வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65

ஏழு : துளியிருள் – 19

fire-iconஅஸ்தினபுரியின் கோட்டை கரிய கடல்அலை உறைந்ததுபோல தெரியத்தொடங்கியது. அதன் உச்சிமாடங்களில் அமைந்திருந்த முரசுகளில் ஒன்றின் தோல்வட்டத்தில் பட்ட காலையொளி அவர்கள் கண்களை வெட்டிச்சென்றது. முற்ற முகப்பில் முகபடாம் அணிந்து நின்றிருந்த பட்டத்து யானையின் உயர்ந்த மருப்பை தொலைவிலேயே பிரதிவிந்தியன் கண்டான். “அதன் பெயர் அங்காரகன் அல்லவா, இளையோனே?” என்று திரும்பி சுருதசேனனிடம் கேட்டான். “ஆம், ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டிருக்கிறது” என்றான் சுருதசேனன். “நம்மை வரவேற்க அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரே நேரில் வந்ததற்கு இணை அது” என்று பிரதிவிந்தியன் சொன்னான். முகம் மலர்ந்து நோக்கி “மாமன்னர் ஹஸ்தியும் குருவும் நம்மை வாழ்த்துவதுபோல” என்றான்.

கங்கைக்கரையிலிருந்து அணியூர்வலமாக கிளம்பியபோதே பிரதிவிந்தியன் முகம் மலர்ந்து உடல் உவகையால் நிலையழிய தேர்த்தட்டில் ததும்பியவாறு நின்றான். இருபுறமும் கடந்துசென்ற காடுகளை திரும்பிப்பார்த்து “இனிய காடுகள்! நம் தந்தையர் சிறுவர்களாக இங்கு விளையாடியிருப்பார்கள்” என்றான். பறவைகளின் குரல்களை நோக்கி “பறவைகள் பிறந்து வளர்ந்து இறந்துகொண்டே இருக்கின்றன. அவற்றின் குரல்கள் மாறுவதே இல்லை. அவை ஒருவகை வேதங்கள் என்று நூல்கள் சொல்கின்றன. இளையோனே, நம் மூதாதையர் மைந்தர்களாகி கங்கை நீராடி களித்த அக்காலத்திலும் இதே பறவை ஒலிகள் மாறாது எழுந்திருக்குமல்லவா?” என்றான்.

அவனுடைய உவகைத் ததும்பலை புன்னகையுடன் பார்த்தபடி சுருதசேனன் தேர்த்தட்டில் நின்றுகொண்டிருந்தான். அவ்வாறு நிலைமீறும்போதுகூட கற்ற நூல்களின் வரிகளே அவன் நினைவில் எழுகின்றன என்று எண்ணிக்கொண்டான். “தாங்கள் அமர்ந்துகொள்ளலாம், மூத்தவரே. அஸ்தினபுரிக்கு இன்னும் நெடுந்தொலைவு இருக்கிறது” என்றான். “என்னால் அமரமுடியவில்லை. சிறகிருந்தால் இங்கிருந்து பறந்து சென்று நகருக்குள் இறங்குவேன். இளையோனே, இந்திரப்பிரஸ்தம் எனக்கென கட்டப்பட்ட நகர் என்று அன்னை என்னிடம் இளமையிலேயே சொல்லியிருக்கிறார். நானும் அவ்வாறே எண்ணி பல நூறு முறை அந்நகரை சுற்றி வந்திருக்கிறேன். ஆனால் அஸ்தினபுரி எனக்களிக்கும் உவகையையும் உரிமையுணர்வையும் இந்திரப்பிரஸ்தம் அளித்ததில்லை” என்றான்.

அவன் அஸ்தினபுரியை அகத்தில் கண்டுகொண்டிருக்கிறான் என முகம் காட்டியது. “இங்கு நான் ஐந்து முறையே வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் அன்னைமடி நோக்கிச்செல்லும் குழவி என்றே உணர்கிறேன்” என்றான். சுருதசேனன் “ஆம், அஸ்தினபுரியே நம் அனைவருக்கும் தொட்டில்” என்றான். “எதன்பொருட்டு இந்தப் பூசல்? இந்நகரை வென்றடையத்தான் வேண்டுமா? இதில் இப்படி முறைமைப்படி நுழையும் உரிமைக்கு அப்பால் என்ன வேண்டும்?” என்றான் பிரதிவிந்தியன். “நுழைய ஒப்புதல் இல்லையென்றாலும்தான் என்ன? என்னுள் வாழும் இத்தொல்நகர் எப்போதேனும் அழியுமா என்ன?” சுருதசேனன் புன்னகைத்தான்.

யுயுத்ஸுவும் லட்சுமணனும் உபகௌரவர்களும் புரவிகளில் முன்னால் சென்றனர். அவர்களின் தேர் தொடர்ந்தது. அதற்குப் பின்னால் சேடியரும் சூதர்களும் இருந்த தேர்கள் வந்தன. சௌனகரும் தௌம்யரும் கருணரும் தனித்தனி மூடுதிரை தேர்களில் தொடர்ந்து வந்தனர். பிரதிவிந்தியன் “இந்த மணநிகழ்வு என்பது மேலும் உவகையூட்டுகிறது. நான் நகர் நுழைந்ததுமே மணநிகழ்வை முறைப்படி அறிவித்துவிடுவார்கள் என்று எண்ணுகிறேன்” என்றான். “கிருஷ்ணையை சிறுமியாக பார்த்திருக்கிறேன். கருமுத்து போன்றிருப்பாள். அவள் நம் அன்னையின் சிற்றுரு என்று சூதர்கள் பாடியிருக்கிறார்கள். அன்னையின் பெயரே அவளுக்கும். அன்னையைப்போலவே கனவு நிறைந்த நீண்ட விழிகள் கொண்டவள். சென்றமுறை பார்த்தபோது அவள் குழல் இடைவரை வளர்ந்திருந்து. சிறுமியாக இருப்பினும் நாணத்துடன் புன்னகைக்கவும் தலைகவிழவும் கற்றிருந்தாள். அவள் கைகளை பற்றிக்கொண்டு விரைந்து பேரழகியாகிக்கொண்டிருக்கிறாய் கிருஷ்ணை என்று சொன்னேன். புன்னகைத்து உடல் வளைத்தாள்.”

உரக்க நகைத்து “கௌரவர் குடியில் பெண்ணெனப் பிறப்பது நல்லூழா தீயூழா என்று தெரியவில்லை. அவள் அத்தை நூற்றுஅறுவருக்கு ஒரு தங்கை. இவள் ஆயிரத்துஒன்பதின்மரின் ஒரே இளையோள்” என்றான். சுருதசேனன் “அத்தனை தந்தையரும் உடன்பிறந்தாரும் கொண்டவள் ஆண் என முற்றுருக்கொண்டு அறிபவர் அவள் ஒருமுறைகூட அணுகியறியாத ஒருவர்” என்றான். பிரதிவிந்தியன் திரும்பி நோக்கி “ஆம், அது அவ்வாறே. பெண் செல்நிலத்துச் செடி” என்றபின் “அவரை அவள் பார்த்ததே இல்லையா?” என்றான். “இல்லை என்று சொன்னார்கள்” என்றான் சுருதசேனன்.

பட்டத்து யானைக்கு அருகே முத்துத்தொங்கல்கள் காற்றில் ஆட வெண்பட்டு திரைச்சீலைகள் நெளிய அரசத்தேர் ஏழு வெண்புரவிகள் பூட்டப்பட்டு ஒருங்கி நின்றிருந்தது. கவச உடையணிந்திருந்த நூற்றெட்டு காவலர்கள் இருபுறமும் நிரைவகுத்திருந்தனர். இசைச்சூதரும் மங்கலப்பரத்தையரும் அமர்ந்த தேர்கள் முன்னரே ஒருங்கியிருந்தன. தொலைவில் அவர்களின் அணி நெருங்குவதைக் கண்டதுமே கோட்டைமேல் முரசுகள் ஓசையிட்டன. கீழே மங்கலச் சூதர்கள் தேர்களில் எழுந்து நின்று இசை பெருக்க அது ஒன்றுக்குள் ஒன்றென இதழ்களாக விரிந்து முகமுற்றத்தை நிரப்பியது. அங்கு கூடியிருந்த படைவீரர்கள் உரத்த குரலில் “மாமன்னர் யுதிஷ்டிரர் வாழ்க! பேரறச்செல்வர் வாழ்க! குருகுடி மூத்தோன் வாழ்க! இளவரசர் பிரதிவிந்தியன் வாழ்க! பொன்றாப்புகழ் பாண்டவமைந்தர் வாழ்க! மின்கொடி வாழ்க!” என்று குரலெழுப்பினர்.

பிரதிவிந்தியன் தேர்த்தட்டில் கைகூப்பி நிற்க முகமுற்றத்தை அடைந்து சற்றே வளைந்து தேர் நின்றது. அங்கு காத்து நின்றிருந்த கனகர் இரு சிற்றமைச்சர்கள் சூழ கைகூப்பியபடி அணுகி வந்து “வருக இளவரசே, பேரரசர் யுதிஷ்டிரரின் சிற்றுருவென தாங்கள் இந்நகர் நுழையவேண்டுமென்று அஸ்தினபுரி கோருகிறது” என்றார். “ஆம், நான் எந்தையால் அனுப்பப்பட்ட தூதுப்பறவை. அவர் சொல் என்னிடம் உள்ளதனால் நான் அவரும் ஆவேன்” என்றான் பிரதிவிந்தியன்.

மரப்பீடம் கொண்டுவைக்கப்பட பிரதிவிந்தியன் இறங்கி அஸ்தினபுரியின் மண்ணைத் தொட்டு சென்னிசூடியபின் இருபுறமும் நின்றிருந்த வீரர்களை நோக்கி புன்னகைத்து அணித்தேர் நோக்கி நடந்தான். யுயுத்ஸுவும் லட்சுமணனும் தங்கள் புரவிகளிலிருந்து இறங்கிவந்து அவன் இருபுறமும் நின்று அணித்தேரில் ஏறும்படி பணிந்து கைகாட்டினர். தேர்முகப்பில் அவன் ஏறியபின் சுருதசேனனிடம் “ஏறிக்கொள், இளையோனே” என்றான். “இல்லை மூத்தவரே, அத்தேரில் தாங்கள் மட்டும் நின்றிருப்பதே முறை” என்றான் சுருதசேனன். யுயுத்ஸு நகைத்து “நீயும் ஏறிக்கொள், மைந்தா. அருணனின்றி கதிரவன் விண்ணில் தோன்றுவதில்லை என்பார்கள்” என்றான். “ஆம், ஒருபோதும் தம்பியரின்றி மூத்த தந்தையை எவரும் பார்த்ததில்லை என்று கேட்டிருக்கிறேன். தேர்த்தட்டில் அவர் மட்டும் நின்றால் அப்பெருங்குறையை நகர் மக்கள் உணரக்கூடும்” என்றான் லட்சுமணன்.

சுருதசேனன் சிரித்தபடி ஏறி பிரதிவிந்தியனின் வலப்பக்கம் பின்னால் நின்றுகொண்டான். கனகர் கைகாட்ட அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் கவச வீரன் கரிய புரவியிலேறி முதலில் சென்றான். இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்க் கொடியுடன் பிறிதொரு வீரன் குதிரையில் அவனை தொடர்ந்தான். மங்கலப்பரத்தையர் ஏறிய தேர் மலர்களை வீசியபடி செல்ல அதைத் தொடர்ந்து இசைச்சூதர்களின் தேர்கள் சென்றன. கவச உடையணிந்த வீரர்களின் நிரை உருகிய வெள்ளிப்பெருக்கென செல்ல தொடர்ந்து மாலையின் பதக்கம் என பட்டத்து யானை மருப்பசைத்து உடல் ஊசலாட்டி சென்றது. அதன் மேல் அமர்ந்திருந்த வீரர்கள் மங்கலமுரசை ஒலித்து கொம்பூதியபடி சென்றனர்.

நான்கு நிரைகளாக அணியுடை அணிந்த காவலர் மின்னும் படைக்கலம் ஏந்திச்செல்ல அதன்பின் பிரதிவிந்தியனின் தேர் சென்றது. தொடர்ந்து யுயுத்ஸுவும் லட்சுமணனும் புரவிகளில் சென்றனர். தௌம்யரும் கருணரும் சௌனகரும் சென்ற தேர்களுக்குப்பின் மேலும் அஸ்தினபுரியின் படைநிரை தொடர்ந்தது. அணிநிரை சற்று வளைந்தபோது சுருதசேனன் அதன் நீண்ட வளைவின் மறுமுனையில் வந்துகொண்டிருந்த சீர்வரிசை கொண்ட ஏழு வண்டிகளை பார்த்தான். பொன் இருந்த வண்டியில் குபேரனின் கொடியும் மங்கலப்பொருட்கள் இருந்த வண்டிகளில் கங்கையின் கொடியும் பறந்தன.

அவர்களின் அணிவரிசை நகருக்குள் நுழைந்ததும் உள்முற்றத்தில் தலைகளும் உடல்களுமெனச் செறிந்திருந்த அஸ்தினபுரியின் நகர்மக்களிடமிருந்து வாழ்த்தொலி எழுந்து கோட்டைச்சுவர்கள் நடுக்குற்றன. “அறம் மீள்க! பேரறத்தான் நகர் மீள்க! என்றுமுள குருவழி வெல்க! மின்கதிர்க்கொடி எழுக! ஐவருக்கும் முதல்வன் நகரை அணி செய்க! யுதிஷ்டிரர் வெல்க! பிரதிவிந்தியன் வெல்க!” என்று வாழ்த்தி கூச்சலிட்டனர். களிவெறிகொண்ட மக்கள் இருபுறமும் தங்கள் மேலாடைகளையும் தலைப்பாகைகளையும் தூக்கி காற்றில் வீசி கைவிரித்து குதித்து பித்துகொண்டாடினர். புடைத்த நரம்புகளுடன் தொண்டைகள் அதிர்ந்தன. பிதுங்கிய விழிகளும் விரிந்த பற்களுமாக முகங்கள் ஒவ்வொன்றும் தெய்வம் கொண்டிருந்தன.

தேர்த்தட்டில் நின்ற பிரதிவிந்தியன் முதலில் பேருவகையுடன் கொந்தளித்த முகங்களை பார்த்தான். பின்னர் அவன் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. “இளையோனே, ஒவ்வொருவரும் வெறி கொண்டிருக்கிறார்கள்” என்றான். “ஆம் மூத்தவரே, அவர்கள் நம் தந்தையை பார்க்கிறார்கள்” என்றான் சுருதசேனன். “இந்த உணர்வெழுச்சியை என்னால் தாள இயலவில்லை. இதற்கு இலக்காகும் அளவுக்கு நான் பெரியவனல்ல” என்றான். “இது நாம் கொள்ளும் ஓர் அவைநடிப்பு. இங்கு நீங்கள் பிறிதொருவரென தோன்றுகிறீர்கள். அவ்வாறே நின்றிருங்கள்” என்றான் சுருதசேனன். “என்னால் இயலவில்லை. தன் ஆத்மாவில் ஒரு துளியையாவது அளிக்காமல் எவரும் நடிக்க இயலாது. இத்தனை உள்ளங்கள் எண்ணும் அப்பேரறத்தானாக என்னை எண்ணுவதே பதறவைக்கிறது. நான் எளியவன். சிறுமைகளும் ஐயங்களும் விழைவுகளும் கொண்டவன்” என்றான் பிரதிவிந்தியன்.

“மூத்தவரே, தங்கள் முகம் துயர்கொண்டிருக்கிறது. அது மலர்ந்திருக்கட்டும்” என்று சுருதசேனன் சொன்னான். பிரதிவிந்தியன் “அத்தனை பேராலும் வணங்கப்படும் தெய்வமென நின்றிருத்தல் மானுடருக்கு இயல்வதல்ல. ஆகவேதான் கருவறைகளில் கல்லை வைக்கிறார்கள்” என்றான். தேர்த்தட்டைப் பற்றிய கைகள் நடுங்க “இளையவனே, நான் விழுந்துவிடுவேன்” என்றான். அவன் உடல் வியர்வையில் பளபளத்தது. “அமருங்கள்” என்றான் சுருதசேனன். பிரதிவிந்தியன் தலைசுழன்ற தடுமாற்றத்துடன் பீடத்தில் அமர்ந்தான்.

தெருக்களெங்கும் சூழ்ந்துநின்ற பெண்கள் கைநீட்டி கதறி அழுதனர். நெஞ்சில் அறைந்து கூச்சலிட்டனர். நிலத்தில் அமர்ந்து மண்ணை அறைந்தும் அம்மண்ணை அள்ளி தங்கள் நெற்றியில் அணிந்தும் விழிபெருக்கினர். உப்பரிகைகளில் திண்ணைகளில் காவல்மாடங்களின் விளிம்புகளில் எங்கும் தங்களை மறந்து கதறி கூவி கலுழ்ந்து கொப்பளிக்கும் மானுடர். அவர்களின் அழுகையால் இருபுறமும் எழுந்த மாளிகை நிரைகள் அனைத்தும் மெழுகென உருகி வழிவதுபோலத் தோன்றியது. மரங்களின் இலைகள் ஒவ்வொன்றும் துடிதுடித்து அவ்வழுகையை தாங்களும் எழுப்பின.

பிரதிவிந்தியன் மெல்ல நிமிர்ந்தான். பின்னர் எழுந்து இரு கைகளையும் கூப்பியபடி சிலைபோல் நின்றிருந்தான். அஸ்தினபுரியின் உள்கோட்டை முகப்பில் அவர்கள் அணிநிரையைக் கண்டதும் முரசொலிகள் எழுந்தன. “அணுகிவிட்டோம்” என்றான் சுருதசேனன். மெல்ல உடல் தளர்ந்து பிரதிவிந்தியன் திரும்பி “இளையோனே, இப்போது அறிந்தேன். இங்கு நின்றிருத்தல் மிக எளிது” என்றான். சுருதசேனன் அவனை நோக்க “அவர்களால் வணங்கப்படுபவன் என்று எண்ணுகையில் நம் கால் தளர்கிறது. ஆனால் இங்கு சூழ்ந்து கைகூப்பி கண்ணீர்விடும் இம்மானுடப் பெருக்கு ஒரு பெருந்தெய்வம் என்றும், அதன் முன் கைகூப்பி நின்றிருக்கும் எளிய அடியவன் மட்டுமே நான் என்றும் எண்ணும்போது நம் அகம் நிறைவுகொள்கிறது. நம்மை காக்கவும் வழிநடத்தவும் தெய்வம் ஒன்று இதோ ஓங்கி நிற்கிறது என்று உணர்கையில் எழும் நம்பிக்கையும் நிறைவும் நம்மை ஆற்றல் கொண்டவர்களாக்குகிறது” என்று பிரதிவிந்தியன் சொன்னான்.

“இவர்கள் உருகி அழுவது என்னையோ எந்தையையோ எண்ணி அல்ல” என்று அவன் தொடர்ந்தான். “அறமென இவர்கள் நம்பும் ஒன்றை மானுட உருவென ஆக்கி எங்களுக்கு அளிக்கிறார்கள். அது இத்தருணத்தில் நான். நேற்று என் தந்தை. முன்நாளில் யயாதி, பரதன், ஜனகன், ராகவ ராமன். இளையோனே, நாளை பிறிதொருவர். என்றும் இம்மண்ணில் எவரோ அவ்வுரு கொண்டிருப்பர். தான் கொண்டிருக்கும் அவ்வுரு உருவற்று இங்கு நின்று ஆளும் மாறா நெறியொன்றின் மாற்றுருவே என்று அவன் உணர்ந்தான் என்றால் அடியவனாவான். அப்பணிவால் நிகரற்ற ஆற்றல் பெற்றவனாவான்.”

fire-iconஅவர்களின் தேர் அஸ்தினபுரியின் அரண்மனைக்குள் சென்று முகப்பு முற்றத்தில் நின்றது. அங்கு விதுரர் அவர்களுக்காக காத்திருந்தார். அஸ்தினபுரியின் மங்கல இசைச்சூதரும் தாலமேந்திய சேடியரும் சூழ நின்றனர். தேரிலிருந்து இறங்கிய பிரதிவிந்தியன் சென்று அவர் காலடியை வணங்கினான். வாழ்த்துச் சொற்களை ஓசையின்றி முணுமுணுத்தபடி கண்களில் நீர் வழிய அவனை அள்ளி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் விதுரர். தன்னை வணங்கிய சுருதசேனனை பிறிதொரு கையால் தோளோடு அணைத்துக்கொண்டார். மங்கல இசையும் குரவையொலியும் எழ ஏழு வைதிகர்கள் முன்னால் வந்து நீர்தெளித்து அவர்களை வாழ்த்தி வரவேற்றனர்.

சௌனகரை நோக்கி விதுரர் இரு கைகளையும் நீட்ட சௌனகர் கண்ணீருடன் பாய்ந்து சென்று அவரை அணைத்துக்கொண்டார். அவர்கள் மேலும் மேலும் தழுவி இறுக்கிக்கொண்டனர். பெருமூச்சுகளும் கண்ணீருமாக மெல்ல தளர்ந்ததும் தௌம்யரை நோக்கி கைகூப்பி “மீண்டும் இந்நகரில் நாங்கள் ஆற்றிய வேள்விப்பயன் அனைத்தும் நகர் புகுந்திருக்கிறது, தௌம்யரே” என்றார் விதுரர். தௌம்யர் புன்னகையுடன் “இந்நகரிலிருந்து என்றும் நான் விலகியதே இல்லை என்று உணர்கிறேன், அமைச்சரே” என்றார்.

சௌனகர் “ஆம், நுழைந்த முதற்கணம் நான் அதையே உணர்ந்தேன். இந்நகரையே செல்லுமிடங்களிலெல்லாம் நடித்துக்கொண்டிருந்திருக்கிறேன். இங்குதான் வாழ்கிறேன்” என்றார். “உங்கள் சொற்கள் இங்கு எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன, அமைச்சரே” என்றார் விதுரர். “ஒவ்வொரு முறையும் அரசுசூழ்கையில் கேளா ஒலியாக உங்கள் எண்ணத்தையும் நான் உணர்வதுண்டு. உங்கள் சொல்லில் முளைத்த ஒரு சிற்றமைச்சர் நீங்கள் சொல்லக்கூடிய ஒன்றை அவையுரைப்பதும் வழக்கம். உங்கள் மூதாதையரால் வழிநடத்தப்பட்டது இவ்வரண்மனை. இக்கொடிவழி இருக்கும் வரை உங்கள் குடிகளும் குடித்தொடரும் உடனிருக்கும்” என்றார்.

சௌனகர் “அந்தணர் தெருவுக்குச் சென்று அங்குள்ள என் சிற்றில்லத்தின் மண்திண்ணையில் அமரவேண்டும். உண்மையில் அஸ்தினபுரிக்கு தூது செல்லவேண்டும் என்று அரசர் சொன்னபோது என் உள்ளத்தில் எழுந்ததே எனது அச்சிற்றில்லம்தான்” என்றார். தௌம்யர் “எனக்கென்று அமைக்கப்பட்ட தவக்குடில் இந்நகரின் மேற்கு எல்லையில் உள்ளது. அங்கு என் மாணவர் எழுவர் இப்போதும் உள்ளனர். இன்றிரவு நான் அவர்களுடன் அமரவேண்டும்” என்றார்.

“அரண்மனைக்கு வருக, சான்றோரே!” என்று அவர்களை விதுரர் அழைத்துச்சென்றார். விதுரர் “நேராகவே நாம் அவைக்குச் செல்கிறோம், இளவரசே” என்றார். “அங்கு தங்களுக்காக அரசரும் பேரரசரும் பிதாமகரும் ஆசிரியர்களும் காத்திருக்கிறார்கள். வருக!” என தோள்பற்றி அழைத்துச் சென்றார். யுயுத்ஸுவும் லட்சுமணனும் அவர்களைத் தொடர்ந்தனர்.

அஸ்தினபுரியின் அவைக்கூடத்தை அவர்கள் நெருங்குகையில் அங்கு நின்றிருந்த இசைச்சூதர் இசையெழுப்பினர். வீரர்கள் சேர்ந்த முழக்கமாக வாழ்த்தொலி எழுப்பினர். பிரதிவிந்தியனை அணைத்து அழைத்துச் சென்ற விதுரர் “வருக இளவரசே, இது தங்கள் அவைக்கூடம்” என்று உள்ளே செல்ல கைகாட்டினார். பிரதிவிந்தியன் திரும்பி சுருதசேனனை பார்த்தபின் கண்மூடி ஒருகணம் வேண்டிக்கொண்டு உணர்வெழுச்சியால் அழுவதுபோல மாறிவிட்ட முகத்துடன் கைகூப்பியபடி அவைக்குள் நுழைந்தான்.

அவனுக்கு வலப்பக்கம் சுருதசேனனும் இடப்பக்கம் லட்சுமணனும் நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் விதுரரும் யுயுத்ஸுவும் செல்ல தொடர்ந்து தௌம்யரும் கருணரும் சௌனகரும் சென்றனர். பிரதிவிந்தியன் அவை நுழைந்ததும் பீடங்களில் அமர்ந்திருந்த குடிகளும் படையினரும் வணிகரும் ஒற்றை அலையென எழுந்து அவனை வணங்கினர். “அறச்செல்வர் அவைபுகுக! யுதிஷ்டிரர் வாழ்க! குருகுலத்து மைந்தர் பிரதிவிந்தியன் வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. அவையிலும் பலர் விழிநீர் வழிய விம்மிக்கொண்டிருந்தனர்.

கைகூப்பியபடி அவை நடுவே வந்து மும்முறை தலைவணங்கிய பிரதிவிந்தியன் பீஷ்மரை அணுகி எட்டுறுப்புகளும் நிலம்தொட விழுந்து வணங்கினான். அவர் குனிந்து அவன் தலையை மெல்ல தொட்டார். பிரதிவிந்தியன் எழுந்து “தங்களைப் பணியும் பேறுபெற்றேன், பிதாமகரே” என்றான். அவருடைய ஒரு கண் சற்று கீழிறங்கி அதில் மட்டும் நீர் நிறைந்திருந்தது. மேலும் மெலிந்து மேலும் உயரம் கொண்டதுபோல் தோன்றினார். முகத்தில் மாறாத துயர் ஒன்று தங்கியிருப்பது போலிருந்தது. தாடியிலும் குழலிலும் மயிர் பெருமளவு உதிர்ந்து, கண்கள் பழுத்து, கீழிமைத் தசைகள் வளையங்களாகத் தொய்ந்து, வாய் முழுமையாக உள்ளடங்கி, கழுத்தும் தோள்களும் வற்றி தொன்மையான ஓவியங்களில் தெரியும் அருந்தவத்தில் உடலுருகிய முனிவர் போலிருந்தார்.

சுருதசேனன் வணங்கியபோதும் அவர் விழிகள் எவ்வுணர்ச்சியும் காட்டவில்லை. வாழ்த்தியபோது முகம் கனிவுகொள்ளவும் இல்லை. ஒவ்வாமையுடன் விலகி நிற்பவர்போல பிறிதெங்கிருந்தோ வந்து அனைத்தையும் திகைப்புடன் நோக்குபவர்போல தோன்றினார். துரோணர் அவர்கள் வணங்கியபோது “வெற்றியும் சிறப்பும் கொள்க!” என்று வாழ்த்தினார். கிருபரை வணங்கியபிறகு பிரதிவிந்தியன் அவையில் அமர்ந்திருந்த சகுனியை அணுகி கால்தொட்டு சென்னிசூடினான். “வெல்க! நிறைக!” என அவர் வாழ்த்தினார். கணிகரை வணங்கிவிட்டு அவைமேடை நோக்கி சென்றான்.

மேடையில் அவன் ஏறுவதற்கு முன்னரே துரியோதனன் எழுந்து நின்றுவிட்டிருந்தான். அவன் துரியோதனனை அணுகி கால்களைத் தொட்டு தலைகொண்டான். துரியோதனன் அவன் தோள்களைப்பற்றி எழுப்பி “வெற்றியும் சிறப்பும் கொள்க! குடிவழிகள் பொலிக!” என்று வாழ்த்தியபின் தன் பெரிய கைகளால் அவன் தோள்களை வளைத்து இறுக்கிக்கொண்டான். சுருதசேனன் வந்து கால்தொட்டு வணங்க அவனை வாழ்த்தி பிறிதொரு கையால் உடல் சேர்த்துக்கொண்டான்.

அவை தொடர்ந்து வாழ்த்தொலி எழுப்பியபடியே இருந்தது. துரியோதனன் அமர்ந்ததும் வாழ்த்தொலிகள் மெல்ல அமைந்தன. இருவரையும் இரு பக்கமும் நிறுத்தியபடி “மீண்டும் ஓர் இனிய நாள். இந்த அவை என் இரு மைந்தரால் புத்தழகு கொள்கிறது” என்று துரியோதனன் சொன்னான். விதுரர் “இன்றே அவையில் இளவரசி கிருஷ்ணையின் மணநிகழ்வை முறைப்படி அறிவித்துவிடலாம் என்று எண்ணுகிறேன். கன்னிக்கு மூத்த உடன்பிறந்தானாக நின்று இளவரசர் பிரதிவிந்தியன் மண ஓலையை இந்த அவையில் அறிவிக்கவேண்டும்” என்றார்.

பிரதிவிந்தியன் அவையை நோக்கி கைகூப்பி “ஆம், அதன்பொருட்டே இந்நகர் நுழைந்திருக்கிறோம். என் மூதாதை தெய்வங்கள் இத்தருணத்தை எனக்கு அச்செயலுக்காகவே அளித்தன” என்றான். அவையிலிருந்த அஸ்தினபுரியினர் கைகளைத் தூக்கி அவனை வாழ்த்தினர்.

முந்தைய கட்டுரைவாடிக்கையாளர்கள்
அடுத்த கட்டுரைபோகனின் இருகதைகள் -நந்தகுமார்