மெல்லிய நூல்-கடிதங்கள்

காந்தி என்று சொன்னாலே நான் உணர்ச்சிவசப்படுபவன். என்னை இந்தக்கதையில் காந்தியுடனே என்னை வாழவிட்ட கதாசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஆனால் இது ஒரு தலித்தியக்கதை காந்தீயக் கதையல்ல. காந்திக்கே அகிம்சையின் மேல் நம்பிக்கை இழக்கும் தருணத்தை ஜாதிக்கொடுமை ஏற்படுத்துகிறது. காந்தி அய்யன் காளி மேல் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட அய்யன் காளி காந்தியின் மேல் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். அறுந்து விழும் நூல்கள் உண்மையில் காந்தியின் கதறல்கள். காந்தி தன்னிடம் ஏற்பட்ட இந்த மன பாதிப்பை மொத்த இந்தியாவின் மக்களுக்கும் கொண்டு செல்ல முயன்றார். அவரின் முயற்சியை அவருக்கு பின்னால் வளர்த்தெடுக்க ஒருவரும் இல்லாது போனது துரதிர்ஷ்டமான ஒன்றாகும்.

டி துரைவேல்

துரைவேல்,

காந்தி அய்யன்காளிமேல் உருவாக்கிய தாக்கமும் பெரிதுதான். அய்யன்காளி கிட்டத்தட்ட நெல்சன் மண்டேலா. ஆயுதமேந்த எல்லா காரணங்களும் அவருக்கிருந்தன. ஆனால் அவர் அகிம்சைவாதியாக மாறினார். பின்னர் வாழ்நாளின் கடைசியில் அய்யன்காளிக்கு வெங்ஙானூரில் நிகழ்ந்த பாராட்டு விழாவில் காந்தி அய்யன்காளியை ’என்னைவிட அகிம்சையில் வேரூன்றியவர். அகிம்சைமேல் நான் கொண்டுள்ள நம்பிக்கைக்கு வாழும் சான்று’ என்று பேசினார்

ஜெ

=====================

அய்யன் காளிக்கு நடந்த மன மாற்றம் எவ்வளவு உண்மை ? எவ்வவளவு புனைவு ? அந்த மௌனமான பரி மாற்றம் பற்றி நான் அடிக்கடி பேசுவதுண்டு.அய்யன் காளி எப்படி மொழியில்லாமலே அதை புரிந்து கொண்டார் என்பது தான் இந்தக் கதையின் உச்சம்.

எப்படி அந்தப் பரிமாற்றம் நடந்தது என்பது தான் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது.அவரை எப்படி காந்தி புரிந்துகொண்டார்? அது இளைப்பாற வருகிறவரை அறியும் தந்தை புரிந்து கொள்வது போல. இங்கே பயணக் களைப்பு நன்றாக கையாளப் பட்டிருக்கிறது. பயணக் களைப்பும் ஆறுதல் தரும் அன்னையுமாக அழகான இடம்

இளங்கோ கல்லானை

அன்புள்ள இளங்கோ,

ஆம் அந்த மௌனம் தான் மையம். சொல்லாமலே இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடம்.

நன்றி

ஜெ

=================================

அன்புள்ள ஜெ

மெல்லிய நூல் வாசித்தேன். பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே சென்ற கதை. அரசியல் மற்றும் அறம் பற்றி. என்னென்னவோ சிந்தனைகள். அவற்றை கோர்வையாக எழுதமுடியாது. அகவேதான் தொலைபேசியிலே அழைத்தேன். அதிலும் கோர்வையாக பேசமுடியவில்லை. அய்யன்காளியை பார்த்ததுமே அவரது மனம் என்ன என்று காந்திக்கு தெரிகிறது. உங்கள் தலைவர் கண்ணிமையை அசைக்காமல் எந்த கொடுமையையும் செய்வார் என்கிறார் இல்லையா? ஆனால் அவரிடம்தான் அகிம்சையைச் சொல்கிறார். அதேமாதிரி அந்தப்பையன் சோகன் ராம். அவன் ஏன் காந்தியை போடாநாயே என்று சொல்கிறான்…பல கேள்விகள்.மனிதமனம் என்பது அவ்வளவு எளிமையானது அல்ல. அதிலே என்னென்னவோ உண்டு. ஆழம். அதெல்லாம் தெரிந்ததுதான். இருந்தாலும் இந்த இரு விஷயங்களைப்பற்றி நிறைய நினைத்துக்கொண்டிருக்கிறேன்

செம்மணி அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம்,

கதையை நான் விளக்க முடியாது. பலவற்றுக்கு எனக்கே விளக்கமும் இல்லை. நான் அந்தந்த கதாபாத்திரமாக கற்பனை செய்துகொள்வது வழியாகவே எழுதுகிறேன். அந்த கதாபாத்திரத்தின் மனம் அப்போது எனக்குரியதாக்கிறது.

காந்தி பலமுறை சொன்ன ஒரு விஷயம் உண்டு. அகிம்சை கோழைகளுக்குரியதல்ல. அது மகாவீரர்களுக்குரியது. அகிம்சையின் உச்சி ஏறி நின்றதனாலேயே வர்த்தமானரை மகாவீரர் என்றார்கள். பயந்தவனுக்குத்தான் ஆயுதம். காளி மாவீரர். தேவை என்றால் அவரால் வன்முறையின் உச்சிக்கு எந்த சஞ்சலமும் இல்லாமல் செல்லமுடியும். ஆகவே அவரே அகிம்சைக்கு சரியான ஆள்.

அதை காளி உணரும் இடமே இந்தக்கதை. வரலாற்றை பார்த்தால் காந்தியை விட வெற்றிகரமான அகிம்சைப்போராட்டங்களை அவர் செய்து வென்றிருக்கிறார். கடைசிவரை உறுதியான காந்தியவாதியாக இருந்தார்.

ஆனால் அங்கே இருந்தவர்களில் வேறெவரும் காந்தியை உணர முடியாது. உள்ளுக்குள் கொஞ்சம் அச்சம், கொஞ்சம் பலவீனம் இருந்தால்கூட அவரை தொடர முடியாது. சோகன்ராம் கூட ஒரு கணம் தன்னை இழக்கிறான்.

காந்தியேகூட தலித்துக்கள் மீதான வன்முறையின் வரலாற்றின் முன் கொஞ்சம் நிலை தடுமாறுகிறார். அவரது எழுத்துக்களிலேயே அதைக் காணலாம். ஒருவேளை தலித்துக்கள் வன்முறையில் இறங்கியிருந்தால் அவர் அதை நியாயப்படுத்தக்கூட செய்திருக்கலாம்– கற்பழிக்கப்படும் பெண்களுக்கு வன்முறையை அவர் பரிந்துரைத்ததுபோல

ஜெ
.

பிகு

இந்த கதைவரிசையில் ஒன்றை கவனித்தேன். அளிக்கப்படும் சுட்டியை குறைவானபேர்களே சென்று வாசிக்கிறார்கள். மெல்லியநூல் கதை வாசித்தவர்களில் ஐந்து சதவீதம் பேர்கூட அய்யன்காளி சுட்டியை சென்று வாசிக்கவில்லை. வாசித்திருந்தாலே கதையின் வேறு விரிவுகளுக்குச் சென்றிருக்க முடியும்

முந்தைய கட்டுரைஓலைச்சிலுவை- சில கடிதங்கள்
அடுத்த கட்டுரைதேவதேவனுக்கு ஓர் இணையதளம்