அயினிப்புளிக்கறி -ஒரு கடிதம்

5

அயினிப்புளிக்கறி  [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

அயினிப்புளிக்கறி புளிப்பு கசப்பு இனிப்பு அனைத்தும் கலந்த சுவையான காதல் கதை. கை சாட்டை, நாக்கு சாட்டை – பளீர், சுளீர். காதலில் முடிவெடுக்கும் திறன் மிக முக்கியம். சொற்களும் சாட்டைகளும் சம்பவங்களும் சுழன்று சுழன்று காதலின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றது.

 

ஜெப்ரி ஆர்ச்சரின் இரண்டு காதல் சிறுகதைகள் நினைவுக்கு வருகிறது. Love at First Sight சிறுகதையில் நாயகன் ரயில் நிலையத்தில் நிற்கிறான். முக்கியமான வேலை. நல்ல சம்பளம். நேர்முக தேர்வுக்கு செல்ல வேண்டும். தனது வாழ்க்கையை மாற்ற போகும் நாள். அப்போது எதிர் பிளாட்பாரத்தில் ஒரு அழகிய பெண் வந்து நிற்கிறாள். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். காதலா வேலையா என்று அவன் குழம்பும் வேளையில் நடுவில் ரயில் வந்து நிற்கின்றது. அப்போது அவன் எடுக்கும் முடிவு , அதை ஒரு பிரமிக்க வைக்கும் சிறுகதையாக்கி விடுகிறது.

 

Old Love என்றொரு சிறுகதை. oxford கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்க வரும் மாணவன், மாணவி. கண்டதும் மோதல். படிப்பில் போட்டி.பொறாமை. இலக்கிய சண்டைகள். ஒரு கட்டத்தில் இந்த மோதல்கள், கசப்புகள் கனிந்து காதலாகிறது. திருமணம் செய்து ஈருடல் ஓருயிராக வாழ்கிறார்கள். அதே கல்லூரியில் பேராசிரியர் பணி. ஒரு நாள் நாயகனுக்கு செய்தி வருகிறது , மனைவிக்கு ஹார்ட் அட்டாக் என்று. அப்போது அவர் எடுக்கும் அதிர்ச்சி முடிவு , அதை ஒரு மறக்க முடியாத சிறுகதையாக்கி விடுகிறது.

 

அயினிப்புளிக்கறி – ஆசான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரது வாழ்வை ஈர்ப்புடன் வைத்திருக்கிறது. கடைசியில் அவர் சென்று சேரும் ஒரு குடிலில், கிணறு, தென்னை மரம், நிலா அனைத்தும் இருக்கிறது.  பாரதியின் காணி நிலம் வேண்டும் கவிதை போல. பக்கத்தில் ஒரு துணை மட்டும்தான் இல்லை. விதி அவரது முதல் மனைவியிடம் மீண்டும் இழுத்து செல்ல, அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். சுபம்.

 

நன்றி,

அன்புடன்,

ராஜா.

 

 

முந்தைய கட்டுரைதூயன் சிறுகதைகள்
அடுத்த கட்டுரைவைரம்