் காமராஜின் பிரச்சார பீரங்கி ஆனார். பின்னர் இந்திரா ஆதரவாளர். இன்று திமுக ஆட்சி பொற்காலம் என்கிறார். இந்த ஆளுமை வினோதத்தை வைத்து அவரை நிராகரிப்பதென்றால் சந்தோஷமாக செய்யலாம். ஆனால் அவரது படைப்புகளை அந்த நிலைபாடு கொண்டு நிராகரித்தால் இழப்பு நமக்கே. அந்த அளவுகோலை வைத்து பார்த்தால் உலக இலக்கியத்தில் முக்கால்வாசி எழுத்தாளர்களை முரண்பாடுகள் கொண்டவர்கள் என்று தூக்கிப்போட்டு விடலாம். அதைக் கீழ்த்தர அரசியல்வாதிகள் செய்வார்கள், இலக்கியத்தில் அடிப்படை அறிவுள்ளவன் செய்யமாட்டான்.

ஜெயகாந்தனின் சங்கராச்சாரியார் ஆதரவையும் நான் இப்படித்தான் பார்க்கிறேன். என்னால் அதைச் சற்றும் ஏற்க முடிவதில்லை. அதனாலென்ன? அவர் அப்படிச்செய்வதனால் அவர் இந்தச் சமூகத்தை முப்பதாண்டுக்காலம் விவாதத்தினூடாக முன்னெடுத்த முதன்மை அறிவுஜீவிகளில் ஒருவர், மகத்தான கதைசொல்லி அல்ல என்று ஆகிவிடுமா?

ஜெயகாந்தன் பிராமணர்களை ஆதரித்தும் பாராட்டியும் எழுதவில்லை. அவரது சுயதரிசனம் முதல் வரும் கதைகளில் பிராமண சமூகத்தின் போலித்தனத்தை, தேக்கநிலையை கடுமையாக விமர்சனம் செய்துதான் எழுதினார். அக்கினிபிரவேசம் , சிலநேரங்களில் சில மனிதர்கள் முதல் அத்தனை கதைகளையும் இன்று வாசித்துப்பார்க்கலாம். அனேகமாக அத்தனை கதைகளுமே அன்றைய பிராமண சமூகமனநிலை மேல் முன்வைக்கப்பட்ட கடும் விமர்சனங்கள். அக்காலகட்டத்தில் அவை பிராமண சமூகத்தின் பெரும் எதிர்ப்பைத்தான் சந்தித்தன.

ஈவேரா போலவே ஜெயகாந்தனும் தமிழ் [இந்திய] சமூகத்தின் அறிவார்ந்த மையமாகப் பிராமணச் சமூகத்தையே கண்டார். அவர்களுக்குத்தான் சமூகத்தின் கலைகளையும் சிந்தனையையும் ஞானத்தையும் பாதுகாத்து முன்னெடுக்கும் பொறுப்பு இந்த மரபால் அளிக்கப்பட்டிருந்தது என்று நினைக்கிறார். பிராமணர்கள் அதைத் தங்கள் சுயநலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர் என்று ஈவேரா சொன்னார். கிட்டத்தட்ட ஜெயகாந்தனும் அதைத்தான் சொல்கிறார். ஆனால் அவர்களில் உள்ள முற்போக்கான, படைப்புமனம் கொண்ட சிலரை நோக்கி அவர் பேசுகிறார். ஈவேரா போல அவர்களை ஒட்டுமொத்தமாக அழிவுசக்தியாக நினைக்கவில்லை. அவர்களை நம்பி ஒரு மாற்றத்துக்காக அறைகூவுகிறார், அவ்வளவுதான். பிராமணரல்லாத ஜெயகாந்தனின் அந்த விமர்சனங்களை அவர்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாகவே எடுத்துக்கொண்டார்கள்.

ஜெயகாந்தனின் தலைமுறையில் உள்ள அத்தனை எழுத்தாளர்களும் இரு தளங்களில் நின்றே எழுதியிருக்கிறார்கள். ஒன்று, சமூக சீர்திருத்தம் பற்றிய கதைகளை பிராமணர்களை நோக்கி எழுதியிருக்கிறார்கள். [கேரளத்தில் பிராமணர்கள் இல்லை என்பதனால் தகழி சிவசங்கரப்பிள்ளை நாயர்களைப்பற்றி எழுதினார்] காரணம் சமூக அதிகாரம் அவர்களிடம் இருந்தது. இரண்டு, உரிமைக்காக குரலெழுப்பும் கதைகளை அடித்தள மக்களைப்பற்றி எழுதினார்கள். ஜெயகாந்தன் கதைகளில் முக்கால்வாசி கதைகள் சென்னை குடிசைவாழ் மக்களைப்பற்றித்தான். அவர்களை அவர் உயர்ந்த மனிதர்களாக, இழிவிலும் மானுடமேன்மையை கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்தார். இந்த இரண்டு நிலைபாடுகலுக்கும் அன்றைய சமூகக் கட்டமைப்புகளுக்கும் நேரடியான உறவுண்டு.

’முஸ்லிம்கள், பிற மதத்தினர் அனைவரும் இந்தியாவில் வாழ்ந்தால் அவர்களும் ஹிந்துக்களே’ என்ற வரி திரிக்கப்படுவதே நம் சூழலில் உள்ள அற்பர்களால் ஜெயகாந்தனை புரிந்துகொள்ள முடியாதென்பதற்குச் சான்று. அவர் எப்போதுமே இந்து மதவாதத்துக்கு, குறிப்பாக ஆர் எஸ் எஸ் மற்றும் பி ஜெ பிக்கு முற்றிலும் எதிரானவர். அதை அவரது அரைநூற்றாண்டு அரசியல் வாழ்க்கையில் ஒரு மாறாத கொள்கையாகக் கொண்டிருக்கிறார்

அவர்களுக்கு எதிராக சொல்லப்பட்ட கருத்து அது. இந்து என்பது ஒரு மத அடையாளமோ பண்பாட்டு அடையாளமோ அல்ல, அது நிலம் சார்ந்த தேசிய அடையாளம் மட்டுமே என்று ஜெயகாந்தன் சொன்னார். அதை மத, பண்பாட்டு அடையாளமாக குறுக்கி வகுப்புவாதமாக ஆக்குகிறார்கள் என்பதுதான் அவரது குற்றச்சாட்டு. அந்த வரியை அவர் சொன்னதற்கு நேர் எதிராகப் பொருள்கொண்டு அவதூறு செய்கிறார்கள் இவர்கள்.

இவர்கள் அறிவதில்லை, அந்தக்கருத்தை முதலில் சொன்னவர் டாக்டர் அம்பேத்கார் என்று

ஜெ.

ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…

குடும்ப எழுத்தாளர்

ஜெகெ இருகடிதங்கள்


ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன்


”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”

கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்


கடவுள் எழுக! ஜெயமோகனின் ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2

முந்தைய கட்டுரைஓரினச்சேர்க்கை- அனுபவக்கட்டுரை
அடுத்த கட்டுரைபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்