வரலாற்றின் வண்டலில்…

subhash-chandra-bose1(1)

 

ஒரு நிலப்பிரபு தன் நான்கு பிள்ளைகளை பெண் வாசனையே படாமல் வளர்க்கிறார். அதில் இளையவன் காதல்வயப்படுகிறான். எந்த குடும்பத்தின் மீதான பகை காரணமாக அவர் அப்படி இருக்கிறாரோ அந்த குடும்பத்துப்பெண்ணையே காதலிக்கிறான். பின்னர் வழக்கமான திருப்பங்கள். நகைச்சுவைகள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுவந்த ‘காட்·பாதர்’ என்ற அந்ந்த மலையாளத் திரைப்படத்தை பலர் பார்த்திருக்கலாம். அதில் அஞ்ஞூறான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த முதியவருக்கு அப்போது 74 வயது. அவர் நடித்த கடைசிப்படமாக அது இருந்ததில் ஆச்சரியமில்லை.

அவரது மகன் விஜயராகவன் நெடுங்காலமாக மலையாளத்திரைப்படங்களில் நடித்துவருகிறார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்கள். ஜெயராஜ் இயக்கிய ‘தேசாடனம்’ என்ற மலையாளப்படத்தில் துறவியாக ஆக்கப்பட்ட மகனை எண்ணி வெதும்பும் தந்தையாக சிறப்பாக நடித்திருந்தார் அவர்.

அந்த முதியவரின் பெயர் என்.என்.பிள்ளை. மலையாள வணிக நாடக மேடையின் பிதாமகர்களில் ஒருவர். 1918 ல் கேரளத்தில் வைக்கத்தில் ஒரு நாயர் குடும்பத்தில் பிறந்தவர் என்.என்.பிள்ளை.  1953 ல் விஸ்வ கேரள கலாசமிதி என்ற நாடக அமைப்பை நிறுவினார்.அவரது நாடகக்குழு கேரளத்தை உலுக்கிய பல நாடகங்களை மேடையேற்றியிருக்கிறது. மனித மனத்தின் அடித்தளமாக உள்ள காமஇச்சையையும், உறவுகளின் உட்பொருளாக ஓடும் சுயநலத்தையும் திடுக்கிடும் நிகழ்வுகள் மற்றும் எரியும் கிண்டல் மூலம் வெளிப்படுத்தி அதிரச்செய்யும் அந்நாடகங்கள் அனைத்தையும் என்.என்.பிள்ளையே எழுதியிருக்கிறார். அவற்றில்  ஒரு மும்பை விபச்சாரியின் வாழ்க்கையைச் சொல்லும் ‘காபாலிகா’ பெரும்புகழ்பெற்றது. ‘கிராஸ் பெல்ட்’ , ‘ஆத்மபலி’ ‘பிரேதலோகம்’ ‘ போன்ற பல நாடகங்கள் திரைப்படங்களாகவும் புகழ்பெற்றவை. 1995 ல் என்.என்.பிள்ளை மரணமடைந்தார்.

என்.என்.பிள்ளை தன் குடும்பத்தையே ஒரு நாடகக்குழுவாக உருவாக்கி விட்டிருந்தார். அவரது மனைவி, தங்கை, தங்கை கணவர், மகன்,மகள், மருமகன் ஆகியோர் அடங்கியது அந்த நாடகக்குழு. அதுவும் அக்காலத்தில் ஒரு பெரிய ஆச்சரியமாக கேரளத்தில் விளங்கியது. நாடகம்மூலம் பெரும்பணம் சம்பாதிக்கவும் கலாச்சார விவாதங்களின் மையமாக விளங்கவும் அவரால் முடிந்தது.

என்.என்.பிள்ளை நாடக இலக்கணங்களைப்பற்றி ‘நாடக தர்ப்பணம்’ போன்ற முக்கியமான பல நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால் அவரது நூல்களில் மிகக்குறிப்பிடத்தக்கது அவரது சுயசரிதை. ‘ஞான்’ [நான்] என்றபேரிலான இந்தச் சுயசரிதையை நான் மிகச்சிறுவயதில் வாசித்தேன் வரலாறு என்பது பள்ளிப்பாடங்களால் ஆனது அல்ல , மானுட இயற்கையை வைத்துத்தான் அதைப்புரிந்துகொள்ள வேண்டும் என்று எனக்குக் கற்பித்தது இந்தச் சுயசரிதைதான். சிலநூல்கள் அந்நூல்களின் நடையாலும் தோரணையாலுமே முற்றிலும் உண்மையானவை என்று தோன்றச்செய்யும். அந்த உண்மையால் அவை மொத்த வரலாற்றுக்கும் மாற்று வரலாறாக நிலைகொள்ளும். அத்தகைய அபூர்வமான நூல் இது.

விசித்திரமான ஒரு துடுக்குத்தனம் அந்த தன்வரலாற்றின் தொடக்கம் முதலே முன்னிட்டு நிற்கிறது. தன் தந்தையைப்பற்றிச் சொல்லும்போது பொதுவாக அனைவருக்கும் நவத்துவாரங்கள் இருக்கும், என் தந்தைக்கு தசதுவாரங்கள் என்கிறார் என்.என்.பிள்ளை. அவருக்கு மலக்குடல் வெளியே திறக்கும் ·பிஸ்டுலா என்ற கொடிய நோய் இருந்தது. சிறுவயதில் தன்னை இடுப்பில் தூக்கி வளர்த்த பன்னிரண்டு வயது மூத்த சின்னம்மு என்ற அக்காவிடம் ரகசியக்காதல் கொள்கிறார். ஒருவகை ஈடிபஸ் ஈர்ப்பு. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிறைப்பட்டு துன்புற்று நோய் முற்றி அப்பா இறக்கிறார். ஊரில் ஒரு சண்டையில் ஒருவனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி மலாயாவின் தோட்டங்களில் வேலைக்குச் செல்கிறார் என்.என்.பிள்ளை

மலாயா-பர்மாச் சித்தரிப்புதான் இந்த சுயசரிதையின் மிக முக்கியமான பகுதி. இந்தியாவில் இருந்து வந்த பலவகைப்பட மனிதர்களின் விவரணை உள்ளது. வங்காளிகள் ஓரளவு கல்வியறிவுகொண்டவர்களாகவும் தங்களை மேலானவர்கள் என்று கருதிக்கொள்வதனாலேயே ஒற்றுமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமானவர்களாக ஆகி கங்காணிகளாக பணியாற்றுகிறார்கள். அடுத்தபடியாக ஈழத்தமிழர்களான வேளாளர்கள் கங்காணிப்பணி ஆற்றுகிறார்கள்.

தெலுங்கர்களும் தமிழர்களும் அனேகமாக கல்வியறிவில்லாதவர்கள். பஞ்சம் பிழைக்க கிளம்பி வந்த அடிமை ஜனங்கள். குடிப்பழக்கத்தாலும் சாதிப்பிரிவினைகளாலும் சதா பூசலிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை யார் என்ன செய்தாலும் கேள்விமுறையில்லை. அவர்களேகூட ஒன்றுசேர்ந்து எதிர்ப்பதில்லை. தமிழர்களில் ஒருபகுதியினரான செட்டிகள் இந்த பெரும் கும்பலுடன் இணையாமல் தங்களை பிரித்துக்கொண்டு வணிகம் செய்கிறார்கள்.

அங்கே உள்ள மலையாளிகளில் அனேகமாக அனைவருமே விதிவிலக்கில்லாமல் குற்றவாளிகள். இந்தியாவில் சிறிதும் பெரிதுமான குற்றங்கள் செய்துவிட்டு ஓடிவந்தவர்கள். புனைவுநுட்பத்துடன் அவர்களின் சித்தரிப்பை அளிக்கிறார் என்.என்.பிள்ளை. அவரைப்பார்த்ததுமே கோணலான உதடுடன் ”எந்த ஊர்?” என்கிறார் ஒருவர். சொன்னதுமே ” 1912ல் சேர்த்தலை சந்தையில் நடந்த அடிதடியைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? இடியன் குட்டப்பனை ஒரே அடியில் வீழ்த்திய தேக்காட்டு சங்கரனைப்பற்றி?” . ”இல்லை” என்றதும் மேலும் இளக்காரம். பின்னர் ”நான்தான் சங்கரன்…என்னைப்பற்றிச் சொன்னால் சேர்த்தலையே நடுங்கும்…” ஒரு வக்கரித்த சிரிப்பு… அவர்கள்  எந்தக்குற்றமும் செய்யத் தயாரானவர்கள். நம்பிக்கைக்கு கொஞ்சமும் அருகதையில்லாதவர்கள்.

என்.என்.பிள்ளை அதிகமும் தமிழர்களுடன்தான் சேர்ந்துகொள்கிறார். அவரது காதலிகளும் தமிழ்ப்பெண்கள்தான். ஏராளமான அடிதடிகள். கத்திக்குத்துகள். தப்பி ஓட்டங்கள். அப்போதுதான் 1942 ஜூன் மாதம் ஜப்பானியசேனை மலாயா-பர்மாவைக் கைப்பற்றுகிறது. அதற்கு முன்னரே ஜப்பானில் சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியிருந்தார். அதைப்பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தாலும் அதைப்பொருட்படுத்த வேண்டுமென்ற எண்ணமே எவருக்கும் உருவாகவில்லை. ஏன் என்றால் சர்வ வல்லமை வாய்ந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வீழ்த்த எவராலும் முடியாது என்ற எண்ணம்தான்.

ஆனால் பர்மா வீழ்ந்ததுமே ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டது. பிரிட்டிஷாரை துரத்தி இந்தியாவை மீட்பது சாத்தியம்தான் என்ற எண்ணம் வலுப்பெற்றது. நேதாஜியின் படைக்கு ஆள் சேர்க்கும் முயற்சிகள் ஏற்கனவே மிக ரகசியமாக நடைபெற்று வந்தன. இப்போது அவை ஜப்பானிய ராணுவத்தின் ஆதரவுடன் முழு வீச்சில் நடைபெற்றன. சாரி சாரியாக இளைஞர்கள் ஜப்பானிய ராணுவத்தில் சேர்ந்தார்கள். என்.என்.பிள்ளை யும் அவர்களில் ஒருவர்.

அவர்கள் சிங்கப்பூருக்குக் கொண்டுசெல்லப்பட்டு ராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டார்கள். மெல்ல மெல்ல அங்கே உள்ள உண்மை நிலவரம் என்.என்.பிள்ளைக்குத் தெரியவருகிறது. இந்திய தேசிய ராணுவத்தைப்பற்றி என்.என்.பிள்ளை அளிக்கும் சித்திரம் இளம் வயதில் என்னை கடுமையான மனச்சோர்வுக்கு உள்ளாக்கியது. போரில் சரணடைந்த பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த இந்தியச்சிப்பாய்களே அவர்களில் அதிகம். அவர்கள் பெரும்பாலும் சிறைக்கைதி வாழ்க்கையை தவிர்ப்பதற்காகவே அந்தப் படையில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு எந்தவகையான அரசியல் சிந்தனைகளும் கிடையாது. அவர்கள் பெற்றிருந்த கல்வி பிரிட்டிஷ் ராணுவம் அளித்த ராணுவக்கல்வி மட்டுமே. இந்தியதேசம் என்ற மனச்சித்திரமோ சுதந்திரப்போராட்டம் குறித்த எளிய புரிதலோகூட அவர்களிடம் இல்லை. பஞ்சம் பிழைக்க ராணுவத்தில் சேர்ந்து, தொடர்ச்சியான அடிமைப்பணி மூலம் மனம் மந்தப்பட்டு, கட்டுபாடையே குணாதிசயமாகக் கொண்ட மனித மிருகங்கள் அவர்கள்.

n.n.p
என்.என்.பிள்ளை

 

தோட்டத்தொழில் நசித்தபோது பிழைப்புக்கு வழியில்லாமலாகி இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவர்கள் மீதிப்பேர். அவர்களுக்கும் இந்தியதேசம் என்ற மன உருவகம் கிடையாது. என்.என்.பிள்ளை இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபிறகுதான் அந்த மனச்சித்திரம் எளிய அடித்தட்டு மக்களிடையே உருவானது என்று சொல்கிறார். சுபாஷ் சந்திர போஸ் மீது இனம்புரியாத ஒரு மதிப்பு அவர்களிடையே இருந்தது. அது அவரை பிரிட்டிஷார் அஞ்சுகிறார்கள், ஜப்பானியர் அவரை மதிக்கிறார்கள் என்பதனால் உருவானது. தேசவிடுதலை என்ற இலட்சிய வேகத்தால் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவர்கள் மிகச்சிறுபானையினரே.

இந்தக்கலவையான ராணுவத்துக்கு முறையான, முழுமையான பயிற்சி அளிக்க ஜப்பானியருக்கு நேரமில்லை. ஆள்பலமும் இல்லை. உலகப் போர் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. ஜப்பானின் நெருக்கடி முற்றிக்கொண்டிருந்தது. ஆகவே ஏற்கனவே பிரிட்டிஷ் ராணுவத்தில் பயிற்சி பெற்றிருந்தவர்களுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். சுபாஷ் சந்திர போஸால் கவரப்பட்டு இலட்சிய வேகம் கோண்டு சேர்ந்தவர்களிடம் பயிற்சி இல்லை. அவர்களில் அசாதாரணமான திறமையைக் காட்டிய சிலருக்கு மட்டும் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவராக என்.என்.பிள்ளை காப்டன் பதவியை அடைந்தார்.

1943ல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவ அணிவகுப்பை நடத்தி இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்தார். அதையொட்டி ஒரு பெரும் அதிரடித்தாக்குதல் மூலம் நேராக இந்தியாவை நோக்கி முன்னேறி மணிப்பூரில் நுழைந்து இம்பாலைக் கைப்பற்றி அங்கிருந்து வங்கம் வழியாக தென்னிந்தியா நோக்கி நகர்ந்து இந்தியாவை மீட்கும் ஒரு மாபெரும் திட்டம் வகுக்கப்பட்டது. அப்போது பர்மிய ஜப்பானிய ராணுவத்தின் தலைவராக இருந்தவர் ஜெனரல் முட்டாகுச்சி. இவரது படைப்பிரிவுகளுடன் இந்திய தேசிய ராணுவத்தின் படைப்பிரிவுகளையும் இணைக்க ஆணையிடப்பட்டது.

ஜப்பானிய ராணுவம் பர்மாவை ஊடுருவியதன் தகவல்களை நாம்  உலகப்போர் குறித்த எல்லா நூல்களிலும் காணலாம். ஆனால் அதன் நுண்ணிய அந்தரங்கச்சித்திரம் ஒன்றை அளிக்கிறது என்.என்.பிள்ளையின் தன்வரலாறு. சிங்கப்பூர் முதல் கல்கத்தாவரை நீளும் ஒரு பெரும் ரயில்பாதையை ஜப்பானியர் அமைத்தார்கள். மலாயா, தாய்லாந்து, பர்மா வழியாகச் செல்வது அந்தப்பாதை. கொடும் காடுகளின் வழியாக பல ஆறுகளையும் மலைகளையும் கடந்து போவது. அதை அமைக்க ஆறு வருடங்கள் ஆகும் என்று பொறியாளர்கள் சொன்னார்கள். எட்டு மாதங்களில் அதை அமைத்து முடிக்க ஜப்பானிய ராணுவம் முயன்றது. பல்லாயிரக்கணக்கான போர்க்கைதிகள் கடும் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அந்த ரயில்பாதை அமைப்பதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். மலாயா, பர்மாவில் இருந்து ஆயுதம் மூலம் திரட்டப்பட்ட ஏழை தோட்டத்தொழிலாளர்கள் அந்த ரயில்பாதைப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

சயாம் மரணரயில்பாதை என்று பின்பு அழைக்கப்பட்ட இந்தப்பாதையின் கதை ஒரு மானுடசோகம். இந்தப்பாதையை தடுப்பதற்காக தங்கள் ராணுவத்தின் கைதிகள் மேல் பிரிட்டிஷ் விமானங்கள் குண்டு பொழிந்தன. மலேரியாவாலும் பாம்புகடியாலும் பசிபட்டினியாலும் பலர் செத்தார்கள். மொத்தம் மூன்றுலட்சம்பேர் இறந்திருப்பார்கள் என்றும் அதில் ஒருலட்சம்பேர் தமிழர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்தரயில்பாதைத்திட்டம் முடிவடையவில்லை.

மலாயாவிலும் பர்மாவிலும் ஜப்பானியர்களுக்கு கடுமையான எதிப்பு இருந்தது. கம்யூனிஸ்டுகளும் மலாய, பர்மியத் தேசியவாதிகளும் இணைந்து அந்த எதிர்ப்பை கெரில்லாப்போராட்டமாக நடத்தினர். ஆகவே ஜப்பானியப்படை ஓரு வழியைக் கைக்கொண்டது. அவர்கள் போகும்வழியெல்லாம் முழுமையாகக் கொள்ளையைத்து, வீடுகளையும் விளைநிலங்களையும் கொளுத்தி, கிட்டத்தட்ட எதுவுமே மிஞ்சாமல் ஆக்கியபடிச் சென்றார்கள். ஆகவே பசியில் துடித்த மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த ரயில்பாதையின் இருபக்கமும் குழுமினார்கள். ரயிலில்செல்பவர்களை நோக்கி கையேந்தி கெஞ்சியபடி பின்னால் ஓடினார்கள். ரயில்பாதையின் இருபக்கமும் பட்டினிப்பிணங்கள் குவிந்தன.

ரயிலில் சென்ற சிப்பாய்களின் வேடிக்கையே ரொட்டியைப்பிய்த்து அக்கூட்டம் மீது வீசுவதுதான். அவற்றுக்காக அம்மக்கள் பாய்ந்து, போராடி, ஒருவரை ஒருவர் மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டார்கள். அதைக்கண்டு படைவீரர்கள் மகிழ்ந்தார்கள். ரயில் நிலையக்கழிப்பறைகளில்  சில்லறைக்காசுகளுக்காகவும் ரொட்டிக்காவும் விபச்சாரம் செய்ய பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து முட்டி மோதினார்கள். கழிப்பறைகளில் கால்சராயை அவிழ்க்கும்போது குழந்தைகள் முண்டியடித்து வந்து கைகளைப்பற்றிக்கொண்டு கெஞ்சும் காட்சியை என்.என்.பிள்ளை எழுதுகிறார்.

இந்திய தேசிய ராணுவத்தின் உள்விவகாரங்களைப்பற்றிய பதிவுகளும் அதிர்ச்சி அளிப்பவை. பிரிட்டிஷ் நேர்மை பற்றி நமக்கு ஒரு பிம்பம் உள்ளது. என்.என்.பிள்ளை நேர் மாறாகச் சொல்கிறார். பிரிட்டிஷ் ராணுவம் என்பது ஊழலாலேயே ஒருங்கிணைக்கப்பட்டது என்பது அவரது கூற்று. சாதாரண பிரிட்டிஷ் அதிகாரிகள் பிரிட்டனில் மிக எளிய தொழிலாளர் குடிகளில் இருந்து வந்தவர்கள். பணம் சம்பாதித்து ஊர்திரும்பி ஒரு கௌரவமான வாழ்க்கையை உருவாக்கும் கனவு மட்டுமே கொண்டவர்கள் அவர்கள். ஆகவே அன்றைய பிரிட்டிஷ் அரசின் அதிகாரிகளுக்கு ஊழல் என்பது அன்றாடச்செயல்பாடு. ஒரு சிற்றூரில் காவல்துறை அதிகாரியாக வரும் வெள்ளையர் முதல் சிறு நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் வரை அனைவருமே அதிகாரபூர்வ ஊழலிலேயே திளைத்திருப்பார்கள்.

அந்த ஊழலை நிகழ்த்தும்பொருட்டுத்தான் அன்றைய நிர்வாகத்தின் பிரமிட் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. கீழ்மட்ட ஊழியர்கள் ஊழல்செய்வதன் ஒருபகுதி மேலே சென்று கொண்டே இருக்கும். இன்றுவரை சுதந்திர இந்தியாவில் அந்த பிரிட்டிஷ் ஊழலமைப்பே தொடர்கிறது. இந்திய ராணுவத்தில் ஊழல் நடைமுறைக்குப் பழகிய இந்திய தேசிய ராணுவத்தின்  பிரிட்டிஷ் சிப்பாய்கள் எல்லாவற்றிலும் காசு பார்க்க முயன்றார்கள். குறிப்பாக வங்காளிகள் பணம் திரட்டுவதை மட்டுமே செய்தார்கள். அவர்களைத்தட்டிக்கேட்க எவராலும் முடியவில்லை. சுபாஷ் சந்திர போஸை பலமுறை என்.என்.பிள்ளை சந்திக்கிறார். ஆனால் சுபாஷ் சந்திர போஸ் சிலரது ஆலோசனைப்பிடியில் இருந்தார்.

சுபாஷ் சந்திர போஸ் ராணுவ விஷயமாக ஒன்றுமே தெரியாதவராக இருந்தார். அவரை ஜப்பானிய ராணுவத்தின் கடைநிலை அதிகாரிகூட ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்தியாவைக் கைப்பற்றும்போது இந்திய மக்கள் ஜப்பானியருக்கு எதிராக திரும்பாமல் தடுக்கும் ஒரு கவசமாக, ஒரு எதிர்காலப் பொம்மை ஆட்சியாளராக, மட்டுமே ஜப்பானியர் சுபாஷை கண்டார்கள்.

கனவுஜீவியான சுபாஷ் சந்திர போஸ் தனக்கே உரிய இலட்சியக்கனவு ஒன்றில் ததும்பிக்கொண்டிருந்தார் என்று என்.என்.பிள்ளை சொல்கிறார். சயாம் மரண ரயில் திட்டத்தில் பல லட்சம்பேர் கொல்லப்பட்டதும் ஜப்பானிய ராணுவம் எளிய பொதுமக்கள் மேல் நிகழ்த்திய அட்டூழியங்களும் அவருக்குத்தெரியும். அவரது மானுடநேயம் மிக்க மனம் அதை எதிர்த்தது. ஆனால் அவர் கிட்டத்தட்ட ஜப்பானியரின் அடிமையாக, கைப்பாவையாக இருந்தார். இந்தியாவை மீட்பது என்ற பெருங்கனவைக்கொண்டு அந்த அவமானங்களை உண்டு செரித்துக்கொண்டு வந்தார்.

சுபாஷ் சந்திர போஸையே ஒரு பொருட்டாகக் கருதாத ஜப்பானிய ராணுவத்துக்கு இந்திய தேசிய ராணுவம் மீது முழுக்க முழுக்க இளக்காரம் மட்டுமே இருந்தது. போர்முனையில் இந்திய தேசிய ராணுவம் எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை கொஞ்சம்கூட ஜப்பானியரிடம் இல்லை. ராணுவத்தில் உள்ள காவல்வேலை, கருவிகளை பழுதுபார்த்தல், ஓட்டுநர் வேலை, கட்டுமான வேலைகள் போன்ற ஏராளமான வேலைகளுக்கு அவர்களுக்கு ஆள் தேவைப்பட்டது. ஆகவே தங்கள் ராணுவத்துக்கான ஒரு சேவகர்க்கும்பலாகவே அவர்கள் இந்திய தேசிய ராணுவம்த்தை நடத்தினார்கள்

பிரிட்டிஷாரை விட பலமடங்கு இனவெறி கொண்டவர்களாகவும் குரூரமானவர்களாகவும் பழமைநோக்குள்ள அடிப்படைவாதிகளாகவும் இருந்தார்கள் ஜப்பானியர். அவர்களைப் பொறுத்தவரை இந்தியா என்றல்ல, எந்த ஒரு தேசத்தின் விடுதலையும் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. உலகத்தை முழுக்க ஜப்பானியச் சக்கரவர்த்தியின் ஆட்சிக்குக்கீழே கொண்டுவருவது மட்டுமே அவர்களின் நோக்கம். ஒவ்வொரு நாளும் ஜப்பானியரின் அவமதிப்புகளைச் சந்திக்கிறார் என்.என்.பிள்ளை. போர்முனையில் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடும் கனவைக்கொண்டு அந்த அவமானங்களை எதிர்கொள்கிறார்.

ஜப்பானியர் இந்திய தேசிய ராணுவத்தை போரில் ஈடுபடுத்தவேயில்லை. இந்திய தேசிய ராணுவமும் ஜப்பானிய ராணுவமும் சேர்ந்து ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட பெரும்பாலான போர்களில் இந்திய தேசிய ராணுவம் வெறும் உதவியாளர்பட்டாளமாகவே இருந்தது. கடைசியில் மூன்றே மூன்று போர்முனைகளில் இந்திய தேசிய ராணுவம் நேரடியாக பீட்டிஷ் ராணுவத்தை எதிர்கொண்டது. ‘வெட்கக்கேடு!” என்று சுயவெறுப்புடனும் கசப்புடனும் அதைப்பற்றி எழுதுகிறார் என்.என்.பிள்ளை. போர்க்களத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த முன்னாள் பிரிட்டிஷ் இந்திய வீரர்கள் வெள்ளைக்கொடியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தை நோக்கிச் சென்றார்கள். அவர்களை நம்பாமல் பிரிட்டிஷ் ராணுவம் அவர்களை சுட்டு வீழ்த்தியது. பலர் திரும்பி ஓடிவந்தார்கள்.

ஒரு இடத்தில்கூட இந்திய தேசிய ராணுவம் உண்மையாகப் போரிடவில்லை. பயிற்சி இல்லாத புதிய இந்திய தேசிய ராணுவ வீரர்கள் அஞ்சி ஓடி சிறு சிறு கும்பல்களாகச் சிதறினார்கள். ஒருங்கிணைப்பு இல்லாமல் காடுகளில் தவித்து ஜப்பானிய ராணுவத்தால் மீட்கப்பட்டார்கள். போர்க்களத்தில் தனிநபர்வீரம் என்பதற்கு எந்த பொருளும் இல்லை என்று தல்ஸ்தோய் தன் ‘போரும் அமைதியும்’ நாவலில் சொல்கிறார். அதையே என்.என்.பிள்ளையும் சொல்கிறார். ஒருங்கிணைப்பும் கட்டுப்பாடும் மட்டுமே அங்கே முக்கியம். அதற்கு எந்தவகையான இலட்சியவாதமும் உதவாது. பலவருடங்கள் தொடரும் பயிற்சி மூலம் வாழ்க்கையே அப்பயிற்சியால் ஆனதாக இருப்பது மட்டுமே உதவும். அதாவது போர்முனையில் சிறப்பாகப் போரிடும் ராணுவமென்பது மனிதர்களை இயந்திரமாக ஆக்கிக்கொண்ட ஒன்று. அவசரகதியில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் ஒரு கேலிக்கூத்தாக ஆனதில் ஆச்சரியமே இல்லை

மேலும் இந்திய தேசிய ராணுவத்துக்கு உரியமுறையில் ஆயுதங்களும் உணவுகளும் ஜப்பானியரால் வழங்கப்படவும் இல்லை. இந்திய தேசிய ராணுவத்தின் அவலநிலையும் தோல்விகளும் சுபாஷிடம் சொல்லப்படும்போது அவமானமும் மனக்கசப்பும் மீதூற செய்வதறியாமல் அவர் எரிந்துவிழுகிறார். திட்டுகிறார். கண்ணீர் விட்டுக்கொண்டு அவர்களிடம் மேலும் போராடும்படி சொல்கிறார். என்.என்.பிள்ளை காட்டும் சுபாஷ் சந்திர போஸ் இலட்சியவாதத்தின் மேகமயமான கனவுலகில் இருந்து போர் என்ற அப்பட்டமான யதார்த்தத்தின் முள்காட்டுக்குள் விழுந்து தவிப்பவராகக் காட்சியளிக்கிறார்.

கடைசியில் போர் முற்றிலும் தோல்வியில் முடிகிறது. சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் மரணமடைகிறார். சுபாஷ் சந்திர போஸைப் பொறுத்தவரை அந்த விபத்தும் மரணமும் அவருக்கு இயற்கை கொடுத்த பரிசு என்று என்.என்.பிள்ளை எண்ணுகிறார். அவர் ஜப்பானியரால் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு என்று கருதுகிறார். சுபாஷ் சந்திர போஸ் ஏற்கனவே மன அளவில் உடைந்து மரணத்தை நெருங்கிவிட்டிருந்தார். ஜப்பானியர்களையும் ·பாஸிஸ்டுகளையும் நம்பியது எத்தனை பெரிய வரலாற்றுப்பிழை என அவர் நன்குணர்ந்துவிட்டிருந்தார்.

ஒரு நிகழ்ச்சியை என்.என்.பிள்ளை சொல்கிறார்.  இந்திய நிலப்பகுதியில் இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றிய முதல் நிலப்பகுதி அந்தமான். அங்கே சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். ஆனால் அந்த தீவு ஜப்பானின் கைவசம்தான் இருந்தது. அங்கே சுபாஷ் சந்திர போஸ்யால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளரான மோகன்தாஸ் என்பவர் ஜப்பானியரால் சிறைப்படுத்தப்பட்டார். 1944ல் போர் முடியும் தருவாயில் அந்தமான் வந்த சுபாஷ் சந்திர போஸ் சிறையில் இருந்த மோகன்தாஸை சந்திக்கிறார். கடும் சித்திரவதைக்கு உள்ளாகி சிறையில் வாடிய அவரைக்கண்டு சுபாஷ் சந்திர போஸ் மனமுடைந்து கண்ணீர்விடுகிறார். ஆனால் அவரால் ஜப்பானியரை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியவில்லை.

இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டபின்னர் இந்தியா திரும்பும் என்.என்.பிள்ளை கையில் ஒரு பைசாகூட இல்லாமல் கேரளம் வருகிறார். அவரிடம் இருக்கும் ஒரே திறமை என்பது இந்திய தேசிய ராணுவத்துக்காக சில நாடகங்களை பர்மாவின் தொழிலாளர் மத்தியில் போட்டதுதான். திருமணமாகி பின் கணவனைப்பிரிந்து இருந்த சின்னம்முவை அவர் திருமணம் செய்து கொள்கிறார். சுதந்திரப்போராளி என்ற சமூக அங்கீகாரம் எதையும் அவர் நாடவில்லை. சமூக எதிர்ப்புகளை துச்சமாகக் கருதும் ஆழமான கசப்பும் அங்கதமும் அவரிடம் குடியேறிவிட்டிருந்தது. நாடகநிறுவனத்தை தொடங்கினார். வெற்றிபெற்றார்.

”வருடம்தோறும் நான் பல ஆயிரம் ரூபாய்கள் நன்கொடையாகக் கொடுக்கிறேன். ஏழை எளியவர்களுக்கு அளிக்கிறேன்…அவையெல்லாம் கருணையால் அல்ல. சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல. அப்படிப்பட்ட எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. என் அப்பாவை சில்லறைப்பணத்துக்காக சிறையிலடைத்துக்கொன்ற கேரள சமூகத்தின் முகத்தில் அதன் வழியாக நான் காறி உமிழ்கிறேன்…”என்று என்.என்.பிள்ளை தன் தன்வரலாற்றின் இறுதியில் எழுதினார்.

சுயசரிதைகளை உண்மையாகவே எழுதினால் அந்த நூலை தொட்டால் கை சுடும் என்பார்கள். அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று இது. நம் கைவழியாக ஓடிச்செல்வதே வரலாறு. விழுமியங்கள் ஏற்றப்பட்டு கோபுரங்களாக ஆக்கப்பட்டு நம் தலைக்குமேல் எழுந்துநிற்கும் கட்டுமானம் அல்ல.

 

ஞான். சுயசரிதை. என் என் பிள்ளை [மலையாளம்]

 

முதற்பிரசுரம்/ மறுபிரசுரம்Jan 1, 2011

 

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் – 2017 நினைவுகள்
அடுத்த கட்டுரைகிசுகிசு வரலாறு குறித்து…