விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 7

IMG_0069
நவீன், அருகே மயிலாடுதுறை பிரபு

விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த வருடம் விஷ்ணுபுரம் விருது விழாவில் முதன்முறையாக‌ கலந்து கொண்டபின் என் எண்ணங்களை மின்னஞ்சலாக அனுப்ப முயன்றேன். ஆனால் விழாவைத் தொடர்ந்து தளத்தில் வெளியான கடிதங்களை பார்த்தபின் அந்த ஆவலை அடக்கிக்கொண்டுவிட்டேன். இம்முறையும் அதேபோல் ஆகிவிடக்கூடாது என்று எண்ணியிருந்தும் சற்று பிந்திவிட்டேன் என்பதை இன்று வெளியான விழா கடிதங்களை பார்த்து உணர்ந்து கொண்டேன்.

.வினாடிவினா நிகழ்ச்சி, நான் நாஞ்சில்நாடன், பி.ஏ.கிருஷ்ணன் கையெழுத்திட்டு அளிக்கிறோம்

வினாடிவினா நிகழ்ச்சி, நான் நாஞ்சில்நாடன், பி.ஏ.கிருஷ்ணன் கையெழுத்திட்டு அளிக்கிறோம்

அலுவலக நெருக்கடி காரணமாக சனிக்கிழமை காலைதான் கோவைக்கு வரமுடிந்தது. ஆனால் விழா மனநிலை முதல் நாள் மணவாளனிடம் தொலைபேசியில் பேசியபோதே ஆரம்பித்துவிட்டது. படித்ததைப் பகிர்ந்து கொண்டபோது “முன்னரே இதைச் செய்திருந்தால் இன்னமும் கூட படித்திருக்கலாம்” என்று இருவருமே நொந்துகொண்டோம். வெள்ளி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தே தெரிந்தவர்கள் யாரேனும் கண்ணுக்கு தென்படுகின்றனரா என்று பார்த்துக் கொண்டு வந்தேன். கோவையிலும் அவ்வாறே. ஆனால் இலக்கியவாதி மட்டுமல்ல, வாசகனும் தலைமறைவாகவே வந்துவிடமுடியும் என்று தெரிந்தது. ரயில் நிலையத்திலிருந்து கூட்டிச் செல்ல என் மாமனார் வந்திருந்தார். சென்ற முறை அமர்வுகளுக்காக ஏற்பாடு செய்திருந்த குஜராத்தி மண்டபத்தை ராஜஸ்தானி சங் மண்டபத்துடன் குழப்பிக் கொண்டிருந்த என்னை நல்லவேளையாக  அவர்தான் தெளியவைத்தார். சரி குஜராத்திற்கு பக்கத்தில்தானே ராஜஸ்தானும் இருக்கிறது ஒன்றும் பிழையில்லை என்று நினைத்துக் கொண்டேன். என்ன நினைத்தாரோ “வாங்க! மண்டபத்தை காட்டிட்டே போறேன்” என்று ராஜஸ்தானி சங் ஹாலின் வாசல் வரை வந்து காட்டிவிட்டு அரைவட்டமடித்து திரும்பினார். எதிரே கடலூர் சீனுவும் மற்றவர்களும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு தலைமையேற்று மீனாம்பிகை சற்று முன்னர் ஆவேச நடையில் வந்து கொண்டிருந்தார். சரிதான் விழா துவங்கிவிட்டது என்று எண்ணி வீட்டிற்கு விரைந்தோம். துரிதமாக தயாராகி புகுந்த வீட்டினரின் ஆச்சரியப்பார்வைகளைப் பெற்று, அதற்குள் எழுந்து சிரித்த இளைய மகளை சிறிது நேரம் கொஞ்சிவிட்டு ‘பள்ளிக்கு அனுப்பிவிட்டு’ விரைவாக‌ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தேன்.

வினாடிவினா நிகழ்ச்சி, செந்தில் நடத்துகிறார்
வினாடிவினா நிகழ்ச்சி, செந்தில் நடத்துகிறார்

குவிஸ் செந்தில், விஜய சூரியன், மீனாம்பிகை, யோகேஸ்வரன், சுரேஷ் பிரதீப் என்று ஒவ்வொருவராக காட்சி தர புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் அவர்களுடன் பேசிக்கொண்டும் இருந்தேன். மலேசிய எழுத்தாளர் நவீனும் அவர் நண்பர்களும் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். புகைப்படத்தில் கண்ட நவீனை நேரில் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் யாரோ என்று நினைத்திருந்தேன். பின்னர்தான் தெரிந்தது. ஆனால் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அங்கு நடந்த உரையாடல்களிலும் பின்னர் அமர்வுகளிலும் இறுதியாக விழாவிலும் அவர் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே போனார். நானெல்லாம் ஏன் வாழ்கிறேன் என்ற சலிப்புதான் தோன்றியது. அவரது தோற்றமும், சிரிப்பும், நிமிர்வும், அறிவும் மிகவும் வசீகரித்தன. மலேசிய இலக்கிய உலகத்தைப் பற்றி அவர் தொகுத்து சொன்னவிதம் மிக நன்றாக இருந்தது. அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணி தள்ளிப்போட்டு கடைசிவரை நடக்கவில்லை. விழா இறுதியில் அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தார். அதனால் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு வந்தேன். ஃபேஸ்புக்கில் தொடர்பு கொள்வதாக உள்ளேன்.

லோகமாதேவி
லோகமாதேவி

அடுத்து நீங்கள் வந்ததும் அந்த இடமே களை கட்டத் தொடங்கிவிட்டது. வந்தவுடன் நீங்கள் சுரேஷ் பிரதீப்பை அணைத்துக் கொண்டதை சற்று பிந்தி ஊகித்ததால் அக்கணத்தை படம்பிடிக்க தவறிவிட்டேன். இருந்தாலும் எடுத்தவரைக்கும் நன்றாக இருந்தது என்று சுரேஷ் சொன்னார். நல்ல தூங்குமூஞ்சியா வந்து வாய்ச்சிருக்கான் என்று நினைத்துக் கொண்டிருக்கக்கூடும் :) மீண்டும் தீவிரமாக அனைவரும் உரையாடிக்கொண்டிருக்க மீனாம்பிகை அவருக்கே உரிய கண்டிப்புடன் அனைவரையும் உணவுண்ண அழைத்தார். “அன்னலட்சுமி” என்று சுநீல் சொன்னதை ரசித்தேன். பேரன்னை என்று நான் சொல்ல முற்பட்டிருந்தேன்!

 

மீனாம்பிகை  ஜெனிஸ்
மீனாம்பிகை ஜெனிஸ்

கடந்த முறை போலல்லாது இம்முறை அமர்வுகளில் பங்கேற்கவேண்டும் என்றெண்ணி சுரேஷின் ஒளிர்நிழலையும், தூயனின் இருமுனை நூலில் இரு சிறுகதைகளையும், சீ. முத்துசாமி அவர்களின் இருளுள் அலையும் குரல்கள் நூலின் இரு நாவல்களையும், ஜெனிஸின்  நிலம்மீது படகுகள் சிறுகதையையும் வாசித்திருந்தேன். சில கேள்விகளையும் தயாரித்து வைத்திருந்தேன். ஆனால் வழக்கம்போல் தயங்கி எதையுமே கேட்கவில்லை. மன்னிக்கவும். ஆனால் சீ. முத்துசாமி அவர்களிடம் தனிமையில் சில நிமிடங்கள் முதல் நாளன்றே பேச வாய்ப்பு கிடைத்தது. நான் வாசித்ததை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். மிகவும் அன்போடும் கவனத்துடனும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு தன் கருத்துக்களை சொன்னார். அந்நாவல்களிலிருந்த வட்டாரச் சொற்களுக்கான அர்த்தங்களை நூலின் இறுதியில் கொடுத்திருக்க வேண்டும் என்று குறைபட்டுக் கொண்டார். ஆனால் அவ்வார்த்தைகளை ஊகிப்பது சுவாரஸ்யமாக இருந்தது என்றேன். அவரது இந்த இரு நாவல்களை படிக்கும்போது எனக்கு பூமணி அவர்களின் அஞ்ஞாடி நாவல் நினைவுக்கு வந்து கொண்டேயிருந்தது. கூடவே நீங்கள் சொன்ன “அன்பின் பிரசாரகர்” என்ற பதமும். அதை அவரிடம் சொன்னேன். சிரித்துக் கொண்டார்

.

 

தேவதேவனுடன் நரேன்
தேவதேவனுடன் நரேன்

மிக இனிய மனிதராக இருந்தார். இவ்வாறு ஒரு எழுத்தாளரை இன்னொருவருடன் ஒப்பிட்டு அவரிடமே சொல்லலாமா என்று தெரியவில்லை. ஆனால் அவரிடம் சொல்லலாம் என்று தோன்றியது. தனது மண்புழுக்கள் நாவலை வாசிக்கச் சொன்னார். மலேசியாவில் தற்போதைய தலைமுறை இங்குள்ள அளவிற்கு வாசிப்பதில்லை என்று வருத்தப்பட்டார். அதிர்ச்சியாகவே இருந்தது. அங்கு நிலைமை இதைவிட மேம்பட்டதாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். அதன்பின்னர் நவீன் முதலானோர் அங்குள்ள நிலைமையை அமர்வில் பகிர்ந்து கொண்டபோதுதான் விரிவாக தெரிந்துகொண்டேன். அதிலும் அந்த அமர்வின் இறுதியில் கூட்டத்திலிருந்த மலேசியத் தமிழர், வெறும் நாற்பது சதவிகிதத்தினர்தான் தம் பிள்ளைகளை அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் படிக்க பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் என்று கூறியபோது மிகுந்த உளைச்சலை அடைந்தேன்

.

கணேஷ் பெரியசாமியுடன்
கணேஷ் பெரியசாமியுடன்

அமர்விலும் விழாவிலும் முத்துசாமி அவர்கள் பேசியதைக் கேட்டபோது கலவையான எண்ணங்களுடன் இருந்தேன். அவரைப் பற்றிய ஆவணப்படத்தில் அவர் குடும்பத்தைப் பற்றி சொல்லும் இடத்தில் தழுதழுத்து மடியிலிருந்த தலையணையை வருடும்போது காலம் நீண்டு உறைந்துவிட்டதைப் போல தோன்றியது. அக்கணம் விரைவாக முடிந்து அவர் அடுத்த வார்த்தையை பேசிச் செல்லமாட்டாரா என்ற தவிப்பு எழுந்தது. விழாவில் அவர் பேசும்போதும் மலேசியாவில் வாசிப்பின் நிலையைப் பற்றி சொல்லும்போது “ஐயோ இதை இந்த வீணர்களிடம் வந்து சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! இங்கு நாங்களே பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறோம்” என்று உள்ளூர அரற்றிக்கொண்டிருந்தேன்

.

பின்னணியில் முரளி
பின்னணியில் முரளி

முதல் நாள் மதிய உணவு வேளையின் போது மேரி கிறிஸ்டி அவரே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். சுரேஷின் மூலம் ஃபேஸ்புக் வழியாக நட்புகொண்டு மின்னஞ்சல்கள் வழியே பேசிக்கொண்டிருந்தோம். அவர்தான் புத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண் என்பது தெரியமலேயே இவ்வளவும்! மணவாளன் சொல்லித்தான் தெரியவந்தது. அந்தப் பதிவை என் அக்காவிடம் காட்டி “நீ புத்தகக் கண்காட்சிக்கு போனத எழுதச் சொன்னா எப்படி எழுதுவியோ அதே மாதிரி இவங்க எழுதியிருக்காங்க பாரு” என்று அந்த நேரத்தில் சொன்னதை கிறிஸ்டியிடம் சொன்னேன். இரு நாட்களும் கிறிஸ்டி மனதளவில் துள்ளிக் கொண்டேயிருந்தார் என்று தோன்றியது. கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பேசிக்கொண்டே இருந்தோம். இவர் யார் அவர் யார் என்று அவர் என்னிடம் கேட்டது பெருமையாக இருந்தது. கடந்த வருடம் மணவாளனுடனேயே எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொண்டு இதே மாதிரி நான் அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. சுரேஷின் அமர்வில் கிறிஸ்டி இந்த அளவு கொந்தளிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. “நான் பார்த்து பயப்படுற வாசகி அவங்க” என்று பின்னர் சுரேஷ் சிரித்துக் கொண்டே சொன்னார். அவர் கொந்தளித்த நேரத்து புகைப்படங்கள் சரியாக வரவில்லை என்றாலும் அவரது வேறு சில நல்ல படங்களை எடுக்க முடிந்தது. அடுத்த நாள் இரவுணவின் போதும் சேர்ந்து உண்டுவிட்டு கிளம்பிச் சென்றார். “இந்த ரெண்டு நாளும் உங்களுக்கு திருவிழா தான் இல்ல?” என்று கேட்டபோது வெறுமனே சிரித்துவிட்டு சென்றார். இன்று வெளியாகியிருக்கும் அவரது கடிதம் அயரச் செய்தது. அவரது தீவிர மனநிலையை கலைக்கும்படி எதுவும் செய்திருப்பேனோ என்று இப்போது சிறு அச்சம் கொள்கிறேன். அவரவர் உடைமைகளை பரஸ்பரம் உரிமையாகக் கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொல்வது கிண்டலடிப்பது என்று எங்கள் நட்பை வலுவாக்கிக் கொண்டோம்

.

அந்தியூர் மணி
அந்தியூர் மணி

தாமரைக்கண்ணன், பிரபு சாய் பிரசாந்த், திருமாவளவன் என்று போனமுறை அறிமுகமாகியிருந்தவர்களுடன் மேலும் நட்பு வலுப்பெற்றது. நீங்கள் சொன்னது போல் எங்களுக்குள்ளேயே சிறு சிறு நட்பு வட்டங்கள் வலுவாக எழுந்து வந்திருக்கின்றன. மாலை நேர விநாடிவினா நிகழ்ச்சியும் சென்ற ஆண்டு போலவே சிறப்பாக சென்றது. உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பவன் என்பதால் அவை குறித்த கேள்விகளுக்கு ஐந்து அணிகளையும் தாண்டி பார்வையாளர்களையும் தாண்டி பதில் வராமல் சபையே திகைத்து நிற்கும் நிலையில் நான் பதில் சொல்லி அசத்துவது போன்ற பகற்கனவுகளைக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட எதற்குமே எனக்கு விடை தெரியவில்லை. சிசுபாலன் கிருஷ்ணன் தொடர்பான கேள்விக்கு சுத்தமாக யூகிக்க முடியவில்லை. செந்தில் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினார். இரவு உறங்க கண்ணை மூடியபோது அலையலையாக முகங்கள் தோன்றிக்கொண்டேயிருந்தன. வந்திருந்தவர்களில் எத்தனை பேரை அறிந்திருக்கிறோம் என்பதே பெருமையாகவும் நிறைவாகவும் இருந்தது. எனக்கே இப்படியென்றால் உங்களுக்கு அவ்வாறு எத்தனை முகங்கள் தோன்றியிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

எழுத்தாளர் வசந்தகுமார்
எழுத்தாளர் வசந்தகுமார்

மறுநாள் அமர்வுகளும் மிகக் கச்சிதமாக நடைபெற்றன. மறுநாள் மாலையில் தேநீர் கடையைத் தேடி சுரேஷுடனும் மற்ற நண்பர்களுடனும் சேர்ந்து ஒரு நீண்ட நடை சென்றேன். இரண்டாவது கிலோமீட்டரை நெருங்கும்போதுதான் ஏதோ தவறு நடக்கிறது என்று தோன்ற ஆரம்பித்தது. இதில் பாவண்ணன் சாரையும் வேறு அழைத்து வந்திருந்தோம். நல்லவேளையாக ஒரு இளநீர் கடைக்காரர் எங்களுக்கு ஆறுதலளித்தார். இந்த இடைவெளியில் சுரேஷுடனும், பிரபு சாய் பிரசாந்த்திடம் நன்கு பேச முடிந்தது. சுரேஷிடம் ஒளிர்நிழல் குறித்த என் பார்வையையும் கேள்விகளையும் முன்வைத்தேன். விரிவாக பதிலளித்துக் கொண்டு வந்தார். தொடர்ந்து சங்ககாலப் பாடல்களை ரசிப்பது கவிதைகளை ரசிப்பது என்று பேச்சு தொடர்ந்து கொண்டே சென்றது. மிகவும் இனிமையாக இருந்தது. அவருக்கு ஒளிர்நிழல் குறித்து விரிவான கடிதம் ஒன்றை இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

 

நாமக்கல் வாசு
நாமக்கல் வாசு

மாலை விழா நேரத்தில் சற்றே சோர்ந்திருந்ததால் ரகுராமனின் அருகில் அமர்ந்துகொண்டு விழா நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் சொல்லப்போனால் இறுதிப் பகுதிகளில் ஒருவித எதிர் மனநிலைக்கு சென்று சேர்ந்தேன். அனைவரும் மிக நன்றாக பேசினீர்கள். பி ஏ கிருஷ்ணன் அவர்களின் பேச்சு மிக நன்றாக இருந்தது. நீங்கள் பேசும்போது நிறைய உணர்ச்சிவசப்பட்டு பேசினீர்கள் என்று தோன்றியது. எந்த விநாடியிலும் “போங்கடா! உங்ககிட்ட எல்லாம் பேசிக்கிட்டு! என்னவோ பண்ணிக்குங்க!” என்று கிளம்பிவிடுவீர்களோ என்ற அச்சம் தோன்றியது. புதுமைப்பித்தன் குறித்த பகுதிகளில் கண்ணீர் வழிவதைத் தடுக்க முடியவில்லை. உங்கள் உரையின்போதும் முத்துசாமி பேசியபோதும் முழுக்கவே மனம் கனத்திருந்தேன். அவர் “இதோ முடித்துவிடுகிறேன்.. இதுதான் கடைசி” என்றெல்லாம் சொன்னபோது மனம் உடைந்தது. ஒரு எழுத்தாளன் தன் படைப்பைப் பற்றியும் அனுபவங்களைப் பற்றியும் சிறிது நேரம் சேர்த்து பேசுவதற்கும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக் கேட்டுதான் பேசவேண்டும் இல்லையா? அந்த அளவுக்குத்தான் சமூகம் எழுத்தாளனை மதிக்கிறது என்றால் அந்த எழவு சமூகம் வாழ்ந்துதான் என்ன ஆகப்போகுது என்றெல்லாம் தோன்றியது. உலகெங்கும் தமிழ்ச் சமுதாயம் தனது அடுத்த தலைமுறையை தமிழ் படிக்க வைப்பதில்லை என்பதையும் தமிழில் பேசக்கூட செய்வதில்லை என்பதையும் நீங்கள் சொன்னபோது இயலாமைதான் மனம் முழுக்க இருந்தது.

தமிழ்மாறன் மலேசியா பேசுகிறார்
தமிழ்மாறன் மலேசியா பேசுகிறார்

 

சமீபத்தில் எனக்குத் தெரிந்த இரு மாணவர்கள் பள்ளியில் ஃப்ரெஞ்ச்சையும், ஆங்கிலத்தையும் மொழிப்பாடங்களாக எடுத்திருந்தனர். அவற்றின் மதிப்பெண்களைத்தான் யாரும் கண்டுகொள்வதில்லையே என்று கேட்டதற்கு “சரிதான்… ஆனால் தமிழைப் படித்து தேர்வுக்கு தயாராக நிறைய நேரம் வீணாகிறதே” என்றனர். அப்போது அதை எளிதாகக் கடந்துவிட்டேன். ஆனால் உங்கள் உரை கேட்டபோதுதான் அந்த அழிவின் தீவிரம் புரிந்தது. எனது மகள்களை, அவர்களின் வாழ்க்கையே வீணாய்ப் போனாலும், தமிழ் வழியிலேயே படிக்கவைக்க வேண்டும் என்ற ஆங்காரம் எழுந்தது. உங்களின் குற்றச்சாட்டை முத்துசாமி அவர்கள் எந்த மறுப்பும் சமாதானமுமின்றி ஏற்றுக்கொண்டபோது நெகிழ்ந்து போனேன்.

IMG_9877
சசிகுமார்

 

விழா முடிந்ததும் வழக்கம்போல் வாசகர்கள் உங்கள் அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்கும் தருணங்களை புகைப்படங்களாக எடுக்க ஆரம்பித்தேன். சென்ற விழாவில் எவற்றையெல்லாம் எடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தபோது சுரேஷ் பிரதீப் (அவரை அப்போது எனக்கு யாரென்றே தெரியாது!) உங்களை பரவசத்துடன் அணுகிப் பேசுவதைக் கண்டு, புகைப்படக்கலையில் எனக்கான பகுதியைக் கண்டுகொண்டேன். வாசகர்கள் உங்களுடன் நிற்பது, செல்ஃபி எடுத்துக் கொள்வது, பேசுவது, கையெழுத்துப் பெறுவது என மலர்ந்த முகங்களையெல்லாம் நோக்கி என் கேமரா திரும்பிக்கொண்டேயிருந்தது. முத்துசாமி அவர்களிடம் அவரது நூலில் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். இன்றைய காந்தி கட்டுரைகளை இணையத்தில் வாசித்தாலும் அதை நூலாக வாங்கி வாசிக்க வேண்டும் என்று நெடுநாள் நினைத்திருந்தேன். அது இம்முறை நிறைவேறியது. உங்களிடம் அதைக் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. வெண்முரசின் செம்பதிப்பு நூல்களில் பலமுறை பெற்றிருந்தாலும் கண்ணெதிரே என் பெயரை உங்கள் கைகளால் நீங்கள் எழுதுவதைக் காண பெருமையாக இருந்தது.

அருட்செல்வப்பேரரசன் –மகாபாரதத்தை தமிழாக்கம் செய்துகொண்டிருப்பவர்
அருட்செல்வப்பேரரசன் –மகாபாரதத்தை தமிழாக்கம் செய்துகொண்டிருப்பவர்

விழா முடிந்தபின்னர் உங்கள் அறையில் நடந்த உரையாடல்கள் மனதை சில நொடிகளில் இலகுவாக்கின. உங்கள் குழந்தைகள் உறங்கப்போகும்முன் பள்ளிக்கூடம் தரும் இறுக்கத்தைப் போக்க அவர்களை வெடித்துச் சிரிக்க வைத்து பின்னர் தூங்கப்பண்ணுவீர்கள் என்று ஒருமுறை “நயத்தக்கோர்” பதிவில் எழுதியிருந்தது நினைவிலெழுந்தது. எழுத்தாளர்களை அந்தரங்கமாக நெருங்குவது குறித்த பேச்சு இதோ இதை எழுதும்போதும் சிரிப்பைக் கொண்டுவருகிறது. விடைபெற்றுச் செல்லும்போது சென்றமுறை போன்று தழுவிக்கொள்வீர்கள் என்று நினைத்தேன். :)

 

மந்திரமூர்த்தி
மந்திரமூர்த்தி

சென்ற ஆண்டுவரை, புத்தாண்டு சபதங்கள் மீது ஒரு நம்பிக்கை இருந்தது. அது குறித்த உங்களது முந்தைய பதிவை படித்தபோதும் கூட. ஆனால் இம்முறை விழாவை முடித்துக் கிளம்பியபோது சில சபதங்களை எடுத்துக் கொண்டேன். உங்கள் வாசகர்களாகிய எங்களுக்கு புத்தாண்டு என்பதே இவ்விழாவுடன் துவங்கிவிடுகிறது என்று தோன்றுகிறது.

மிக்க நன்றி ஜெ.!

பேரன்புடன்,
கணேஷ் பெரியசாமி.

 

IMG_9938

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழாவில் உங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அனைத்திலும் சற்று மிகையான கண்டிப்புடன் இருக்கிறீர்கள் என நினைத்தேன். உங்கள் நண்பர்கள் உங்களை ‘தாங்கிக்கொள்கிறார்கள்’ என்பது சரிதான். 11 மணிக்கு டீ கொஞ்சம் தாமதித்தமையால் ஒரு நண்பரிடம் கோபப்பட்டீர்கள். மேடையில் உங்கள் இரு நண்பர்கள் இன்னும் தீவிரமாகச் செயல்பட்டிருக்கலாம் என அரங்கிலேயே சொன்னீர்கள். நீங்கள் ஒவ்வொரு எழுத்தாளரையும் சென்று உபசரிக்கும்படி உங்கள் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தீர்கள்.  எழுத்தாளர்களைப்பற்றி ஒரு பயம் இருக்கிறது உங்களிடம். அவர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறீர்கள். அந்த அளவுக்கெல்லாம் எழுத்தாளர்களைப் பயப்படவேண்டுமா? அவர்களை நம்பலாமே என நினைத்தேன். அவர்களுக்கு விவிஐபி டிரீட்மெண்ட் உயர்தர ஓட்டல் எல்லாம் அளிக்கவேண்டுமென நினைக்கிறீர்கள். மன்னிக்கவும் தப்பாகச் சொல்லவில்லை என நினைக்கிறேன்

சரண்

ஏ.வி மணிகண்டன் ஜெனிஸுடன்
ஏ.வி மணிகண்டன் ஜெனிஸுடன்

 

அன்புள்ள சரண்,

எழுத்தாளர்களைப் பயப்படுகிறேன். அவர்கள் உண்மையிலேயே மிகையாகப்புண்படுவார்கள். அது நிகழக்கூடாதென்பதில் கவனம் கொள்கிறேன். அவர்கள் விவிஐபிக்கள்தான். குறைந்தது இங்கேனும். தமிழகத்தில் அவர்களை அப்படிக்கருதும் இடம் வேறு எது? இத்தனை கவனமாக இருந்தும்கூட சரவணன் சந்திரன் வந்த விஷயம் தாமதமாகவே எனக்குத்தெரிந்தது ஒரு குறை.

லக்ஷ்மி
லக்ஷ்மி

எண்ணிப்பாருங்கள் நம் விழாவுக்கு கோவையினர் 250 பேர்தான் வந்திருப்பார்கள். எஞ்சியவர்கள் வெளியூர்க்காரர்கள். கோவையில் எவ்வளவு விளம்பரம் செய்திருப்போம். ஏன் இத்தனைகுறைவாக வருகிறார்கள்? ஏனென்றால் இலக்கியநிகழ்வுகள் எல்லாமே சலிப்பூட்டுபவை. வந்திருப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கவேண்டும், அவர்களுக்கு ஏதாவது சென்றுசேரவேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை. தரத்தைக்குறைத்து கூட்டத்தைக்கூட்டலாம், அதில் எனக்கு ஆர்வமில்லை. பயனுள்ளதாக்கி இளம்வாசகர்களை ஈர்ப்பதே என் எண்ணம். அதற்காகவே எல்லாம் சரியாக நிகழவேண்டுமென நினைக்கிறேன்

ஆனால் நான் கொஞ்சம் சூடாகவே இருந்தேன். அது என் இயல்பு. என் நண்பர்கள் அதை மன்னிக்கிறார்கள். அல்லது அதை மன்னிப்பவர்களே என்னிடம் நீடிக்கிறார்கள்.

ஜெ

 

araa

ஜெ

விஷ்ணுபுரம் விருதுநிகழ்வுகளைப் பற்றிய எல்லா கட்டுரைகளுமே சிறப்பாக இருந்தன. விரிவாக எழுதியிருக்கிறார்கள். அந்த விழா உருவாக்கிய பதிவுகள் ஆச்சரியமூட்டுகின்றன.

நிற்க, நீங்களும் போகனும் ரயிலில் வந்தபோது உடன்பயணித்த திருநங்கை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? அவர் எழுதியதை வாசித்ததனால் இந்தக்கேள்வி

மகேஷ்

 

laaa

அன்புள்ள மகேஷ்,

 

அந்தம்மாவின் குரல் எம்.ஆர்.ராதா மாதிரி இருந்தது. ஆனால் அதைவைத்து முடிவுக்குவர நான் விரும்பவில்லை. ஏனென்றால் என் மாமா ஒருத்தர் அந்தக்காலத்தில் ஒரு திருமணத்தில் பேரழகி ஒருத்தியைப் பார்த்து மையல்கொண்டு ‘பிடிச்சபிடியாலே’ நின்று திருமணம் செய்துகொண்டார். முதலிரவில் மாமி முதல் சொல்லை உதிர்த்தார். ’வெள்ளங்ஙளு குடிக்கிணா?” எம்.ஆர்.ராதாவின் கட்டைக்குரல். ஆனால் ஏழு பிள்ளைகள் பிறந்தன.ஒருத்தி பேரழகி. ஆம், கட்டைக்குரல். என் முறைப்பெண். நான் தப்பித்துக்கொள்ள திருமணமாகி, இல்லை, ஏழு அல்ல, ஒரே பையன்.

 

ஜெ

 

deena
தீனா படையாச்சி

 

அன்புள்ள ஜெ

டீனா படையாச்சி என்ற எழுத்தாளரை இணையத்தில் தேடினேன். அவர் ஓர் ஆண் என்றும் தென்னாப்ரிக்காவிலுள்ளவர் என்றும் தெரியவந்தது. இவர்தானா http://www.literarytourism.co.za/index.php?option=com_content&view=article&id=295:deena-padayachee&catid=13:authors&Itemid=28

ச முத்துவேல்

***

அன்புள்ள முத்துவேல்

ஆம், அவரேதான். முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குமுன் அவர் காந்தி பற்றிய கதைக்காக விருதுபெற்றார். அன்று அக்கதையை இந்திய ஆங்கில இதழ் ஒன்றில் வாசித்தது. டீனா என பதிவாகியிருக்கிறது மனதில் பிழைதான்

நன்றி

ஜெ

***

 

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–7
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 8