அண்ணாமலை-பாலா

10:30 மணி ராகுகாலம் முடிந்ததா என்று கவனமாகப் பார்த்து விட்டு, எங்கள் வழக்கமான வழிநடைப் பாடலை (அச்சம் என்பது மடமையடா..) மனதில் நிறுத்தி, நானும், விஜியும், எங்கள் தத்துப் பிள்ளை அரவிந்தனும் (குரங்குத் தவம் ப்ளாக்கர்) கிளம்பினோம். கிளம்புவதற்கு முன்னால், அண்ணன் அரங்கசாமிக்குப் போன் செய்து, “தல, அஞ்சு மணிக்குள்ளார அண்ணாமலை வந்துடுமா?” என்று கேட்டேன். “ஹ ஹ ஹ” என்று சிரித்தார்.. ஹேமநாத பாகவதரின் மகத்துவம் அறியாமல் பேசுகிறாய் நீ என்பது போன்ற சிரிப்பு அது..

கிட்டத்தட்ட 4 மணிக்கு அண்ணாமலையை அடைந்து, ஜெயமோகனுக்கு தொலைபேசினேன்.. “எங்கிருக்கீங்க?? “ “சேலம் பக்கத்துல” கிழிஞ்சுது என்று நினைத்துக் கொண்டேன். சரி புலம்பிப் பயனில்லை.. பார்ட்டி 9 மணிக்கு முன்னாடி வராது.. ஆறு மணி, சனி மாலைப் பாராயணத்துக்கு அவருடன் செல்லலாம் என்றொரு ஆசை..

தனியே சென்று மிக சந்தோஷமாக சற்று நேரம் ரமணரின் அறையில் அமர்ந்து த்யானம் செய்து விட்டு, தமிழ்ப் பாராயணப் புத்தகம் வாங்கி, மிகக் கஷ்டப் பட்டு ரமணரின் சன்னிதி ஹால் க்ரானைட் தரையில் அமர்ந்து, பாராயணம் பாடினோம். கிருஸ்துமஸ் விடுமுறை என்பதால், உலகெங்கும் உள்ள ரமண பக்தர்கள் வந்திருந்தார்கள். ஒரு 8-10 இஸ்லாமியப் பெண்கள் வந்தது மிக நெகிழ்ச்சியாக இருந்தது பார்க்க.. தமிழ் தெரியாத கொரிய, ஜப்பானிய, ஐரோப்பிய, அமெரிக்க பெண்களும் ஆண்களும், தமிழ்ப் பாராயணத்தில் கலந்து கொள்வதைக் காணக் கண் கோடி வேண்டும்..

பாராயணம் முடிந்து, கார்கிரி வலம் புறப்பட்டோம். வலத்தின் முடிவில் உள்ள ராமகிருஷ்ணா உணவகத்தின் முன் அதுவே நின்று விட்டது.. 5 வருட பழக்கம் அதுக்கு. அங்கிருந்து பவா செல்லத்துரையை அழைத்தேன்.. ”ராமகிருஷ்ணாவிலேயேதான் சாப்பிடணுமா?” என்று கேட்டார். எனக்குப் பசி. ஒழிந்து போ என்று விட்டு விட்டார். சென்னைச் சாலையில் உள்ள ஒரு விருந்தினர் விடுதிக்கு வந்துவிடுமாறு பணித்தார்.

சாப்பிட்டு விட்டு, விடுதிக்குச் சென்று, அங்கே இருந்த சாஆஆஅய்வு சோபாவில் உட்காந்து செய்தித்தாள் படித்தோஓஓஓஒம்.. ஒரு வழியாக 9:30 மணிக்கு கார் வந்தது. பவாவிடம் அறிமுகம் செய்து கொண்டோம். நாஞ்சிலை அப்போதுதான் முதலில் பார்க்கிறேன். குணமென்னும் குன்றேறி நிற்கும் நாஞ்சிலைக் கொஞ்சம் அண்ணாந்து பாக்கணுமோ என்று கற்பனை செய்திருந்த எனக்கு, பயணத்தால் களைத்த, கொஞ்சம் சிறிய உருவமாக, நாஞ்சிலின் அறிமுகம் ஏமாற்றமே..

இறங்கிய உடனேயே கச்சேரி களைகட்டத் துவங்கியது.. ஜெ., பவாவுக்கும் தனக்கும் உள்ள நீண்ட கால நட்பைச் சொன்னார்.. பேச்சு, மேடைப் பேச்சுக் கலையைச் சுற்றி வந்தது. சு.ராவின் கச்சிதமான மேடைப் பேச்சைச் சிலாகித்துச் சொன்னார் பவா.. பின்னர் நன்மாறன் என்னும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த பேச்சாளர் பற்றியும் சொன்னார். மேடைப் பேச்சுக்கலை வல்லவர்களைப் பற்றி ஒரு சிற்றுரையாற்றினார் ஜெ.. எங்கெங்கோ சுற்றி, பாலகுமாரனில் வந்து நின்றது.. சரித்திரப் புகழ்பெற்ற அந்த விஷயத்தில் சொல்லாத ஒரு சுவாரஸ்யமான தகவலையும் சொன்னார்.. பவா பாலகுமாரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது, ஒரு பெண் எழுந்து, “பாலகுமாரனின் எழுத்துக்கள் எனக்கு பகவத் கீதை மாதிரி” என்று சொன்னாராம். பாலகுமாரன் பவாவை நோக்கி பாத்துக்கோ என்பது போல் பார்த்தாராம்.. இந்த இடத்தில் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, ஒரு தேர்ந்த நாடகக்காரனைப் போல் அறிவித்தார் “அந்தப் பெண் பின்னால் என் மனைவியான ஷைலஜா” கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.. இந்த மனிதரில் இருந்து அன்பும் சந்தோஷமும் வழிந்து கொண்டேயிருக்கிறதோ என்று தோன்றுகிறது.. ஜெவுக்கு பழங்கள் இல்லாததால், கொஞ்சமாக சாம்பாரில் உள்ள காய்கறிகளை மீன்பிடித்துச் சாப்பிட்டார்..

நானும் விஜியும் ரமணாசிரமத்துக்கு எதிரில் உள்ள விடுதிக்குக் கிளம்பினோம் உறங்க.. மணி 11:30.

காலை எழுந்து மீண்டும் கச்சேரி.. வழக்கம் போல் காலைக் கட்டன் சாயா ப்ரச்சினை.. இது ஒரு தேசியப் ப்ரச்சினையாக மாறும் முன்பு ஒரு தீர்வு கண்டு பிடிக்க வேண்டும்.. கறுப்புக் காப்பிக்கும் கடும் கட்டன் சாயாவுக்கும் இடையி;ல் மாட்டிக் கொண்டார் ஜெ.. between devil and deep blue sea.. நாஞ்சில், பையில் இருந்து மாத்திரை எடுத்து, அடுக்கி, சாப்பிடும் அழகைப் பார்க்கும் யாருக்கும், “நமக்கும் கொஞ்சம் வியாதிகள் இருந்தால் நல்லாயிருக்குமே” என்று தோன்றும்.. அவர்கள் கோவிலுக்குச் செல்ல நான் ரமணாசிரமம் திரும்பினேன்.. ரமணர் விஷயத்தில் நான் ஒரு எவாஞ்சலிஸ்ட்.. ஆர்தர் ஆஸ்போர்னின் “ ramana maharshi and the path of self knowledge” செத்தார்கள் நாஞ்சிலும், ஜெயமோகனும் என்று நம்பியார் போல் மனதுள் சிரித்துக் கொண்டேன்..

ஒரு பத்தரை மணிக்கு ஜெவும் நாஞ்சிலும் மற்றவர்களும் ஆசிரமம் வந்தார்கள்.. கொஞ்ச நேரம் த்யானம் முடித்து, அவர்களுடன் கை குலுக்கி விடை பெற்றோம்.. சென்னைச் சாலையில் வண்டி நகரும் போது, பவாவின் நினைவு வந்தது.. அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் செல்வது முறையல்ல என்று சொன்னேன். இன்னிக்கு நீ கிளம்பினால் போல்தான் என்று விஜி சொன்னாள்.. பவாவின் வீடு சென்றோம்.. அது ஏழு கடல், எழு மலை தாண்டிச் செல்ல வேண்டிய ஒரு இடம்.. தமிழகத்தில் ஒரு நகருக்குள் இவ்வளவு மோசமான சாலைகள் அண்ணாமலையில்தான்..

அங்கு மீண்டும் கச்சேரி களை கட்டியது.. பால் ஸக்கரியாவின் சிறுகதைகளைப் பற்றிய ஒரு அற்புதமான உரையாடல் நடந்தது.. பேசாமல் ஒரு பஸ்ஸை வாடகைக்கு அமர்த்தி, ஜெயமோகனை, தமிழ் இலக்கியம் படிக்கும், ஆராயும் மாணவர்களோடு ஒரு நிரந்தரப் பயண ஏற்பாட்டைச் செய்யலாம் என்று தோன்றுகிறது.. உண்மையிலேயே ஒரு நடமாடும் பல்கலைக் கழகம் அமையும்.. பவாவின் பையன் மிக ஆர்வத்துடன் உரையாடல்களில் கலந்து கொண்டது எல்லோருக்கும் உற்சாகமாக இருந்தது.. பின்னர், பவா, சினிமாக் கொட்டகையில், ஒரு குருவிக்காரர், எம்.ஜி.யார் நம்பியார் சண்டையில், துப்பாக்கி எடுத்துத் திரையைச் சுட, திரை கிழிந்த சம்பவத்தைச் சொல்ல வீடே சிரிப்பில் சிதறியது.. பவாவுள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார்..

நாங்க கெளம்பறமே என்று மீண்டும் துவங்கினோம்.. எப்படியும், போகும் வழியில் சாப்பிடப் போகிறீர்கள்தானே.. சாப்பிட்டுப் போங்க என்று வற்புறுத்தினார்.. நாங்களும் கொஞ்சம் பிகு பண்ணிக் கொண்டு ஒப்புக் கொண்டோம். சாப்பிட்டு விட்டுப் பார்த்தால் மணி மூன்று.. மூன்றாவது முறையாகக் கிளம்பும் ஆயத்தங்கள் செய்தோம்.. நாஞ்சில் மிகச் சரியாகக் கண்டு பிடித்துவிட்டார்.. “எனக்கென்னமோ இவுங்க, சாயங்காலம் 6 மணி மீட்டின் முடிஞ்சுதான் போவாங்க போல இருக்கு”ன்னு.. இனி மரியாதை இல்லன்னு கெளம்பிட்டோம்

bala

முந்தைய கட்டுரைஅடையாளங்கள்
அடுத்த கட்டுரைதிருவண்ணாமலை