செதுக்குகலையும் வெறியாட்டும்

mvv
எம்.வி.வெங்கட்ராம்

மறைந்த மணிக்கொடிக் காலகட்ட எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம்  என் கதைகள் இரண்டில் கதாபாத்திரமாக வந்திருக்கிறார். அவரை நான் முதன்முதலில் சந்தித்தது 1992ன் தொடக்கத்தில். நான் அருண்மொழியைத் திருமணம் செய்து சில மாதங்களே ஆகியிருந்தன. அருண்மொழியின் சித்தப்பா கலியமூர்த்தி கும்பகோணத்தில் ஆசிரியராக இருந்தார். அவர் எம்.வி.வெங்கட்ராமுக்கு அணுக்கத்தொண்டர் போல . அவர்தான் “வாங்க மாப்பிளே, அவரு மணிக்கொடி எழுத்தாளர். பாத்திட்டுவருவோம்” என என்னை அழைத்தார். எம்.வி.வெங்கட்ராம்  மணிக்கொடி எழுத்தாளர்களில் அன்று எஞ்சியிருந்த மூவரில் ஒருவர்.

சிறிய பழங்காலவீடு. நீளமாக உள்ளே சென்று குகையின் மறுவாயில் என கொல்லைப்பக்கத்தைக் காட்டியது. பழையவீடுகள் பொதுவாக மண்ணில் சற்று அமிழ்ந்திருக்கும். நல்ல குளிர்ந்த பெரிய திண்ணை. உள்ளே அங்கணம், அதில் எம்.வி.வெங்கட்ராம்  சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்தார். செவிப்புலன் மிகக்குறைவு. கலியமூர்த்தி மாமா சாதாரணமாகவே வெடிக்குரலில் பேசுபவர். அவர் மேலும் வெடித்தால்தான் எம்.வி.வெங்கட்ராம் க்கு கொஞ்சமாவது கேட்கும். நான் பேசுவதை அவர் ஒலிப்பெருக்கம் செய்து எம்.வி.வெங்கட்ராமுக்கு அளித்தார்.

நல்ல உரையாடல். இலக்கியக் கிசுகிசுப்புகள், இலக்கிய வரலாற்றுக்குறிப்புகள், இலக்கியப் பார்வைகளில் வந்த மாற்றம், இசை என பேச்சு சென்றுகொண்டே இருந்தது. எம்.வி.வெங்கட்ராம்  நிறையப் பேசவிரும்பினார். இலக்கியத்தில் நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் நுழைந்திருந்தார். அந்த இடைவேளையைப்பற்றி இயல்பாகவே பேச்சு திரும்பியது. “ஆப்ரிக்காவிலே ஒகவாங்காங்கிற ஆறு கடலுக்கு போயிச்சேராது.நேரா பாலைவனத்திலே போயிச்சேந்து அப்டியே வத்திடும்…அதான் என்னோட வாழ்க்கை” என்றார். எம்.வி.வெங்கட்ராம்

sundara ramasamy

அந்த காலகட்டம் அவர் வாழ்க்கையில் மிகவும் கொடுமையானது. செல்வாக்கான பட்டு- சரிகை வணிகராகத் திகழ்ந்த எம்.வி.வெங்கட்ராம்  ஒருகட்டத்தில் நொடித்துப்போனார். எழுத்தை நம்பியே வாழத்தொடங்கினார். பல்வேறு பதிப்பாளர்களுக்காக நூல்களை எழுதிக்குவித்தார். கணிசமாக ஏமாற்றப்பட்டார். எழுதியே ஒருவழியாக பிள்ளைகளைக் கரைசேர்த்தார்.மிகக்கடுமையான பொருளியல் நெருக்கடிகள்.  அதையொட்டிய அவமானங்கள், உளக்கொந்தளிப்புகள்.

.“ஒருநாளுக்கு எட்டு மணிநேரம் எழுதினேன். அதுவும் எந்தவகையிலும் என் மனசோட தொடர்புள்ள எழுத்து இல்ல…அவ்வளவு தூரம் வார்த்தைகளோட வெளையாடக்கூடாது. உள்ள இருக்கிற வார்த்தைகள் குழம்பிட்டுது” என்றார் எம்.வி.வெங்கட்ராம் .  “ஆத்மார்த்தமா எழுதினா மொழி ஒருமைய கொண்டுவரும். இப்டி தொழிலுக்காக எழுதினா உள்ள இருக்கிற மொழியும் இந்தமொழியும் ஒண்ணுக்கொண்ணு முட்டி மோதிடுது. பழகின ஆனைய காட்டுயானை குத்திக்கொன்னுட்டுப் போயிரும்”

திடீரென்று அவருக்குக் காதுகேளாமலாகியது. அவருடன் முருகன் பேச ஆரம்பித்தார். இன்றைய உளவியல் அதை ஸ்கிஸோபிர்னியா என்று சொல்லும். அவர் அதை இன்னொருவகை யதார்த்தம், இன்னொரு உலகம் என நம்பினார். அவ்வனுபவத்தை காதுகள் என்னும் நாவலாக எழுதினார். அதற்கு 1993 ஆண்டு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது. நான் சென்றதுமே அவர் கேட்ட முதல்கேள்வியே “காதுகள் படிச்சீங்களா?” என்றுதான். அப்போது நான் அதைப்படித்திருக்கவில்லை.

மீண்டும் அவரைச்சந்திக்கச் சென்றபோது படித்திருந்தேன். அதைப்பற்றிய என் கருத்துக்களை சொன்னேன். “அது பண்படாம இருக்கு, நெறைய எடிட் பண்ணியிருக்கலாம்கிறீங்களே. நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று அவர் கேட்டார். அது சுந்தர ராமசாமி சொன்ன கருத்து. நான் அப்போதே  என் கருத்துக்களை ஓங்கிச் சொல்லிவந்தவன். “இல்லை சார், அது ஒரு கட்டி உடைஞ்சு சீழும் ரத்தமும் வெளிய வர்ரமாதிரி. அப்டியே இருந்தாத்தான் அதுக்கு மதிப்பு. அதிலே உங்க லாஜிக்க நீங்க போட்டீங்கன்னா அதுக்கு இலக்கிய மதிப்பு இல்லை” என்றேன்.

அன்று இலக்கியப்படைப்புகளை ‘கச்சிதமாக’ எழுதுவது என்பது ஒரு நிறுவப்பட்ட கொள்கையாக இருந்தது. மொழியை எண்ணி எண்ணிக் கூர்தீட்டுவதே இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படைப் பண்பு என்னும் நம்பிக்கை நிலைநாட்டப்பட்டிருந்தது. குறைவாக எழுதுவது, எண்ணி எண்ணி சொற்றொடர்களைக் கோப்பது, சொற்களைச் சுண்டிச்சுண்டி பார்ப்பது, பலர் சேர்ந்து அமர்ந்து நாட்கணக்கில் நூல்களை திருத்தியமைப்பது அன்றைய வழக்கம்.

அவ்வாறு எழுதி கச்சிதமான வடிவத்தை அடைந்தவர்கள் மௌனியும் கு.ப.ராஜகோபாலனும் என்றும், அப்படி தீட்டாமல் எழுதி தூக்கிப்போட்டமையால் கலையமைதி குலைந்த படைப்புகள்தான் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள் எழுதியவை என்றும் இலக்கியச்சூழலில் ஓங்கிய கருத்து இருந்தது.

அந்தப்பார்வை நவீனத்துவத்திற்குரியது. நவீனத்துவம் புறவயத்தன்மையை நம்பியது. தர்க்கத்தை ஒரு மதநம்பிக்கை போல ஏற்றுக்கொண்டது. அதற்கு என பொதுவாக ஒரு வடிவஉருவகம் இருந்தது. நடை பற்றிய ஒரு முன்முடிவு இருந்தது. கச்சிதமான வடிவம், ஆசிரியரின் கட்டுப்பாடுள்ள மொழி என இரு சொற்களை அன்றைய விமர்சனங்களில் அடிக்கடிக் காணலாம். எந்த நூலை வாசித்தாலும் அதில் சில பகுதிகள் தேவையில்லை, இன்னும் சுருக்கியிருக்கலாம் என்று சொல்வது ஒருவகை விமர்சனமாக கருதப்பட்டது. ‘பிசிறுகள் இருக்கு’ என அனேகமாக எந்தப் படைப்பைப்பற்றியும் சொல்வார்கள்.

ka.na.su

அந்தநோக்கு  க.நா.சுவால்  கொண்டுவரப்பட்டு சுந்தர ராமசாமியால் நிறுவப்பட்டது. க.நா.சு தன் மொழியாக்கங்களையும் ஒருநாள் போன்ற நாவல்களையும் அதற்கான முன்னுதாரணமாக முன்வைத்தார். மொழியாக்கம் செய்த பார் லாகர்க்விஸ்டின் அன்புவழி [Pär Lagerkvist, Barrabas] அன்று அவ்வடிவத்தின் இலட்சிய ஆக்கமாக இரண்டு தலைமுறைக்காலம் கருதப்பட்டது.

தமிழில் என் தலைமுறையில்தான் அதை ஓங்கி அறைந்து உடைத்தோம், நானும் கோணங்கியும் அதற்கு இன்று பொறுப்பேற்றுக்கொள்ள முடியும். வடிவம்,மொழி ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடு என்பது எழுத்தாளனின் தன்விழிப்புநிலையின் பிடி என்றும் அதை மீறி ஆழ்மனம் மொழியாக வெளிப்படுவதே இலக்கியக்கலை என்றும் நாங்கள் வாதிட்டோம். ‘கட்டுப்பாடற்ற எழுத்து’ அல்லது ‘தானியங்கி எழுத்து’ தான் மெய்யாகவே எழுத்தாளனின் உள்ளுறைந்த உண்மையை வெளிக்கொண்டுவரும் என்றோம்.

அதிலுள்ள மீறல்கள், பிசிறுகள் அனைத்துமே அப்புனைவெழுச்சியின் பகுதிகள். அந்தப்புனைவு எழுத்தாளன் விரும்பியதைக் காட்டுவதாக இருக்கக்கூடாது, விரும்பாததையும் காட்டவேண்டும். அவனை அது ‘காட்டிக்கொடுக்க’ வேண்டும். அவனுக்கு எதிரான சாட்சியமாகவே அது ஆகவேண்டும்.  அதன் வடிவம் அல்ல, அதன் வடிவமீறல்களே அவனை இன்னும் வெளிப்படுத்துபவை. ஏனென்றால் வடிவம் ஏற்கனவே அச்சூழலில் திரண்டு வந்த ஒன்று. வடிவ மீறல்தான் அவனுக்குரியது. முற்றிலும் ‘கச்சிதமான’ ஓர் ஆக்கம் இருக்கமுடியாது. அப்படி ஒரு வடிவத்துக்கான முயற்சி மேலும் மேலும் தன்விழிப்புநிலையுடன் எழுதச்செய்து மெய்யான உணர்ச்சிகளும் தரிசனங்களும் வெளிப்படுவதிலிருந்து அகற்றிவிடும்.

‘எது எழுத்தாளனை மீறிவெளிப்படுவதோ அதுமட்டுமே புனைவில் முக்கியமானது’ என்று நான் ஒருகட்டுரையில் எழுதினேன். அது அசட்டுத்தனமாக, முன்பின் முரண்படுவதாக, மூர்க்கமானதாக, குழப்பமானதாக இருக்கலாம். அப்படித்தான் உலக இலக்கிய உச்சங்கள் உண்மையில் இருக்கின்றன. சீராக நீவி முடையப்பட்ட படைப்புகள் அந்த லாவா வெளிப்படாதபடி கவசம் அணிந்தவை.

TARAS

தன்விழிப்புநிலைக்கு இலக்கிய ஆக்கத்தில் கண்டிப்பாக ஒரு பங்குண்டு. இரண்டு வகைகளில். ஒன்று, இலக்கிய ஆக்கம் முற்றிலும் வடிவற்ற பிண்டமாக இருக்கமுடியாது. ஒரு வடிவ உருவகம் ஆசிரியனுக்குள் இருக்கும். அது ஒர் உளப்பழக்கமாக, ஒரு கைத்திறனாக மாறி அமைந்திருக்கும். கம்பனுக்கு விருத்தம் எப்படியோ அப்படி. அதன் பிசிறுகளை அவன் களையலாம்.இரண்டாவதாக ஒரு தன்னிலையழிந்த வெளிப்பாட்டுக்குப்பின் புனைவு  ‘கீழிறங்கி’ மீண்டும் ஒன்று நிகழ்வதற்காக நகர்ந்துசெல்லும். அந்த இடங்களில் அவன் தன் தன்விழிப்புநிலையால்  மொழியை செம்மையாக்கலாம்.

நவீனத்துவத்தின் முன்னுதாரணமான படைப்புக்களே அன்று பெரிதும் பேசப்பட்டன. காஃப்கா, காம்யூ படைப்புகள் குறிப்பாக. ’அந்நியன்’ வே.ஸ்ரீராம் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்து ஒரு வழிகாட்டுநூல் போலவே பயிலப்பட்டது. இந்திய மொழிகளில் அன்று எழுதப்பட்ட புகழ்பெற்ற நாவல்களான சம்ஸ்காரா  [யு.ஆர்.அனந்தமூர்த்தி]  கசாக்கின் இதிகாசம் [ஓ.வி.விஜயன்] போன்றவற்றிலெல்லாம் காம்யூவின் பிளேக் நாவலின் நேரடிச் செல்வாக்கைக் காணலாம்.

ஆனால் நானும் கோணங்கியும் அந்நாவல்களை,அவை உருவாக்கும் அழகியலை முழுமையாக நிராகரித்தோம். அவை ஒரு வாழ்க்கையின் ஒரு கீற்றையே முன்வைக்கின்றன என்று எண்ணினோம். எங்கள் நோக்கில் அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகள், குறிப்பாக யதார்த்தவாதக் காலகட்டத்தை சேர்ந்த செவ்விலக்கியவாதிகள் முக்கியமானவர்களாகத் தெரிந்தனர். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன் போன்றவர்களை முன்னிறுத்தினோம்.

இவர்களின் ஆக்கங்கள் இங்கே வலியுறுத்தப்பட்ட கச்சிதத்தன்மை அற்றவை. நீண்ட உரையாடல்கள், விரிவான விவரணைகள் கொண்டவை. கட்டற்ற வடிவம் கொண்டவை. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை ஹென்றி ஜேம்ஸ் ‘வடிவமற்ற வாழ்க்கைப்பிண்டம்’ என்றார். ஒருவகையில் சிறந்த நாவல் அவ்வாறே இருக்க முடியும் என்றோம்

1957 லேயே தல்ஸ்தோயின் போரும் அமைதியும் டி.எஸ்.சொக்கலிங்கத்தால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டிருந்தது. க.சந்தானம் அன்னா கரீனினாவை மொழியாக்கம் செய்திருந்தார். ஆனால் தமிழிலக்கியச் சூழலில் 1991க்கு முன்புவரை அவற்றின் இலக்கியச் செல்வாக்கு என்ன என்று பார்த்தால் அனேகமாக ஏதுமில்லை என்பதே உண்மை. சிற்றிதழ்களில் அப்பேரிலக்கியங்களைப்பற்றிய பேச்சு அனேகமாக எழுந்ததே இல்லை. 1991ல் தாமஸ் மன் பற்றி நான் சுபமங்களாவில் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு கோமல் சாமிநாதன்  முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரா.ஸ்ரீதேசிகன் தாமஸ் மன்னின் மாற்றிவைக்கப்பட்ட தலைகளை மொழியாக்கம் செய்தார். அதன்பின் தாமஸ் மன் எனும் பெயர் தமிழில் அச்சாவது இப்போதுதான்’ என்றார்.

அதேபோல இந்தியமொழிகளின் பேரிலக்கியங்களான ஆரோக்கியநிகேதனம் [தாராசங்கர் பானர்ஜி] அக்னிநதி [குர்ரதுலைன் ஹைதர்] நீலகண்டப்பறவையைத்தேடி [அதீன்பந்த்யோபாத்யாய] மண்ணும் மனிதரும்[ சிவராமகாரந்த்] சிக்கவீர ராஜேந்திரன் [மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்] போன்ற செவ்வியல் நாவல்களைப்பற்றிய பேச்சை அதற்கு முன் தமிழ்ச்சிற்றிதழ்களில் அனேகமாகக் காணமுடியாது. அவற்றில் பல தமிழில் வெளியாகி நூறுக்கும் குறைவான பிரதிகள் மட்டுமே விற்று பல ஆண்டுகள் முடங்கிக்கிடந்தன. அவற்றை நாங்கள் முன்வைத்தோம். ஒவ்வொன்றைப்பற்றியும் நான் எழுதினேன்.

kona

1990ல் கோணங்கி கல்குதிரை வெளியீடாக தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ் வெளியிட்டார். அது ஒரு முக்கியமான தொடக்கம். அதில் எழுதிய சுந்தர ராமசாமி உட்பட பலர் தஸ்தயேவ்ஸ்கி பற்றி முதல்முதலாக அப்போதுதான் ஒரு கட்டுரை எழுதினார்கள். 1991ல் நான் என் ரப்பர் நாவல் வெளியீட்டுவிழாவில் நாவல் குறித்த ஒரு விவாதத்தைத் தொடங்கிவைத்தேன். 1993ல் நாவல் கோட்பாடு என்னும் நூலை வெளியிட்டேன். அது அன்றிருந்த நவீனத்துவ நாவல் உருவகத்தை நிராகரித்து செவ்வியல்நாவல் அல்லது காவியநாவல் வடிவை முன்னிறுத்துவது. அது தொடர்ச்சியான விவாதத்தை நிகழ்த்தியது. 1997ல் விஷ்ணுபுரம் வெளியானபோது மீண்டும் அது விசைகொண்டது.

மெல்ல இலக்கியம் என்பது ஒரு செதுக்குப்பணி என்னும் எண்ணம் மறைந்தது, அது ஒரு வெறியாட்டு வெளிப்பாடு என்னும் எண்ணம் நிலைகொண்டது. நாவல் என்பது கச்சிதத்தை அல்ல ஒட்டுமொத்ததை நோக்கிச்செல்லும் வடிவம் என வாசகப்புரிதல் ஏற்பட்டது. தமிழிலக்கியத்தின் ஒரு காலகட்டநகர்வு என இன்று அதைச் சொல்லலாம்.

அன்று நான் பேசியதற்கு எதிர்வினையாக செதுக்கிலக்கியத்தின் உச்சமாக அன்று கொண்டாடப்பட்ட மௌனி உண்மையில் எப்படி எழுதுவார் என்று எம்.வி.வெங்கட்ராம்  சொன்னார். மௌனி தனித்தனிவரிகளாக, எந்த ஒழுங்குமில்லாமல், ஏராளமான சொற்றொடர்ப் பிழைகளுடன் ஒரு நோட்டுப்புத்தகத்தில் குறித்துப்போட்டிருப்பார். அதை அப்படியே அனுப்பிவிடுவார். முதன்முதலில் மௌனியின் கதை தேனீ இதழுக்கு வந்துசேர்ந்தபோது தான் அதிர்ச்சி அடைந்ததாக எம்.வி.வெங்கட்ராம்  குறிப்பிட்டார். அதை திருத்தி எழுதி தொகுத்து கதை வடிவமாக ஆக்கியது எம்.வி.வெங்கட்ராம்தான். பின்னர் மௌனியின் எல்லா கதைகளும் பி.எஸ்.ராமையாவால் திருத்தி கட்டமைக்கப்பட்டவை’ என அறிந்ததாகச் சொன்னார்.

camus

மௌனியை எனக்கு முந்தையவர்கள் வைத்திருந்த உயரத்தில் நான் வைக்கவில்லை, ஐந்து கதைகள் மட்டுமே மௌனியின் சிறந்த படைப்புகள் என்று சொல்லமுடியும் என்றேன். அவை பிறரால் திருத்தி உருவம் அளிக்கப்பட்டவை என்பதனால் பெரிதும் மதிப்பிழப்பதுமில்லை. அவற்றில் அவர் சென்ற சில உச்சங்கள் உள்ளன. அவை அவருடைய சன்னதம்கொள்ளலால் இயன்றவை. அவற்றால் அவர் முன்னோடியான கலைஞர் என்றே மதிக்கப்படுவார் என்றேன்.

எம்.வி.வெங்கட்ராம்  மௌனி பற்றி என்னிடம் சொன்னவற்றை எனது இலக்கிய நண்பர்கள் என்ற பேரில் எழுதிய நூலில் விரிவாகப் பதிவுசெய்தார். அன்றுவரை மௌனி பற்றி தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு மாயை எதிர்க்குரலே இல்லாமல் அழிந்தது. ஆனால் சுந்தர ராமசாமி மிகவும் அமைதியிழந்தார் என்று எனக்குத்தெரியும். அவருடைய எழுத்துமுறையை மாற்றிக்கொண்டு தன்னிச்சையான எழுத்துமுறைக்குச் செல்லவும், அவருடைய பழைய திருத்தர்களை முழுமையாகத் தவிர்க்கவும் அது காரணமாக அமைந்தது. அவர் வாழ்நாளெல்லாம் எழுதியதை விட அதன்பின் எழுதியவை பக்க அளவிலும் மிகுதி.

அன்று எம்.வி.வெங்கட்ராம்டம் முருகன் காதில் பேசியதும் நாவலை நேரடியாக முருகனே சொன்னதுமெல்லாம் கேலிக்குரியதாகவே கருதப்பட்டது. அது ஸ்கிசோபிர்னியா என்றும் அதை அறியாமல் அப்பாவித்தனமாக எழுதிவிட்டார் என்றும் சொன்னார்கள். அந்த ’அப்பாவி’த்தனமே அதன் அழகு என எனக்குப் பட்டது. ஸ்கிஸோபிர்னியாவும் முருகனைப்போல ஓர் உருவகம்தான். நூறாண்டுகளில் அது  ஒருவேளை ஒரு தொன்மமாக, குறியீடாக  மாறிவிடக்கூடும். அறிவியல் ஒருபோதும் இலக்கியத்திற்கான அளவுகோல் அல்ல, அது இலக்கியத்திற்கு மதத்தைப்போல இன்னொரு குறியீட்டுவெளி மட்டுமே என்று நான் எம்.வி.வெங்கட்ராமுக்கு ஒரு கடிதம் எழுதினேன்

சில ஆண்டுகளிலேயே பின்நவீனத்துவச் சிந்தனைகள் தமிழில் வரத்தொடங்கின. இயல்பான கலைத்தேடலால் நாங்கள் சென்றடைந்த கருத்துக்கள் பின்நவீனத்துவம் சார்ந்தவை என கண்டடைந்தோம். பின்நவீனத்துவரான ழாக் லக்கானின் உளப்பகுப்பாய்வு குறித்த கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தபோது ‘இதோ ஃப்ராய்டிய உளப்பகுப்பை குறியீடாக ஆக்கிவிட்டார்கள், முருகனைப்போல’ என நினைத்தேன். அதை எழுதியனுப்ப அப்போது எம்.வி.வெங்கட்ராம்  உயிருடன் இல்லை

 விகடன் தடம் /நத்தையின்பாதை தொடர்/ மார்ச்

முந்தைய கட்டுரைகேரளக் காலனி
அடுத்த கட்டுரைபயணம்- கடிதங்கள்