ஈழ இலக்கியச் சூழலில் இருந்து ஒரு கேள்வி

ela

அன்புள்ள ஜெயமோகன்

இது முகநூலில் டி.செ.தமிழன் என்னும் இலங்கை எழுத்தாளர் எழுதியது.

——–

மதிப்பீடுகளின் வீழ்ச்சி
——————————————

மீண்டு/ம் வந்திருக்கும் அனோஜனால் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது உரையைக் கேட்டேன். ஜெயமோகன் இயல்பாய் இல்லாததுபோல அவரது உடல்மொழி பேச்சில் இருந்தது. எனக்குத் தெரிந்த ஜெமோ வழமையாக இப்படி அவ்வளவு நாடகீயத்தனத்தோடு உரையாற்றுபவரில்லை. சிலவேளை சினிமாப் பிசாசு அவரை இன்றைய காலங்களில் விழுங்கிக்கொண்டு இருக்கின்றதோ தெரியாது. இலங்கைப் பாஷை பேசுகின்றேன் என்று எங்கள் தமிழை இப்படிக் கொன்றிருக்கவும் தேவையில்லை. விருது விழாவிற்கு வந்தவர்கள் ஜெயமோகனின் நடிப்பைப் பார்க்கவா வந்தார்கள்? பேச்சைத்தானே கேட்க வந்திருப்பார்கள். ஒழுங்காய் இயல்பாய் பேசியிருக்கலாம். 

சரி, நான் சொல்ல வந்த விடயம் வேறு. ஜெயமோகன், ‘காலம்’ செல்வத்தின் ‘எழுதித்தீராப் பக்கங்களில்’ இருந்து சில பகுதிகளை அங்கே பகிர்ந்திருக்கின்றார். அந்த மகிழ்ச்சியைப் பகிரத்தான் இது. நிறைய எழுதவேண்டும், எப்போதும் எழுதிக்கொண்டிருக்க வேண்டும் வகையைச் சேர்ந்தவர் ஜெமோ. அதற்கு மாறான ஒரு எழுத்து முறையைத்தான் நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றவன். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதினால் போதும். அதுதான் எங்கள் ஈழ எழுத்து எங்களுக்கு கற்றுத்தந்திருக்கின்றது என பல இடங்களில் எழுதியிருக்கின்றேன். செல்வமும் குறைவாகவே எழுதுகின்றவர். ஆனால் அதை நேர்த்தியாக எழுதி இருப்பதால்தான் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ முக்கியமான ஒரு படைப்பாக நம்மிடையே இருக்கின்றது. ஜெமோ அவர் விரும்பியோ அல்லது விரும்பாமலோ செல்வத்தை நினைவுபடுத்தியதற்கு -அவருக்கு மலேசியாவில் 2006ல் அடிவிழாததற்கு ஏதோ நல்லூழ் என்றமாதிரி- இது எங்களின் நல்லூழ் என நினைக்கின்றேன். 

இல்லாவிட்டால் கனடா என்றவுடன் நிறைய எழுதிய/எப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம் அல்லவா ஜெமோவிற்கு நினைவிற்கு வந்திருக்கவேண்டும். ஆனால் செல்வம் ஜெமோவிற்கு நினைவிற்கு வருவதற்கு எது காரணம் என்றால் குறைவாக எழுதினாலும் எவரும் அசட்டை செய்து கடக்கமுடியாது செல்வமும், அவரின் ‘எழுதித் தீராப் பக்கங்களும்’ இருக்கின்றது என்பதால்தான். 

மற்றது ஜெமோ, சுந்தர ராமசாமி 2000களின் தொடக்கத்தில் ரொறொண்டோ வந்து இனித் தமிழ் கனடாவில் இருக்காது என்பதை ‘கலைஞனின் தூர நோக்காய்’ கண்டடைந்ததைச் சொல்லி வியப்படைகின்றார். தமிழ் அடுத்த தலைமுறைக்குச் செல்லாது என்பதற்கு கலைஞனாக இருக்கவே தேவையில்லை. ஒரு சாதாரண மனிதராகவே எவராலும் புறச்சுழலை வைத்து எளிதாக எதிர்வுகூறமுடியும். ஆனால் இன்றும் தமிழ் ஏதோ ஒருவகையில் எங்களில் ஊடாடிக்கொண்டு தானிருக்கின்றது. அன்று புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து பலநூற்றுக்கணக்கான பத்திரிகைகள்/சஞ்சிகைகள் வந்தது என்பது உண்மை. ஆனால் எத்தனை பத்திரிகைகள் இலக்கியம் பேசியது என்பதும் முக்கியமான கேள்வி. இன்றும் கனடாவில் ஏறக்குறைய 10 தமிழ்ப் பத்திரிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. எதிலுமே இலக்கியம் இல்லை. உரையாடுவதற்கான வெளிகள் இல்லை. மற்றும்படி வெளிவரும் சிறுபத்திரிகைகளின் அளவு குறைந்திருக்கின்றன என்பதென்னவோ உண்மைதான். அன்றைக்கு அரசியலிலும், இலக்கியத்திலும் துடிப்பாய் இருந்த ஒரு பரம்பரை இன்று ஒதுங்கிவிட்டது. 

அதுசரி தமிழகத்தில் கூட எத்தனை சஞ்சிகைகள் தீவிர இலக்கியம் பேசிக்கொண்டு இப்போது வெளிவருகின்றன. சிறுபத்திரிகை என்பதே ஏதோ ஒருகட்டத்தில் அதன் ஆயுளை முடித்துக்கொண்டு உறங்குநிலைக்குப் போவதுதானே. ஆனால் இலக்கியம் என்பது அன்று சிறுகுழுவாலே பேசப்பட்டதுபோல இன்றும் ஏதோ ஒருவகையில் – இணையத்தில்- என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பேசப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றது. 

ஏற்கனவே கூறியதுபோல, நாங்கள் குறைய எழுதிக்கொண்டிருப்பவர்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் நமது சுவடுகளையும் இங்கே பதித்துக்கொண்டுதானிருக்கின்றோம். அது தமிழில் மட்டுமில்லாது அந்தந்த நாடுகளில் பேசும் மொழியில் கூட நமது ‘தமிழ்க்கதை’களைப் பலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு மான் ‘புக்கர் பரிசு’ வென்ற அரவிந்த் அடிகாவின் புதிய நாவலோடு போட்டியிட்டு, தனது முதல் நாவலாயினும் அதை நேர்த்தியாக எழுதி அனுக் அருட்பிரகாசம் தென்னாசியா நாவல் வகையில் பரிசு வென்றிருக்கின்றார். அதை நாம் கொண்டாட அல்லவா வேண்டும்? 

2015 ஆவணி கோடைகாலத்தில் நள்ளிரவு தாண்டினாலும் அதன் அருமையான கதைசொல்லலில் கிறங்கி ஒரே அமர்வில் வாசித்து முடித்த ஷோபாசக்தியின் ‘Box கதைப் புத்தகம்’ நாவலைத் தாண்டி, (ஏறக்குறைய இரண்டரை வருடங்களான பின்னும்) தமிழகத்தில் இருந்து எந்த ஒரு நாவலும் வரவில்லை என்பதை என் வாசிப்பின் மீதிருக்கும் நம்பிக்கையில் வைத்துச் சொல்வேன். அதைத்தாண்டியே இன்னும் போகமுடியாது, பேசுவது என்னவோ தாங்கள் மட்டுமே இலக்கியம் வளர்க்கின்றோம் என்றால் என்னைப் போன்றவர்களுக்கு விசர் வராதா என்ன? 

‘Box கதைப் புத்தகத்திற்கு அடுத்த நிலையில் என் வாசிப்பில் வைத்திருக்கும் குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலத்திற்கோ’ அல்லது ஜெமோவும் ஒரு முக்கிய நாவலாகச் சொன்ன சயந்தனின் ‘ஆதிரை’க்குக் கூட நிகராக, தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் எந்த நாவல் வந்திருக்கின்றது எனச் சொன்னால் நானும் மகிழ்ச்சியடைவேன். இன்றைக்கும் ஜெமோ தனது தளத்தினூடாகவும், தன் விஷ்ணுபுர வாசகர் வட்டத்தினாலும் எவ்வளவு கஷ்டப்பட்டு முயன்றுகொண்டிருந்தாலும் அவரின் வளையத்திற்குள் இருந்து வந்த எந்தப் படைப்பாளி இதுவரை சாதித்திருக்கின்றார்?இலக்கியம் என்பது அடித்து கனியவைப்பதல்ல, அது தானாய் அவரவர்களிடத்தே கனிவதுதான் என்று ஜெமோவிற்குத் தெரியாது இருக்குமா என்ன?

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

அவருடைய தனிப்பட்டக் காழ்ப்புகளை விடுங்கள். நான் வாசித்தவரை அவர் சொல்வதுபோல அவர் ஒன்றும் நல்ல கதைகள் எழுதியவருமல்ல- நீங்களே சிபாரிசு செய்திருந்தாலும்கூட. இலங்கை எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு இன்னமும் இலக்கியம் என்றால் அரசியல் மட்டும்தான். இவருக்கும் அதேதான். ஆனால் அவர் ஒரு கேள்விகேட்கிறார்.  அது மிகமுக்கியமான கேள்வி. நீங்கள் இவ்வளவு பெரிய மேடை அமைத்து இத்தனை அடுத்த தலைமுறையினரை அமரச்செய்திருக்கிறீர்கள். அவர்கள் பொருட்படுத்தும்படியாக ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்கிறார்.

மன்னிக்கவும், நானும் அதையே கேட்பேன். நீங்கள் முன்வைத்த  இந்த அத்தனைபேரையும் நானும் படித்திருக்கிறேன். இவர்களில் உருப்படியான ஒரு படைப்பை எழுதியவர் யார்? நானே முன்ஜாமீன்களை வாங்கிவிடுகிறேன். BOX –கதைப்புத்தகம் ஒரு சாதாரணமான நாவல். Saw வரிசை சினிமாக்களிலிருந்து எழுதப்பட்டது. மிகையானது. குணா கவியழகனின் நாவலும் நம்மூர் முற்போக்கு எழுத்துபோல டெம்ப்ளேட் அரசியலைச்சொல்லும், டப்பாச்சத்தம்போடும் படைப்பு . அது நாவல் என்றால் இங்கே அத்தனை முற்போக்கு நாவலாசிரியர்களும் படைப்பாளிகள்தான். ஆனால் சயந்தனின் ஆதிரை ஒரு கிளாஸிக்.அதை நம்மூர் இளம்படைப்பாளிகள் வாசித்தாவது பார்த்திருக்கிறார்களா?

இங்கே அடுத்த தலைமுறையில் அப்படி ஒரு நாவலை எழுதியவர் யார்? சரி போகட்டும், எழுதக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் யார்? அப்படி ஒரு ஐடியாவே தங்களுக்கு இல்லை என்றுதானே உங்கள் மேடையிலே இளம் படைப்பாளிகள் சொன்னார்கள். அதிலும் ஒருவர் எதிர்காலத்தில்கூட ஒரு நல்ல இலக்கியம் எழுதும் எண்ணமே தனக்கு இல்லை என்றும் எழுதவேண்டிய அவசியமே இல்லை என்றும் சொன்னார். மன்னித்துக்கொள்ளுங்கள், நானே வந்து கேட்டதன் அடிப்படையில் எழுதுகிறேன். சாதாரண ஃபேஸ்புக் பெர்சனாலிட்டிகளை எழுத்தாளர்களாக முன்னிறுத்துகிறீர்கள் என்று இலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள் சொன்னால் உங்களால் மறுக்கமுடியுமா என்ன?

ஆர்.கார்த்திக்ராஜ்

***

அன்புள்ள கார்த்திக்,

இப்போதைக்கு இந்த விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. இது தொடர்ந்துசென்று நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்கள் மீதான கவனத்தைக் கலைத்துவிடுமென நினைக்கிறேன். விமர்சனங்களுடன்தான் நான் ஒவ்வொருவரையும் அணுகுகிறேன். இளங்கோ [டி செ தமிழன்] உட்பட இலங்கையில் எந்தப்படைப்பாளி முக்கியமான கதைகளை எழுதினாலும் உடனடியாக அடையாளப்படுத்துகிறேன். இன்றைய சூழலில் சயந்தன், அகிலன், அனோஜன் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அளவுக்குத் தீவிரமாக தமிழகத்தில்இளையோர் எழுதவேண்டிய அவசியம் உள்ளது   என சொல்லமுடியும்தான்  . என்னைப்பொறுத்தவரை நான் சாத்தியக்கூறுகளையே சுட்டிக்காட்டுகிறேன்.என்னால் இப்போதைக்கு எதிர்பார்ப்புகளை மட்டுமே முன்வைக்க முடியும்.

விஷ்ணுபுரம் இலக்கிய்வட்டம்  இலக்கியத்தை உருவாக்குவதற்கான அமைப்பு அல்ல. நாங்கள் நடத்துவது பயிலரங்கும் அல்ல. இது வாசகர்களின் கூட்டம் மட்டுமே. எழுதுபவர்களுக்கு வாசகர்களின் தரப்பிலிருந்து ஒரு கைகுலுக்கல். என் வாசகர்களை இலக்கியத்திற்கான பொதுவாசகர்களாக ஒருங்கிணைப்பதே என் நோக்கம். இலக்கியம் அனைத்து தரப்பிலிருந்தும் கைவிடப்பட்டிருக்கும் தமிழ்ச்சூழலில் இத்தகைய ஒரு வாசகர்விழா நம் ஊக்கத்தைத் திரட்டிக்கொள்ள தேவையானதாக உள்ளது.

மற்றபடி, அவருடைய வரிகளில் உள்ள கேள்வி ஒரு கறாரான விமர்சனம் , ஒர் அறைகூவலும்கூட. அதை நான் வரவேற்கிறேன். அதற்கு எதிர்வினையாற்றவேண்டியவர்கள் இங்கே அடுத்த தலைமுறையில் எழுதிக்கொண்டிருப்பவர்களே. அவர்கள் விமர்சனங்களற்ற சூழலில், சிறிய விமர்சனங்களைக்கூட நக்கலும் வசையுமாக எதிர்கொள்ளும் ஃபேஸ்புக் மனநிலையில், வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்த குரல் கேட்கவேண்டும். .இந்த அறைகூவலை அவர்கள் சாதனை மூலம் எதிர்கொள்ளவேண்டும் என விழைவதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

 box கதைப்புத்தகம் ஷோபா சக்தியின் வீழ்ச்சியைச் சொல்லும் நாவல். அவர் இன்று மாட்டியிருக்கும் அனைத்து தேய்வழக்குகளும் அதில் தொகுக்கப்பட்டுள்ளன – ஈழம் கண்ட இரு மாபெரும் கலைஞர்கள்  அ.முத்துலிங்கமும் ஷோபா சக்தியும்தான்  என்பதை சொல்லியபடியே இதையும் கூறுகிறேன். டி.செ.தமிழன் இதை நல்ல நாவல் என்பதனால் தமிழிலக்கியச் சாதனைகளின் ஒன்றான கொரில்லாவை நன்றாக இல்லை என்று சொல்லியிருப்பார் என ஊகிக்கிறேன். வேறுநாவல் கோரும் டி செ தமிழன் ஒரு மாறுதலுக்காக தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவலை வாசித்துப்பார்க்கலாம்.மிகை மூலம் உலுக்காமல் எப்படி இலக்கியம் உள்ளத்தின் மொழிவடிவமாகச் செயல்படும் என்பதை காட்டும் படைப்பு அது. அவருக்கு ஒருவேளை கலை என்றால் என்ன என்று புரியவைக்கும்.

டி.செ.தமிழனிடம் நான் எப்போதுமே சொல்லிவரும் ஒன்றுண்டு. அவர் அடிப்படையில் புனைகதையாளர். ஈழ அரசியலின் ஒற்றைப்படையான மூர்க்கமும் கசப்புகளும் அவரை  அலைகழியச்செய்கின்றன. எழுத்தாளனிடம் அரசியல்காழ்ப்புகளை மட்டுமே எதிர்பார்க்கும் கூட்டம் அங்கே அதிகம். அதற்கு ‘சப்ளை’ செய்ய ஆரம்பித்தால் அதுவாகவே முடியவேண்டியிருக்கும். கூடவே மொழிவழி அறிதலைவிட காட்சியூடகத்திற்கு அவர் அளிக்கும் மிகையான இடம் அவருடைய சிக்கல். காட்சியூடகம் இலக்கியவாதிக்கு பெரிதாக எதையும் அளிக்காதென்பது என் எண்ணம் – சம்பிரதாயமான கருத்தாகவும் இருக்கலாம்.  இலக்கியத்தை தீவிரமாக அணுகினால் அவரும்  சயந்தனைப்போல முக்கியமான புனைவுகளை உருவாக்கமுடியும். வருக.

ஜெ

கோபிகா செய்தது என்ன?

முந்தைய கட்டுரைபிறிதொரு வாழ்த்து
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18