காடெனும் அனுபவம்

kaadu

அன்புள்ள ஜெ,

நலமா. கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களாக உங்களைப் படித்து வருகிறேன் என்ற போதிலும் இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். புதிய வாசகர்களின் கடிதங்களை நீங்கள் மிகச்சிரத்தையாக பதிவு செய்யும் நாட்களில் எல்லாம் உங்களுக்கு “வணக்கம்” சொல்லியாவது ஒரு கடிதம் எழுதத்தோன்றும். ஆனால் அதைச் செய்யவில்லை. வெறும் வணக்கம் சொல்லும் இடத்தில் நீங்கள் இல்லை. அது என் கடிதத்திற்கான முறையும் இல்லை. என் முதல் கடிதம் காடு நாவல் குறித்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று முனபே நினைத்திருந்தேன். நினைத்தபடியே 2015-இல் காடு நாவலை வாசித்தும் முடித்துவிட்டேன். இருந்தும் அதற்கான விமர்சனம் எழுதவில்லை. உங்களுக்கான கடிதமும் எழுதவில்லை. மறுவாசிப்பு தேவைப்பட்டது. மறுவாசிப்பில் இன்னும் அதிகமான திறப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என்ன முதல் வாசிப்பிற்கும் மறுவாசிப்பிற்கும் இடையே சிறு இடைவெளி விழுந்துவிட்டது. இன்றைக்குத்தான் மறுவாசிப்பை முடித்தேன்.

சமயங்களில் எதிர்பார்ப்பு நம்மை ஏமாற்றுவதில்லை.  எதிர்பார்த்ததைக் காட்டிலும் காடு எனக்கான மிகப்பெரும் திறப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. காடு ஒரு அனுபவம் என்றால் ஒவ்வொரு கிளைக்கதைகளின் புள்ளியும் கோர்க்கப்படும் இடங்கள்  பேரனுபவம். நீலியின் அறிமுகப்படலம் ஆரம்பமாகும் பகுதிகளுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தேன். குட்டப்பன் பேசும்போதெல்லாம் மனதிற்குள் அப்படி ஒரு ஆனந்தம். அவன் இல்லாத குறிஞ்சியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதேபோல்தான் அய்யரும். ஏதோ ஒரு விதத்தில் அவர் தேவையும் இங்கே இருக்கிறது. கிரி ஏன் இப்படி பைத்தியம் மாதிரி திரியறான் என்று யோசிக்கும் போது அய்யர் கூறுகிறார், ‘வேறொன்னும் இல்ல. எல்லாம் அகங்காரம். எவனாவது கையப்பிடிச்சு தூக்கி விடனும்ன்னு நினைக்கிற அகங்காரம். தன்னை பத்தி மட்டுமே யோசிக்கிற எண்ணம்’. அட இரண்டு நிமிடத்துக்கு முன் நான் கூட இதைத்தானே நினைத்தேன் எனும் போது சிறிது பெருமையாக இருந்தது. காடு நிஜமாகவே ஒரு பேரனுபவம் தான்.

DSC_0378-5 (1)

அழுத்தமான நாவல் என்ற போதிலும் நாவல் முழுக்க பகடிக்கும் பஞ்சமில்லை. ஒருகட்டத்தில், ‘நீங்க ரொம்ப இலக்கியம் படிக்கிறீங்க, அதுதான் உங்க பித்துநிலைக்கு காரணம்’ என்று வரும் வரியை எங்கே ஜெமோ தன்மீது செய்துகொண்ட சுய பகடியோ என்றுகூட நினைத்துக் கொண்டேன். தென்காசியில் எனக்குத் தெரிந்த ஒரு அண்ணன் இருக்கிறார். ஒல்லியான தேகம். சுருட்டை முடி. பிளேடு பார்க்காத கன்னங்கள். காது மடலில் எப்போதும் ஒரு லாட்டரிச்சீட்டை சுருட்டி வைத்திருப்பார். அணிந்திருக்கும் பேன்ட் கொஞ்சம் கிழிசலாக இருந்தால் கூறிவிடலாம் அவர் ஒரு அரலூசு என்று. ஆனால் அவர்கள் நண்பர்கள் மொத்தமும் அவரைக் கொண்டாடுவார்கள். சிறுவயதிலேயே கார்ல்மார்க்ஸ் தொடங்கி பெரிது பெரிதான புத்தகம் படித்தவர் என்று. திருக்குறள் தலைகீழ். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் திருவாசகம் அத்துபடி. இன்றைக்கும் இருக்கிறார். அப்படியே தான் இருக்கிறார். அவர்தான் நான் பார்த்த முதல் இலக்கிய வடிவம். காடு காட்டும் இலக்கிய வடிவம் கூட பித்து நிலையிலேயே தான் இருக்கிறது. கிரியைப் போல, ஐயரைப் போல, தேவசகாயம் நாடாரைப் போல. கொஞ்சம் உங்களைப் போல :-)

காடு நாவல் குறித்து ஒரு சிறிய விமர்சனம் என்ற பெயரில் ஒன்றை எழுதியிருக்கிறேன். உங்கள் பார்வைக்கு. இனி சித்தன் போக்கு…

http://www.seenuguru.com/2018/02/kaadu-book-review.html

நன்றி

நாடோடி சீனு

முந்தைய கட்டுரைமகாபாரதம் பூர்வகதை
அடுத்த கட்டுரைமயிலாடுதுறை பிரபு வலைப்பூ