வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 6

blவாயிற்காவலன் ஆற்றுப்படுத்தி தலைவணங்க உயரமற்ற கதவைத் திறந்து விஜயை சிற்றவைக்குள் நுழைந்தபோது முன்னரே அங்கு யுதிஷ்டிரரும் திரௌபதியும் நகுலனும் சகதேவனும் அமர்ந்திருந்தனர். சாளரத்தருகே உடல் சரித்து சாய்ந்து பீமன் நின்றிருந்தான். சௌனகர் மறுபுறம் நின்று யுதிஷ்டிரரிடம் உளவுச்செய்தி எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். அவள் உள்ளே நுழைந்ததும் அவைக்கு தலைவணங்கி தனியாக அமர்ந்திருந்த தேவிகையின் அருகே சென்று உயரமற்ற பீடத்தில் கால்மடித்து அமர்ந்தாள்.

சௌனகர் தொடரலாமா என்று விழிகளால் சகதேவனிடம் வினவிவிட்டு “செய்திகளின்படி இன்னும் பன்னிரண்டு நாட்களில் அஸ்தினபுரியில் பாரதவர்ஷத்து அரசர்களின் பேரவை கூடவிருக்கிறது. நம் தரப்பில் நின்றிருக்கக்கூடும் என நாம் எண்ணிய பலரும் அப்பக்கம் சேர்வதாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. அன்று அப்பேரவையில் எதன்பொருட்டு போர் என்றும் எவரெவர் முதன்மைப் பங்கு வகிப்பதென்றும் முறையாக அறிவிக்கப்படும் என்கிறார்கள். போர் அறிவிப்பு நிகழ்ந்துவிட்டதென்றால் பின்னர் அதிலிருந்து அவர்கள் பின்வாங்க இயலாது. அது ஓர் அறைகூவல் என்பதனால் நாம் அதே வகையில் தவிர்க்கவும் இயலாது” என்றார்.

சகதேவன் “எதன்பொருட்டேனும் அந்தப் பேரவை தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதா, அமைச்சரே?” என்றான். சௌனகர் “பெரும்பாலும் இல்லை. உளவுச்செய்திகள் சொல்வதன்படி பார்த்தால் பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அறுதிநிலை எடுத்துவிட்டார்கள். அங்கு மாற்றுச்சொல்லுரைக்க எவருமில்லை. ஒருவேளை இனிமேல் அந்த அவையில் போர்முதன்மையின் பொருட்டு அரசர்களிடையே சிறுபூசல்கள் எழலாம். அது ஒன்றே நாம் எதிர்பார்க்கக்கூடியது” என்றார். சகதேவன் “அதில் பயனில்லை. போர்முதன்மை கொள்பவர் எவரென்பது அனைவருக்குமே தெரியும். பீஷ்மரும் கிருபரும் துரோணரும் சல்யரும் அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும். பிறர் அவர்களின் சொற்படி பின்னால் நிற்பவரே” என்றான்.

“அங்கர்?” என்றான் நகுலன். “அங்கர் படைத்தலைமை கொள்ள ஷத்ரிய அரசர்கள் ஒப்பமாட்டார்கள். ஆனால் அதன்பொருட்டு அங்கர் உளவேறுபாடு கொள்ள வாய்ப்பில்லை. அவர் தன்னை துரியோதனருக்கு முற்றளித்தவர்” என்றார் சௌனகர். யுதிஷ்டிரர் “ஆம், மெய்யே” என்றார். சௌனகர் தலைவணங்கி தன் பீடத்தில் அமர்ந்தார். அவைக்குள் அமைதி நிலவியது. சகதேவன் சற்று அசைந்து தன் ஆடையை ஓசைப்படுத்தியது கேட்டது. யுதிஷ்டிரர் “நாம் என்ன செய்யக்கூடும், இளையோனே?” என்றார். சகதேவன் “இத்தருணத்தில் நாம் செய்வதற்கேதுமில்லை, மூத்தவரே. இரு பக்கமிருந்தும் பெருவிசைகளால் அழுத்தப்பட்டிருக்கிறோம்” என்றான்.

“ஆம், நாம் செய்வதொன்றுமில்லை” என்றார் யுதிஷ்டிரர். “தந்தைக்கு எதிர் எழுந்து போர் செய்தால் அன்னை சொல் கேட்டே அவ்வாறு செய்தோம் என்று எவருமறியாத நிலையில் அப்பெரும்பழியை தாங்களே சுமக்க வேண்டியிருக்கும்” என்றான் சகதேவன். “அதிலெனக்கு தயக்கமில்லை” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அன்னையின்பொருட்டு அப்பழியும் என் தலையில் அமையட்டும். கொடியவன் என்று தலைமுறைகள் முன்பு நிற்பது கடினமானதே. அதைவிடக் கடினம் அவ்வாறு நம்முன் நாம் நிற்பது” என்றார்.

சகதேவன் “அவ்வாறெனில் நாம் உடனே நம் தரப்பு அரசர்களுக்கான பேரவையை கூட்டவேண்டும். நமது படைவல்லமையை அதன் பின்னரே அளவிடமுடியும். அதன் அடிப்படையிலேயே நமது படைசூழ்கையை அமைக்கமுடியும்” என்றான். “சஞ்சயனிடம் இப்போது என்ன சொல்லி அனுப்புவது? நாம் இங்கு அவைகூடியது அதன்பொருட்டே” என்று நகுலன் சொன்னான். “நாம் இறுதிமுடிவெடுத்தோமானால் அம்முடிவையே அறிவிப்போம்” என்று சகதேவன் சொன்னான். “நமது நிலத்தில் எதையும் நாம் விட்டுக்கொடுப்பதாக இல்லை. தந்தையின் ஆணையை நாம் தலைக்கொள்ளும்போதே அவர் மைந்தரும் அதை ஏற்கவேண்டுமென்று விழைகிறோம். அதுவே நம் செய்தியாகட்டும்.”

நகுலன் “மூத்தவரே, அதுவே தங்கள் ஆணையென்றால் சௌனகரிடம் தெரிவியுங்கள்” என்றான். யுதிஷ்டிரர் சௌனகரை நோக்கி “இளையோன் சொன்னதே நமது ஆணை. அதை தாங்கள் முறையாக சஞ்சயனிடம் தெரிவியுங்கள்” என்றார். பின்னர் தயங்கி “ஆனால் தந்தையின் ஆணையை நான் மீறுவதுபோல அச்சொற்களில் தெரியலாகாது. அவர் ஆணையை நான் தலைக்கொள்கிறேன். ஆனால் தந்தை எனக்களித்த மண்ணுரிமையை விடப்போவதில்லை என்றுரைத்தால் நன்றாக இருக்குமா?” என்றார். பீமன் “எந்தச் சொற்களில் சொன்னாலும் அது தந்தையின் ஆணையை புறந்தள்ளுவதே ஆகும். அரசுமுறைச் சொற்களில் இருக்கும் மென்மையையும் தண்மையையும் தவிர்த்து கூர்மையையும் அனலையும் எடுத்துக்கொள்ளப் பயின்றவர்களே அரசகுடியினர் அனைவரும்” என்றான்.

சகதேவன் “பார்த்தர் எங்கே?” என்றான். நகுலன் “காலையிலேயே அவர் வேட்டைக்குச் சென்றுவிட்டார் என்றார்கள்” என்றான். யுதிஷ்டிரர் “எதிலும் ஈடுபடாமல் இருக்கிறான். ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தேவை போர்தானே, என் வில்லிருக்கிறது நானிருக்கிறேன் என்பதற்கு அப்பால் எதுவுமே அவன் சொல்வதில்லை. ஒவ்வொரு முறை அதை அவன் சொல்கையிலும் விளக்கமுடியாத சிறுமை ஒன்றை அடைகிறேன், அவனை என் படைக்கலமாக மட்டுமே பயன்படுத்துகிறேனா என்று” என்றார்.

பீமன் “அதில் பிழையென்ன? அரசன் தன் குடிகள் அனைவரையுமே படைக்கலங்களும் பலிக்கொடைகளும் வேள்விப்பொருட்களுமாகவே கருதவேண்டுமென்று நூல்கள் சொல்கின்றன” என்றான். “எந்த நூல்?” என்றான் சகதேவன். “ஏதேனும் ஒரு நூல். எல்லா கருத்தும் எங்கேனும் ஒரு நூலில் இருக்கும்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் எரிச்சலுடன் “மந்தா, நீ சற்று சொல்லடங்கி இரு” என்றார். “உன்னை அவையிலமர்த்தவே அஞ்சவேண்டியிருக்கிறது. உன் நாவிலிருந்து நீ உண்ட அக்கசப்பு எழுந்தபடியே உள்ளது. நேற்று உன் சொற்களிலிருந்துதான் அன்னை அத்தனை பெருஞ்சினத்தை சென்றடைந்தார்.”

“அது நன்று, மூத்தவரே. அவர் உள்ளக்கிடக்கை என்ன என்பது அதன் வழியாக தெரியவந்ததல்லவா?” என்றான் பீமன். சகதேவன் “அவர் உள்ளக்கிடக்கை அது. ஆனால் அத்தனை கூர்மையுடன் அவர் அதை முன்வைக்க உங்கள் சொற்களே தூண்டுகை” என்றான். சௌனகர் “நாம் பூசலிட்டுக்கொள்ளவேண்டியதில்லை. இளைய பாண்டவர் மறுத்தொரு சொல் சொல்லப்போவதில்லை. அரசியும் பிறிதொரு தரப்பில்லை என்று உரைத்துவிட்டால் இதையே சஞ்சயனிடம் உரைப்பேன்” என்றார். திரௌபதி “எனக்கு மாற்றுச்சொல் இல்லை, அமைச்சரே” என்றாள். “பிறகென்ன?” என்றான் பீமன். சௌனகர் “ஆணை இறுதிசெய்யப்படுகிறது” என்றார்.

கதவு மெல்ல திறந்து உள்ளே வந்த ஏவலன் “இளைய பாண்டவர் அர்ஜுனர்” என்றான். வியப்புடன் சகதேவனை நோக்கியபின் உள்ளே வரச்சொன்னார் யுதிஷ்டிரர். உள்ளே வந்து தலைவணங்கியபின் நகுலன் எழுந்த இருக்கையில் அமர்ந்த அர்ஜுனன் “நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் சஞ்சயனுக்கு சொல்லவேண்டிய முடிவை எடுக்கும்பொருட்டே என்று உணர்கிறேன்” என்றான். “ஆம், இன்றே ஒரு மறுமொழியை நாம் சொல்லி அனுப்பவேண்டியிருக்கிறது” என்றார் யுதிஷ்டிரர். “இன்னொரு நாள் பொறுப்போம். நாளை காலைக்குள் இளைய யாதவர் நகர்புகுவார்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“எப்படி தெரியும்?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “நான் அறிவேன்” என்ற அர்ஜுனன் “அவர் முடிவெடுக்கட்டும், ஒரு வழி அவரால் அடையப்படும்” என்றான். ஒருகணத்தில் முகம் தெளிந்து இயல்பாக ஆன யுதிஷ்டிரர் “ஆம், அவர் முடிவெடுக்கட்டும்” என்றார். பீமன் நகைத்து “முடிவெடுப்பதற்குத்தான் முதன்மையாக தெய்வங்கள் தேவைப்படுகின்றன” என்றான். யுதிஷ்டிரர் சினத்துடன் திரும்பிப்பார்த்து பின் முகம் எளிதாகி “மெய்தான்” என்று சிரித்தார்.

blமூடிய கதவுக்கு அப்பால் பித்தளைத் தாழ்கள் குலுங்கும் ஒலியும் “விஜயை! விஜயை!” என்று தேவிகையின் குரலும் கேட்டது. மஞ்சத்தில் அரைத்துயிலில் இருந்த விஜயை அதை மிக ஆழத்தில் எங்கோ கேட்டாள். சகலபுரியில் தன் அறைக்குள் விழித்தெழுவதாகவே அவளுக்குத் தோன்றியது. மறுகணம் நினைவு திரள எழுந்தமர்ந்து “யார்?” என்றாள். “நான்தான், கதவைத் திறடி” என்றாள் தேவிகை. விஜயை பதற்றத்துடன் எழுந்து வந்து கதவைத்திறந்து “என்னடி?” என்றாள்.

“வா, ஒன்று காட்டுகிறேன்” என்றாள் தேவிகை. “என்னடி?” என்றாள் விஜயை குழல்கற்றைகளை சுழற்றிக்கட்டியபடி. “அவர் வந்துவிட்டார்” என்றாள் தேவிகை. “யார்?” என்றதுமே விஜயை புரிந்துகொண்டு “இன்னும் பொழுது விடியவில்லையே?” என்றாள். “யார் சொன்னது? முதல் ஒளி பரவிவிட்டது. வா, வந்து பார்” என்று அவளை உப்பரிகைக்கு அழைத்துச் சென்றாள். அவளுடன் சென்றபோது விஜயையின் ஆடை நெகிழ்ந்தது. அதை அள்ளி இடுப்பில் செருகிக்கொண்டாள். இடைநாழியில் சரிந்த காலைவெளிச்சம் செந்நிறப் பட்டுவிரிப்புபோல விழுந்து கிடந்தது.

“நான் இன்னமும் முகம் கழுவி உடை சீராக்கவில்லை” என்று சொன்னபடி விஜயை அவளுடன் சென்றாள். “இது கணிமங்கல நன்னாள் எனக் கொள். விழித்த முதல் நோக்கு அவருக்குரியது. வந்து பார்” என்று தேவிகை அவளை உப்பரிகைக்கு அழைத்துச் சென்றாள். சிறிய மரமேடையில் நின்றபோது காலை குளிர்காற்று வந்து விஜயையின் ஆடையை எழுந்து சிறகடிக்க வைத்தது. அதைப்பற்றி உடலுடன் சுருட்டிக்கொண்டாள். இரு தோள்கள் மீதும் பட்டாடையின் நுனி படபடத்தது. “எங்கே?” என்றாள். “அதோ பார், அங்கே அவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றாள் தேவிகை.

மாளிகையின் மறுபக்க முற்றத்தில் யுதிஷ்டிரரும் பீமனும் நகுலனும் சகதேவனும் காத்து நின்றிருப்பதை விஜயை கண்டாள். இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் வேதியரும் இரு பக்கமும் நிரைகொண்டிருந்தனர். அப்பால் பட்டத்துயானை முகபடாம் அணிந்து விழிமங்கலத்திற்கென நிறுத்தப்பட்டிருந்தது. “வந்துகொண்டிருக்கிறாரா?” என்றாள். “ஆம், சற்று முன்னர்தான் கோட்டைமுகப்பில் முரசு அவர் வருகையை அறிவித்தது.” விஜயை “எங்கிருந்து வருகிறார்? இத்தனை விரைவாகவா? அவ்வாறென்றால் மிக அருகிலெங்கோதான் இருந்திருக்கிறார். இங்கெவரும் அதை அறிந்திருக்கவில்லையா?” என்றாள்.

தேவிகை “அவரை அணுக்கத்தில் அறிந்தவர்களுக்கே எங்கிருக்கிறார், எங்கு தோன்றுவாரென்று சொல்ல முடிந்ததில்லை. ஒவ்வொரு முறையும் வியந்து அதையே ஓர் உவகையென கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள். அரண்மனைக் கோட்டையின் முதற்காவல்கோட்டத்தில் கொம்போசை எழுந்தது. “வருகிறார்கள்” என்று தேவிகை சொல்லியபடி தூணை பற்றிக்கொண்டு  மெல்ல குதித்தாள். “ஏன் குதிக்கிறாய்? எவராவது பார்த்துவிட்டால் என்ன ஆவது?” என்றாள் விஜயை.

தேவிகை சிரித்தபடி “இந்த ஒரு தருணத்திலாவது கன்னியராகவும் சிறுமியராகவும் இருப்போமே” என்றாள். விஜயை நகைத்து “தொலைவிலிருந்து பார்ப்பதற்கு முதுமைக்குள் கன்னி குடியேறியிருக்கும் செய்தி தெரியாதல்லவா? பித்தி எழுந்துவிட்டாளென்று எண்ணுவார்கள்” என்றாள். “எவர் பார்த்தாலென்ன? யாருக்கு நான் கட்டுப்பட்டவள்? இத்தனை நாள் இவ்வுடலில் வெளிப்பட்டதெல்லாம் நானல்ல, நான் பிறிதொன்றென்று உணரும் இத்தகைய தருணங்களே அரிது” என்றாள் தேவிகை. அச்சொற்களினூடாக தன் துள்ளலை அடக்கி மீண்டும் இயல்படைந்து “அந்தப் புரவிகள்தான்” என்றாள்.

முற்றத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியை ஏந்தி நின்றிருந்த வீரன் கொம்போசை முழக்கியபடி முன்னால் சென்றான். மங்கலத்தாலமேந்தி நின்றிருந்த சேடியரும் இசைச்சூதரும் அவனை தொடர்ந்தனர். வலப்பக்கம் கூடி நின்றிருந்த ஏழு வைதிகர்கள் கங்கை நீர் நிறைந்த குடங்களுடன் வந்து அவர்களுக்குப் பின்னால் இணைந்துகொண்டனர். முதலில் அரண்மனைக்கோட்டத்தின் காவல்மாடத்தைக் கடந்து கரிய புரவிமேல் சாத்யகி முன்னால் வந்தான். விஜயை “நெடுநாட்களுக்குப் பின் அவரை பார்க்கிறேன். முதுமை கொண்டுவிட்டார்” என்றாள்.

அவனுக்குப் பின்னால் அர்ஜுனன் வர தொடர்ந்து வந்த புரவியைப் பார்த்த தேவிகை “அதோ” என்றாள். விஜயை அக்கணம் அவரை பார்த்தாள். இருவரும் முற்றிலும் சொல்லிழந்தவர்களாக விழிமட்டுமே தங்கள் உளமென்று நின்றிருந்தனர். கொடிவீரன் முன்னால் சென்று அதைத் தாழ்த்தி வணங்கினான். மங்கலத்தாலமேந்திய சேடியர் மும்முறை உழிந்து குரவையிட்டனர். இசைச்சூதர் நல்லிசை முழக்கிநின்றனர். வேதியர் கங்கைநீர் தெளித்து வேதமோதி வாழ்த்தினர். புரவியை அணுகிய ஏவலரின் கைகளில் ஒப்படைத்துவிட்டு சாத்யகியும் அர்ஜுனனும் இறங்கினர். அரண்மனைக்குமேல் பெருமுரசம் முழக்கமிட்டது.

இளைய யாதவரின் வெண்புரவி நடனம்போல் மெல்லென்று காலடிகளை எடுத்து வைத்து நடந்துவந்து நின்று தலைதாழ்த்தி பிடரி சிலிர்த்து மூச்சு சீறியது. அதிலிருந்து கால் சுழற்றி நிலத்தில் இறங்கி தன்னை எதிர்கொண்ட யுதிஷ்டிரர் அருகே சென்று குனிந்து தாள்தொட்டு வணங்கினார். யுதிஷ்டிரர் அவரை அள்ளி தன் மார்போடு அணைத்துக்கொண்டார். அவருக்கு இருபுறமும் நின்ற நகுலனையும் சகதேவனையும் நோக்கி சிரித்து ஓரிரு சொற்கள் சொன்ன பின் பீமனை நோக்கி இரு கைகளையும் விரித்தார். பீமன் பாய்ந்து செல்வதுபோல் அணுகி தன் பெரிய கைகளால் இளைய யாதவரை அள்ளி நெஞ்சோடணைத்து தூக்கி இருமுறை சுழற்றி நிறுத்தினான். அவர்களின் சிரிப்போசையும் சொல்திரளா குரல்களும் கேட்டன.

இளைய யாதவரை பீமனும் நகுலனும் சகதேவனும் தங்கள் கைகளால் தொட்டுக்கொண்டே இருப்பதை விஜயை கண்டாள். “அவர்கள் அவரைத் தொட விழைகிறார்கள்” என்றாள். “அனைவரும் அவரைத் தொடவே விரும்புகிறார்கள்” என்று தேவிகை சொன்னாள். “அவர் மட்டும் மாறவே இல்லை. அகவை அவரை அணுகாது போலும்” என்றாள் விஜயை. தேவிகை “மாறாக நான் அவரில் பிறிதொருவரை காண்கிறேன். முன்பு கண்டபோது இளம்புரவியின் துள்ளலும் விரைவும் உடையவராக இருந்தார். இன்று முதுகளிற்றுக்குரிய ஆற்றல்மிக்க அமைதி அவர் அசைவுகளில் தெரிகிறது” என்றாள் தேவிகை.

யுதிஷ்டிரரும் இளையோரும் இளைய யாதவரை தழுவியவர்களாக இடைநாழியைக் கடந்து படிகளில் ஏறி உள்ளே சென்றனர். அர்ஜுனன் புரவிகளை கொண்டுசென்று கொட்டிலில் கட்டும்படி சூதர்களுக்கு ஆணையிட்டுவிட்டு சாத்யகியிடம் பேசியபடி அவர்களைத் தொடர்ந்து மேலேறிச் சென்றான். ஒழிந்த முற்றத்தை பார்த்தபடி தேவிகையும் விஜயையும் நின்றனர். தேவிகை “சென்றபின்னும் அவ்விடத்தில் தன்னை அவ்வாறே விட்டுச்செல்கிறார்” என்றாள். “அய்யோ, நான் அதையேதான் எண்ணினேனடி” என்றாள் விஜயை. “ஒவ்வொரு முறையும் அவர் சென்ற இடத்திலிருந்து என்னால் விழிவிலக்க இயல்வதில்லை.”

தேவிகை பெருமூச்சுடன் “இப்போது ஓர் எண்ணம் எனக்கு எழுந்தது. அது முற்றிலும் பிழையென்றும் இருக்கக்கூடும். பெண்ணென்பதால் பேதை என நின்றிருக்க நாம் விரும்புகிறோம். அதற்குரிய எண்ணங்களை உருவாக்கிக்கொள்கிறோம் என்றும் தோன்றுகிறது” என்றாள். “என்னடி?” என்றபடி விஜயை அவள் கைகளை பற்றினாள். தேவிகை விழிகளைத் தாழ்த்தி “ஒன்றுமில்லை, அவ்வாறு தோன்றியது” என்றாள். “என்ன?” என்றாள் விஜயை. தேவிகை பேசாமல் நடந்தாள். “சொல்லடி” என்றாள் விஜயை.

“அவரில் கரைக்கமுடியாத தனிமை நிறைந்திருக்கிறதோ? பெருந்துயரொன்று குளிர்காற்றென அவரைச் சூழ்ந்து நின்றிருக்கிறதோ? அவரைக் காணும் முதற்கணம் உள்ளம் உவகைகொண்டு துள்ளுகிறது. நோக்க நோக்க அறியாத் துயர் வந்து நெஞ்சை நிறைக்கிறது. நோயுற்ற குழவியைக் காணும் அன்னைபோல் நெஞ்சு நெகிழ்கிறது. அவரைக் காணும் பெண்டிரெல்லாம் அணுக்கம் கொள்வதும் அருகணைய விழைவதும், எண்ணி நெஞ்சு நிறைப்பதும், கனவில் மீட்டு கருத்தழிப்பதும், தன்னவர் என்று எண்ணுவதும், தானே என மயங்குவதும் அதனால்தானா?” என்றாள்.

விஜயை “என்னென்னவோ சொல்கிறாய், எனக்கெதுவும் புரியவில்லை” என்றாள். “நான் சொல்வதைப்போல் நீ எண்ணியதில்லையா?” என்றாள் தேவிகை. “ஆம், அவரை காண்கையிலெல்லாம் துயரும் நெகிழ்ச்சியும் எனக்கும் ஏற்படுகிறது. அது நீ சொல்வதனால்தானா என்று தெரியவில்லை. ஆனால் இத்தனை கூரிய சொற்களில் என்னிடம் ஒன்று சொல்லப்பட்டால் அதையே எண்ணமெனக் கொள்வது என் வழக்கம்” என்றாள். தேவிகை புன்னகைத்து “சென்று உன் நச்சுநாவிடம் கேள், இவ்வெண்ணத்தைக் கிழித்து உனக்களிப்பாள்” என்றாள்.

“ஆம், அவளை நான் அஞ்சுகிறேன்” என்றாள் விஜயை. அவளே சொல்லட்டுமென தேவிகை உடன்நடந்தாள். “நேற்று அவளிடம் சொன்னேன், பேரரசி குந்தி விழியிழந்த பெருந்தோளரின் சொல்லை மீறமாட்டார் என.” அவளை நோக்காமல் தேவிகை “ஏன்?” என்றாள். “தோன்றியது” என்றாள் விஜயை. “சரி, சொல்” என்றாள் தேவிகை. “அவர் அதை தூக்கி வீசியது என்னை திகைக்கச் செய்தது என்றேன். திருதராஷ்டிரரை அவர் ஒருபொருட்டென்றே எண்ணவில்லை. விண்நின்ற பாண்டு மன்னர் அவர் மேல் கொண்ட நுண்வஞ்சத்தையே வெளிப்படுத்தினார் என்றேன்.”

“அவள் என்ன சொன்னாள்?” என்றாள் தேவிகை. “அவள் நா கார்க்கோடகனைவிட கொடியது” என்றாள் விஜயை. “சொல்” என்றாள் தேவிகை. “பெண் என்று குந்தி பெருந்தோளரின் சொல்லுக்கு பணிந்தார். அப்படிப் பணிந்தமை கண்டு மனைவி என்று சீறி எழுந்தார் என்றாள். அவள் சொன்னதுமே அவர்கள் அவையிலமர்ந்திருந்த அமைதியை நினைவுகூர்ந்தேன். மெய் என்று எண்ணினேன். அவ்வாறு எண்ணுவதைக் கண்டு நானே நாணி அவளை வசைபாடி துரத்திவிட்டேன்” என்றாள். “வசைபாடுவதையே அவள் வாழ்த்தெனக் கொள்வாள். கசப்பு இனிக்கும் உள்ளம் அவளுக்கு” என்றாள் தேவிகை.

விஜயை “போடி” என்றபின் முன்னால் செல்ல தேவிகை அவளைத் தொடர்ந்து வந்தபடி “இன்று அரசகுடியினருக்கான அவை கூடவுள்ளது. நம்மையும் செல்லும்படி பணித்திருக்கிறார்கள்” என்றாள். “நாம் எதற்கு?” என்றாள் விஜயை. “இளைய யாதவர் நம்பொருட்டு முடிவெடுக்க இருக்கிறார். இது பெண்களுக்கும் பங்குள்ள அரசியல். எனவே நம் குரலையும் விழைகிறார்கள்” என்றாள். “இங்கல்ல எங்கும் எனக்கென்று ஒரு குரல் இல்லை. இனி எந்த அவையிலாவது எப்போதாவது என்னால் எழுந்து ஒரு சொல் உரைக்கமுடியுமா என்று தெரியவில்லை. இயன்றிருந்தால் சகலபுரியின் அவையிலெழுந்து என் உடன்பிறந்தாரிடம் உரைத்திருப்பேன்” என்றாள் விஜயை.

“என் கொழுநரையும் அத்தையை கொண்ட குடியையும் வெறும் அரசியல் சூழ்ச்சியின் பொருட்டு சகலபுரி உதறியபோது சினந்தும் பழித்தும் என் நெஞ்சுக்குள் சொல்பெருக்கினேன். ஆனால் மூத்தவரையோ தந்தையையோ நேரில் பார்த்து ஒரு சொல் உரைக்காமல் அன்னையிடமும் சேடியிடமும் சொல்லிவிட்டு முன்காலையிலேயே அந்நகர்விட்டு நீங்கினேன். சொல்லப்படாத சொற்கள் தொடர்ந்து வந்து வதைத்தன. பின்னர் நான் ஒருபோதும் அவற்றை சொல்லியிருக்க முடியாதென்று உணர்ந்து என்னையே ஆற்றிக்கொண்டேன்.”

“என்னாலும் ஓர் அவையில் எழுந்து உறுதியுடன் சொல்கோக்க முடியுமென்று தோன்றவில்லை” என்றாள் தேவிகை. “இளமையில் அவைகளில் எழுந்து நின்று சீறுவேன். அன்று நான் எனக்கென்று ஒரு நிலத்தையும் வாழ்வையும் என் எண்ணங்களிலிருந்து சமைக்கவிருக்கிறேன் என நம்பினேன்” என்று விஜயை சொன்னாள். “நான் எப்படி இவ்வாறு தணிந்தேன்?” தேவிகை “நாம் மணம்கொள்ளப்பட்டபோது தோற்கடிக்கவும்பட்டோம்” என்றாள். “என்னடி சொல்கிறாய்?” என்றாள் விஜயை. “நாம் எதை அடைந்திருந்தாலும் அது நம்மால் வெல்லப்பட்டதல்ல.” விஜயை “ஆம்” என பெருமூச்சுவிட்டாள்.

“ஆனால் நீ அவரிடம் பேசியிருக்கிறாய். அவரை இப்பணியின் பொருட்டு ஏவியிருக்கிறாய். இவையனைத்தும் உன் சொல்லிலிருந்து தொடங்கியிருக்கின்றன” என்றாள் விஜயை. “அவரிடமா? அவரிடம்கூட என்னால் இயல்பாக பேச முடியவில்லை. நான் அவர் முன் வெறும் பெண்ணென்று, பேதையென்று நின்று அழுதேன். என் விழிநீரிலிருந்துதான் இவையனைத்தும் தொடங்கியிருக்கின்றன” என்றாள். விஜயை “ஒருவேளை வேறெந்த சொல்லைவிடவும் அவருக்கு செய்தி அளிப்பது விழிநீரோ என்னவோ?” என்றாள்.

“அதைத்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்கள் கைக்கொண்டு வருகிறார்கள். அவையில் சொல்லெடுப்பவள் பெண்டிரில் முதன்மையானவள். நாமெல்லாம் அரசியென்று ஆடையும் அணியும் அணிந்து குடிமுத்திரையும் கொடியும் கொண்டு வாழ்ந்தாலும்கூட வெறும் பெண்ணென்றே உள்ளில் அமைந்திருக்கிறோம் போலும்” என்றாள் தேவிகை. “அதைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். தோற்கும் பெண் ஆண்களால் உதவப்படுகிறாள். வெல்லவிழைபவள் ஆண்குலத்தின் முற்றெதிர்ப்பை எதிர்கொள்கிறாள்” என்றாள் விஜயை.

தேவிகை “ஆம், மெய்” என்று நீள்மூச்செறிந்தாள். “அவையில் திரௌபதியைப் பார்க்கையில் உள்ளம் பதைக்கிறதடி. நான் எப்போதும் அவளை வெறுத்து வந்தவள், அதை மறுக்கமாட்டேன். ஆனால் அவள் வெல்லவேண்டுமென்றும் என் ஆழம் விரும்பியிருந்தது. அவையில் அவள் நிமிர்ந்து அமர்ந்திருக்கையில் எங்கோ பெண் என நான் தருக்கியிருந்தேன். மும்முடிசூடி அவள் கனல்வண்ண அரியணை அமர்ந்த அந்நாளில் அதைக் கண்டு நான் விழிநீர் வீழ்த்தினேன். இன்று அவள் அனைத்தையும் துறக்கிறேன் என்றபோது அவளுடன் சேர்ந்து நம் மூதன்னையர் அனைவரும் தோற்றுவிட்டதாகவே உணர்ந்தேன்.”

அவர்கள் மீண்டும் விஜயையின் அறைக்குள் சென்றனர். தேவிகை சிறுபீடத்தில் அமர்ந்தபடி “இந்தச் சிற்றறைகள் இவ்வுளநிலைக்கு உகந்தவை. இவற்றுக்குள் நாம் உலவ முடியாது. அமர்ந்திருக்கவோ படுக்கவோதான் முடியும். வெளியே புயல்காற்று சுழன்றடிக்கையில் தன் வளைக்குள் வந்து பதுங்கியிருக்கும் எலிபோல இவ்வறைக்குள் இருக்கையில் உணர்கிறேன்” என்றாள். விஜயை “ஆம், இவ்வறைக்குள் முதலில் நுழைந்தபோது இது ஒரு பொறி என்று எனக்குத் தோன்றியது. இன்று இவ்வறையின் அரையிருள்போல எனக்குகந்தது பிறிதொன்றில்லை” என்றாள்.

வாயிலில் வந்துநின்று அபயை “வணங்குகிறேன், அரசியரே” என்றாள். “காலையில் வந்தேன், அரசி. துயின்றுகொண்டிருந்தீர்கள்.” விஜயை “நேற்று நான் துயில மிகவும் பிந்திவிட்டது. சற்று துயின்றவுடனே சகலபுரியில் இருப்பதாக ஒரு கனவு வந்து விழித்துக்கொண்டேன். அதன் பின் எண்ணங்கள் கட்டின்றி பெருகிச் சென்றன. நெஞ்சு அடங்கி துயில்வதற்கு நெடுநேரம் ஆயிற்று” என்றாள். மாப்பு கோரும் குரலில் “ஆகவே புலரிக்கடன்கள் எதையும் இன்று ஆற்றவில்லை. பொழுது ஒளிகொள்வது வரை துயின்றுவிட்டேன்” என தொடர்ந்தாள். அபயை “நான்குமுறை வந்து பார்த்தேன், நன்கு துயின்றுகொண்டிருந்தீர்கள். அவ்வாறே ஆகுக என்று திரும்பிச்சென்றேன்” என்றாள்.

தேவிகை அப்பேச்சை மறித்து “இளைய யாதவர் வந்திருக்கிறார்” என்றாள். “ஆம், கீழே இடைநாழியில் நின்று பார்த்தேன்” என்றாள் அபயை. “அரசர் இன்று அவை கூட்டியிருக்கிறார். அதில் இளைய யாதவர் அவர் ஆற்றவேண்டியதென்ன என்பதை முடிவெடுத்து சொல்வார் என்று எதிர்பார்க்கிறார்” என்றாள் விஜயை. அபயை “யார் எம்முடிவை எடுத்தாலும் அது அவருடைய முடிவேதான். யுதிஷ்டிரர் அவரே முடிவெடுக்கிறார் என்னும் தன்னுணர்வை மட்டுமே துறந்திருக்கிறார். அதனூடாக தன் பொறுப்புணர்வையும் குற்றவுணர்வையும் கடக்க முயல்கிறார்” என்றாள். “இளைய யாதவர் என்ன முடிவெடுக்கக்கூடும்?” என்றாள் விஜயை. “அதையறிந்தால் நான் அவருக்கு அணுக்கியாக இருந்திருப்பேன் அல்லவா?” என்று அபயை புன்னகைத்தாள்.

“நான் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டுமடி. அவரிடம் ஒரு தனிமையும் துயரும் உள்ளது அல்லவா? காணும் பெண்டிரெல்லாம் அவரிடம் உளம் கனிவதும் அணுக்கம் கொள்வதும் அதனால்தான் அல்லவா?” என்றாள் தேவிகை. “காலத்திரளில் ஒன்றென அமையாத அத்தனை மானுடரிலும் இருக்கும் தனிமையும் துயரும்தான் அது. அவர்கள் பேருருக் கொள்ளும்தோறும் அவையும் வளர்ந்து பெருகுகின்றன. அவை தெய்வங்களின் தனிமை, தெய்வங்களின் மாற்றிலாப் பெருந்துயர்” என்றாள் அபயை. “அதை ஏன் நாம் விரும்புகிறோம்?” என்றாள் தேவிகை. “ஏனெனில் நாம் அவற்றை புவியில் நிலைநிறுத்த விரும்புகிறோம்” என்றபின் அபயை தலைவணங்கி வெளியே சென்றாள்.

முந்தைய கட்டுரைகி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை
அடுத்த கட்டுரைஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3