சீ முத்துசாமியின்’மண்புழுக்கள்’- பச்சைபாலன்

DSC_4932

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

மலேசிய எழுத்தாளர்களில் சீ.முத்துசாமி தனித்து அடையாளங்காணக்கூடிய மாறுபட்ட படைப்பாளி. வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து விலகிக்கொண்டு தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதிலே பயணிப்பவர். நான் ஐந்தாம் படிவத்தில் பயின்ற காலத்தில் தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசுபெற்ற அவரின் ‘சிறகுகள் முறியும் மானுடக் கனவுகள்’ குறுநாவல் அந்நாளிதழில் தொடராக வெளிவந்தது. அதைப் படித்தேன். எனக்குப் பழக்கமான தோட்டப்புறச் சூழலை மையமிட்ட நாவல் என்பதால் என்னை அது மிகவும் கவர்ந்தது. வாசிப்பின் ருசியை நான் உணரத் தொடங்கிய காலக் கட்டம் அது.

பின்னர், அவரின் சில சிறுகதைகளையும் நாளிதழில் வாசித்தேன். கல்லூரியில் பயின்ற காலத்தில் அவரின் ‘விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை’ நாவலை ஆவலோடு வாசித்தேன். 22 வயதில் என்னை ஆழமாகப் பாதித்த, உணர்வுகளை உலுக்கிய, தீவிர வாசிப்புக்குள் தள்ளிய நாவல் இதுவாகத்தான் இருக்கும். கல்லூரி இதழில், இந்த நாவல் குறித்த என் கருத்துகளை ஆசையாய் எழுதியது இன்னும் நினைவில் உள்ளது. சிதையும் ஒரு குடும்பத்தின் சோகத்தை நனவோடை உத்தியில் கதைப்பாத்திரங்கள் பேசுவதாக அமைந்த நாவல் இது.
சீ.முத்துசாமியின் மூன்றாவது படைப்பான மண்புழுக்கள் நாவல் பற்றிய என் எண்ணங்களை இங்கே பதிவு செய்ய வருகிறேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி நிறுவனம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்றும் இணைந்து நடத்திய போட்டியில் இது முதல் பரிசு பெற்ற நாவல்.

இதுவும் சீ.முத்துசாமியின் நெஞ்சுக்கு நெருக்கமான தோட்டப்புறப் பாட்டாளிகளின் வாழ்க்கைச் சுவடுகளின் சோகத்தைப் பதிவுசெய்யும் முயற்சியாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலக்கட்டத்தில் தோட்டப் பட்டாளிகளின் போராட்ட வாழ்க்கையைக் கதைக்களனாகக் கொண்டு நாவலைப் புனைந்துள்ளார். மண்புழுக்களாகத் தோட்ட மண்ணை நம்பித் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நிலையை ஓர் ஆவணச் சித்திரமாக நம் கண் முன்னே நிறுத்துகிறார்.

இந்நாவலில் குறிப்பிடத்தக்க அம்சம், தோட்டப்புற வாழ்வின் மிக நுணுக்கமான விவரிப்பும் தகவலின் தொகுப்புமாகும். மலேசியாவில், இதுவரை வெளிவந்த நாவல்களில் இந்த அளவுக்கு தோட்ட வாழ்க்கையை ஆழமாக, நுணுக்கமாக பதிவுசெய்த படைப்பு இல்லை என அறுதியிட்டுக் கூறலாம். தோட்ட வாழ்க்கையைக் கடந்து வந்த வாசகர்கள் இதன் ஊடாகப் பயணப்படும்போது நிச்சயம் உணர்வார்கள். எழுத்தாளரின் கடுமையான உழைப்பை இது தெளிவாக்குகிறது.
பேச்சு நடையில் அமைந்துள்ளதால் நாவலை யார் வாசித்தாலும் அதனோடு ஒன்றிவிடும் நிலையை நாவல் ஏற்படுத்துகிறது. நாவல் உயிர்ப்போடு திகழ இது முக்கியப் பங்காற்றுகிறது. தோட்டப்புற மக்கள் தங்கள் சோகத்தையும் பாடுகளையும் தங்கள் மொழியிலேயே பேசுவது சுவையாக இருக்கிறது.

‘நம்ம பாடு எவனுக்கு தெரியுது?.. பொண கனத்துல, ஏணிய துக்கி தோள்ள போட்டுக்கிட்டு, அந்த மீனா பூண்டு காட்டுல லோலோன்னு ஓடி, பதினோரு மணிக்கு நானூறு மரத்த, ஏணில ஏறி, அண்ணாந்து பாத்து, மேலே போய்விட்ட வெட்டுக் கோட்டுல கத்தி போட்டு, தடிச்சு காஞ்சு கெடந்த மொரட்டு பட்டங்களோடு வரட்டு வரட்டுனு ஓரியாடி, முடிச்சுட்டு, வாளிக் கடக்கு வர்றதுக்குள்ள பாதி உசுரு போயிரும்’. இப்படி உரையாடல் மட்டுமல்லாமல் நாவல் முழுமையும் பேச்சு நடையே நிறைந்திருக்கிறது. நவீனமாகிவரும் நம் வாழ்க்கைச் சூழலில் தோட்டப்புற மொழி இப்பொழுதே கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதை ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக அடுத்த தலைமுறைக்கு இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார் சீ.முத்துசாமி.

நாம் பேச்சுநடையில் தவிர்க்கும் அசூசையான சொற்கள் இந்நாவலில் ஆங்காங்கே கலந்திருப்பது சில வாசகர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தலாம். தணிக்கை இல்லாத தோட்டப்புற மக்களின் வாழ்க்கைப் பதிவு என்பதால் ‘உள்ளதை உள்ளவாறு உரைத்தல்’ என்ற நிலையில் எழுத்தாளர் இத்தகைய எழுத்து நடையைக் கையாண்டிருப்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

மண்புழுக்கள் நாவலின் கதை என்ன? கதையின் சுவைக்காக மட்டும் இந்நாவலை அணுகுவோர் நிச்சயம் ஏமாற்றமடைவர். முதல் அத்தியாயத்தை வாசித்த என் மகள் கேட்டாள். “எங்கப்பா கதையைக் காணோம்?” பலருக்கும் இத்தகைய எண்ணம் தோன்றலாம். நம் புனைவு இலக்கியத்தில் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், இந்நாவலில் கதையென்பது ஒரு மெல்லிய இழையாக ஊடாடிவர, தோட்டப் பாட்டாளிகளின் போராட்ட வாழ்க்கையின் பதிவே முக்கியக் களமாக அமைந்துள்ளது. கதை சொல்லும் முறையில் ஒரு கட்டுடைப்பை நிகழ்த்தியிருக்கிறார் சீ.முத்துசாமி.

வழக்கமாக நாவலில் குறிப்பிட்ட சில கதைப்பாத்திரங்களை ஒட்டியே கதை நகர்த்தப்படும். இங்கே, ஆட்டுக்கார சின்னக்கருப்பன், அவன் மகள் சின்னபுள்ள, மனைவி பெரியதாயி, சாலபலத்தான், முத்துவேலு, கசியடி முனியப்பன், கண்ணுசாமி, தண்டல் பொன்னுசாமி, தொரசாமி, கடைக்காரர் திக்குவாயர், தண்ணிமலை கவுண்டர், புட்டுகாரர், ஓடும்பிள்ளை, மேனேஜர் மேனன், பெரிய கிராணி சுப்பையா இப்படிக் கதைப்பாத்திரங்களின் பட்டியல் நீளுகிறது.
ஆயினும், ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் வாழ்க்கை மையமாக இருக்க, அவனைச் சுற்றி நிகழும் பல்வேறு கிளைக்கதைகளும் நினைவுகளும் நாவலில் வந்து போகின்றன.

ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் மகள் சின்னப்புள்ளையைக் கசியடி முனியப்பன் பால்மரக்காட்டில் பாலியல் கொடுமைக்குப் பிறகு கொலை செய்துவிட, போலீசாரால் கைது செய்யப்படுகிறான். சயாம் மரண ரயில் பாதை அமைக்கும் வேலையில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் ஜப்பானியரிடம் பட்ட துன்பக் கதைகளும் நாவலில் இடம்பெறுகின்றன. ஜப்பானிய காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, நாட்டைப் பிடிக்கக் கம்யூனிஸ்ட்டுகள் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்கள் கூட்டத்தில் சேர்ந்துவிடும் கசியடி முனியப்பன் மீண்டும் தோட்டத்திற்கே வந்து தன்னை முன்பு அடித்து உதைத்த டன்லப் துரையைச் சுட்டுக்கொன்று விடுகிறான். காலில் முள் குத்திப் புண்ணாகிக் ஒரு காலை இழந்துவிடும் ஆட்டுக்காரன், மனைவியின் உதாசினத்திற்கு ஆளாகிறான். அவனின் மகள் பழனியம்மா எதிர்த்த வீட்டுப் பையைனோடு ஓடிவிட, வேதனை தாங்காது அவன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவோடு கையில் கயிற்றோடு மரத்தடியில் அமர்ந்திருப்பதாக நாவல் முடிகிறது.

சீ.முத்துசாமியின் மூன்று நாவல்களிலும் ஒர் ஒற்றுமையை என்னால் காண முடிகிறது. கதையின் போக்கில் வாசகர் மனங்களில் சோக இராகங்களை எழுப்பி அவர்களைக் கதையோடு ஒன்றித்துவிடச் செய்வதில் இவரின் எழுதுகோல் முனைப்புக் காட்டுகிறது. மீண்டும் மீண்டும் தோட்ட மண் சார்ந்த மனிதர்களின் சிதைவை ஆழமாகப் பேசுகிறார். இவரின் முன்னைய இரண்டு நாவல்களின் தலைப்புகளே (சிறகுகள் முறியும் மானுடக் கனவுகள், விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை) இதனை உறுதிப்படுத்துகின்றன.

‘மண்புழுக்கள்’ நாவல் மலேசியத் தமிழ் இலக்கிய நாவல் உலகில் முக்கியமான படைப்பாகும். சஞ்சிக் கூலிகளாக மலையகம் வந்து காட்டையும் மேட்டையும் திருத்தித் தோட்டக்காடுகளின் லயங்களில் முடங்கிப்போனவர்களின் கதையை, நம் முன்னோர்களின் வேர்களின் விலாசங்களை ஆவணமாக்கியிருக்கும் சீ.முத்துசாமியின் முயற்சி பாராட்டுக்குரியது.

இருபது ஆண்டுகள் எழுத்து வனவாசத்திற்குப் பிறகு இத்தகைய படைப்பை இவரால் தரமுடியுமென்றால் தொடர்ச்சியான எழுத்துத் தவம் மேற்கொண்டால் இன்னும் சில இலக்குகளை இவரால் அடையமுடியுமென்று உறுதியாய்த் தெரிகிறது.

முந்தைய கட்டுரையானையுலகம்
அடுத்த கட்டுரைதூயனின் ’இருமுனை’ -நாகப்பிரகாஷ்