புதிய இருள்

download

மக்கள் என்ற சொல்லில் எப்போதுமே நான் புனிதத்தை ஏற்றிக்கொண்டதில்லை. நம் சீரழிவின் ஊற்றுக்கண்ணே இங்குள்ள மக்கள்திரளின் கூட்டான அறவீழ்ச்சியில் உள்ளது என்று அவ்வப்போது தோன்றியிருக்கிறது. ஆனால் அதை ஒத்திவைக்காமல் இங்கே எதையும் செய்யமுடியாது. ஆயினும் இந்த நாள் இருண்டநாள்.

உண்மையில் நான் எந்த அளவுக்கு மூடிய உலகில் இருந்திருக்கிறேன் என்றால் ஆர்.கே.நகரில் திமுகதான் வெல்லும், ஓட்டுச்சிதறல் காரணமாக, என நம்பினேன். ஆகவே எதையுமே தொடர்ந்து கவனிக்கவில்லை. பின்மாலையில் ஒருவர் தினகரனின் வெற்றியைச் சொன்னபோது காறி உமிழப்பட்டவனாக உணர்ந்தேன். இந்த நாளின் இருட்டை வெல்ல எதைச்செய்வதென்றே தெரியவில்லை. வெறிகொண்டு வெண்முரசு எழுதினேன். மொழியை அள்ளி அள்ளி போர்த்திக்கொண்டேன்

சினிமாக்காரர்கள் இருவர் ஆர்.கே நகரின் பணவினியோகம் பற்றிச் சொன்னார்கள். அச்சமாக இருந்தது. உண்மையில்   இந்தியாவில் தேர்தல் தொடங்கியபோதே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடங்கிவிட்டது. 1920 ல் மாகாணசபைகளுக்கு நிகழ்ந்த முதல்தேர்தலிலேயே பெரும்செல்வந்தர்கள் பணத்தை அள்ளிவீசி ஜெயித்திருக்கிறார்கள். பணத்தை அள்ளிவீசி தோற்று ஓட்டாண்டியானவர்களும் உண்டு. அன்றுமுதல் தொடர்ந்து வாக்காளர் லஞ்சம்பெறுவது இருந்தே வருகிறது. 1952 ல் காங்கிரஸ் தேசிய அளவில் பெருவெற்றிபெற்றதுகூட அன்றுவரை பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்த செல்வந்தர்களை ஆதரவாளர்களாக மாற்றி களமிறக்கியபடித்தான். இத்தனைக்கும் அன்று உச்சகட்ட இலட்சியவாதம் இருந்தது.

அன்றுமுதல் தொடங்கிய போக்கு இன்று தேர்தலென்றாலே பணம்தான் என்னுமிடத்திற்கு வந்துசேர்ந்துள்ளது. பல்வேறுவகையில் அதை அறிவுஜீவிகள் நியாயப்படுத்தியதுண்டு. ஆனால் இந்த மனநிலை ஜனநாயகத்தை வேரோடு அழித்துவிடும். அன்றே ராஜாஜி இதைச் சொன்னார். பணம்வாங்கி ஓட்டுபோடும் மக்கள் ஒரு மனநிலையை வளர்க்கிறார்கள், மெல்ல அது மக்களே கஜானாவைச் சூறையாடுவதில் சென்று முடியும் என்று.

வாக்குக்குப் பணம் பெறுவதனால் மெல்ல அரசு ஸ்தம்பிக்கும். கொள்ளையடித்து மக்களுக்கு அளிக்கும் கூட்டத்தினர் ஆட்சி செய்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மெல்லமெல்ல ஆட்சிமாற்றம் என்பதே சாத்தியமில்லாமல் போகும், ஏனென்றால் ஆட்சியிலிருப்பவர்களிடம் கஜானாவின் பணம் இருக்கும். எதிர்க்கட்சியினரிடம் இருக்கும் பணம் குறைவானதாகவே இருக்கும்.

ஐரோப்பாவிற்கு வெளியே ஜனநாயகம் திகழ முடியாது என்று வாதிடும் வெள்ளையர் உண்டு. ஜனநாயகம் ஐரோப்பா இருநூறாண்டுகளாக படிப்படியாக அடைந்த ஒரு ஞானம். சர்வாதிகாரம் வழியாக , உலகப்போர்கள் வழியாக பெரிய விலைகொடுத்துக் கற்றுக்கொண்ட பாடம். நமக்கு அது புரியவேயில்லையோ?

இந்த இருண்டநாளில் அமர்ந்துகொண்டு ‘இல்லை ஏதேனும் நிகழும். எங்கோ ஒரு துளி அனல் எஞ்சியிருக்கும்’ என எண்ணி என்னை மீட்டுக்கொள்ள முயல்கிறேன்.

முந்தைய கட்டுரைசாகித்ய அகாடமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–10