எதிரொலித்த சொற்கள்

2017 விஷ்ணுபுரம்  விருதுவிழாவுக்கு வருகைதரும் மேகாலய எழுத்தாளர் ஜனிஸ் பரியத் எழுதிய கதை இது. நற்றிணை வெளியீடாக வரவிருக்கும்  நிலம்மீது படகுகள் என்னும் தொகுதியில் இருந்து. விஷ்ணுபுரம் நண்பர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது இத்தொகுதி

ஜெ

ஜெனிஸ் பரியத் விக்கிப்பக்கம்

janes

திரொலித்த சொற்கள்

பலநேரங்களில் பேருந்து பயணிகளை இறக்கிவிடுவதை என் மளிகை கடை வாசலிலிருந்து பார்க்கும் போதெல்லாம் நான் அந்த பிரெஞ்சு பெண்ணையும், அவள் ஒரு சாதாரண மதியவேளையில் திடீரென ஷில்லாங்கிற்கு வந்ததையும் நினைத்துக் கொள்வேன். இடுப்புக்கு மேலிருந்து இறங்கிய நீலநிற பாவாடை. அதே வண்ணத்தில் குளிர்தாங்கும் மேலாடை. உள்ளே வெள்ளை சட்டை. கேசத்தை உள்ளடக்கிய பூப்போட்ட கழுத்துக்குட்டை. இறங்கியவுடன் இளவெயிலில் சற்று நின்றிருந்து சுற்றியிருந்த கெல்வின் சினிமா, செயலக கட்டிடம் மற்றும் அதை சுற்றிய தாழ்விறக்கம், அதில் அழகாக கத்திரிக்கப்பட்ட புல்வெளி, பிஸ்வாசின் டைம் ஹவுஸ் என்ற கடிகாரக்கடை ஆகியவற்றை உள்ளடக்கிய சூழலை எப்படி உள்வாங்கிக் கொண்டாளென்று நன்றாய் நியாபகமிருக்கிறது. அவள் கிளர்ச்சியடைந்திருந்தாள் என்று நானிருந்த தூரத்திலிருந்தே எனக்கு தெரிந்தது.

அப்போதே வியந்தேன் ஏன் வந்தாளென்று. எனக்குப் புரியவில்லை. உள்ளூர் பொல்லா நடப்புகளை தவிர்த்து இந்த சிறிய தூங்கிவழியும் நகரில் உற்சாகமடைய ஒன்றுமில்லை. ஆங்கிலேயர்கள் சென்று அப்போதுதான் ஐந்து வருடங்களிருக்கும். ஆக்கிரமிப்பை அடுத்த மந்தநிலையில்தான் இன்று ஷில்லாங் இருந்தது. அவர்களின் இல்லாமையை இன்றும் உணர்ந்தோம். சிலர் அவர்களே மீண்டும் வந்தாலும் பரவாயில்லை என்றனர். மாமா ஜோஸ் கூட புகையிலை வாங்கவரும்போது சொல்லுவார், ‘அந்த வெள்ளையர்களே இந்த தகாருக்கு[1] தேவலை.’

‘யாரை?’ நான் கேட்டேன்.

‘எல்லாரும்தான்.’

எங்கள் வட்டார சொல் அந்த தகார். மலைகளுக்கு அப்பாலிருந்து யார் வந்தாலும் அவர்களை அந்தச் சொல் குறிக்கும்.

என் கடையை நோக்கி அவள் உற்சாகமாக வந்ததை பிஸ்வாஸ், அந்த பருவத்தின் காய்கனிகளை விற்கும் சந்தை பெண்கள், பீடாவும்[2] சிகிரெட்டும் விற்கும் தற்காலிக கடையில் பணிபுரிந்த காங் லீ, ரோட்டோர உணவகத்திலிருந்து[3] பாஹ் லிங்தோ என எல்லோரும் ஆர்வத்துடன் குறுகுறுவென்று பார்த்தனர். இதனால் பின்னர் பல சாமர்த்தியமான கேள்விகள் என்னிடம் வரும் என்று தெரியும்.

அவள் உள்ளே வரும்போது வாசலில் கட்டியிருந்த மணிகள் துடித்தன. முப்பத்தைந்து வயதை கடந்திருக்கமாட்டார் ஆனால் இளைமையின் கடைநிலையிலேயே இருந்தார். வெளிர் நிறம், உயர்ந்த கன்னத்தில் வெப்பப்புள்ளிகள், எங்கள் குளிர்கால மரங்களை ஒத்த பழுப்புநிற கண்கள், அதன் மேல் மெல்லிய கண்ணாடி. கழுத்துக்குட்டையின் கீழ் கூந்தலை சுருட்டிய கொண்டை. தேவாலயத்தின் வேலை நிமித்தமாக வந்திருப்பார் என்று நான் நினைத்துகொண்டேன். பெரும்பாலும் இப்படித்தான் நினைக்கத் தோன்றும். அதுவாயின் அனேகமாக இதுவரையில் இருந்த கன்னியாஸ்திரிகளில் அவள்தான் அதிவசீகரமானவளாக இருக்கவேண்டும். என்னை வணங்கி கொஞ்சம் மெழுகுவர்த்திகள் , தீப்பெட்டிகள்,  பார்லி நீர் மற்றும் எழுத்து மை வேண்டுமென்றாள். அவள் உச்சரிப்பு சற்று மென்மையாக நாசியிலிருந்து காற்றின் அழுத்தத்தோடு இருந்தது. இங்கேயே நீண்ட காலமாக இருந்த ஆங்கிலேயர், டான் பாஸ்கோவில் இருந்த இத்தாலிய குருமார்கள், எங்கள் நகரின் பள்ளிகளை நடத்தும் அயர்லாந்தை சேர்ந்த மதபோதக கன்னியாஸ்திரிகள் மற்றும் துறவிகள், ஏன் முதல் பெரும் போருக்கு முன்னாலிருந்த ஜெர்மானியர்கள் என நான் பல வகையான வட்டார ஆங்கில உச்சரிப்புகளுக்கு பழகியிருந்தாலும் அவளுடைய உச்சரிப்பை வகைப்படுத்த முடியவில்லை.

‘டாக்சி அழைக்கவா மேடம்’ என்றேன் அவள் எங்கே செல்வாள் என்று அறியும் ஆவலில்.

‘நன்றி. எனக்காக ஏற்கனவே காத்திருக்கிறார்கள்,’ என்று வாசலில் இருந்த ஊதா வண்ண செவரலேட் காரைக் காண்பித்தாள்.

அவள் சென்றவுடன் அந்த வாகனம் வார்ட் ஏரி வழியாக செல்வதைப் பார்த்து அவள் ஷிலாங்கின் மிகப்பெரிய விடுதியான ‘பைன் வுட்டில்’ தங்குவாள் என்று நினைத்தேன்.

பிறகு அடிக்கடி அந்த பிரெஞ்சு பெண் எங்கள் வீதிகளில் காகிதக் கட்டுடனும் குறிப்பேட்டுடனும் காணப்படுவாள். இப்படி தன்னந்தனியாக ஒரு பெண் தொலைவிலுள்ள அந்நிய பகுதிக்கு வருவதென்றால் அவளுக்கு கிறுக்குதான் பிடித்திருக்கிறது என்று பலர் நினைத்தனர். சிலர் அவள் ஒரு செவிலியர் என்றும் கன்னியாஸ்திரி என்றும் ஏதோ அயல்நாட்டு அரசாங்க அதிகாரி என்றும் பலவாறாக யூகித்தனர். கடைசியாக மாமா ஜோஸ்தான் தன் கூர்ந்த அறிவாலும் சாமர்த்தியத்தாலும் ஊர்க்கதைகளின் வழியாக அவள் ஒரு மாந்தவியலாளர்[4] என்று சொன்னார்.

அதை கேட்டவுடன் என் கடையில் கூடியவரெல்லோரும் மௌனமானார்கள். புருவத்தை உயர்த்தி வெறித்து பார்த்தார்கள். சற்று நேரம் கழித்துதான் கண்சிமிட்டினார்கள். அந்த வார்த்தையை அதுவரை அவர்கள் கேட்டதில்லை. நான் பரபரப்பாக பழ அடுக்குகளை சுத்தம் செய்துகொண்டிருந்தேன்.

‘கர்த்தரே என்ன பேரு அது’ என்றார் காங் லீ.

‘அது ஏதோ நோய் பேரு மாதிரில்ல இருக்கு,’ என்றார் வாசலில் பீடி குடித்தபடி பாஹ் லிங்தோ.

‘இல்ல, எல்லாம் நாட்டுபுறத்தானுங்கப்பா,’ என்று தான் ஏற்படுத்திய குழப்பத்தை ரசித்தபடியே  சொன்னார் மாமா ஜோஸ்.

‘ஆமா நாங்க எல்லாம் ஜோவாயிலிர்ந்தே[5] வந்தோம்.’ அதுதான் மாமா ஜோஸ்ஸுடைய சொந்த ஊர்.

பிறகு அவரை மிகவும் கெஞ்சிய பிறகுதான் சொல்லிவந்த செய்திகளைத் தொடர்ந்தார்.

‘சரி,’ கடைசியாக கூறினார், ‘காங் சாயியே சொன்னார் அந்த மேம்சாப் காசிகளை பற்றி ஒரு புத்தகம் எழுத வந்திருக்கிறார் என.’ காங் சாயி அந்த பைன் வுட் விடுதியில் வேலை செய்யும் ஒரு பணிப்பெண்ணின் மைத்துனரின் நண்பரின் நண்பர்.

‘ஏன்’ என உடனே பாஹ் லிங்தோ கேட்டார். ‘நாம என்ன அதிசய மிருகங்களா’

காங் லீ குறுக்கிட்டு சொன்னார், ‘அவர் அப்படி இருக்கலாம் ஆனா நாங்க சாதாரணமானவங்கதான்.’

மாமா ஜோஸ் தோளை குலுக்கியபடி கூறினார், ‘ஏன் எதுக்கு இப்படி செய்கிறார்னு எனக்கு தெரியலை. இந்த சாஹிப்கள் இப்படி விசித்திரமாக சிந்திப்பாங்க. ஆனா இதனால ஒரு நன்மையையும் வரபோறதில்ல. அது மட்டும் என் உள்மனசு சொல்லுது.’

நடக்கவிருக்கும் நாடகத்தில் என்னை அறியாமல் நானும் பங்குகொண்டேன் என்றே சொல்லவேண்டும். ஒரு நாள் அந்த பிரெஞ்சு பெண் என் கடைக்கு எழுத்து மை வாங்க வந்திருந்தபோது தனக்கு ஆங்கிலமும் காசியும் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவை என்று சொன்னார். நானும் அங்கிருந்த கான்வெண்ட் பள்ளியில் வகுப்பெடுத்த மால்கமை சந்திக்க பரிந்துரைத்தேன். எனக்கு அவனை சிறு பையனாக இருந்ததிலிருந்தே தெரியும். நல்லவன்தான். ஆனால் குறிப்பிடும்படி ஆளுமை அற்றவன். ஆங்கிலேய பரம்பரையின் சில அம்சங்கள் இன்றும் அவனிடத்திலிருந்ததன. நான் வேண்டுமானால் அவனை மாலையில் சந்தித்து ஆர்வமிருந்தால் அவளை விடுதியில் சந்திக்க செய்கிறேன் என்றும் சொல்லியிருந்தேன். நான் எதிர்பார்த்ததற்கு முன்பாகவே எல்லாம் முடிந்தது. அந்த பிரெஞ்சு பெண்ணும் மால்கமும் ஒரு வெள்ளை இளவரசியும், அவர் திருத்தகையுமென பலரை சந்தித்தும், பேட்டிகள் எடுத்துக்கொண்டும் சேர்ந்தே ஊரை சுற்றினர்.

நாங்கள் என்ன முயன்றாலும் அவரைப் பற்றி வேறு செய்திகளை சேகரிக்கமுடியவில்லை. அவள் முன்னர் கம்போடிய காடுகளில் நடை பயணித்து தூர உட்கிராமங்களில் தங்கிருந்தார் என்று சிலர் கூறினர். வேறு சிலரோ அவள் நிச்சயம் கணவர் போரில் மாண்டபின்னர் மனம்பிறழ்ந்து போனார் என்று கூறினர். அதனால்தான் அவர் உலகத்தில் எங்கெங்கோ ‘சூடைன்ஜாங்’[6] இழுத்து செல்வதற்கிணங்க அலைந்துகொண்டிருக்கிறார் என்றனர் சிலர். அதுதான் எங்கள் வட்டாரத்தில் பயணிகளை வழிதவற வைத்து  இழுத்துச்  செல்லும் ஆவிகள். நான் பார்த்தவரையில் அவள் தெளிவானவளாகவும் தன் பணியில் ஈடுபாட்டுடனும்  இருந்தாள். அந்த பிரெஞ்சு பெண் தன் பீடா கடைக்கு வந்து நெல் வயல்களில் வேலை செய்யும் தன் ஐந்து குழந்தைகளைப் பற்றியும் தன் அருவருப்பான குடிகார கணவன் பற்றியும் தன் வாழ்வியலை பற்றியும் கேட்டதாக ஒரு மாலையில் காங் லீ சொன்னார். ‘எல்லாவற்றையும் தன் குறிப்பேடுகளில் எழுதிக்கொண்டார்,’ என்றும் தன் ஆர்வத்தை மறைக்க முயற்சித்தபடி  சொன்னார். பாஹ் லிங்தோவின் உணவகத்தில் எப்படி அந்த பெரும் அனல் கக்கும் அடுப்புகளில் சமைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

‘எந்த பாழாப்போன பொருட்களில் இதை செய்கிறீர்கள் என்று கேட்டார்,’ என்று முரட்டு பெருமிதத்தோடு உணவக முதலாளி சொன்னார். ‘டோ ஜிம்மிற்கு[7] என்ன தேவை? என்னவென்று அதை சொல்வீர்கள்? டோ சியாங்[8] டோ க்லேஹ்[9] எல்லாம் எப்படி செய்வீர்கள்… சிலவற்றை சுவைத்தும் பார்த்தார்.’

‘பிடிந்திருந்ததா?’ என்று நான் கேட்டேன்.

‘அப்படிதான் நினைக்கிறேன். தட்டில் மீதி வைக்காம சாப்பிட்டுட்டாரே.’

பலநேரங்களில் வீதிகளில் வெறுமனே சுற்றிகொண்டிருக்கும் இளைஞர்களின் கவனைத்தை தேவையின்றி ஈர்த்தாள் அவள்.

‘எங்ககூட வாயேன் எழுத நிறைய ‘மேட்டர்’ நான் தரேன்’,’ஏன் காசி குருவிகள் பற்றி புத்தகம் எழுதகூடாதா, நான் வேண்டுமானால் என் குருவியை காட்டவா.’ என்று சொல்லி தங்கள் கவட்டையை கை காட்டினார்கள்.

மால்கம் அங்கு இருந்திருந்தால் தேர்ந்தெடுத்த காசி வார்த்தைகளால் அவர்களின் அம்மாவை திட்டியும் அவர்களுக்கு விழவேண்டிய அங்கங்களை குறிப்பிட்டும் விரட்டியிருப்பார். ஆனால் பிரெஞ்சு பெண் அவர்களைப் பொருட்படுத்தாமல் தன் பாவாடை படபடக்க சென்றிடுவார்.

இருவாரங்களில் மூன்று மாத விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்பட்டு மக்கள் தங்கள் நாட்களின் பெரும் பகுதியை அந்த குறுகிய குளிர்கால வெயிலில் சூடேற்றிகொண்டு அந்த பிரெஞ்சு பெண்ணையும் மால்கமையும் இணைத்து பேசி கதைகளை திரித்தார்கள்.

‘அவ காசிகள பத்தி எழுதுறாளா இல்ல மால்கம பத்தியா?’ என்று கிண்டலாக பாஹ் லிந்தோ கேட்டார்.

‘அவன் அம்மா காசி அது போதுமாயிருக்கும்,’ என்று பதிலளித்தார் காங் லீ.

மாமா ஜோஸ்தான் ஊர்க்கதைகளை தன் நண்பரும் அடுத்தவீட்டுகாரருமான காங் சாயிடமிருந்து அள்ளிக்கொண்டுவந்தார். வெளியில் சொல்லமுடியாத விஷயங்களை அந்த மதியவேளையில் அவர்கள் செய்வதை விடுதியின் துப்புரவாளர்கள் கேட்டதாக சொன்னார். எந்தவித சந்தேகமுமில்லை தோலும் தோலும் உரசும் அந்த சத்தம் , முணுமுணுப்புகள், முனகல்கள். அதன் பின்னர் விடுதியின் தாழ்வாரத்தில் ஊரறிய கவலையின்றி அலட்சியமாக சிகரெட்டும் டீயுமாய்  இருவரும் அமர்ந்திருப்பார்கள். எவரையும் முக்கியமாக  மால்கமின் மனைவியை பொருட்படுத்தாத  அவர்களின் அந்த முழுமையான வெளிப்படைதன்மைதான் வியப்பாக இருக்கிறது.

‘அவள பணத்துக்காகதானே கட்டிகிட்டான்?’ என்று சிலர் யூகித்தார்கள்.

‘பின்ன? அவ முகத்த பாத்திருக்கியா?’ கடையிலிருந்த மக்கள் அனைவரும் ஏளனச் சிரிப்பில் கரைந்தனர்.

உண்மைதான். காங் பன்ரி எங்கள் ஊரிலேயே அழகி என்று சொல்லமுடியாதுதான். நல்ல சில அம்சங்கள் அவளிடமிருந்தாலும் சுண்டியிழுக்கும் பிரெஞ்சு பெண்ணிற்கு வெகுதூரம்தான். அவளும் மால்கமும் ஒருவருடம் முன்னர் மணந்தபோது இப்படிப்பட்ட வாட்டசாட்டமான பாதி சாஹிப் என்று சொல்லக்கூடியவனை பிடித்துவிட்டாளே, அதிர்ஷ்டக்காரிதான் என்று பலரும் கூறினர்.

நாட்கள் கடந்து செல்ல செல்ல அவர்களை பற்றிய கதைகள் கட்டற்று எல்லைகளை மீறி சென்றது. அவன் அவளுடன் இரவு முழுதும் கழித்துவிட்டு அதிகாலையில் களைப்பாக உருக்குலைந்த துணிகளோடு வீடு செல்வான் என்றும் நாய்களை போல் காலக்  கணக்கில்லாமல் அவர்களின் கலவி இருந்தது என்றும் அவர்களின் சத்தம் தாளாமல் பக்கத்து அறைகளில் இருந்தோர் வரவேற்பாளரிடம் புகார் அளித்தனர் என்றும் மட்டுமீறிய உல்லாச ஒழுக்ககேடுகள் நடக்கும் என்று கிசுகிசுக்கப்படும் ரீசா காலனி காட்டுபகுதியிலுள்ள அந்த மேல்நிலை தண்ணீர் தொட்டியின் அருகில் இளசுகள் போல் யாருமறியாமல் அவர்கள் சென்றனர் என்றும்  சிலர் கூறினர். விரைவிலேயே மால்கம் தன் மனைவியை விட்டு சென்றுவிட்டான் என்று பேசப்பட்டது.

இதே நேரத்தில் காங் பன்ரி எந்த உணர்வுகளுமின்றி சாதாரணமாக கடை வீதிகளில் காய்களும் பழங்களும் வாங்குவதும் போலோ திடல் வரை தன் பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் ரூப்கலாவிலிருந்து தன் தையல் துணிகளை பெற்றுகொள்வதுமாக இருந்தாள். கடைகளினுள் வந்தபோது சாதாரணமாகவே சிக்கனமாக சிரிப்பவர் தற்போது வலிந்து புன்முறுவல் தந்தார் என்று எல்லோரும் கூறினர்.

ஒரு மதியம் நான் தனியாக இருக்கும் நேரத்தில் என் கடைக்கு மாவு வாங்க வந்திருந்தாள். நான் பதற்றத்தோடு ஆரவாரமாக வேலை செய்த போதும் அவள் சாளரம் வழியே தூர மலைகளின் பைன் காடுகளை நோக்கியபடி  பொறுமையாகவே காத்திருந்தாள். எனக்கு அவளை பார்க்கையில் வருத்தமாயிருந்தது. ஆனால் நான் பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை. ஏதாவது வானிலை பற்றியோ தக்காளியின் விலை பற்றியோ நான்ஷோனாஹ்களை[10] கண்டதாக ஊரில் சொல்லப்படும் வதந்திகளைப் பற்றியோ பேச்சுக்கொடுப்பதைத் தவிர.

‘பெரும்பாலும் ஐவ் டோவை[11] சுற்றிதானே,’ என்று நான் சொன்னேன், ‘ஆனால் அது இங்கிருந்து தூரமில்லை.’

நான்ஷோனாஹ் அல்லது வாடகை கடத்தல்காரர்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது எழும். யாராவது தொலைந்துபோகும்போதோ இருள்படர்ந்த இடங்களில் தெளிவற்ற உருவங்களை  யாரேனும் பார்த்தபோதோ இல்லை ஒரு ஆளின் அளவு கொண்ட சாக்கு மூட்டைகளை யாராவது எடுத்துசென்றபோதோ.

தெளிவில்லாமல் எதையோ முணுமுணுத்து சென்றாள் காங் பன்ரி. ‘காதில்விழும் சில செய்திகள் கொடுமையாய் இருக்கு.’

இந்த சிறிய ஊரில் நான்ஷோனாஹ் பற்றிய பேச்சுக்கள் பிரெஞ்சு பெண்ணின் காதுகளையும் எட்டியது. ஒரு காலைப் பொழுதில் புதுப் பொலிவுடன் பிரகாசமாக ஆழ்ந்த பழுப்பு நிற கண்களுடன் நீண்ட தளர்ந்த முடியுடன் கூடிய முகத்தோடு அவர் வந்தார். அவருடைய வெளுத்த காவி வண்ண ஆடை அவரின் மெல்லிய உடலுக்கும் துடிப்பான தோலுக்கும் பொருத்தமாயிருந்தது. பிறகு காங் லீ சொன்னாள் ‘அடிக்கடி நன்றாக அனுபவித்த’ பெண் போல அவள் இருந்தாள் என்று.

தெலன்[12] மற்றும் நான்ஷோனாஹ் என்றால் என்ன என்று என்னிடம் விசாரித்தார். நானும் இயன்ற அளவு விளக்கினேன்.

‘தெலனின் வைத்திருக்கிறவுங்க நான்ஷோனாஹ்களுக்கு கூலியளித்து மனிதர்களை இரத்தத்திற்காக கொலை செய்யவோ அல்லது இலக்கானவர்கள் மீது குறிகளிட்டு அவர்களின் முடியின் ஆடையின் ஒரு சிறு பகுதியையோ துண்டித்து வர செய்வாங்க.’

‘அந்த இரத்தத்தை குடிப்பாங்களாஅவங்க?’

‘இல்ல. அது தெலனுக்கானது. குறிகளிடப்பட்டவர்கள் கொஞ்ச காலத்தில நோய்வாய்ப்பட்டு மெதுவாக இறந்துபோவாங்க.’

‘ஒ! அப்போ அத வைத்திருக்கிறவுங்க பெரும் செல்வந்தராக இருப்பாங்க. ஏனா தெலன் பிரதிபலனா அவங்களுக்கு கனவிலும் எண்ணாத செல்வத்தை வாரி வழங்கியிருக்குமே?’

நான் ஆமோதித்து தலையசைத்தேன்.

என் வாடிக்கையாளர்களுக்கு நான் பீடாவை வைத்துக்கொடுக்கும் பிளாஸ்டிக் தட்டின் மேல் விரல்களால் தட்டிக்கொண்டிருந்தாள். ‘சொல்லுவாங்க தெரியுமா, நண்டின் கூடைய மூடவேண்டியதில்லைன்னு.’

‘ஏன்?’ நான் குழப்பமுடன் கேட்டேன்.

‘ஏன்னா ஒன்னு மேலே எழ முயற்சிக்கும்போது வேறவொன்னு அத கீழ இழுத்துவிடும்.’

அதை எப்படி எடுத்துகொள்வதென்று புரியவில்லை. அவள் என்னை கேலி செய்கிறது போல் தோன்றியது. உடனே வேறு ஏதும் பேச எனக்கு மனமில்லை.

‘அவ்வளவுதானா?’ என்று நான் கேட்டேன் வாங்க வந்த பொருட்களை பற்றி. அவள் சற்று வழக்கமற்ற கடுமையுடன் என்னை நோக்கி ‘எப்படி இருக்கும் அந்த தெலன்?’

‘அனேகமாக ஒரு பாம்பு போல.’

அதற்குமேல் எதுவும் கேட்கக்கூடாதே என்று நினைத்துக் கொண்டேன். அவ்வாறே அவளும் வேறெதுவும் கேட்காமல் வாங்கிய பொருட்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு தன் கூந்தல் சூரிய ஒளியில் மின்ன வெளியில் சென்றுவிட்டாள்.

அன்று மாலை கடையை வழக்கத்திற்கு முன்னரே மூடிவிட்டேன். ஏதோ காரணமறியாத களைப்பை உணர்ந்தேன். ஏதோ பெருந்தீங்கு நிகழப்போகிறது என்ற இனம்புரியாத கவலை. தொலைவில் பிரகாசமான முழு நிலவொளியிலும் மலைகள் கரும் பச்சையாக தெரிந்தது, ஏதோ அறியா சக்திகள் இந்த முழு உலகை நிழலால் கவர்ந்ததுபோல். அமைதியற்ற உறக்கத்திலும் என் கனவுகளிலும் மெலிதான வலுவற்ற தூரத்திலுள்ள கூரைகளிலிருந்து முரசு கொட்டங்களை  இருதயத்துடிப்பு போல என்னால் கேட்கமுடிந்தது.

அடுத்த நாள் காதலர்களைக் காணவில்லை.

நான் சொல்லவந்தது அவர்களை ஒன்றாக கடை வீதிகளில் காணக்கிடைக்கவில்லை என்றே. அவன் பந்தயம் கட்ட தொ டீம்[13] கடைக்கு காலையில் வரவில்லை. தனக்கு பிடித்ததை சாப்பிட பாஹ் லிங்தோ உணவகத்திற்கும் வரவில்லை. அவளும் வழக்கம்போல் வார்ட் ஏரி[14] அருகில் நீண்ட நடை போகவுமில்லை.  அவளின் அறை தாழ்வாரத்தில் நெடுநேரம் படித்தும் எழுதவுமில்லை. முதலில் நாங்கள் நினைத்தது நிச்சயமாக அவர்கள் சேர்ந்து ஓடிப்போய்விட்டார்கள் என்றுதான்.

‘தன் புத்தகத்திற்கு தேவைக்கு அதிகமாகவே விஷயங்களைத் தேற்றிவிட்டார்,’ என்று காங் லீ பாக்கு கொட்டைகளை உடைத்தபடி  நமட்டு சிரிப்பு சிரித்துகொண்டே சொன்னார்.

இந்தக் கதையில் ஒருவகை சுவையான கிளர்ச்சி ஊட்டக்கூடிய தன்மை இருக்கிறது. ஒருவேளை அவர்கள் குவஹாத்தி சென்றிருக்கலாம். இல்லை நெடுந்தூரமிருக்கும் கல்கத்தாவிற்கு சென்றிருக்கலாம்.  ஒதுக்குப்புறமான பாதுகாப்பான கட்டுப்பாடுகளுடைய ஷில்லாங்கிலிருந்து பெரும் நகரில் யாருமறியாத ரகசியமான ஜோடியாக வாழலாம். சிலர் அந்த ஜோடியின் தைரியத்தையும்  அவர்களிடையே இருந்த  காதல் மேலிருந்த கட்டற்ற உறுதியையும் பாராட்டினர்.

ஒரு வாரம் கடந்ததும் மாமா ஜோஸ் அவர்களுக்கு மோசமாக ஏதாவது நடந்திருக்குமா என்று வெளிப்படையாகவே வேதனைப்பட்டார்.

‘மோசமா? மோசம்ன்னு என்ன சொல்ல வர்றீங்க?’ என்று வழக்கம்போல வாசலில் பீடி குடித்தவாறு பாஹ் லிங்தோ கேட்டார்.

மாமா ஜோஸ் தன் புகையிலை குழாயை (pipe) வெளியில் தட்டினார்.

‘அந்த விடுதியின் அறையிலிருந்து அவள் சாமான்கள் எதையுமே எடுத்துபோகலை என்று காங் சாய் சொன்னார். விந்தையாக இல்ல இது?’ இந்த வார்த்தைகள் கடும் கரும்புகை மண்டலமாக அந்தக் காற்றில் கலந்து படர்ந்தது.

நம் ஊரின் தலைவர் ராங்பாஹ் ஹாங்மிடமோ அல்லது காவல்துறையிடமோ புகார் அளிக்கவேண்டும் என்று யாரோ சொன்னார்கள். காங் பன்ரி மீதும் ஒரு கண் இருக்கவேண்டும் என்று மாமா ஜோஸ் எச்சரித்தார்.

இந்த பித்துப்  பேச்சுகளை நிறுத்துவதற்காக அவள் ஒன்றும் அப்படிப்பட்ட பெண் இல்லை, மேலும் அவளின் சிறிய மெலிந்த உடலால் அவள் கணவனையும் அவன் காதலியையும் எதுவும் செய்யமுடியாது என்று கூறினேன்.

‘கேடு விளைவிக்க வேறு வழிகள் இருக்கின்றன…’ என்றார் காங் லீ அறையின் மூலையிலிருந்து. எல்லோருக்கும் புரிந்தது அவர் மந்திர ஏவல்களைப்  பற்றிதான் சொல்கிறார் என்று. காங் பன்ரி கிருத்துவத்திற்கு மாறாத ஒரு பழைய காசி குடும்பமான ரிங்ஜாவிலிருந்து வந்தவள்.

‘அவ அம்மா அப்படித்தான் நிறைய சொத்த சேர்த்தாள்னு நானும் கேள்விப்பட்டேன். எல்லாம் தெலன் அளித்த பணம்,’ என்று தெருவோரத்தில் காய்கள் விற்கும் ஒரு பெண் கூறினாள்.

நாங்கள் பேசிகொண்டிருக்கும்போதே காங் பன்ரி கடைக்குள் நுழைந்தாள். அவளது கண்கள் எல்லோரையும் ஊடுருவி பார்த்தன. பின்னர் கன்னங்கள் துடித்தன. எல்லோரும் சங்கடத்துடன் அமைதியானதால் நாங்கள் அவளைப் பற்றிதான் பேசி கொண்டிருந்தோம் என்று உணர்ந்திருப்பாள். இருந்தும் வலிந்து புன்னகைத்து பல மளிகைச் சாமான்களை கேட்டாள்.

‘குமனோ,’ என்று மாமா ஜோஸ் அழைத்தார். அவருக்கு மட்டுமே அவளை அழைக்க துணிவிருந்தது.

அவளும் இவர் அழைத்ததற்கு தலை அசைத்தாள். மாமா ஜோஸ் அவளின் உடல் நலத்தை முதலில் விசாரித்துவிட்டு பின்னர் மால்கம் பற்றி வினவினார்.

‘அவர் காரோ மலைகளுக்குச் சென்றிருக்கிறார். அங்கு மேம் சாஹிபிற்கு அவர் வேலைக்கு மொழிபெயர்ப்பாளர் உதவி தேவைப்படுகிறது,’ என்று அமைதியாக கூறினார்.

அவள் சென்றவுடன் அறையிலிருந்த எல்லோரும் ஏமாற்றத்துடன் தலை சரிந்தனர். உடனே காங் லீ இந்த நம்பமுடியாத கதையை காங் பன்ரி நம்புவாளேயானால் அவள் களவில் கணவனால் ஏமாற்றப் படவேண்டியவளே என்று உறுதிபட சொன்னார். என்ன ஒரு மதிகெட்ட மனைவி இவள்? காய்கள் விற்பவர் மெதுவாக சொன்னார் இந்த மந்திர ஏவல்கள் தொலைவிலிருந்தும் வேலை செய்யும், காங் பன்ரியிடம் காதலர்களின் ஏதாவது ஒரு உடைமை இருந்தால் போதும் அவர்களுக்கு துன்பம் செய்விக்க.

‘என்ன சொல்ல வறீங்க?’ என்று புகையிலையை கையில் துடைத்தவாரே பாஹ் லிங்தோ கேட்டார்.

அந்த பெண்மணி ஷிலாங்கின் பழைமையான பகுதியான லபானிலிருந்த[15] சோராவை[16] பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தை பற்றி சொல்லலானார். பெரும் செல்வந்தர்கள். பெரும் கெளரவம் கொண்டவர்கள். அவர்கள் தெலன் வைத்திருப்பார்களா தெரியாது. ஆனால் உறுதியாக பிறருக்கு கேடுவிளைவிக்கும் மந்திரங்கள் அவர்களிடத்தில் இருந்தன.

‘மருத்துவர்களால் கண்டறியமுடியாத மெதுவாக அழிக்கும் நோயாக இருக்கலாம்,’ என்று விவரிக்கலானார். ‘இல்லை பாவப்பட்ட பாஹ் பாஸாஹ்விற்கு நடந்தது போவும் நடக்கலாம்’ என்றும் அதை தான் தன் கண்களால் உறுதியாகக் கண்டேன் என்றும் சொன்னார்.

‘பாஹ் பாஸாஹ்விற்கு என்ன நடந்தது?’ நாங்கள் கேட்டோம்.

அவள் தன் ஜெய்ன்கிர்ஷாவை[17] நெருக்கமாக இழுத்துகொண்டார். ‘அந்த குடும்பத்தின் தலைவனிடம் எங்கேயோ இருக்கும் ஏதோ சொத்தைப் பற்றி வாதாடியிருக்கிறார். பின் ஒரு நாள் தன் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது வீதியில் விழுந்து இறந்து போனார். ஆனா அவர் ஆரோக்கியமாக இருந்த ஐம்பது வயது மனிதன்.’

‘இது கிறுக்குத்தனமால இருக்கு,’ என்றார் பாஹ் லிங்தோ.

பாஹ் ஜோஸ் கவலையுடன் ஆமோதிப்பாய் தலையசைத்தார். ‘நான் இத கேட்டிருக்கேன்…’

‘காத்திருந்து பார்ப்போமே,’ என்று நான் பலவீன குரலில் சொன்னேன். ‘அவுங்க  நிச்சயமாக திரும்பி வருவாங்க.’

நான் உண்மையைச் சொல்லவேண்டுமானால் அங்கிருந்த எவரும், நான் உட்பட, அதை நம்பவில்லை.

இரு வாரங்கள் சென்றன. பின் ஒரு மாதம் ஆனது.. அந்த பிரெஞ்சு பெண்ணையும் அவள் காதலனைப்  பற்றியும் எந்த செய்தியும் வரவில்லை. விடுதி நிர்வாகத்தினர் பிற விருந்தாளிகளுக்கு அந்த அறையை வாடகைக்கு விடுவதற்காக அவள் உடைமைகளை கிடங்கிற்கு மாற்றிவிட்டனர். எங்கள் சிறு ஊர் இந்தக் கதையினால் பற்றி எரிந்தது. காங் பன்ரியும் அவள் குடும்பமும்தான் அந்த இருவரின் காணாமைக்கு காரணம் என்று சொல்லும் ஒரு அணியும், அந்த ஜோடி இன்றும் காரோ[18] மலைகளை சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும் மற்றொரு அணியுமாக உள்நாட்டு போர் அளவிற்கு மக்கள் இரு அணிகளாக பிரிந்தனர். நாளுக்குநாள் இரண்டாவது கதையை நம்புவர்கள் குறைந்துகொண்டே வந்தனர்.

எல்லா இடங்களிலும் எப்படி ரிங்ஜா குடும்பம் தேலனை தன் வசம் வைத்திருக்கிறது என்ற முணுமுணுப்புகள் ஊடுருவத் தொடங்கன. எப்படி கடந்த காலத்தில் அவர்களின் வணிக போட்டியாளர்களின் பிரம்பு கூடைகள்[19] முதுகிலேயே ஒட்டிகொண்டன என்றும் அவர்களின் பெரும் எதிரிகள் திடீரென வீதிகளில் மாண்டு விழுந்தனர் என்றும் பல பழங் கதைகள் தோண்டி எடுக்கப்பட்டன.

‘அது லபான் குடும்பம் என்றல்லவா நினைத்தேன்,’ என்று நான் கூறினேன்.

தடங்கலினால் கோபம் கொண்டு ‘ரிங்ஜாகளும் தான்,’ என்று இடைமறித்து காங் லீ சொன்னார்.

வினோதமான பரபரப்புடன் கூடிய முரசு கொட்டங்கள் ரிங்ஜா கூரைகளிலிருந்து இரவுமுதல் காலைவரை கேட்பதாக அந்த காய்கறி வியாபாரி எங்களிடம் சொல்லிகொண்டிருந்தார். ரேஸ் கொர்ஸ்கும்[20] எந்நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கும் போலோ சந்தைக்கும்[21] அருகில் அவர்கள் குடும்பம் இரண்டடுக்கு சொகுசு வீட்டில் (bungalow) இருந்தனர்.

‘அங்கு யாரிடமும் பேசிப்பாருங்க. அவுங்க சொல்லுவாங்க,’ என்று முடித்தார்.

இப்போதும் காங் பன்ரியிடம் அவள் கணவர் பற்றி கேட்டால்  அவர் மொழிபெயர்ப்பு வேலையாக அந்த பிரெஞ்சு பெண்ணுடன் சென்றுள்ளதாகத்தான் சொல்கிறாள். அவள் வார்த்தைகள் வெற்று பேச்சுகள் என்று சொன்னால் அது தவறில்லை. மக்கள் அவளிடமிருந்தும்,  அவள் குடும்பத்திடமிருந்தும்  விலகலாயினர். அவளும் பின்னர் குவிண்டன் சாலையிலிருந்த[22] அவர்கள் வீட்டிலிருந்து போலோ மைதானதிலுள்ள[23] அவளின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

‘குற்ற உணர்ச்சிதான் காரணம்,’ என்று காங் லீ சொன்னார். ‘அவளை அது பைத்தியமாக்குது.’

‘ஏதோ செய்தாள் என்றாலும் அவள் அந்த உடல்களை என்ன செய்திருக்கமுடியும்?’ என்று நான் குறுக்கிட்டு கேட்டேன்.

எதிர்பாராதவிதமாக அது பல நூறு புதிய ஊகங்களை கட்டற்று பரப்பியது. ஒரு வேளை அவர்களை வார்ட்ஸ் ஏரியிலோ அல்லது ஷிலாங்கிற்கு வெளியிலுள்ள ஆற்றிலோ வேறொரு வீசியிருக்கலாம். ஏன் வஹிங்தோவிலுள்ள[24] காசி சுடுகாட்டில் தீயிட்டிருக்கலாம். அங்குதான் இறந்தவர்களின் எலும்புகளை கல் தாழிகளில் இட்டு மலைகளைச் சுற்றி வைப்பார்கள். அவர்களை போலோ மைதானத்திலிருந்த ரிங்ஜா வீட்டின் பின்புறமுள்ள விரிந்த வறண்ட நிலத்தில் புதைத்திருக்கலாம். கடைசி சாத்தியத்தை முரட்டுத்தனமாக அனைவரும் புறந்தள்ளினர். ஆனால் ஒரு நாள் நாய் ஒன்று அந்த பகுதியிலிருந்து மனித தொடை எலும்பு போல ஒன்றை எடுத்து சென்றதை காங் லீ பார்த்துவிட்டார்.

அடுத்த நாள் காலை அங்கு காவலர்கள் குவிக்கபட்டனர். பார்வையாளர்களும் குவிந்தனர். வலிமையானவருக்கும் விருப்பட்டோருக்கும் மண்வெட்டி கொடுக்கப்பட்டது. எனக்கு கொடுக்கப்பட்ட மண்வெட்டியை இறுக்கமாக பிடித்துகொண்டேன். என்னால் அந்த சதுப்பு நிலத்தில் குழிபறிக்க முடியவில்லை. ஒருவித குமட்டல் என்னுள் அலைபோல பரவியது. என் கால்களுக்கு கீழே நிலம் அகன்று செல்வதாக உணர்ந்தேன். காட்டு நாய் கூட்டமொன்று எங்களை சுற்றி காற்றை உறிஞ்சிக்கொண்டும், மோப்பம் பிடித்தும் சென்றன. அனேகமாக கறியைத் தேடியிருக்கும். சிலர் அவற்றை மண்வெட்டியால் அடிக்க அவை குரைக்க தொடங்கின. இது சாத்தியமேயில்லை என்று நினைத்துகொண்டேன். அதேவேளையில் இந்த ஊரில் எதுவுமே நடக்காததால் எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும். வதந்திகள் உறுதியான ஏதோ ஒன்றை உருவாக்கியிருக்கிறது. காற்று இந்த மலைகளுக்குள் சிக்கிகொண்டது. எங்கள் வார்த்தைகளை வீசி கலைக்கமுடியவில்லை. அதனால் அவை எங்களின் குரூர பிம்பங்களாக மீண்டும் எங்களிடமே விசித்திரமான விகாரமான எதிரொலிகளாக திரும்பி வந்தன. அந்த பிப்ரவரி மாத நாளில் குளிர் எங்கள் விரல்களைக் கிழித்துக்கொண்டிருந்தாலும் நாங்கள் பலத்த உற்சாகத்துடன் குழிபறித்தோம். சிலர் அதுவரை அவர்கள் வாழ்வில் இந்தளவு கடினமாக உழைத்திருக்கமாட்டார்கள். நாங்கள் கற்களையும் வேர்களையும் வெளிக்கொணர்ந்தோம். வெட்டி எடுத்த மண் மழைக்காலத்தில் அடர்த்தியான எல்லையில்லா சேற்றுப்பகுதியாக இந்த இடத்தை மாற்றிவிடும். இங்கென்ன கிடைக்கும்? கல்லறைகள் அரை மைலுக்கு அப்பால்தானே  என்று நினைத்துகொண்டிருக்கையில் ஏதோவொன்றை ஒரு இளம் காவலரின் மண்வெட்டி தட்டியது. ஆட்டு மந்தை புதிய மேய்ச்சல் நிலத்தைக் கண்டால் செல்வதைப் போல கூட்டம் அப்படியே ஒன்றாக நகர்ந்தது. விரைவில் கூச்சல்களும் உலோகத்தின் மீது மண்வெட்டிகள் மோதும் ரீங்காரமும் காற்றை நிறைத்தன. மெதுவாக எலும்புக் கூடுகளை தோண்டிஎடுத்தோம். மனிதர்களுடையதல்ல, குதிரைகளுடையது. துருப்பிடித்த வாகனங்களின் முழு பாகங்களையும் எடுத்தோம்.

அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் அவர்களின் கால்நடைகளையும், படைத்தளவாடங்களையும், வாகனங்களையும் புதைத்து சென்ற போர்க் கால இடுகாடு அது. அவர்களின் உபகரணங்களையும், பரிவாரங்களையும் உள்ளூர்வாசிகளிடம் கொடுக்காமல் அப்படி புதைத்து விட அவர்களுக்கு உத்திரவு இருந்தது. எங்கள் கண் முன்னர் இராணுவம் மறந்து விட்டுசென்ற பலவிதமான அபத்தமான சாமான்கள் காட்சியாக விரிந்தன. அந்த இடம் முழுவதுமே வளைந்து நெளிந்து கிடந்த உலோகத்திலிருந்து  பூஞ்சைகாளானின் பழைய அழுகிய பொருட்களின் அருவெறுப்பான துர்நாற்றம் வீசியது. நொடிப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இடத்தில்தான் எங்கள் வார்த்தைகள் இறந்து மக்கிப்போய் இருக்கவேண்டும். பின்னர் நாய்கள் குரைத்தும் சண்டையிட்டும் அங்கிருந்த எலும்புகள் மீது பாய்ந்தன. சிலர் கம்புகளாலும் கற்களாலும் அடித்து உதைத்து அவற்றை  விரட்டினர்.  தெரு பெருக்குவோர் உலோகத் துண்டுகளை சேகரிக்கலாயினர். நாங்கள் எல்லோரும் எங்கள் கடந்த காலத்தை உயிர்த்தெழ செய்துவிட்ட பின்னரே அன்று மாலை அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றோம்.

சில வாரங்களுக்குப் பின்னர் பள்ளிகள் தொடங்கும் முன்னர் மால்கம் திரும்பி வந்தார். பன்ரியும் குவிண்டன் சாலையிலிருந்த அவர்கள் வீட்டிற்கு திரும்பினாள். நாங்கள் மீண்டும் அந்த பிரெஞ்சு பெண்ணை பார்க்கவில்லை. ஒருமுறை மால்கமிடம் அவளைப் பற்றி கேட்டேன். அவரும் தெளிவில்லாத பதிலை அளித்தார். பயணத்தின் போது மர்மமான காய்ச்சலால் பீடிக்கப்பட்டு அது அவளின் பலத்தையும் நிறத்தையும் மெதுவாக உறிஞ்சிக்கொண்டது. அதனால் ஷில்லாங்கிற்கு திரும்பி வராமல் அவள் குவஹாத்தி சென்று அங்கிருந்து அவள் வீட்டிற்கு சென்றதாகவும் அங்கு உடல் நலம் பெறுவார் என தான் நம்புவதாக சொன்னார்.

மால்கம் திரும்பி வந்ததும் அந்த முரசு கொட்டல்கள் நின்றுவிட்டன என்று மக்கள் கூறினர். ஆனால் எனக்கோ இன்றும் சில நேரங்களில் கேட்கிறது இருளில். பதைபதைப்பான இருதய துடிப்பு போல், நிதானமான  காலத்தைப் போல் பழமையாக.

மொழியாக்கம் விஜயகிருஷ்ணன், திருச்சி

 

விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்

[1] Dhkar is a Khasi word

[2] Kwai

[3] Jadoh

[4] Anthropologist

[5] Jowai

[6] suidtynjang

[7] doj jem

[8] doh shiang

[9] doh khleh

[10] Nongshohnoh

[11] Iew Duh

[12] Thlen – Known locally as U Thlen, which means ‘The Thlen’, it’s believed to be a malevolent and evil spirit that takes the form of a huge, man-eating snake. மனிதனை விழுங்கும் பெரிய பாம்பு வடிவம் கொண்ட பூதம்

[13] thoh teem

[14] Ward’s lake

[15] Laban

[16] Sohra

[17] Jainkyrshah – கட்டமிட்ட பருத்தி மேலாடை

[18] Gharo

[19] Moora

[20] Race course

[21] Polo Market

[22] Quinton Road

[23] Polo Grounds

[24] Wahingdoh

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம்
அடுத்த கட்டுரைஇன்றைய காந்தி – ரா.சங்கர்