ஓலைச்சிலுவை-கடிதங்கள்

[குழுமத்தில் இருந்து] இந்தியாவை பிரிட்டன் சுரண்டுவது குறித்த உள்ளார்ந்த உணர்வு டாக்ட சாமர்வெல்லுக்கு இருந்திருக்கிறது. மிஸ்டர் காந்தி (அப்படித்தான் அவர் சொல்கிறார்) தீண்டாமையை ஒழிக்க நினைப்பது இன்றைய காலத்தின் கட்டாயம் தானே தவிர அவருடைய தன்னியல்பால் அல்ல என்பதாகத்தான் கருதியிருக்கிறார்.

அவருடைய மலையேற்றக் குழுவின் பார்வையில் பௌத்த லாமாக்கள் பிசாசுகளை வழிபடுபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இமாலயம் குறித்த அவரது ஓவியங்களில் ரோய்ரிச்சின் தாக்கம் உண்டு. ஆனால் நான் பார்த்தவரை அவற்றில் ஒரு இடத்தில் கூட ஒரு கலாச்சார அம்சம் கிடையாது. (ரோய்ரிச்சில் அது இருக்கும்.) வெறும் இயற்கை மட்டுமே. வெல்லப்பட வேண்டிய இயற்கை. காலனிய சாகசக்காரரின் இமாலயம்.

இங்குள்ள வைத்தியர்களுக்கு அறிவியலின் அடிப்படை கூடத் தெரியாது என்று டாக்டர் கருதுகிறார். பிசாசுகளை ஓட்டி வைத்தியம் செய்பவர்கள் என்பதுதான் அவரது பார்வை. ஏசு இந்தியாவின் அவசரத்தேவை என்பதுதான் அவரது நிலைபாடு. டார்வின் மீது உள்ளார்ந்த ஆத்திரமும் உண்டு. அதாவது காலனிய புரோட்டஸ்டண்ட் இறையியல் சட்டகத்துக்கு அப்பால் சென்று குருவாயூரப்பன் (அந்த காலத்திலேயே கிளாஸ் பிரேம் போட்ட படம் குடிசைகளில் இருந்திருக்கும் என்கிறீர்கள்?) படத்தை எடுத்து கொடுக்கும் அளவுக்கான ஒரு மனம் டாக்டருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.

மற்றபடி புழு போல செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு -மேல் தட்டு மக்களின் மனச்சாட்சிகளில் எவ்வித உறுத்தலையும் அது ஏற்படுத்தாத போது- மத வேறுபாடில்லாமல் அவர் சேவை செய்திருக்கிறார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதை அவர் மத பிரச்சாரமாகவோ மதத்தொண்டாகவோ எப்படி செய்திருந்தாலும் அந்த பணிக்கு தலை வணங்க அவர் மிஷினரி என்பது ஒரு தடையாகாது.

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன்,

ஓலைச்சிலுவையின் மையநிகழ்ச்சி உண்மையான ஒன்றாக சொல்லப்படுவதே. அதாவது ஒரு நவீனத்தொன்மம். திருவிதாங்கோட்டில் எனக்கு தூரத்து உறவுள்ள ஒரு நாயர் வீட்டில் சாமர்வெல் அந்த கிருஷ்ணன் படத்தைகொடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் பூஜை அறையில் சாமர்வெல்லின் படத்தை பார்த்திருக்கிறேன். அவர்களின் நம்பிக்கையாகக்கூட இருக்கலாம், அதை உறுதிசெய்வது இப்போது சாத்தியமல்ல.

சாமர்வெல் ஒரு தீவிர புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவர். கதையிலும் அப்படித்தான் வருகிறார். லண்டன்மிஷனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். கதையிலும் அவர் முழுநேர கிறித்தவப்பிரச்சாரகராக – ஊழியம்செய்பவராக- மட்டும்தான் இருக்கிறார். கிறிஸ்து வழியாக மட்டுமே மீட்பு என நம்பியவர்தான் சாமர்வெல். அதைத்தான் அவர் டேனியல் விஷயத்திலும் செய்கிறார். ஆனால் ஒரு உச்சகணத்தில் அவர் தன் நம்பிக்கையின் எல்லையை தாண்டிச்செல்கிறார். அந்த உச்சம்தான் கதை. அவரது இயல்பான நம்பிக்கையில் கதை அமையவில்லை.

அந்த உச்சத்துக்கு சாமர்வெல் போகக்கூடியவரா என்பதே கேள்வி. அதற்கு பதில் ஒன்றுதான். அவர் தன் சேவையில் கிறித்தவர்- கிறித்தவர் அல்லாதவர் என்ற பாகுபாட்டையே கொள்ளவில்லை. அவருடைய சேவையை பெற்றுக்கொண்டவர்களில் அவரை இன்றும் நன்றியுடன் எண்ணிக்கொள்பவர்களில் இந்துக்களே அதிகமானவர்கள். அப்படி பல நினைவுகள் இன்றும் உள்ளன. சு

அவருக்கு இந்துமதம், ஆயுர்வேதம் மீதெல்லாம் நம்பிக்கை இருக்கவில்லை. மதிப்பும் இருந்திருககது. ஆனால் அவர் மனிதாபிமானியாகவே இருந்திருக்கிறார். மதமாற்றம் மட்டும் அவரது குறியாக இருக்கவில்லை .சிகிழ்ச்சைக்கு வரும் செல்வந்தர்களிடம் ஏழை நோயாளிகளுக்கு பணம் செலவிட ஆணையிட்டதைப்பற்றி பல நிகழ்ச்சிகள் உள்ளன

ஆம், அவர் வெறும் மதப்பணியாளராக இருக்கவில்லை. அவரது சமகால மிஷனரிகள் பலர் அப்படித்தான் இருந்தார்கள். அவர் அப்படி இல்லை.

கதையில் வரும் நிகழ்வுகள், காலரா பரவியபோது மணியுடன் வீடு வீடாகச் சென்றதும் பிணங்களை அடக்கம் செய்ததும் உண்மையான நிகழ்வுகள். பேராசிரியர் ஜேசுதாசன் சொன்னவை, அவரே அதில் சென்றிருக்கிறார். வேறுபலரும் சொன்னவை

அறுவை சிகிழ்ச்சை செய்தபின் வலிதாளாமல் துடித்த ஒருவருக்கு இரவில் அவர் ஓபோ ஊதியது உண்மையான நிகழ்ச்சி. அந்த மலையாள ஆசிரியர் பெயர் வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன். அவர் பின்னாளில் மலையாளத்தின் பெரும் கவிஞராகி அந்த நிகழ்ச்சியை ’கத்தியும் ஓடக்குழலும்’ என்ற பேரில் கவிதையாக எழுதினார். இன்றும் அக்கவிதை பாடநூல்களில் உள்ளது.

குருவாயூரப்பன் படம் பற்றி. 1902 முதலே திருவிதாங்கூரில் மூவண்ண ஆப்டோன் சாமிபடங்கள் வீடுகளில் சாதாரணமாக இருந்தன. காரணம் ராஜா ரவிவர்மா மும்பையில் ஓர் ஆப்டோன் அச்சகத்தை நிறுவி சாமிபடங்களை அச்சிட்டு வெளியிட ஆரம்பித்தார். அவை அதிகமும் திருவிதாங்கூரில்தான் அதிகம் விற்றன. திருவனந்தபுரத்தில் இப்போது பத்மநாபா திரையரங்கு இருக்கும் இடத்தில் அவை கண்ணாடி சட்டமிடப்பட்டு விற்கப்பட்டன. குழித்துறை வாவுபலி பொருட்காட்சி, திருவட்டார் ஆறாட்டு, சுசீந்திரம் பூதப்பாண்டி தேர்விழாக்களில் அவை விற்கப்பட்டன. அரவிந்தனின் பாட்டி வீட்டிலும் அவை இருக்கும்.

கண்ணாடி சட்டமிடப்பட்ட புகைப்படங்கள் 1900 முதலே திருவிதாங்கூரில் சாதாரணமாக இருந்தன. என் அப்பாவின் அம்மாவின் அம்மா படத்தை [1901] எங்கள் குடும்ப வீட்டில் இன்றும்பார்க்கலாம். ஆனால் அதற்கும் முன்னரே 1850 முதலே கையால் வரையப்பட்டு சட்டமிடப்பட்ட மூவண்ண கிருஷ்ணன் படங்கள் திருவிதாங்கூர் நாயர் வீடுகளில் இருந்தன. தஞ்சை பாணியில் வரையப்பட்டவை. அவற்றில் ஒரு வரிசையை இப்போதும் பத்மநாபபுரம் அரண்மனையில் பார்க்கலாம்

என் நோக்கில் இரு கிறிஸ்துக்கள் உண்டு. மத கிறிஸ்து. ஆன்மீக கிறிஸ்து. முதல்வர் திருச்சபை கிறிஸ்து, இரண்டாமவர் தல்ஸ்தோயின் கிறிஸ்து. என் எழுத்துக்களில் எப்போதுமே இரண்டாமவரை மகத்தான ஞானகுருவாக ஆகவே இறைவடிவமாக முன்வைத்து வருகிறேன்.

பசித்தவனுக்குச் சோறாக வந்த முதல் கிறிஸ்துவை சாமர்வெல் டேனியலுக்கு கொடுக்கிறார். அவர் அறிந்ததும் அந்த கிறிஸ்துவை மட்டுமே. அந்த கிறிஸ்து அவனுக்கு போதவில்லை. அதற்கு அப்பால் மதமற்ற ஆன்மீகத்துக்கு, தூய கருணைக்கு அவர் தன் எல்லைகளை மீறி ஒரு கணத்தில் மேலெழுந்து செல்லும்போது தான் அவரால் ஆன்மீக கிறிஸ்துவை அவனுக்கு அளிக்க முடிகிறது. அந்த கணம்தான் கதை.

கதைதான். வரலாறல்ல. வரலாறில் இருந்து ஒரு அடி முன்னால் நகர்ந்தால்தான் அது இலக்கியம்.

ஜெ

அன்புள்ள ஜெ,

வணக்கம். நலமா? உங்களது சிறுகதைகள் ஒவ்வொன்றையும் மிக கவனமாக படிக்கின்றேன். உங்கள் வாசகர்கள் சிறுகதை பயிற்சி பெற நீங்கள் இந்தக்கதைகளை வெளியிடுவதாகவே எண்ணிக்கொள்கின்றேன்.

ஒவ்வொரு கதையும் உச்சங்கள். ஓலைச்சிலுவையும் நூறுநாற்காலிகளும் படித்தபோது கண்ணில் நீர் திரண்டது. மீதி கதைகள் நெகிழவைத்தவை. அனைத்தும் மானுட மேன்மையின் உச்சக் கணங்கள்.

நூறுநாற்காலியின் காப்பான் எப்படி பால் – ஆனார் என்பது மட்டும் புரியவில்லை. மன்னிக்கவும்.

ஓலைச்சிலுவையில் நீங்கள் சொல்லும் கிளாத்தி மீன் காலரா பரப்பும் செய்தி யோசிக்க வைத்தது. கொல்லம்கோட்டிலிருந்து பரவுவதாகச் சொல்வது கதைக்காக இருந்தாலும் அது எப்படி தற்ச்செயலாக பொருந்துகின்றது என்று பாருங்கள். எங்கள் பக்கத்து ஊர், கொல்லம்கோட்டின் ஒரு பகுதி, கிளாத்தி மீன்பிடப்பதில் மிகப் பிரபலம். இப்போது கூட, அந்த ஊர் நண்பர்களோடு சண்டை வந்தால் திட்டுவது “போடா பீச்சிக் கிளாத்தி”. இப்படி சொல்வது அவனை கொல்வதர்க்குச் சமம்.

அதுபோல் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பெரும் எண்ணிக்கையிலான முதுகில் பெரிய முள்ளுள்ள, கறுத்த கிளாத்தி மீன்கள் இறந்து கடற்கரையில் கரையொதுங்கி, பரந்த மணல்வெளியில் தானே உலரும். ஆனால் அது ஆணி ஆடி இல்லைஎன்று நினைக்கின்றேன். காரணம் அந்த மாதத்தில் கடலரிப்பும், வாளை மீனும் தான் பிரபலம்.

மீண்டும் பல கிளாச்சிக் சிறுகதைகளை எதிர்பார்த்து…

அன்புடன்,
கிறிஸ்.

கிறிஸ்,

பீச்சிக்கிளாத்தி என்பது எங்களூரிலும் பெரிய வசை. பீய்ச்சுவதென்றால் வயிற்றுப்போக்கு. தோல்கிளாத்திக்கு அந்த பெயர். வேறு ஏதும் தின்பதற்கில்லாமல் அதை தின்னும் தரித்திரப்பயல் என்று பொருள். அந்த வசை கேட்டு மனமுடைந்து அழுத பையன்களை நினைவுகூர்கிறேன்.

ஜூலை மாதம்தான் கிளாத்திக்கு. அப்படித்தான் இணையத்திலும் உள்ளது. ஆடி முடிந்து ஓணக்காலம்தான் வாளைமீன் கிடைக்கும் பொற்காலம் இல்லையா?

தர்மபாலன் என்று காப்பனுக்கு குரு பெயரிட்டதை ஒரு வரி சொல்கிறதே

ஜெ

ஆமாம் ஜெ, வாளைமீன் காலம் ஒரு பொற்காலம். இந்த வாளைமீன் சீசன் இல்லையென்றால் என்னைப்போன்ற பலர் படித்திருக்க முடியாது. வாளை மீன் பிடிக்க தட்டுமடி என்னும் வலையை பயன்படுத்துவார்கள். மடி என்பது சுருக்குள்ள பெரிய வலை. மீன் உள்ளே சென்றால் வெளிவரமுடியாது. அதிகப்படியான மீன்கள் உள்ளே சென்று வலையைக் கிழித்தால்தான் உண்டு. பலதடவை அது நிகழும். அதை பார்க்கும் போது நிசமாகவே நமது வயிறு கிழிந்து குடல் வெளியில் செல்வது போலிருக்கும். காரணம் கட்டுமரம் நமக்கு சொந்தமில்லைஎன்றாலும், கண்டிப்பாக சமையலுக்கு மீன்கிடைக்கும். ஆறடி நீளமுள்ள பெரிய மீன். ஆனியாடி பஞ்சம் முடியும்தருவாய். அரிசி வாங்க காசிருக்காது. வாளைமீன் மட்டும் தான் உணவு. அப்போதும் பேதிதான். எனவே வாளைமீன் சீசனின் முதலிரண்டு வாரங்களும் “பேதி சீசன்தான்”. இப்போதும் ஞாபகமிருக்கின்றது எங்கள் வீட்டில் வாளைமீன் சமைக்க சற்று அதிக்காகமாக மஞ்சள் சேர்த்துக்கொள்வார்கள்.

முக்கியமாக, ஆனியாடி முடிந்து பள்ளிக்கூடம் செல்லும் போது வாளைமீனின் உபயத்தில்தான் பள்ளி சீருடையும் புத்தகங்களும்.

அன்புடன்,
கிறிஸ்.

அன்புள்ள ஜெயமோகன்,

ஓலைச்சிலுவை படித்த போது இது கதையா இல்லை வரலாறு கூறும் கட்டுரையா என்ற எண்ணம் வந்தது. ஆனால், இது போல உண்மை சார்ந்த கதைகள் தான் சட்டென்று மனதில் இடம் பிடிக்கிறது.

டாக்டர்.சாமர்வெல் பற்றி நீங்கள் சொல்லியவையாவும் உண்மை என்பது விக்கிப்பீடியாவில் படித்து தெரிந்து கொண்டேன்.

இந்த கதை பல கருத்துகளை சொல்கிறது,வறுமை,சேவை,கல்வி,மதமாற்றம்,சாதி,நோய்,குரு பக்தி,குடும்பபாசம் என்று அதனையும் நேர்கோட்டில் வந்து ஒருவனை ஆட்டுவிக்கிறது.வாழ்க்கையே கட்டாயத்தின் பேரில் தான் நடக்கிறது போல!.

கொஞ்சம் பெரிய கதையாய் இருந்தாலும் முன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படிக்க வைக்கும் வரிகளின் போக்கு.

உங்களிடம் ஒரு கேள்வி. பெரும்பாலும் பல மாவட்டகாரர்களோடு பழகும் நாங்கள் எல்லோரோடும் எங்கள் வட்டார மொழியில் பேசுவது இல்லை. இப்படி இருக்கும் நிலையில் உங்கள் கணிப்பில் வாட்டர வழக்கு மொழி இன்னும் எத்தனை காலம் இருக்கும்? கேட்பதற்கு இனிமையாக இருக்கும் அந்த மொழியை படித்தவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை என்று நான் நினைக்கின்றேன்.

அன்புடன்,

சி.கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்

இந்தக்கதை வரிசை இதற்கான ஒர் அழகியல் இலக்கணத்தை உருவாக்குகிறது. கதையை மட்டுமே அளவுகோலாகக் கோண்டால் அவற்றின் மைய ஆளுமையைப்பற்றிய சித்திரம் கொஞ்சம் அதிக தகவல்களுடன்தான் இருக்கும். ஆனால் அவர்கள் வரலாற்று மனிதர்கள் என்பதனால் அவர்களை மேலதிக துல்லியத்துடன் நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. ஒருவகையில் இவை புராணங்கள். உண்மை வரலாற்றுக்கு மேல் கற்பனை கலக்கப்படுகிறது, சில விழுமியங்களை அடிக்கோடிடுவதற்காக.

வட்டாரவழக்கு இறந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. தூய வட்டார வழக்கு எவராலும் பேசப்படுவதில்லை. இந்த வரிசையில் சில கதைகளில் பிராமண வட்டார வழக்கு சில சொற்றொடர்களில் இல்லை என்று சிலர் எழுதியிருந்தார்கள். வட்டாரவழக்கை துல்லியமாக உருவாக்கும் நோக்குடன் எழுதப்படும் கதைகள் அல்ல இவை. ஒரு நிலவியல் பற்றிய மனப்பதிவை உருவாக்க மட்டுமே இவற்றில் வட்டார வழக்கு பயன்படுத்தப்படுகிறது.

உண்மையில் குமரிமாவட்ட வட்டார வழக்கு மட்டுமே கொஞ்சமேனும் உயிருடன் இருக்கிறது. அதுவும் குலசேகரம் பகுதியில். நான் ஏராளமான கொங்கு நண்பர்களைக் கொண்டவன். கொங்குமொழி எவருமே பேசுவதில்லை. சில சொற்கள் மட்டும் கொங்குநெடியுடன் ஒலிக்கும். அந்த அளவுக்கே இனிமேல் புனைகதைகளிலும் சாத்தியம்

ஜெ

முந்தைய கட்டுரைஉலோகம்: கடிதம்
அடுத்த கட்டுரைமயில்கழுத்து-கடிதம்