நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?

theru

 

ஜெ

எழுபதுகளின் இறுதியில் நான் சில தெருக்கூத்துகளை பார்த்திருக்கிறேன். இதை
தயக்கத்துடன்தான் சொல்கிறேன் – அந்த தெருக்கூத்துகள் எல்லாம் உலக மகா
போர். எனக்கு அந்த வயதிலேயே மகாபாரதப் பித்து உண்டு, ஆனால் திரௌபதி
கூத்து கூட என்னால் தாங்க முடியவில்லை. அதை விட எம்ஜிஆரின் எவ்வளவோ
மோசமான படங்கள் – தேர்த்திருவிழா, முகராசி மாதிரி நிறைய உண்டு –
சுவாரசியமாக இருந்தன. இத்தனைக்கும் அவை அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற
ஒரு குழு நடத்தியதுதான். இரவு முழுதும் நடக்கும், பாயோடு வந்து
உட்கார்ந்து பார்ப்பவர்கள் நிறைய பேர் அப்படியே தூங்கிவிடுவார்கள்.
அப்படிப்பட்ட தெருக்கூத்துகள் அழிகிறது என்றால் என்னால் பெரிதாக கவலைப்பட
முடியவில்லை.

இந்த தளத்தில் எழுதுபவர்கள் அனேகமாக நகர்ப்புற, படித்த மத்திய+உயர்
மத்திய தர வர்க்கம். தெருக்கூத்தை அதன் ஒரிஜினல் செட்டிங்கில்
பார்க்காமல் ஒரு கலை விழாவிலோ இல்லை நகரவாசிகளுக்காக ஸ்பெஷலாக
நடக்கும் நிகழ்ச்சிகளிலோ பார்த்திருக்கலாம். எந்தத் தெருக்கூத்தை
காப்பாற்ற விழைகிறீர்கள்? எழுபதுகளிலேயே, தொலைகாட்சி இல்லாத காலத்திலேயே,
வேறு பொழுதுபோக்கு இல்லாத நேரத்திலேயே தாங்க முடியாத ஒன்றை இன்றைக்கு
எவன் பார்ப்பான்?

நான் பார்த்த மாதிரிதான் எல்லா கூத்தும் இருக்கும் என்று நான் சொல்ல
வரவில்லை. ஆனால் கூத்தை நிராகரிக்க ரெகார்ட் டான்ஸ் பார்க்கும் ஆசை
மட்டுமே காரணம் என்று சொல்வதற்கு முன் ஒரு கூத்தையாவது கிராமச் சூழலில்
பாருங்கள்…

ஆர்வி

நாட்டுப்புறக்கலைகளை முழுமையான யதார்த்தப்பின்னணியில் வைத்து புரிந்துகொள்ள வேண்டும். நாம் பேசும் இவ்விஷயங்களைப்பற்றி விரிவாகவே இங்கே நாட்டாரியலாளார்கள் பேசியிருக்கிறார்கள்.

1. நாகரீக வளர்ச்சி மூலம் ஊடகங்களும் ரசனையும் மாறும்போது பழமையான கலைகள் புதியகலைகளுக்கு வழிவிட்டு அழிவது வழக்கம்தானே? அதில் என்ன பிழை?

2 நாட்டார் கலைகள் எந்த பண்பாட்டு சூழலை சார்ந்து உருவாகி நிலைநின்றனவோ அந்த பண்பாட்டுச்சூழல் அழியும்போது அவையும் அழிவதல்லவா சரியானது?

இவ்விரு கேள்விகளையும் தான் பொதுவாக இவ்விவாதங்களில் எழுப்புகிறார்கள். ஆர்வி கேட்பதும் அதுவே.

இதற்கான பதில்களும் விரிவாக பேசப்பட்டுள்ளன.

1. எந்தக்கலையும் முழுமையாகவே அதன் அழகியலையும் அதன் வெளிப்பாட்டமைதியையும் இன்னொன்றுக்கு விட்டுக்கொடுப்பதில்லை. அதில் இருந்து ஒரு சிறு அம்சமே இன்னொரு கலைக்கு செல்கிறது. ஆகவே ஒரு கலை அழியும் என்றால் கலையில் மானுட சாத்தியம் ஒன்று இல்லாமலாகிறதென்றே அர்த்தம். அது ஒரு இழப்புதான். ஆகவே அக்கலை பேணப்பட்டாகவேண்டும்.

மேலும் ஒவ்வொரு கலையும் இன்னொரு கலையை வளர்க்கிறது. அதிகமான கலைகள் உள்ள தேசங்களிலேயே கலைகளின் தரமும் அதிகமாக இருக்கிறது. ஜப்பானிய தோல்பாவைக்கூத்து, நோ நாடகம் போன்றவை கோபயாஷி, குரசோவா போன்ற கலைஞர்களின் ஆக்கத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே நவீனமயமாக்கப்பட்ட ஜப்பான், அக்கலைகளை அழியவிட்டிருந்தால் அவர்கள் தங்களுக்கான சினிமா- நாடக சுய அடையாளத்தை உருவாக்கியிருக்கவே முடியாது.

ஆகவே எல்லா கலைகளும் பேணப்பட்டாக வேண்டும். அவை வாழமுடிந்தால் வாழட்டும் என்று விடுவதே நல்லது என்றால் எல்லாவற்றையும் அப்படி விடலாமே. ஏன் அரிய பறவைகளை பாதுகாக்க வேண்டும்?

தெருக்கூத்து அதற்கே உரிய அழகியல் ஒன்று உள்ளது. அது கட்டற்றது. அந்தக்கணத்தில் மேடையில் நிகழ்வது. vigour ஒன்றே கலையை உருவாக்கமுடியும் என்பதற்கான ஆதாரமாக நிற்கும் கலை. கலைஞனின் பயிற்சியை விட பித்துநிலையை [trance] நம்பக்கூடியது

மேலும் அரங்கின் இடத்தையும் அரங்கின் நான்குதிசைகளையும் பயன்படுத்திக்கொள்வதில் பலவகையான சாத்தியங்களை அது கண்டு பிடித்துள்ளது. கடலூர்பக்கம் ஒரு பாரதக்கூத்தில்மொத்த கிராமமே அரங்கு. ஒருதெரு அஸ்தினாபுரம், இன்னொரு தெரு பாஞ்சாலம் ஆக மாறிவிடும். ராம் லீலாவின் நாடகம் காணவரும் மொத்த கூட்டமும் நாடகத்திற்குள் நுழைந்து அயோத்தி மக்களாக ஆகிவிடுவார்கள்.

இந்த வகையான பலநூறு சாத்தியங்களால் ஆனது தெருக்கூத்து. அந்த கலை இருக்கும்வரைத்தான் அந்த சாத்தியங்களில் புதுமைகள் நிகழும். அதனுடன் உரையாடி , இருந்து சில அம்சங்களை சினிமாவும் நாடகமும் இலக்கியமும் எடுத்துக்கொள்ள முடியும்

2. கலைகளுக்கான சூழல் மாறினாலும் கலைகள் வாழும், வாழ்ந்தாகவேண்டும். அப்படிப்பார்த்தால் செவ்வியல் கலைகளை உருவாக்கிய சமூகமும் சூழலும்கூடத்தான் இன்றில்லை. தஞ்சையின் நிலப்பிரபுத்துவச் சூழல் அழிந்தபின் சபாக்கள் வழியாக கர்நாடகசங்கீதம் மறுபிறப்பு கொள்ளவில்லையா? கம்பராமாயணம் எழுதப்பட்ட வாசிக்கப்பட சூழல் இல்லை, கம்பராமாயணம் இருக்கிறதே?

புதிய சூழலை புதிய களங்களை உருவாக்கி கலைகளை மறு அமைப்பு செய்யமுடியும். கேரளத்தில் கதகளியும், கர்நாடகத்தில் யட்சகானமும் அவ்வாறு மறுபிற்ப்பு கொண்டு இன்று உயிர்த்துடிப்புடன் உள்ளன. பல முக்கியமான கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வசதியாக இருக்கிறார்கள். முறையே மகாகவி வள்ளத்தோளும் , டாக்டர் சிவராம காரந்தும் அந்த மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தார்கள்.

தமிழில் தெருக்கூத்தை அப்படி மீட்டெடுக்க ந.முத்துசாமி [கூத்துப்பட்டறை] முயன்றார். அதற்கு தமிழக அரசின் ஆதரவு கிடைக்கவில்லை. தமிழக பிரபுக்களும் ஆதரிக்கவில்லை. ஃபோர்டு ஃபௌண்டேஷன் அமைப்பின் நிதி மட்டுமே கிடைத்தது. அந்த நிதி நிலைத்ததும் செயல்பாடுகள் உறைந்தன. மேலும் முத்துசாமி அதற்காக அர்ப்பணிப்புள்ள பெருமுயற்சி ஏதும் எடுத்துக்கொள்ளவும் இல்லை. அவரது ஆர்வம் நவீனநாடகம், நடிப்புப்பட்டறை என்று தாவிக்கொண்டிருந்தது

சிலரின் தனிப்பட்ட முயற்சிகளே தொடர்கின்றன. அவர்களுக்கும் பெரிய சமூக ஆதரவு இல்லை.

*

கடைசியாக ரசனை பற்றி…

செவ்வியல்கலைகளை போலத்தான் நாட்டுப்புறக்கலைகளும். எல்லாரும் எப்போதும் ரசிக்க முடியாது. அந்தகலைகளை ரசிப்பதற்கான மனநிலையும் பயிற்சியும் தேவை. சட்டென்று ஒரு கிராமத்து மனிதர் சென்னை சபாவில் சென்று அமர்ந்து சஞ்சய் சுப்ரமணியம் பாடுவதை கேட்டால் என்ன சொல்வாரோ அதேதான் ஒரு நகர்மனிதர் தெருக்கூத்திலும் உணர்வார்.

இன்று தெருக்கூத்து முன்னிலைப்படுத்தப்படாமையால் அதை ரசிக்கும் மனநிலை அழிகிறது. எழுபதுகளில் கதகளிக்கும் இந்நிலை இருந்தது. ஆனால் அதற்கான ரசிகர்கள் பயிற்சிகொடுக்கப்பட்டு மெல்லமெல்ல உருவானார்கள். அது முக்கியம் என்ற எண்ணம் உருவானால் அதற்கான ரசிகர்கள் உருவாவார்கள். நேற்று போல அது ஒரு வெகுஜன ஊடகமாக இருக்காதென்பது உண்மை. ஆனால் அதை அறிந்து, அதன் தனித்தன்மையை ரசிக்கக்கூடியவர்கள் வருவார்கள். அவர்களை உருவாக்க முடியும்

நாட்டார் கலைகளில் செறிவை, அர்த்த அடுக்குகளை எதிர்பார்க்கக் கூடாது. சரளம், உடனடிவெளிப்பாடு, மூர்க்கமான வேகம் ஆகியவையே அதன் அழகியல். இந்த அம்சத்தை ஒருவன் தெரிந்துகொண்டாலே ரசிக்க ஆரம்பித்துவிடலாம்.

தெருக்கூத்திலேயே பல ரகம் உண்டு. புரிசை கண்ணப்பதம்புரானின் தெருக்கூத்து உயர்செவ்வியல் கலை. கம்பராமாயணத்தின் கலைவடிவம். கீழ்நிலை கலைகளும் உண்டு.

1940கள் வரை நாட்டார் கலைகளை பெரிதாக கண்டுகொள்ளாத ஐரோப்பா இன்று அதற்காக பெரும்பணம் செலவிட்டு பேணுகிறது. ஏனென்றால் ஐரோப்பிய தனித்தன்மை என்பதே அங்கெதான் உள்ளது. அவை அழிந்தால் காலப்போக்கில் ஐரோப்பியப் பண்பாடே இல்லாமலாகும். அவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் வேறுபாடில்லாமல் ஆகும். குறிப்பாக நார்வே ஸ்வீடன் டென்மார்க் ஸ்பெயின் போன்ற நாடுகள் நாட்டார்கலைகளுக்காக மிகுந்த கவனம் கொண்டுள்ளன. சொல்லப்போனால் அவை செலவழிக்கும் தொகையில் யானை உண்ட கவளச்சிதறல் எறும்புகளை வாழவைப்பது போல நம் நாட்டார் கலைகள் இன்று வாழ்கின்றன.

நாட்டார் கலைகள் அழியநேர்ந்தால் நவீன கலைகளின் ஒரு முக்கியமான வேர்நிலம் அழிகிறதென்றே பொருள். இலக்கியத்திற்கும் நாட்டாரியல் இன்றியமையாத தேவை. நாட்டாரியல் நேராக வாழ்வில் இருந்து அனுபவங்களை எடுக்கிறது. தன்னிச்சையாக கலையை -படிமங்களை – உருவாக்குகிறது. அதையே நவீன கலைகளும் செவ்வியல் கலைகளும் மறு ஆக்கம் செய்கின்றன. அவை அழிந்தால் வெறும் வணிக நுகர்கலைகளும் வணிக எழுத்தும் மட்டுமே பரவலாக இருக்கும். செவ்வியல் கலை வாழ்க்கை அனுபவம் இல்லாமல் வெறும் இலக்கணமாக நீடிக்கும்

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 19, 2011

முந்தைய கட்டுரைஈராறுகால் கொண்டெழும் புரவி -ஜினுராஜ்
அடுத்த கட்டுரைஅலெக்ஸ் நினைவேந்தல்