கி ராவை வரையறுத்தல்

kira1

கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி1
கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2

அன்பின் ஜெயமோகனுக்கு,

தங்களுடைய இலக்கிய முன்னோடிகள் நூல் வரிசையில் ‘மண்ணும் மரபும்’ என்ற விமர்சனநூலை வாசித்தேன். அதில் கி.ரா பற்றிய தங்களுடைய பார்வை முற்றிலும் அழகியல் நோக்கை அடிப்படையாகக் கொண்ட மிகத் துல்லியமான ஒரு கட்டுரை. அதிலுள்ள ஆழ்மனதில் செயற்படும் இனக்குழு மனோநிலை பற்றிய தங்களுடைய கருத்துக்களுடன் வெகுவாக உடன்படமுடிகிறது. அப்படியொரு நுண்ணோக்கை இதற்குமுன்னர் யாரும் வைத்ததில்லை என்றே நினைக்கிறேன்.

எனக்கு இதிலுள்ள பெரும் சந்தேகங்கள் என்னவென்றால்,

  1. இந்த இனக்குழும ஆழ்மன நிலைப்பாடு ஆதிக்க மனோநிலையின் வெளிப்பாடா?.
  1. கி.ராவை “இனக்குழு அழகியலின் முன்னோடி” என்கிற ஒரு பார்வையில் வைத்து மட்டுமா பார்க்கமுடியும்.
  1. சாதியம்-மதம்-இனம் இவற்றில் இருக்கும் மரபுதான் மானிடரின் மணவினைகளைப் பற்றி வைத்திருக்கிறதா? இது உலகளாவிய பொது நோக்கா? இல்லை இந்தியச் சிந்தனை மரபு சார்ந்ததா?
  1. கி.ராவின் படைப்பிலிருந்த மார்க்சிய நோக்குக்கும் இனக்குழும நோக்குக்கும் இடையிலான இலக்கிய உளவியல் என்பது திரிபடையாத இயல்பான வெளிப்பாடா?

இவ்வகைக் குழப்பங்களுக்குத் தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்துள்ளேன்.

சுயாந்தன்.

***

அன்புள்ள சுயாந்தன்,

என்னுடைய விமர்சனத்தின் நோக்கம் என்பது படைப்பாளியையும் படைப்பையும் வகுத்துக்கொள்வது அல்ல. அது பெரும்பாலும் படைப்பாளியையும் குறுக்கிக்கொள்வதாகவே முடியும். நான் என்னென்ன அம்சங்கள் தொழிற்படுகின்றன என்று மட்டுமே வகுத்துக்கொள்ள முயல்கிறேன். எவை ஓங்கியிருக்கின்றன, எவை ஊடாகச் செல்கின்றன என்று புரிந்துகொள்கிறேன். அவற்றின் முரணியக்கமே அப்படைப்பாளியில் படைப்பில் நிகழ்கிறது என்கிறேன். இது முடிந்தவரை முழுமையாக, சிக்கல்களை  நீவி எளிமைப்படுத்தாமல், விமர்சனரீதியாகப் புரிந்துகொள்ளும் முயற்சி

ஆகவே கி.ராவிடம் உள்ளது இனக்குழு  அழகியல் என்று மட்டும் வகுத்துக்கொள்ள மாட்டேன். அது அவருடைய தனித்தன்மை. அவர் அதில் ஓரு முன்னோடி. ஒரு படைப்பாளியாக அவ்வாறு அவரை புரிந்துகொள்வது ஒரு நல்ல தொடக்கம். ஆனால் கலைஞராக, கதைசொல்லியாக அவருக்கு மேலும் மேலும் அடுக்குகள் உள்ளன.

இனக்குழு என்ற சொல்லை பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட காரணத்தால். அது சாதி என்ற சொல்லுக்குச் சமானமான மார்க்சியக் கலைச்சொல்.  சாதி என்ற சொல்லைக் கையாளும்போது நம் சூழலில் அதில் ஏற்றப்பட்டுள்ள ஏராளமான அரசியல் குறிப்புகள் வந்துவிடுகின்றன. அவற்றை முழுமையாக விலக்கி அதன் மரபு, பண்பாட்டுக்கூறுகள் ஆகியவற்றை மட்டுமே குறிக்கும்முகமாகத்தான் இனக்குழு என்னும் சொல் கையாளப்படுகிறது

மேலும் இங்கே சாதிகள் எவையும் தனியாக இல்லை. துணைச்சாதிகள், இணைப்பிரிவுகள், உட்பிரிவுகள் ஆகியவற்றுடன் கொத்துகளாகவே உள்ளன ஒருவகையான பண்பாட்டு வட்டங்கள் அவை. இனக்குழு என்னும் சொல் அவற்றை ஒட்டுமொத்தமாகச் சுட்டவும் உதவுகிறது

சமூக,அரசியல் சூழலில் இனக்குழு அடையாளம் பேணுவது என்னவகையாக பொருள்கொள்ளப்பட்டாலும் இலக்கியத்திலும் கலையிலும் அது நீண்ட வரலாற்றுப்பின்புலத்துடன் தொடர்பை நீட்டித்தல், சமகாலத்து நாட்டார்மரபுடனான ஆக்கபூர்வமான உறவு என்னும் இருதளத்திலேயே தொழிற்படுகிறது. அந்த அளவில் கிராவின் பங்களிப்பு என்ன என்பதே என் உசாவல்.

ஆகவே கிரா அல்லது அவரைப்போன்ற படைப்பாளிகளின் புனைவிலக்கியத்தில் செயல்படும் இனக்குழு அழகியலை நடைமுறையிலுள்ள சாதியாதிக்கம், சாதியரசியல், மதம் சார்ந்து புரிந்துகொள்ள முயன்றால் அவர்களை கொச்சைப்படுத்திக்கொள்ளும் இடத்திற்கே செல்வோம். அவற்றை முழுமையாகவே தவிர்ப்பதே நல்லவாசகன் அவர்களுக்குச் செய்யும் வாசகக் கடமையாகும்

கிராவின் உலகில் ஒரு தொன்மம் எவ்வாறு பல தலைமுறையாக சொல்செவி மரபாக கொண்டுவந்து சேர்க்கப்பட்டு நவீனப்படிமமாக  ஆகிறது என்று புரிந்துகொள்ளவும், அவருடைய கதைமாந்தரின் உள்ள எப்ப்டி செயல்ப்டுகிறது என்பதைப்புரிந்துகொள்ளவும் , அவர் உருவாக்கும் வரலாற்றுக்காலம் எப்படி பரிணாமம் அனைந்து வந்துள்ளது என்று உணர்வதற்கும் மட்டுமே இந்த இனக்குழு  அழகியல் என்னும் கருத்தாக்கம் பயன்படும். அதில் செயல்படுவதாக நாம் ஊகிக்கும் அரசியலை அதன்மேல் ஏற்றுவதற்காக அல்ல.

கிரா என்றல்ல எல்லா கலைஞர்களுமே உள்முரண்பாடுகளால்தான் உருவாகிறார்கள். வெவ்வேறு உளவிசைகளுக்கு இடையேயான மோதலை இலக்கியக் கலைஞர்களிடம் காணலாம். ஆகவே அவர்களை முரணியக்கமாகப் புரிந்துகொள்வதே சரியான வழி. தெள்ளத்தெளிவான நிலைபாடுகள் கொண்ட, மயக்கங்கள் இல்லாத எழுத்தாளர்கள், அரசியல்வாதிகளே ஒழிய கலைஞர்கள் அல்ல.

அவ்வகையில் கிராவின் புனைவுலகுக்குள் செயல்படும் இரு விசைகள் என இனக்குழு அழகியலையும் மார்க்ஸிய அழகியலையும் சுட்டினேன். அது ஒரு கோடிகாட்டல் மட்டுமே. ஒவ்வொரு கதையிலும் இவை எவ்வ்வாறு செயல்படுகின்றன, என்னென்ன விளைவை உருவாக்குகின்றன என்பது வாசகனின் புரிதலுக்குரியது. நான் விமர்சனங்களில் ஒருபோதும் வாசகனின் கற்பனையையும் புரிதலையும் குறுக்கி, வரையறை செய்து நிறுத்த முயல்வதில்லை

இத்தகைய எந்த வரையறையும் ஒரு பெரும்படைப்பாளியை குறுக்குவதாகவே முடியும். சொல்லப்போனால் எந்த விமர்சனமும் இன்றியமையாத ஒரு குறுக்கல்தன்மையைக் கொண்டிருக்கும். ஆகவேதான் ஒவ்வொரு விமர்சனத்தையும் இப்படிப் பார்க்கலாம், இது ஒரு கோணம், இது ஒரு சிறுவிரிவாக்கம் மட்டுமே என்ற அளவில்தான் நான் முன்வைப்பேன். முழுக்கச் சொல்லாமல் விட்டுவிடுவேன். ஆணித்தரமான வரையறைகளை அளிப்பதில்லை

ஜெ

கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை
கி.ரா – தெளிவின் அழகு
கி.ரா.என்றொரு கீதாரி
கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்
கி.ரா
முந்தைய கட்டுரைஇலக்கிய டயட் – மாதவன் இளங்கோ
அடுத்த கட்டுரைஅடிப்படைவாதத்தின் ஊற்றுமுகம்