இந்த புத்தகக் கண்காட்சியில்…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வரும் பல வாசகர்களில் நானும் ஒருவன்.

தற்போது தங்களின் “ பின் தொடரும் நிழலின் குரல் ‘ வாசித்து வருகிறேன்.எனக்கு இரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்க விருப்பமாக உள்ளது.

நடக்க இருக்கும் புத்தக கண்காட்சியில் எந்த பதிப்பகத்தில் தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரின் மொழியாக்க படைப்புகள் கிடைக்கும் என்று கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சனவரி 3ம் தேதி நேரில் சந்திபோம்……………..

அன்பு வாசகன்
மணிகண்டன்.

பாரதி புத்தக நிலையம் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் [எம் ஏ சுசீலா மொழியாக்கம்] தல்ஸ்தோயின் அன்னாகரீரினா [ நா. தர்மராஜன்] ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறது.

செண்பகா பதிப்பகம் தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை வெளியிட்டிருக்கிறதுய் [ டி எஸ் சொக்கலிங்கம்]

வ உ சி நூலகம், சந்தியா பதிப்பகம், நியூ செஞ்சுரி பதிப்பகம் ஆகியவை செக்காவ், துர்கனேவ், குப்ரின் போன்றோரின் ருஷ்ய படைப்புகளை வெளியிட்டுள்ளன

ஜெ

=========================

அன்புள்ள ஜெ எம்

இந்த புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கவேண்டிய நூல்கள் என எதைச் சொல்வீர்கள்? ஒரு பட்டியல் அளிக்க முடியுமா?

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

இந்தப்புத்தகக் கண்காட்சியில் வரப்போகும் நூல்களை நான் இன்னும் கவனிக்கவில்லை. மேலும் இத்தகைய பட்டியலை உடனடியாக அளிக்க முடியுமா என்ன?

என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலிலும் கண்ணீரைப்பின்தொடர்தல் நூலிலும் சிறந்த நூல்களுக்கான பட்டியல் பின்னிணைப்பாக உள்ளது. [உயிர்மைபதிப்பகம்]

சில இணையதளங்கள் தொடர்ச்சியாக நூல்களைப்பற்றிய விவாதங்களை முன்வைத்து வருகின்றன. அவற்றை வாசித்தால் நூல்களைப்பற்றி ஒரு மனச்சித்திரம் கிடைக்கும்.

http://siliconshelf.wordpress.com/
http://baski-reviews.blogspot.com/

ஜெ

முந்தைய கட்டுரைநாஞ்சில் நாடன்,பாதசாரி
அடுத்த கட்டுரைகண்மணி குணசேகரன்