கடற்துயர்

fisher

நேற்றும் இன்றும் குமரியில் புயல்பாதித்த கடற்பகுதிகளுக்குச் சென்று வந்தேன். மலையாள இதழாளர் சிலரையும் அழைத்துச்சென்றேன். தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நிகழ்ந்து வருகின்றன. அவர்களில் ஒருவராக ஓர் எண்ணிக்கையை கூட்டுவதாக நிற்பதை மட்டுமே இப்போது  நாம் செய்யக்கூடும்

உபரியாக இங்கே நிகழ்வனவற்றை சரியான முறையில் தேசிய ஊடகங்கள் வெளிப்படுத்தவேண்டும் என்பதற்கான முயற்சிகளைச் செய்யமுடியும். அவர்களுக்கு இங்குள்ள பண்பாட்டுச்சூழலைப் புரிந்துகொள்ள, இங்குள்ள சிக்கல்களை உள்வாங்க சிரமங்கள் உள்ளன. உதாரணமாக, போராட்டங்களில் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் முன்னால்நிற்பதைப்பற்றிய முன்முடிவுகளுடன் இதழாளர்கள் பலர் இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. இந்துக்களிடம் மட்டுமல்ல சி.எஸ்.ஐ போன்ற மாற்றுச்சபையினரிடமும் அந்த விலக்கம் உள்ளது.உண்மையில் மீனவர்போராட்டத்தை ஏதோ ஒருவகையில் மதமோதலாகப் புரிந்துகொள்ளமுடியுமா என்றே அவர்கள் முயன்றனர்.

கத்தோலிக்கத் திருச்சபை முன்னிற்பது கடற்கரை மீனவர்களுக்கு என தனித்த அரசியல்வெளியோ அதற்குரிய அமைப்புக்களோ உருவாகவில்லை என்பதனால்தான். அரசியல்கட்சிகளுக்கு அப்பால் அவர்கள் அனைவரும் இணையும் பொது அமைப்பாக கிறித்தவத் திருச்சபை மட்டுமே உள்ளது என்பதனால்தான். திருச்சபையின் வழிகாட்டலில் உள்ள அன்பியம் என்னும் குழுதான் மீனவர்களைப்பற்றிய தகவல்பதிவுகளைக்கொண்ட ஒரே அமைப்பு.

எந்த ஒரு இயற்கைநிகழ்வை ஒட்டியும் அரசியல்பிரச்சினையை ஒட்டியும் எதையும் புரிந்துகொள்ளாமல் தங்கள் சொந்த அரசியல்காழ்ப்புகளை கொட்டி மிகையுணர்ச்சிகொண்டு கொப்பளித்து அப்படியே விட்டுவிட்டு அடுத்தவேலைக்குச் சென்றுவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுவும் அவ்வாறே ஊடகங்களால் கையாளப்படுகிறது என்றே தோன்றுகிறது.

இப்பிரச்சினையில் அரசின் தோல்விகள் என்னென்ன? ஒன்று இங்குள்ள வானிலை அறிவிப்புகள் தெளிவானதாக, திட்டவட்டமானதாக இல்லை. பிரதீப் ஜான் போன்ற தனிநபர்கள் செய்யுமளவுக்குக் கூட அவர்கள் கணிப்புகள் செய்வதில்லை. அரசுத்துறைகளுக்கே உரிய ஒப்பேற்றும்போக்குதான் அவர்களிடம் உள்ளது. ஆகவே எவ்வகையிலும் பொருட்படுத்தத் தகாததாகவே அவர்களின் வானிலைக்கணிப்புகள் உள்ளன.

புயல்வருவதை பிரதீப் ஜான் போன்றவர்கள் கணித்துரைத்தபின்னர் ஒருநாள் கழித்து புயல்வீசுவதற்கு  சில  மணிநேரத்திற்கு முன்னர் மிகச்சம்பிரதாயமாகத்தான் புயல் எச்சரிக்கை அரசால் அளிக்கப்பட்டது. அதற்கு முன்னரே படகுகள் கடலுக்குச் சென்றுவிட்டன. புயல்   எச்சரிக்கை அளிக்கப்பட்டதா என்றால் ஆம். முறையாக அளிக்கப்பட்டதா என்றால் இல்லை.

’மீனவர்கள் கடலுக்குச்செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்’ என்ற வானொலி வரியை நம்பி மீனவர்கள் கடலுக்குச் செல்லாமலிருந்தால் ஆண்டுக்கு நூறுநாள் மீன்பிடிக்கவே முடியாது என ஒருவர் சொன்னார். வரும் புயலின் விசையையும் வீச்சையும் வகுத்துச் சொல்லவில்லை. உரிய எச்சரிக்கை விடப்படவில்லை.

வானிலை ஆய்வுமையத்தில் கொடிக்கூண்டு ஏற்றப்படுவதெல்லாம் மிகச்சம்பிரதாயமான வழிமுறைகள். குமரிமாவட்டத்தில் புயல் அடிப்பது மிக அரிதான ஒரு நிகழ்வு என உணர்ந்த ஒர் அதிகாரி இருந்திருந்தால்கூட கடலோரங்களில் வண்டிகளில் ஒலிப்பெருக்கி வைத்து அறிவித்திருக்கலாம்

புயல் வீசத்தொடங்கியதுமே இந்தியக்கடற்பகுதியிலிருக்கும் படகுகளை நவீனத் தொடர்புச்சாதனங்கள் மூலம் அடையாளம் காணவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் கடலோரக் காவல்படையினரால் முடிந்திருக்கும். அதைச்செய்யவில்லை. சிறுபடகுகளை கப்பல்களின் உதவியுடன் ஒருங்கிணைத்திருக்கலாம். புயல்முடிந்து கிட்டத்தட்ட ஒருநாள் கழித்தே கடலோரக் காவல்படை களமிறங்கியது. இதுவும் அதிகாரிகளின் முடிவெடுக்கும் திறனின்மை, அக்கறையின்மையின் வெளிப்பாடே.

இத்தனை மீன்பிடித்துறைகள், தூண்டில்வளைவுகள் இருந்தபோதிலும்கூட ஒரு பொதுவான எச்சரிக்கை முறைமையோ தொடர்புவசதிகளோ உருவாக்கப்படவில்லை என்பதைப்போல அரசின் அலட்சியத்தைக் காட்டுவது பிறிதொன்றில்லை.

கடைசியாக மீனவர்கள் காணாமலானபிறகு கூட , இந்திய ராணுவ அமைச்சரே நேரில் வந்து மீனவர்களிடம் பேசி உறுதியளித்தபின்னரும்கூட ராணுவம், உள்ளூர்காவல்படை, சிவில்நிர்வாகம் ஆகியவை உரிய ஒருங்கிணைப்புடன் செயல்படவில்லை. இன்னமும்கூட வேற்றுநாட்டுக் கடற்கரைகளில் ஒதுங்கியிருக்கும் மீனவர்களின் தரவுகள் திரட்டப்படவில்லை. இந்தியக்கடற்கரைகளில் இருந்து தரவுகள் பெறப்பட்டு மிகமெல்லத்தான் ஒப்புநோக்கும்பணி நடந்துவருகிறது.

இந்தியாவின் அரசுத்துறைகள் அனைத்திலுமுள்ள அக்கறையின்மை, ஒப்பேற்றுதல், ஒருங்கிணைவின்மை ஆகியவையே இப்பிரச்சினையிலும் தென்படுகின்றன. இவை நம் தேசியகுணங்கள். நாம் அனைவரிலும் உள்ளவை. அன்றாடவாழ்க்கையில் ஒவ்வொருநாளும் நாம் சந்திப்பவை. இக்கட்டுகளில் அவை பேரழிவுத்தன்மை கொண்டுவிடுகின்றன.

இப்போது இப்பிரச்சினையைக் கடந்துவிட்டால்மட்டும் போதாது. முடிவெடுக்கும், செயல்படுத்தும் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள்மேல் உண்மையான விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தங்கள் பொறுப்புகளை உரியமுறையில்செய்தார்களா என்று பார்க்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் அப்பிழைக்குப் பொறுப்பாக்கப்படவேண்டும். இந்தியாவில் இதெல்லாம் பொதுவாக நிகழ்வதில்லை.

ஒட்டுமொத்தமாக அரசியல்வாதிகளைக் குறைசொல்லி, கூச்சலிட்டு ஓயும்போது உண்மையிலேயே இங்கிருக்கும் இந்த முக்கியமான நோய்க்கூறு கவனிக்கப்படாமலேயே செல்கிறது.ஆனால் ஓர் அரசின் அத்தனை தோல்விகளுக்கும் அதன்பொருட்டு வாக்குபெற்றவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும். அவ்வகையில் அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள் சரியானவையே.

எல்லா அரசியல்வாதிகளும் மக்களை சமாதானப்படுத்துவதே வழி என நினைக்கின்றனர். அடிப்படைப்பிரச்சினையை எவரும் கண்டுகொள்வதில்லை. அதற்கான தார்மிக ஆற்றலும் அவர்களிடம் இல்லை.உண்மையில் இன்று இருக்கும் போராட்டவேகம் சற்றுத்தணிந்தால்கூட அயல்நாட்டுச் சிறைகளில் இருக்க வாய்ப்புள்ள மீனவர்களை நம் அரசு அப்படியே விட்டுவிடும் என்பதே நடைமுறை உண்மை.

இந்த அழிவில் மீனவர்கள் தரப்பில் உள்ள பிழைகள் இரண்டு. ஒன்று, இயல்பானது. குமரிமாவட்டத்தில் புயல்வீசுவதில்லை. இரண்டுதலைமுறைகளாக புயலை எவரும் பார்த்ததில்லை. ஆகவே நாகப்பட்டினம் மீனவர்களைப்போல நாளும் வானிலையை ஆராய்ந்து முடிவெடுக்கும் வழக்கம் இங்கில்லை என்றனர். அவ்வழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதற்கான தொடர்பு அமைப்புக்கள் உருவாகவேண்டும்

இரண்டாவதாக, கடலுக்குள் செல்லும் மீனவர்களைப்பற்றிய முறையான பதிவுகள் கடற்கரையில் இல்லை. அடையாள அட்டை முதலிய ஆவணங்கள் இல்லாமல் தேடுவது கடினம் என்றனர்.இதை அதிகாரிகள் சொல்லிக்கொண்டே இருந்தனர். அன்பியம் என்னும் அமைப்பில் மட்டுமே சில பொதுவான ஆவணப்பதிவுகள் உள்ளன.மக்கள் பொதுவாக ஆயிரம்பேர் என்று சொல்லிக்கொண்டே இருந்தனர். சாதாரணசூழலில் இதை எவரும் எண்ணியிருக்க முடியாதுதான். ஆனால் எதிர்காலத்தில் இதை முறைப்படுத்தவேண்டும்.

முக்கியமாகச் சொல்லவேண்டியது ஒன்றுண்டு, மீனவர்களை மீட்கும்பணிகள் அவர்கள் தெருவிலிறங்கிப் போராட ஆரம்பித்தபின்னரே உண்மையில் தொடங்கின. உரிமைகளுக்காகப் போராடுவது இயல்பானது. ஆனால் ஓர் ஆபத்துக்கட்டத்தில் அரசு அளிக்கவேண்டிய அடிப்படைச்சேவைகளுக்காகவே மக்கள் போராடவேண்டிய நிலை என்பதுதான் முதன்மையான அவலம்.

முந்தைய கட்டுரைஉணவகங்களைப் பற்றி…
அடுத்த கட்டுரைதூயனின் ‘இருமுனை’யை முன்வைத்து – நரோபா