ஆலுவா

uccollege-commonpic
திருவிதாங்கூர் மகாராஜாவின் கொடையான கசேரி ஹவுஸ், யுசி கல்லூரி ஆலுவா

நேற்று மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி இன்று [7-2-2108] காலை ஆலுவா வந்தேன். எர்ணாகுளத்திற்கு அருகே இருக்கும் இந்த ஊர் எனக்கு உணர்வுரீதியாக முக்கியமானது. இது என் அன்புக்குரிய லோகித் தாஸ் இருபதாண்டுக்காலம் வாழ்ந்தது. நான் அவரைப்பார்க்க இங்கே பலமுறை வந்துள்ளேன். இன்று அவர் இங்கில்லை. அவர் வாழ்ந்த   இல்லமும்.

ஆலுவாவுக்கு அதற்கு முன்னர் சுந்தர ராமசாமியுடன் வந்தேன். இங்கு திருவிதாங்கூர் அரண்மனை இன்று ஓர் உயர்தர விடுதி. அதில் அன்று தங்கியிருந்தோம். சுந்தர ராமசாமி அன்று உணவு ஒவ்வாமையால் சற்று சிரமப்பட்டார். ஆனால் அந்த மாபெரும் அறைகளும் ஆளோய்ந்த சூழலும் அருகே அமைந்த படித்துறையும் ஆழ்ந்த மனநிலையை உருவாக்கின

அதன்பின் இருமுறை இங்கே தங்கியிருக்கிறேன். ஒருமுறை முழுநாளும் பாலக்காடு கே.வி.நாராயணசாமியின் இசையை கேட்டபடி அருகே ஓடும்  பெரியாறை பார்த்து அமர்ந்திருந்தது நினைவில் இருக்கிறது. அவை சினிமாப் பயணங்கள். அருகிலிருக்கும் அத்வைத ஆசிரமத்திற்கு ஒருமுறை வந்திருக்கிறேன்.

இம்முறை இங்குள்ள யுசி கல்லூரியில் ஒரு கருத்தரங்கு. நான் கல்லூரிப் பேச்சுக்களைத் தவிர்ப்பவன். அவை பெரும்பாலும் பயனற்ற நிகழ்வுகள்.இம்முறை வர முடிவுசெய்தது ஒரே காரணத்தால். ம்யூஸ் மேரி எனப்படும் மலையாளக்  கவிஞர் இங்கே ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர்  கே.சி.நாராயணனிடம் என்னை வரச்சொல்லிக் கோரினார் என கே.சி. என்னிடம் சொன்னார். அவரை நான் தட்டமுடியாது, என் முப்பதாண்டுக்கால நண்பர்.

alv3

இன்னொரு காரணம் இருந்தது. இக்கல்லூரியின் தனித்தன்மைஎன்ன என்று நான் கேட்டபோது ஆசிரியர் பணிக்கு ஒரு பைசாகூட பணம் வாங்காமல் முழுக்கமுழுக்க தரத்தினடிப்படையில் நியமனம் செய்யும் கல்லூரி, முற்றிலும் வேறுபட்டது என்றார்கள். கேரளத்தில் அப்படி ஒரு சில கல்லூரிகளே உள்ளன. பலகல்லூரிகளில் ஒருகோடி வரை ஏலத்தில் செல்கிறது

அது மிக அரிதான ஒரு பண்பு என்பதில் ஐயமில்லை, அதை கௌரவிக்கவும் வேண்டும். ஆகவே கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்தேன். அதன் தரமும் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அது உண்மை என இங்கே வந்தபின் உணர்ந்தேன்

லோகிததாஸ்
லோகிததாஸ்

யூசி கல்லூரி [யுனைட்டட் கிறிஸ்டியன் கல்லூரி] கத்தோலிக்க திருச்சபை மையமாகவும் மலங்கரா, மார்த்தோமா திருச்சபைகள் உடனிணைந்தும் நடத்தும் ஒரு நிறுவனம். 1921ல் தொடங்கப்பட்டது. அன்று காந்தி இங்கே வந்து ஒருமாமரம் நட்டிருக்கிறார். அந்த மரம் இப்போதும் உள்ளது.

1921ல் தான் மாப்பிளா கலவரம் வெடித்தது. கிலாபத் இயக்கம் வன்முறையை அடைந்தது. இங்குள்ள நாயர், நம்பூதிரி நிலக்கிழார்களுக்கு எதிராக அவர்களால் ஒடுக்கப்பட்ட அடித்தள முஸ்லீம்களின் கலவரமாக தொடங்கி, மதகுருக்களால் கையிலெடுக்கப்பட்டு ஜிகாத் என பெயர் பெற்று அத்தனை இந்துக்களுக்கும் எதிரான கொலைவெறியாட்டமாக ஆகியது. அந்தக் கலவரத்தை நிறுத்தும்பொருட்டு காந்தி வந்தபோது நடப்பட்ட இந்த மரம் ஒரு வரலாற்றுச்சின்னம்

alwaye-palace
ஆலுவா திருவிதாங்கூர் அரண்மனை

திருவிதாங்கூர் அரசர் அளித்த   ‘கச்சேரி மாளிகை’ என்னும் பெரிய கட்டிடத்தில் இப்போதும் வகுப்புகள் நடக்கின்றன. அதை தொல்லியல்துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது. பழையபாணி ஓட்டுக்கட்டிடங்கள். மாபெரும் நூலகம். விரிந்த சூழல். ஏராளமான மாணவர்கள்

திருவிதாங்கூர் வட எல்லையாக இடவா என்னும் ஊரைத்தான் கொண்டிருந்தது. தென் எல்லை ஆரல்வாய்மொழி, இன்று குமரிமாவட்டத்தின் தமிழக எல்லை.1750ல் மார்த்தாண்டவர்மா கொச்சி அரசரை தோற்கடித்து தன் எல்லையை ஆலுவா வரை விரித்தார். திருவிதாங்கூர் அரசு ‘திரு-கொச்சி அரசு’ என்று பின்னாளில் பிரிட்டிஷ் காலகட்டத்தில் அறியப்பட்டது. கேரள நிலப்பரப்பில் சரியாக பாதி.

எஞ்சிய பகுதி கோழிக்கோடு சாமூதிரி மன்னர்களால் ஆளப்பட்டது. பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டு சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை சென்னை மாகாணத்தின் பகுதியாக நீடித்தது. திருவிதாங்கூருக்குச் சொந்தமான அரண்மனைகள் பல ஆலுவா ஆற்றங்கரையில் இருந்தன. அவை கல்விநிலையங்களுக்கு அளிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று முன்பு நீதிமன்றமாக இருந்த கச்சேரி ஹவுஸ்

நாவல் குறித்த மூன்றுநாள் தேசியக் கருத்தரங்கை தொடங்கிவைத்து உரையாற்றினேன். உலக இலக்கியத்தில் நாவல் என்னும் வடிவத்தின் தொடக்கம் அதன் கட்டங்கள் என. நாற்பது நிமிடம். இலக்கிய விமர்சகர் பி.கே.ராஜசேகரன் மைய உரை ஆற்றினார்

எனக்கு தங்குவதற்காக அருகிலேயே கல்லூரி நிர்வாகத்தின் இணையமைப்பான சாக்கோ அறக்கட்டளை நடத்திவரும் முதியோர் இல்லத்தின் விருந்தினர் அறை அளிக்கப்பட்டது. இரவு தங்குவதில்லை. ஆற்றங்கரைக்குச் சென்றுவிட்டு அப்படியே ரயில் ஏறப்போகிறேன். அறை வசதியானதுதான்

சாக்கோ ஹவுஸ் என சொல்லப்படும் இந்த இடம் இங்கே வாழ்ந்த சாக்கோ என்னும் பெரியவருக்குரியது. கிறித்தவ பக்தரான அவர் ஒரு புனிதராக இப்போது மக்களால் எண்ணப்படுகிறார். மணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்தார். அவருடைய 13ஏக்கர்  நிலம் பின்னர் ஊர்க்காரர்களால் ஒரு அறக்கட்டளையாக ஆக்கப்பட்டு இன்று பல்வேறு அறச்செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இது பலவகையான முதியோர்கள் தங்கும் இடம்.

முதியோர் இல்லம் என்னும் இந்த கருத்து எனக்கு திகிலூட்டியது. மொத்தச் சமூகத்திலிருந்தும் முதியோர் தங்களை வேறுபடுத்திக்கொள்கிறார்கள். அவர்களை சமூகம் அள்ளி ஒதுக்கிவிட்டிருக்கிறது. இது பணக்கார முதியோருக்கானது. செலவேறியது. அனைத்து வசதிகளும் கொண்டது. ஆனால் முதியோர் மட்டும்தான்

alv2
மணப்புறம் சிவன் கோயில்

முதியோர் முதியோரை மட்டுமே பார்த்துப் பேசிக்கொண்டிருப்பதே ஒரு பெரும் கொடுமை. நோய்கள், வலிகள், சோர்வுகள், சலிப்புகள். ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள அவை மட்டுமே. கடந்தகால ஏக்கங்களைக்கூட அவர்கள் பரிமாறிக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் ஒரு தீவு. அடிக்கடி சிலர் இறந்தும்போகிறார்கள். . இது என்னவகை வாழ்க்கை!

இளைஞர்களுக்கு, அடுத்த தலைமுறைக்கு எந்த இடமும் இல்லாமல் ஒரு வாழ்க்கையை அவர்க்ள் அமைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என எவருக்குத் தோன்றியது? மானுட வரலாறு முழுக்க முந்தைய தலைமுறை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அன்பை, பரிவை, அனுபவ அறிவை. அதற்கு மாற்றாக அடுத்த தலைமுறையிடமிருந்து அது பாதுகாப்பையும்  தன்மதிப்பையும் பெற்றுக்கொள்கிறது

அடுத்த தலைமுறைக்கு அளிக்க ஏதேனும் இருக்கையில் மட்டுமே வாழ்க்கையின் பொருள் திரள்கிறது. முதியோர் ஒரு மரத்தின் வாடிக்கொண்டிருக்கும் இலை. அதற்கு தளிருடன் உயிர்த் தொடர்பு உள்ளது.  நாட்கணக்கில் ஆண்டுக்கணக்கில் இளையோருடன் தொடர்பே இல்லாமல் இருந்தால் இவர்களின் உளநிலை என்னவாக இருக்கும்?

P.K._Rajasekharan
பி கே ராஜசேகரன்

வாழ்க்கை முழுமையாக அகன்றுவிடுகிறது. சுவைகள் கொண்டாட்டங்கள் சவால்கள் கசப்புகள் கோபங்கள் அனைத்துமே. எஞ்சியிருப்பது கரியபெருக்கு வந்து தொடுவதற்கான காத்திருப்பு. இருப்பு என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கை என்பது பெருக்கு. அது அலையும் திசைநோக்கும் கொண்டது. நிற்காமல் செல்வது.

ஆனால் இவர்களால் இங்குதான் இருக்கமுடிகிறது என்றார் நண்பர். இவர்களால் வேறுவகையானவர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை. விட்டுக்கொடுக்க முடிவதில்லை. ஆணவத்தையும் தனித்தன்மையையும் பேணமட்டுமே விரும்புகிறார்கள். இங்கே இவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் உறவினர்களுடன் சென்றால் உடனே ஊடி திரும்பிவிடுகிறார்கள். ”நான் எவரையும் நம்பி இல்லை’ என்ற வரியைச் சொல்லாதவர்களே இல்லை

’தனியாக இருக்கலாமே?” என்றேன். ‘இருக்க இவர்களால் இயலாது.இருந்தால் பயப்படுகிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு அப்படி தனித்தன்மை ஏதும் இல்லை. ரசனை, அரசியல் எல்லாமே பொதுமைதான்.சமூகம் பொதுவாகச் சொன்ன அதே அளவுகளின்படி படித்து வாழ்ந்து சமூகக்கண் முன் வெற்றிகொண்டு முடித்தவர்கள். எந்த தனியடையாளமும் இல்லாதவர்கள்’ என்றார்

sura

உணவறையில் அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டு அமர்ந்திருந்தேன். ஒருமணிநேரம். ஒவ்வொருவரும் நாடகக்காட்சி போல திரும்பத்திரும்ப ஓரிரு சொற்றொடர்களையே பேசினார்கள். உடல்நிலை விசாரிப்புகள் மட்டும். அரிதாக ஏதாவது உறவினர் பற்றி சில சொற்கள். ஒரு சிரிப்பு இல்லை. ஊக்கம் இல்லை.

சமூகத்தின் உயிருடன் தொடர்பில்லாது துண்டித்துக்கொண்ட மனிதர்கள். ஏதோ ஒருவகையில் வாழ்க்கையை  வாழாமல் முதுமையை அடைந்தவர்கள். வாழ்ந்தவர்க்ளுக்கு அடையாளம் இருக்கும். அவர்களிடம் பிறருக்கு அளிக்க சில இருக்கும். அளிக்க இருப்பவர்களை சமூகம் விட்டுவிடுவதில்லை. செல்வமொ கருணையோ அறிவோ.

முதியோர் ஒவ்வொரு நாளும் மலர்களையும் குழந்தைகளையும் பார்த்தாகவேண்டும். ஒவ்வொரு நாளும் வானின் கீழ் நின்று உதயத்தை தரிசிக்கவேண்டும் என்று நித்யா சொல்வார். இங்குள்ள வாழ்க்கையின் இனிமையை அவை நினைவுறுத்திக்கொண்டே இருக்கும். வாழ்தல் இனிது என உணராமல் வாழ்க்கை இல்லை

எனக்கு முதுமை இல்லை என நான்  உணர்ந்து கொண்டே இருக்கிறேன். இத்தகைய செயல் விசை சீக்கிரமே கரைந்து அழியவைப்பது. ஆனாலும்  இருக்கும் வரை இளையோருடன் இருந்தாகவேண்டும் என சொல்லிக்கொள்கிறேன்.

gandhi
யுசி கல்லூரியில் 1921ல் காந்தி நட்ட மாமரம்

மாலையில் ஆலுவா மணல்புறம் சென்றிருந்தேன். ‘ஆலுவா மணப்புறத்தில் பார்த்த ஞாபகம்’ என்பது கேரளத்தில் ஒரு பெரிய சொல்லாட்சி. அக்கால கேரளத்தில் மிக அதிகமாக மக்கள் கூடும் விழாக்கள் திரிச்சூர் பூரமும் ஆலுவா சிவராத்திரியும்தான். இங்கே பெரியாறு இரு கிளைகளாக பிரிந்து ஓட நடுவே மிகப்பெரிய மணல் மேடு உள்ளது. இங்கே முன்பு சிவராத்திரி நிகழும். இப்போது சிவராத்திரிக்கு சிவனைக்கொண்டுவந்து வைத்து வழிபடும் இடத்தை நிரந்தரமான சிவன்கோயிலாக ஆக்கியிருக்கிறார்கள்

ஆலுவா மணப்புறத்தில் தனியாக ஓர் அந்தியைச் செலவிட்டேன். சிவராத்திரிக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. பிரம்மாண்டமான நீரொழுக்குகள். அவற்றுக்குமேல் சிமிண்ட் பாலங்கள். அப்பால் ஒழுகிச்சென்ற ஒரு ரயில். மறுகரையில் திருவிதாங்கூர் அரண்மனையும் நாராயணகுருவின் அத்வைத ஆஸ்ரமமும். ஆலுவா அழகான ஒரு சிறு ஊராக இருந்தது. இப்போது எர்ணாகுளத்தின் புறநகராக பெருகிக்கொண்டிருக்கிறது.

நதிமேல் சூரியன் மறைவதைப் பார்த்துக்கொண்டு அந்தி இருண்டு மறையும் வரை நின்றிருந்தேன். இந்த மாலை லோகிக்கும் சுந்தர ராமசாமிக்குமானது.

alv1
பெரியாறு – மறுபக்கம் ஆலுவா அரண்மனை

முந்தைய கட்டுரைசட்டமும் சாமானியனும்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–55