பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

images

பெருமதிப்பிற்கும் அன்புக்குமுரிய ஆசானே,

இன்னைக்குத்தான் நேர்ல பாத்தேன் “அச்சப்படத் தேவையில்லை “விழால. பாதிலதான் வந்தேன் (மன்னிப்பு). நீங்க பேசிட்டுருந்தீங்க. பல விஷயம் மண்டைல ஏறுச்சு.எங்க ஊர்லயும் ஒரு உச்சினி மாகாளியம்மன் கோயில் இருக்கு கிட்டத்தட்ட நீங்க சொன்ன அதே நிலைமைல. எத்தனையோ தடவ அந்த கோயில் வழியா போயிருக்கேன். இப்பதான் உள்ள போய் பாக்கணும்னு தோனுது. அங்க கொடை நடக்கும்போது இரவு வெளில எங்க வீடுகளில் வெளில விட மாட்டாங்க. முக்கியமா சூலிப்  பெண்களை. நான் அந்த கோயில் பத்தி இனி தெரிஞ்சிக்க முயற்சி பண்றேன்.

அப்புறம் நிகழ்ச்சி முடிஞ்சதும் பக்கத்துல வந்து பார்த்தேன். நண்பர்கள் பேசிட்டு இருந்தாங்க. ஒரு இளைஞன் வந்தான் கட்டி புடிச்சீங்க (மூஞ்சு லேசா பரிதாபமா இருந்திச்சு) ஒரு அம்மா அமெரிக்கால இருக்காங்க போல அவுங்க பேசிட்டிருந்தாங்க. அவுங்க கூட ஒரு இளைஞர் இருந்தாரு . செல்பி எடுத்தாங்க. அப்புறம் தெரிஞ்சவங்களாம் வந்து பேசிட்டிருந்தாங்க. சரி! நம்ம எப்டி பேசுறது அப்டினு யோசனை தயக்கமா இருந்துச்சு. சரி!நீங்க சொல்ற மாதிரி அவுங்க எல்லாம் உங்க அளவு இல்லைனா அதைவிட அறிவானவங்களா இருப்பாங்கன்னு தோனுச்சு. சட்டுனு அஜிதன் சொன்னது ஞாபகம் வந்துச்சு “நீ பெரிய ஆளு! உன்னைப் பார்க்க ப்ரோபெஸோர் எல்லாம் வருவாங்க… “நான் யாருனு தோணுச்சு. ஒருவேளை மூஞ்சி பரிதாபமா இருந்தா நீங்களா கூப்டு பேசுவீகளோனு தோனுச்சு. அப்புறம்தான் வாசகன் மூஞ்சி எப்படி இருக்கும்னு நீங்க சொன்னீங்களானு யோசிச்சு பார்த்தேன். இல்லைன்னா லேசா முயற்சி பண்ணிருப்பேன்.

சரி!எழுத்தாளரோட அறிமுகமாகணும்னா எழுத்து மூலம்தான்னு தோணனுச்சு!அதான் எழுதுறேன்.எல்லாரும் மாதிரி நெறய தடவ எழுதணும்னு நினைச்சு (காடு,ஏழாம் உலகம், அறம், இரவு இன்னும் நெறைய )ஆனா எழுதல. வக்கில்லைனு கூட சொல்லலாம். இருந்தாலும் இன்னைக்கு எழுதலாம்னு தோணுது.

ஒரு கோப்பை காப்பி:கதைசொல்லி அவுங்க அம்மா  கதைசொல்லியோட அப்பாவை அடிச்சுட்டு இங்க வந்து நல்லா இருக்காளேனு ஆத்திரப்படறது ஒரு ஆணோட மனசு. அவரு அவுங்க அப்பாவோட நீட்சிதானே!அதான் அவரு  வந்து நீ சரியா படிக்கலைனு அடிக்கிற மாதிரி கனவு  வாராதா சொல்ராரு! எதப் படிக்கலை. அது மார்த்தாவுக்குதான்  தெரியும். இந்தியன் ஸ்டைல் பில்டர் காப்பி புரியும்போது இது புரியத்தானே செய்யும் .ஜானுவுக்கும் அம்மாவுக்கும் அல்ல. அதான் நீயே கொன்றுவிட்டது போல நினச்சிக்கோனு சொல்லுது. மொத்தத்தில் ஒருகோப்பை காப்பி ஒரு பாவசங்கீர்த்தனம்!அதுக்கு பரிகாரமா ஈமச்சடங்கு செய்ய சொல்லுது மார்த்தா. கதைசொல்லி கடைசில மன்னிப்பு கேக்காரு. அது இந்திய ஆண்கள் கேட்கும் மன்னிப்பு.இவ்ளோதான் எனக்கு தெரிது!இதுக்குமேல நுண்முடிச்சுகள் இருக்கலாம். எனக்கு தெரில.

எனக்கு பகுக்கத் தெரியவில்லை. தொகுக்கத்தான் தெரிகிறது.  உதாரணமா இப்ப காடு படிக்கும் பொது அதைப் பத்தி நெறய எழுதணும்னு தோணுச்சு ஆனா எழுதல. எனக்கு ஏற்பட்ட மன உணர்வு “பேப்பயபுள்ள , இவருக்கெல்லாம்  டாக்டர் பட்டம், பத்ம விருதுலாம் குடுக்கலாம்லன்னு தோனுச்சு”. அப்புறம் கீரக்காதன பாடம் செஞ்சத வாசிக்கும்போது சட்டுனு அந்த எண்ணம் மறைஞ்சு போச்சு. இவரெல்லாம் கீரக்காதன் அப்டியே காட்ல விட்ரனும் !இல்லைனா மதிப்பு தெரியாம காந்தி ரூவா நோட்டுல சிரிச்ச கதை ஆயிரும்னு தோனுச்சு.

ரொம்ப பாதிச்சது வெற்றி கதை. அப்புறம், உலகம் யாவையும், பத்மவியூகம் இரண்டும் ஒரு மெல்லிய சரடு வழியா இணைதுன்னு தோனுது. ஒருநாள் விரிவா எழுத முயற்சி பண்றேன்.

இதுக்கு முன்னாடி 3, 4 வருஷம் முன்னால ஒரு மெயில் போட்டேன். அப்புறம்தா அது அனுப்பியிருக்க வேணாமோனு தோனும் (பதில் இல்லை, பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை). எப்டியோ இன்னைக்கு எழுதிட்டேன். தயவு செஞ்சு “போடா மொண்ணை”அப்டினாச்சும் பதில் வந்தா  நல்லா இருக்கும். இந்த ஹெச் ஆர் மாதிரி பயலுவ மாதிரி பதிலே போடாம இருந்தா கஷ்டமாயிருக்கும். இன்னைக்கு காலையில நம்ம வெப்சைட் பாக்கல இல்லைனா வடபழனி வந்துருப்பேன். ரொம்ப நன்றி

குறிப்பு : ரூம்ல வந்து கண்ணாடி பார்த்தேன் “எங்கயாச்சும்  பரிதாபம் தெரிதானு “

நன்றி,

பேபியான்

***

அன்புள்ள பேபியான்,

உங்கள் கடிதம் பேச்சுமொழியில் அமைந்திருப்பது ஓர் அணுக்கத்தை அளிக்கிறது. இன்று பலர் கடிதங்களை இப்படி எழுதுகிறார்கள். முகநூலில் இப்படி எழுதுவது ஒரு வழக்கமாக உள்ளது என நினைக்கிறேன்.

ஆனால் இப்படி எழுதத் தொடங்குவது உள்ளமைந்த மொழி ஒன்று உருவாகாமல் ஆக்கிவிடும். ஏனென்றால் பேச்சுமொழியின் மிகப்பெரிய சிக்கலென்பது அது தனிப்பட்டமுறையிலானது என்பதே. அதில் எப்போது முன்னிலை உள்ளது. ஆகவே இயல்புத்தன்மை கைவரும்போதே  சுருக்கத்தை செறிவை கூர்மையை அடையமுடியாமல்போகும்.

நம்முள் உரைநடை உருவாவது நாம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறோம் என்பதற்கான சான்று. நாம் எவ்வளவு வாசிக்கிறோமோ, எந்த அளவு சிந்திக்கிறோமோ, அந்த அளவுக்கு நம் அகமொழி கூர்மையாகும். அகமொழியை நம்மால் புறமொழியால்தான் கட்டுப்படுத்த, பயில, ஆள முடியும். ஆகவேதான் சிந்திப்பதற்கான பயிற்சி என்பது எழுதிப்பார்ப்பதே எனப்படுகிறது.

அந்த எழுத்துமொழியை தீட்டிக்கொள்ளும்தோறும் அகமொழி கூர்மையாவதை உணர்வீர்கள். ஒன்றின் ஆடிப்பாவை பிறிது என. ஆகவே பேச்சுமொழியில் எழுதுவதை தவிர்த்துவிடுங்கள். ஆனால் உரைநடையின் ஒழுக்கு பேச்சுமொழி அளவுக்கே வரவேண்டும். செயற்கையான முறுக்குதல் அதில் நிகழக்கூடாது.

அவ்வாறு பழகிக்கொள்ளுதல் இக்கடிதத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா சிக்கல்களையும் இல்லாமலாக்கிவிடும். வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65
அடுத்த கட்டுரைபேலியோ -நியாண்டர்செல்வன்