இஸ்லாம், மார்க்ஸ்:ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு,

டிசம்பர் 08 தீராநதியில் அ.மார்க்ஸ்-க்கு எதிரான தங்களின் எதிர்முகம் திறந்த கடிதத்தைப் படித்தேன். எனது மறுப்புரைகளையும் விவாதங்களையும் முன்வைப்பதற்கு முன்னர் தங்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்க வேண்டியுள்ளது.

நீங்கள் ஒரு நேர்மையான எதிரி. இம்மண்ணின் மரபிற்கும் மைந்தர்களுக்கும் சமாதான சகவாழ்விற்கும் மானுடகுல நேயத்திற்கும் எதிரான உங்களின் பகையை வன்மத்தை நீங்கள் என்றுமே மறைத்ததில்லை; அதற்காக முயன்றதுமில்லை.

இந்திய சமூகத்தை சாதி ரீதியாக பிளவுபடுத்தி அடிமைப்படுத்திய ஆரிய வந்தேறிகளின் பல்முனை ஆயுதங்களில் ஒன்றுதான் புராண இதிகாசங்கள். அத்தகைய பெருமை மிகு ஞர்ன மரபின் – ஊற்றின் நேரடி பின்தோன்றலும் முழு உரிமையாளருமான தாங்கள் ‘விஷ்ணுபுரம் பின்தொடரும் நிழலின் குரல் ரப்பர் காடு
என புணைவுகளாக எழுதிக் குவித்துள்ளீர்கள்.

பெருந்தலைவர் காமராஜர் என்ற கரிய மாமனிதர் வந்து தோன்றினாலன்றி கடைத்தேற்றம் கண்டிருக்கவியலாத அளவிற்கு சாதீயப் படிநிலையின் கடைநிலையில் வைத்து நசுக்கப்பட்டிருந்த நாடார் சமூகத்திற்கெதிரான தங்களின் நல்ல பாம்பின் நச்சையொத்த சாதீய வெறுப்பை உமிழ்வதே ரப்பர் புதினம்.

உழைக்கும் வர்க்கத்தின் உயிர்மூச்சான இடதுசாரிகளை பின்தொடரும் நிழலின் குரல் மூலம் குறி வைத்தீர்கள்.

விஷ்ணுபுரம் காடு என இரண்டிலும் இன்னும் பிறவற்றிலும் பெண்குலத்தை வெறும் காமப் பொருளாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே பார்க்கும் தங்களின் இழிபார்வையும் அவர்களின் ஒவ்வோர் அங்கத்தையும் மிகவும் மெனக்கெட்டு வர்ணனை செய்யும் தங்களின் ரசிப்புத் திறனையும் பெண்களுக்கு ஆன்மா உண்டா இல்லையா என பெரும் தத்துவ விவாதம் பண்ணிய ஆரிய மரபில் வந்துதித்த அருமை மைந்தனின் தத்துவ விசாரமாகவேயன்றி வேறு எப்படி புரிந்துகொள்ள…?

இகபர கவலைகளிலிருந்து விடுபட்டு மோன நிலையில் திளைக்க கங்கைக் கரை சாமியார்கள் கஞ்சா புகையினால் மூளையைக் குளிப்பாட்டுவதைப் போல் இங்கே குமரி முனையிலிருந்துகொண்டு வாழ்வியல் யதார்த்தங்களில் இருந்து பெருந்திரள் மக்களை திசைதிருப்ப இலக்கிய லாஹிரி வஸ்து மூலம் புகைமூட்டம் போடும் ஜெயமோகன் அவர்களே…! புனைவும் புணர்வுமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு மார்க்ஸையும் முஸ்லிம்களையும் இடதுசாரிகளையும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும் நீங்கள் ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்…?

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை தனிமைப்படுத்த முயலும் தங்களின் ஒரு கல்லில் இரு மாங்காய் தாக்குதல் உத்தியை நாங்கள் புரியாமலில்லை. முஸ்லிம்களை இறுகிய கூட்டிற்குள் உரைந்து நிற்கும் கற்கால சமூகம் என ஒருபுறம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதும்; முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினரிடையே புரிதல் நல்லிணக்கம் ஏற்படுத்த முயலும் அ.மார்க்ஸ் போன்ற முற்போக்கு சனநாயக மனித உரிமைப் போராளிகளை முஸ்லிம்களின் கையாள் என அவதூறு தூற்றுவதுமாக முன்னே போனால் கடிக்கவும் பின்னே வந்தால் உதைக்கவும் செய்யும் வெறிநோய் தாக்கிய குதிரையின் மனநிலையில் உள்ள ஜெயமோகனை நாங்கள் புரியாமலில்லை.

இந்திய முஸ்லிம் சமூகத்தை எங்கும் அசைய விடாமல் வளைத்துச் சுற்றி அழிக்க முயலும் பிரம்மாஸ்திர வியுகத்தின் ஏவுதளம்தான் ஜெயமோகன் என்பதை நாங்கள் நன்றாகவே அறிந்துள்ளோம். பல்வேறு தேசிய இனங்களின் திறந்தவெளி சிறைக்கூடமான நவீன இந்தியாவை பிரிட்டிஷார் அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்தனர் என நன்றியுணர்ச்சியோடு தாங்கள் குறிப்பிடுவதை கொஞ்சம் விளக்கினால் நல்லது.

தனது ஏகாதிபத்திய வல்லாதிக்க கிழக்கிந்திய கம்பெனியின் சுரண்டல் நோக்கிற்காக இந்திய தேசியத்தை கட்டியெழுப்புவது வெள்ளை அந்நியனுக்கு அவசியமாக இருந்தது. அந்த அந்நியனுக்கு முதன்முதலில் காவடி தூக்கிய பங்கிம் சந்திர சட்டர்ஜிக்கும் அவரின் அடுத்த தலைமுறையான வினாயக தாமோதர சாவர்க்கருக்கும் இளைய தலைமுறையான ஜெயமோகனுக்கும் அந்த அவசியம் இல்லாமல் போய்விடுமா என்ன?

தமிழக இஸ்லாமிய பத்திரிக்கைகள் தாலிபானைத் தூக்கிப் பிடிப்பதாக அபாண்டம் சுமத்தும் ஜெயமோகன் அவர்களே…! உங்களது ஞானப் பீறிடுதல் வடபுலத்திலிருந்து வருகிறது என்பதற்காக எங்களுக்குமா அப்படி இருக்க வேண்டும்? தாலிபான் காலிஸ்தான் என கிசுகிசு செய்திகளைப் பரப்ப வேண்டாம். தாலிபானைப் பற்றி மேலதிக விளக்கத்திற்கு மசூத் அஸாரை ஆப்கானிஸ்தானத்திற்கு அழைத்துச் சென்ற உங்களின் பாஸிஸ பங்காளி ஜஸ்வந்த் சிங்கை தொடர்புகொள்ளவும்.

ஒருவேளை தாலிபான் வகை நீதியும் மொழியும்தான் தங்களுக்குப் பிடித்தமானதும் புரியக்கூடியதாகவும் இருக்குமோ என்னவோ… யாராவது இருந்தால் ஜெயமோகனுக்கு உதவட்டும்!

மாலேகாவ் ஃபாஸிஸ்டுகளுக்கு கருணை மனு போடும் ஜெயமோகனாரே! ஒரு தாக்குதலுக்குத் தேவையான அனைத்து விதமான தூண்டுதல்களையும் முன் ஆயத்தங்களையும் செய்து மிருக பலத்தோடு பாய்பவனும்; தேமேவென்றிருந்தவன் மீது திடுமெனப் பாய்ந்து தாக்கும்போது அவன் ஆற்றும் ஒழுங்கற்ற திட்டமிடப்படாத எதிர்வினையும் சமமாகுமா? நீங்கள் தூக்கிப் பிடிக்கும் மனுநீதி அதை சமமென்றுதானே சொல்லும்? சாஸ்திர சம்மதத்தோடுதான் நீதி பகன்றிருக்கின்றீர்கள். ஆனால் எங்களின் நீதி எளிமையானது. எரிகிறதை உருவினால் கொதிப்பது தானாகவே நிற்கும் என்பதுதான் எங்கள் கிராமத்து சகோதரனின் அரிச்சுவடி.

பேராசிரியர் மார்க்ஸை கந்தமாலுக்கு போகச் சொன்னதன் மூலம் இன்று கந்தமாலில் செய்ததைத்தான் அன்று கஷ்மீரில் செய்தோம் என அனிச்சையாக ஒப்புதல் வாக்குமூலம் தந்ததற்கும் நன்றி. இனியாவது கஷ்மீர் பற்றிய உண்மைகள் அனைத்தும் முழுத் திரிபுகள் என வாய் தவறியும் சொல்லிட வேண்டாம் என பணிவாய் நினைவுட்டுகின்றோம்.

தங்களின் எதிரி இன்னார் என்று தெரியாமலிருப்பதற்கு முஸ்லிம் சமூகத்தின் மீது மிகுந்த கழிவிரக்கம் கொள்கிறீர்கள். கசாப்புக் கடைக்காரனின் கரிசனம்தான் எங்களுக்கு நினைவிலாடுகிறது.

காந்திஜியை சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒட்டுமொத்த நாட்டின் எதிரியாக பிரகடனம் செய்து 60 ஆண்டுகள் கழிந்துவிட்டது. 60 வயது என்பது முதிய பருவம். எதையும் எளிதில் மறக்கும் வயது. அந்த மறதிக்கு டிசம்பர் 06 1992இல் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது உங்களின் குருபீடம். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல! ஒட்டுமொத்த தேசத்தின் எதிரி யார் என்பதை நினைவுட்டிய நாளல்லவா டிசம்பர் 06 1992…?

அப்படியே நாங்கள் எதிரிகளை மறக்க நேர்ந்தாலும் நான் இங்கேதான் இருக்கிறேன் என தவறாமல் உங்களது தூரிகையிலிருந்து உதிரும் துளிகள் எங்களது துயிலைக் கலைத்துக் கொண்டேயல்லவா இருக்கின்றது…?

இறுதியாக உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:

கலாசாலைகளில் கல்வியைக் கற்றீர்களோ இல்லையோ… ஆர்.எஸ்.எஸ்.இன் ஷாகாக்களில் தவறாமல் ஃபாஸிஸத்தைப் பயின்றிருக்கின்றீர்கள். அன்று நீங்கள் அணிந்த புர்ண கணவேஷை இன்னும் கழற்றவில்லை. முன்மாதிரி ஸ்வயம் சேவக்தான் நீங்கள். எனவே உங்களின் ஃபாஸிஸ சேவையைத் தொடருங்கள்!

தலையணை அளவில் எழுதிக் குவித்து கைச்சரக்கு தீர்ந்து போய்விட்ட நிலையில் அடுத்து என்ன எழுதலாம் என மூளையைக் கசக்கும் உங்கள் கஷ்டம் ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.

தயைகூர்ந்து உங்களது மக்கள் விரோத எழுத்துக்களை நிறுத்திட வேண்டாம். ஏனெனில் அதில் நம் இருவருக்குமே ஆதாயம் உண்டு.

கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் என்பது முதுமொழி.

தலையை விற்று வயிற்றை நிரப்புதல் என்பது புதுமொழி.

நவீன யுகத்தில் இப்புதுமொழிக்கு உடமைக்காரர் சல்மான் ருஷ்டி. அவரைப் போன்று சர்வதேச அளவில் உயர முடியாமற்போனாலும் குறைந்தபட்சம் தமிழக அளவிலாவது அவரின் பேராளராக இருக்கும் உங்கள் விருப்பம் எங்களுக்கு புரியாமலில்லை.

ஒரு ட்ரைதான் பண்ணிப் பாருங்களேன்…

வந்தால் பணமும் புகழும்! போனால் தலைதானே…?

ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – சிறுபான்மை இனத்தின் ஆழ்உறக்க நிலை உங்களின் ஆயுத எழுத்துக்கள் மூலம் மாற நிறையவே பயன்படும்.

நீங்கள் எங்களை விடும் வரை நாங்களும் உங்களை விடுவதாக இல்லை.

தொடர்ந்து மோதுவோம்…

-அப்துல் காதர் ஜியாத்,
காயல்பட்டினம்.
 Reply Reply to all Forward

jeyamohan_ B to me
show details Dec 18 (10 days ago) Reply

அன்புள்ள நண்பருக்கு
உங்கள் சினம் புரிகிறது. ஆனால் ஏதேனும் ஒரு கட்டத்தில் நீங்கள் நான் சொல்வதைப்புரிந்துகொள்வீர்கள் என நம்புவதல்லாமல் எனக்கு வேறுவழி இல்லை
நன்றி
ஜெ

முந்தைய கட்டுரைதுணை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமாற்றுவெளி