வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62

ஏழு : துளியிருள் – 16

fire-iconஅஸ்தினபுரியின் துறைமேடை தொலைவில் தெரிந்ததுமே பலராமர் பதற்றமடைந்தார். வடங்களை மாறிமாறிப் பற்றியபடி தலைகுனிந்து படகின் சிற்றறைக்குள் நுழைந்து “அணுகிவிட்டது” என்றார். “ஆம், ஒலிகள் கேட்கின்றன” என்று விருஷசேனன் சொன்னான். “அங்கு நம்மை வரவேற்க யார் இருப்பார்கள்?” என்றார் பலராமர். விருஷசேனன் “நான் கிளம்பும்போதே அங்கு தங்களை வரவேற்க அரசரின் இளையவர்கள் துர்மதனும் துச்சலனும் வந்திருந்தார்கள்” என்றான். “அவர்கள் இருவரும் எனது மாணவர்கள்” என்ற பலராமர் போகட்டும் என்பதுபோல கையசைத்து “ஆனால் இருவருமே துரியோதனனின் மாற்றுருக்கள். இத்தருணத்தில் நான் முதன்மையாக எதிர்கொள்ளத் தயங்குவது அவன் விழிகளைத்தான்” என்றபின் சலிப்புடன் “நூற்றுவருக்கும் ஒரே விழி” என்றார்.

“நாங்கள் உடனிருக்கிறோம், அரசே. முறைமையிலோ வரவேற்புகளிலோ எந்தக் குறையும் இருக்காது. தாங்கள் நேராக அரசர் அவைக்கு கொண்டுசெல்லப்படுவீர்கள். அங்கு பிதாமகர் பீஷ்மரும் ஆசிரியர் துரோணரும் கிருபரும் பேரரசர் திருதராஷ்டிரரும் பீடம் கொண்டிருப்பார்கள். நீங்கள் உங்கள் முறையீட்டை முன்வைக்கப்போவது அவர்களிடம்தான்” என்றான் விருஷசேனன். “நான் என்ன சொல்லவேண்டும்?” என்று பலராமர் தாழ்ந்த குரலில் கேட்டார். “மூடா, விடாய்நீர் கேட்டேனே? எங்கே?” என்று அப்பால் நின்ற ஏவலனிடம் கூச்சலிட்டார். “இதோ” என அவன் விரைந்தோடினான். “மூடர்கள்” என்றபின் விருஷசேனனிடம் “சொல்!” என்றார்.

விருஷசேனன் யௌதேயனை நோக்க அவன் “மிக விரிவாகவே அதை பேசிவிட்டோம், மாதுலரே. நீங்கள் வந்திருப்பது மதுராபுரியின் அரசராகவோ துரியோதனரின் படைக்கூட்டாளியாகவோ அல்ல என்று முதலிலேயே கூறிவிடுங்கள். யாதவக் குடித்தலைவராகவும் துரியோதனரின் ஆசிரியராகவுமே அவை புகுந்துள்ளீர்கள் என்று அறிவியுங்கள். அதுவே அவையின் சினச் சூழலை சற்று அவியச் செய்யும். குடித்தலைவராக உங்கள் மைந்தர் செய்த பிழைக்கு அவைமுன் தலைகுனிந்து பொறுத்தருளும்படி கோருங்கள். அவையோர் முகங்கள் கனியத் தொடங்கும். விதுரர் உங்களுக்கு உதவும் சொற்களை சொல்வார் என்பதில் ஐயமில்லை” என்றான்.

பலராமர் சிறுவன்போல தலையசைத்தார். யௌதேயன் “அவை அணுக்கம் கொண்டதுமே மூத்தவராக இளவரசியின் விழைவை அரசர் ஏற்கவேண்டுமென்றும் உளம் இணைந்தவர்களைப் பிரிப்பது சான்றோர் அவைக்கு உகந்ததல்ல என்றும் கூறுங்கள். சிறு இடைவெளியைக்கூட அளிக்காமல் அரசரை விழி நோக்கி ஆசிரியராக அவர் மகளை உங்கள் மைந்தருக்கு மணக்கொடையாகக் கேட்பதாக சொல்லுங்கள். அதன்பின்னர் நான் பேசிக்கொள்கிறேன்” என்றான்.

“ஆம், நீ முன்னரும் சொன்னாய். நான்கு படிநிலைகளாக அவைநிகழ்வை முன்னரே உள்ளத்தில் வகுத்துவிட்டேன். உரிய சொற்களை உருவாக்குவதுதான் சிக்கல். எனக்கு எப்போதுமே முன்பு உருவாக்கிக்கொண்ட சொற்கள் நினைவிலெழுவதில்லை” என்று பலராமர் சொன்னார். “நீ ஒன்று செய், என் அருகில் நின்று நான் சொல்லவேண்டிய சொற்களை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இரு. அஸ்தினபுரியின் துறைமேடைவரை செல்வதற்குள் மூன்று முறை அதை சொல்லிவிடமுடியும். எனக்கு அவை உளப்பாடமாக ஆகிவிடும்.”

சத்யசேனன் சிரித்து “அதற்கு அவனே அவையில் கூறிவிடலாமே?” என்றான். “ஆம், அதுகூட நன்று. என்பொருட்டு இவன் பேச முடியுமா?” என்றார் பலராமர். விருஷசேனன் “பேசமுடியும். ஆனால் அது உங்கள் சொற்களின் விளைவை உருவாக்காது” என்று சொன்னான். “ஆமாம், நானே சொல்கிறேன்” என்றார் பலராமர். “சாம்பனின் தந்தை நான். இவன் யாதவனும் அல்ல.” பின்னர் பெருமூச்சுடன் “நான் எவரிடமும் இதுவரை பிழைபொறுக்கும்படி கோரியதில்லை” என்றார். “மைந்தர்பொருட்டே பெரும்பாலான தந்தையர் முதல்முறையாக கைகூப்பி மன்றாடுகிறார்கள், மாதுலரே” என்றான் யௌதேயன்.

அவர்களின் படகு அஸ்தினபுரியின் துறைமுகப்பை அணுகியபோது அங்குள்ள காவல் மாடங்களிலிருந்த முரசுகள் வஞ்சம்கொண்ட களிறுகள்போல உறுமின. கொம்புகள் மும்முறை பிளிறி அடங்கின. அவர்களுக்காக துறைமேடையிலிருந்த படகுகள் இருபுறமும் விலகி முன்னரே வழிவிட்டிருந்தன. அவர்களை எதிர்கொண்டழைத்து துறையணையச் செய்வதற்காக குகர்கள் ஊர்ந்த மூன்று சிறிய படகுகள் கிளம்பிவந்து இருபுறமும் நின்றன. அவற்றிலிருந்த குகர்கள் படகிலிருந்தவர்களிடம் கைகாட்டி படகுத்துறைக்குச் செல்லும்படி வழி கூறினர்.

தொலைவில் படகுத்துறையின் சுங்கநாயகத்தின் மாளிகையின் சிறுமுற்றத்தில் அரச அணித்தேர் ஒன்று நின்றது. அதனருகே புரவிகளும் இரு யானைகளும் நின்றன. யானைகளருகே பாகர்கள் ஏதோ செய்துகொண்டிருந்தனர். அவர்களின் படகு அணைவதைக் கண்டதும் அங்கிருந்து அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி பறக்கும் கம்பத்துடன் கவச உடையணிந்த முதன்மைவீரன் துறைமேடை நோக்கி இறங்கி வந்தான். அவனைத் தொடர்ந்து துர்மதனும் துச்சலனும் அரசணிக்கோலத்தில் வந்தனர். அவர்களுக்கு இருபுறமும் மங்கலஇசை முழங்கியபடி சூதர்கள் வர, தொடர்ந்து சிற்றமைச்சர்கள் இருவரும் நூற்றுவர் படைத்தலைவர் மூவரும் வந்தனர்.

பலராமர் “துச்சலன் என்னை பார்த்துவிட்டான். அவன் உடல் சற்று இறுகுகிறது. என்மேல் கடும்சினம் கொண்டிருக்கிறான்” என்றார். கைகளை இறுக்கியபடி “அவன் என்னிடம் ஒரு சிறு மதிப்பின்மையை காட்டினால்கூட அவன் தலையை பிளப்பேன்” என்றார். விருஷசேனன் “இது வெறும் அரசமுறைமை மட்டுமே, மூத்தவரே. முறைமைச்சொற்கள் அன்றி எதுவும் பேசப்படாது. தாங்கள் கூற வேண்டியவை அனைத்தையும் அவையிலேயே உரைக்கவிருக்கிறீர்கள்” என்றான். பலராமர் “என்ன உரைக்கவிருக்கிறேன்?” என்றார். யௌதேயன் “நான் அவைநுழைவதுவரை மீண்டும் சொல்கிறேன், மாதுலரே” என்றான்.

பலராமர் வெண்சுண்ணத் தசைகள் புடைக்க இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து அழுத்தி, கழுத்தெலும்புகள் சொடுக்கொலி எழுப்ப பெரிய தலையை உருட்டி “என்ன ஒரு இக்கட்டான நிலை!” என்றபடி யௌதேயனிடம் திரும்பி “அனைத்தும் உன்னால்தான். மூத்தவர் சொல்மீறி நீ செய்த துடுக்கின் விளைவை நான் எதிர்கொள்கிறேன். என் வாழ்வில் இதற்கிணையான சிறுமையை இதற்கு முன் சந்தித்ததில்லை” என்றார். “என்ன சிறுமை?” என்றான் விருஷசேனன். “அவர்கள் கைகூப்பி அணைகிறார்கள், நோக்குக!” பலராமர் “அவன் முகத்திலுள்ள இளிவரல் புன்னகையை நான் வெறுக்கிறேன்” என்றார்.

fire-iconபடகு துறைமேடையின் மூங்கில் சுருட்களில் சென்று மோதி சற்று அதிர்ந்து நிற்க வடங்கள் எழுந்து துறைமேடையின் கந்துகளை நோக்கிச்சென்று விழுந்தன. அவற்றை இணைத்துக் கட்டியதும் துறைமேடையிலிருந்து நடைபாலம் சிறு உருளைகளின்மேல் ஓசையின்றி உருண்டு நீண்டு வந்து படகை தொட்டது. அதன் கொக்கிகளை இணைத்தபின் படகுத்தலைவன் பலராமரிடம் “தாங்கள் இறங்கலாம், அரசே” என்றான். பலராமர் யௌதேயனிடம் “இதை நான் எண்ணவில்லை. என் அமைச்சனையும் வரவறிவிக்கும் நிமித்திகன் ஒருவனையும் கொம்பூதி முறைமை முழக்கும் சில காவலர்களையும் அழைத்து வந்திருக்கவேண்டும்” என்றார். “எந்நிலையிலும் தாங்கள் அரசரே” என்று யௌதேயன் சொன்னான்.

துறைமேடையில் நடைபாலத்திற்கு மறுபக்கம் துர்மதனும் துச்சலனும் வந்து கைகூப்பியபடி நின்றனர். மங்கலஇசை சூழ்ந்து முழங்கியது. அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியேந்திய காவலன் முன்னால் வந்து முழந்தாளிட்டு கொடியை ஊன்றினான். பெரிய தலைப்பாகை அணிந்த நிமித்திகன் சிறுகொம்பை ஊதிவிட்டு உரத்த குரலில் “மதுராவின் அரசரை அஸ்தினபுரி பணிந்து வரவேற்கிறது. அவர் வருகையினால் இந்நகர் செழிக்கட்டும். இதன் முடி பொலியட்டும். ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்றான்.

பலராமர் கைகூப்பி வணங்கியபடி நடைபாலத்தின் மீது காலெடுத்து வைத்து மெல்ல நடந்து மறுபக்கம் சென்றார். யௌதேயன் அவருடைய இடக்கைப்பக்கம் சென்று நின்றான். தொடர்ந்து விருஷசேனனும் சத்யசேனனும் சித்ரசேனனும் வந்தனர். துச்சலனும் துர்மதனும் மூன்றடி முன்வைத்து கைகூப்பி தலைவணங்கினர். துச்சலன் “மதுராவின் அரசரை அஸ்தினபுரியின் அரசரும் பேரரசரும் பிதாமகரும் பேரவையினரும் வணங்கி வரவேற்கிறார்கள். அவர்கள்பொருட்டு எங்கள் சொற்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றான்.

பலராமர் முகம் மலர்ந்து அவர்களிருவரின் தலையைத் தொட்டு “வெற்றியும் புகழும் சேர்க! அஸ்தினபுரி வெல்க!” என்றபின் திரும்பி யௌதேயனிடம் “நான் கூறினேன் அல்லவா? இருவருமே எனது மாணவர்கள். நான் கற்பித்த எதையும் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தோள்பெருக்கி கதையில் ஆற்றலைச் செலுத்தும் திறன் கொண்டிருக்கிறார்கள்” என்றார். யௌதேயன் “தெரிகிறது” என்றான்.

பலராமர் துச்சலனின் தோளை ஓங்கி அறைந்து “எப்படி இருக்கிறாய், சோற்றுமல்லா? உன் தோள் மேலும் மும்மடங்கு பெருத்துள்ளதே?” என்றார். துச்சலன் நாணத்துடன் “நான் நன்றாக பயிற்சியும் எடுப்பதுண்டு, ஆசிரியரே” என்றான். அவன் தன் பெரிய தோள்களை சிறுவன்போல குறுக்கியதைக் கண்டு யௌதேயன் புன்னகைத்தான். பலராமர் “என்ன பயின்றாய்? எங்கே கதைப்போரின் முதல் பாடமென்ன? நான் சொல்லித்தந்ததை சொல் பார்ப்போம்” என்றார்.

துச்சலன் துர்மதனைப் பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்தபின் “நான் சொற்களை நினைவு கொள்வதில்லை, ஆசிரியரே” என்றான். “அனைத்து மெய்மையும் சொற்களே. சொல்லற்றவன் வெறும் விலங்கு” என்றபின் பலராமர் துர்மதனிடம் “சரி, நீ சொல் பார்க்கலாம்” என்றார். துர்மதன் சிரித்து “என்னைவிட அவர் அறிவிற்சிறந்தவர். அவருக்கே தெரியவில்லையென்றால் நான் எப்படி சொல்வது?” என்றான். பலராமர் அவன் தோளை ஓங்கி அறைந்து நகைத்தபடி திரும்பி யௌதேயனிடம் “பார்த்தாயா? இப்படித்தான் இருக்கிறார்கள், அடுமனைப் பெருங்கலங்களைப்போல” என்றார்.

விருஷசேனன் “இவர்கள் அனைவரின் அறிவும் அரசரிடம் உறைவதுபோல மைந்தர்களின் நுண்ணுணர்வு மூத்தவரிடம் குடிகொள்கின்றது, அரசே” என்றான். “ஆம், லட்சுமணன் தந்தையைப் போன்றவன். அவனைக் காண்கையில் எல்லாம் நான் இளமைந்தனாக என் முன் துரியன் வந்து நின்றதை நினைவுகூர்வேன்” என்ற பலராமர் “துரியன் நிகரற்றவன். இப்புவியில் அவனுக்கு நிகராக கதைகொண்டு நிற்க எவனுமில்லை. ஆசிரியன் உயிர் துறக்கையில் தன் முதல் மாணவனைதான் எண்ணிக்கொள்வார்கள் என்பார்கள். நான் அவனை எண்ணுவேன்” என்றார்.

அவர் முகம் சிவந்து கண்கள் கனிந்தன. அதை மறைக்கும்பொருட்டு விருஷசேனனிடம் “நீ இவர்களுடன் எப்போதாவது மற்போரிட்டிருக்கிறாயா?” என்றார். “ஆம், அது அடிக்கடி நிகழும்” என்றான் துர்மதன். “அவனது கைகள் மிக நீண்டவை. எங்கள் அடிகள் ஒன்றும் அவன் உடலை எட்டுவதில்லை. நெற்கதிர்களை இலவடிப்பதுபோல அவன் எங்களைத் தூக்கி நிலத்தில் அடிப்பான்” என்றான் துச்சலன்.

பலராமர் மேலும் உரக்க நகைத்து “ஆம், இதே சிக்கல் இவன் தந்தையிடம் போரிடும்போது எனக்கும் உண்டு. இரு கைகளாலும் என் தோளைப் பற்றி ஒரு காதம் அகல நிறுத்திவிடுவான்” என்றார். “மானுடரின் பொதுவான கைகால் நீளம் இவ்வளவுதான் இருக்குமென்று வகுத்து மற்போர் கலை அமைந்துள்ளது. அக்கலை வகுக்காத உயரமும் நீளமும் உடையவர்கள் மண்ணில் பிறக்கையில் இப்படித்தான் ஆகிறது” என்றபின் “செல்வோமா?” என்றார்.

துச்சலன் துர்மதன் இருவரின் தோள்களில் கையை வைத்தபடி “நான் இங்கு வரும்போது உங்கள் இருவரையும் தொலைவிலேயே பார்த்தேன். உங்கள் மூத்தவனே இரு உருக்கொண்டு நின்றதுபோல் உணர்ந்தேன். அவனிடம் எனக்கு ஐயங்களும் தயக்கங்களும் இல்லை. என் மைந்தர் எவரிடமும் அவனுடன் அறிந்த நெருக்கத்தை உணர்ந்ததும் இல்லை” என்றார். துச்சலன் “அதை நாங்கள் அறிவோம்” என்றான். பலராமர் “எங்கிருக்கிறான்?” என்றார். “அவையிலிருக்கிறார்” என்றான் துர்மதன்.

“அவை கூடிவிட்டது அல்லவா? நான் நேரடியாகவே அவைக்கு வந்து பேசுகிறேன். உண்மையில் அதற்கு முன் அவனை தனியாக சந்தித்தால்கூட நன்று. ஆனால் அவையில் உரைக்கும் சொற்களையே நான் பயின்றிருக்கிறேன்” என்றார் பலராமர். “ஆம், தாங்கள் அரச முறைப்படி வந்திருப்பதால் அவையில்தான் சந்திக்கவேண்டும் என்பது மரபு” என்றான் துர்மதன். “எனக்கும் அவனுக்கும் இடையில் மரபென்ன?” என்றபின் பலராமர் திரும்பி யானைகளைப் பார்த்து “அவை அரச யானைகள் அல்லவா? இங்கு துறைமேடையில் துலா இழுக்க அவை வரும் வழக்கமுண்டா?” என்றார்.

“ஆம், அரச யானைகள். அணிபூண்கின்றன” என்று துர்மதன் சொன்னான். “எதற்கு?” என்றார் பலராமர். “இன்னும் சற்றுநேரத்தில் கலிங்கநாட்டு அரசரும் மூன்று இளவரசர்களும் அரசப்படகில் இத்துறைமேடைக்கு வருகிறார்கள். அதன் பின்னர் மாளவ அரசர் வருகிறார். ஷத்ரிய முடிமன்னரை அரசகளிறுகளுடன் அரசகுடியினர் வாளேந்தி வந்து வரவேற்கவேண்டுமென்பது மரபு என்று கணிகர் சொன்னார்” என்றான் துச்சலன்.

பலராமர் குழப்பத்துடன் யௌதேயனைப் பார்த்துவிட்டு “அவர்கள் இப்போது வருகிறார்களா?” என்றார். “ஆம், அதுதான் எங்களுக்கும் சற்று குழப்பமாக உள்ளது. அவர்கள் இன்னும் அஸ்தினபுரி எல்லையை கடக்கவில்லை. ஒழுக்குமுறித்து படகுசெலுத்தி இங்கு வந்து சேர இன்னும் நாலைந்து நாழிகைகள் ஆகும். இப்பொழுதே ஏன் யானைகளை இங்கு கொண்டுவந்து அணிசெய்யத் தொடங்கவேண்டும் என்று தெரியவில்லை” என்றான் துச்சலன். “கணிகரின் ஆணை அது” என்றான் துர்மதன்.

பலராமர் இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து பிசைந்தபடி யானைகளையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தபின் “அவர்கள் எதற்கு வருகிறார்கள்?” என்றார். துர்மதன் “தாங்கள் அறிந்திருப்பீர்கள், இன்று மாலை எங்கள் அரசமகளுக்கு இங்கு மணத்தன்னேற்பு நிகழ்கிறது” என்றான். “யாருக்கு?” என்று பலராமர் கேட்டார். “கிருஷ்ணைக்கு” என்று துர்மதன் சொன்னான். “அவள் மீட்கப்பட்டுவிட்டதால் மீண்டுமொரு மணத்தன்னேற்பு நிகழ்த்த மரபிருக்கிறது. இன்றைய சூழலில் அதை ஒத்திப்போடுவது சரியல்ல, இங்கு வந்திருக்கும் அரசர்களைக்கொண்டு இன்றே நிகழ்த்திவிடுவோம் என்றார் கணிகர்.”

“இன்று அந்தியிலேயே மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது. ஒருசில அரசர்கள் நேற்றும் இன்றுமாக இங்கு வந்துவிட்டனர். சிலர் மாலைக்குள் வந்துவிடுவார்கள். பலர் வரமுடியாமல் போகலாம். ஆனால் அதை எண்ணிப் பயனில்லை” என்றான் துச்சலன். துர்மதன் “வந்தாகவேண்டியவர்கள் கலிங்கரும் மாளவரும்தான். இருவரில் ஒருவரே உண்மையில் வெல்லவிருப்பவர்கள். நல்லூழாக அவர்கள் முன்னரே பாதி வழி வந்திருந்தனர்” என்றான்.

பலராமர் நின்றுவிட்டார். அச்சொற்களை தன்னுள் மேலும் ஒலிக்கவிட்டு பொருள்கொள்கிறார் என்று தோன்றியது. திரும்பி யௌதேயனிடம் “யாருக்கு மணத்தன்னேற்பு என்றார்கள்?” என்றார். “இங்கு இளவரசி ஒருவரே. கிருஷ்ணை” என்றான் யௌதேயன். அவர் குழப்பத்துடன் “அவள் சாம்பனை ஏற்றுக்கொண்டுவிட்டாளல்லவா?” என்று கேட்டார்.

துர்மதன் “ஆம், இதை அவையில் விதுரர் கேட்டார். அதற்கு கணிகர் இளவரசியர் தங்களுக்குகந்த ஆண்களை தனியறைக்காக தேடிக்கொள்வதுண்டு. அதற்கு உடலும் காமமுமே அளவை. மணத்தன்னேற்பு என்பது அரசர் கூடிய அவையில் ஏற்பது. அதற்கு குடியும் நெறியும் நோக்கியாகவேண்டும் என்றார்” என்றான். “குடிநெறிகளின்படி சாம்பர் இளவரசியின் காதலர் மட்டுமே, கணவர் அல்ல என்றார்.”

“என்னடா சொல்கிறாய், அறிவிலி?” என்று பலராமர் அவனை ஓங்கி அறைந்தார். வெடித்தெழுந்த அவ்வோசை அங்கிருந்த அனைவரையும் திடுக்கிட்டு திரும்பிப்பார்க்க வைத்தது. துர்மதன் நிலைதடுமாறி மல்லாந்து கீழே விழுந்தான். “ஆசிரியரே…” என்று அவர் கையைப்பற்றிய துச்சலனை தலைக்குமேல் தூக்கி ஓசையுடன் நிலத்தில் அறைந்த பலராமர் பாய்ந்து கையூன்றி எழுந்த துர்மதனை ஓங்கி உதைத்தார். வலிமுனகலுடன் அவன் சுருண்டு நிலத்தில் விழ எழுந்து அவர் கால்களைப் பற்றிக்கொண்ட துச்சலனை இரு கைகளால் தலைக்குமேல் தூக்கி அப்பால் எறிந்தார்.

யௌதேயன் அவர் கைகளைப்பற்ற அவனை உதறி தொலைவில் வீழ்த்தினார். விருஷசேனன் பாய்ந்து அவர் இரு தோள்களையும் பற்றிக்கொண்டான். அவன் தம்பியர் இருவரும் முன்னால் சென்று அவர் கைகளை பிடித்தனர். அவர்கள் மூவரையும் தூக்கிச் சுழற்றியபடி அவர் சுற்றினார். விருஷசேனனைத் தூக்கி தலைக்குமேல் சுழற்றி முன்னால் நிலத்தில் அறைந்தார். சத்யசேனனையும் சித்ரசேனனையும் ஒருவரோடொருவர் சேர்த்து அறைந்து தூக்கி அப்பாலிட்டபின் எழுந்து அமர்ந்த விருஷசேனன்மேல் பாய்ந்தார்.

இருவரும் கணப்பொழுதில் தோள்கோத்தனர். வெண்மையும் கருமையும் என பெருந்தசைகள் முழுவிசையில் புடைத்து இறுகின. துறைமேடையில் இருந்த அனைவரும் அங்கே ஓடிவந்து சுற்றி நின்றனர். “என்ன நிகழ்கிறது?” “யார் அது?” “மதுராவின் அரசர்” “இளவரசர்கள் இறந்துவிட்டார்களா?” “யாரங்கே!” என்று குரல்கள் எழுந்தன. கீழே விழுந்த யௌதேயனால் எழ முடியவில்லை. பலராமரின் கை அவன் நெஞ்சை அறைந்த இடத்தில் ஒவ்வொரு மூச்சுக்கும் உள்ளிருந்து கடும்வலி எழுந்தது. கையூன்றி மெல்ல உடல் தூக்கி அமர்ந்து அந்த மற்போரை பார்த்தான். இணை வல்லமையுடன் இருவரும் மாறி மாறி அறைந்துகொண்டனர். ஒவ்வொரு அடியோசையும் அவன் உடலை விதிர்க்கச் செய்தன.

பிடிகள் இளகி மரப்பட்டைகள் உரசும் ஒலியுடன் விலகி மூச்சொலியுடன் முன்னால் சென்று கவ்வி மீண்டும் இறுகின. மண்ணை உதைத்து ஒன்றையொன்று தட்ட முயன்று சுழன்றன. நரம்புகள் இறுகிய வேர்கள்போன்ற கால்கள். பலராமரின் பேருடலை விருஷசேனன் தூக்கி தலைமேல் சுழற்றி தரையிலறைந்தான். அந்த அதிர்வை தன்னுடலால் அறிந்து கண்மூடினான் யௌதேயன். அவன் நரம்புகள் அதிர்ந்தன. ஆடையில் சிறுநீர்த்துளி சொட்டியது. கையூன்றி அக்கணமே எழுந்த பலராமர் விருஷசேனனின் தோளை அறைந்தார். அவன் அவர் தொடைமேல் காலூன்றி காற்றில் மேலெழுந்து அவர் தலையை அறைந்தான். நிலைதடுமாறி மீண்டும் விழுந்த பலராமர்மேல் பாய்ந்து விழுந்து அவர் இரு தோள்களையும் கைகளால் பற்றிக்கொண்டு தலையால் அவர் நெஞ்சில் ஓங்கி முட்டினான்.

பலராமர் அவனைப் பற்றியபடி மண்ணில் புரண்டார். இரு உடல்களும் புரண்டு உருண்டு சென்று படிகளில் இறங்கி அப்பால் விழுந்து அவ்விசையில் சற்றே பிரிய பலராமர் தன் முழங்காலைத் தூக்கி விருஷசேனனின் வயிற்றில் மிதித்து அவனை அப்பால் தூக்கி வீசினார். இடக்கையூன்றி வில்கொண்ட பொறி என பாய்ந்தெழுந்து அவன் தலையை அறைந்தார். அவன் எழுவதற்குள் அவன் இரு கைகளையும் பற்றித்தூக்கி அவன் நெஞ்சை தன் முழங்காலால் எற்றினார். அவன் புழுதியில் புரண்டு தப்பி எழுந்தான். அவன் பாய்ந்து அணுக அவர் நிலத்தில் இருந்து பஞ்செனப் பறந்தெழுந்து வலக்காலால் ஓங்கி அவன் தலையை மிதித்தார்.

விருஷசேனன் நீண்ட பேருடல் மண்ணில் அறைபட மல்லாந்து விழுந்தான். கையூன்றி எழமுயன்று தலைசுழல மயங்கிச் சரிந்தான். அவன் தம்பியர் எழுந்து தள்ளாட அவர்களை ஓங்கி அறைந்து வீழ்த்திய பலராமர் திரும்பி இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி மதயானைபோல் பிளிறியபடி சுற்றிவந்தார். நெஞ்சில் அறைந்து “இந்நகரில் என் குலத்தான் கொண்ட பெண்ணை எண்ணி எவன் கால் வைத்தாலும் அவன் என் எதிரி. அவன் நெஞ்சுபிளந்து குருதி அருந்துவேன்! இது என் குல மூதாதையர் மேல் ஆணை!” என்று கூவினார். காலால் நிலத்தை உதைத்து வெறிகொண்டு கூச்சலிட்டார். “இங்கு எவன் நிகழ்த்துகிறான் என் குலமகளுக்கு மணநிகழ்வை என்று நோக்குகிறேன். எங்குள்ளனர் அவர்கள்? எங்கே?”

மத்தகம் உலைத்தபடி எதிர்ப்படுவனவற்றை முட்டித் தள்ளியபடி துறைமேடையிலிருந்து சுங்கமாளிகை நோக்கி சென்றார். அவரைக் கண்டு இருபுறமும் விலகி ஓடிய வீரர்களால் அகன்ற பாதை உருவாயிற்று. சென்ற வழியில் நின்றிருந்த மாட்டுவண்டியொன்றின் நுகத்தை பற்றித்தூக்கி நிலத்தில் அறைந்து மரச்சிம்புகளாக தெறிக்கச் செய்தார். மரத்தூண் ஒன்றை ஓங்கி அறைந்து விரிசலோசையுடன் முறிந்து சரிய வைத்தார். சுங்க மேடைக்கு அவர் சென்றபோது யானையை அணி செய்துகொண்டிருந்தவர்கள் விலகி ஓடினர்.

முதல் யானையை அணுகி அதன் மத்தகத்தின்மேல் தன் கையால் ஓங்கி அறைந்தார். உறுமியபடி அது பின்னகர்ந்தது. அதன் நெற்றிப்பட்டத்தைப் பிடுங்கி அப்பால் வீசினார். அதன் கொம்புகளில் பதிக்கப்பட்டிருந்த பொற்பூச்சுக்குமிழ்களை கிழித்து எறிந்தார். அவர் அணுகியபோது இன்னொரு யானை பின்னால் நகர்ந்து சுங்க மாளிகை முகப்பில் ஏறிக்கொண்டது. அதன் முகபடாமை இழுத்துப்பறித்து கீழே வீசி காலால் மிதித்தார். “எங்கிருக்கிறது அந்த மணப்பந்தல்? கூறுக, எங்கிருக்கிறது அது?” என்று உறுமினார்.

சுங்கநாயகம் தன் அறைக்குள் சென்று உள்ளிருந்து கதவை மூடினர். மாளிகை முகப்பிலிருந்த மரத்தூணை ஓங்கி உதைத்து உடைத்தபின் சரிந்த பாதையிலேறி மேலே சென்றார். யௌதேயன் கையூன்றி எழுந்து தள்ளாடி நடந்து தூண் ஒன்றைப் பற்றியபடி நின்றான். பலராமர் அங்கு நின்றிருந்த புரவிகளில் ஒன்றின் மேலேறி விசையுடன் உதைத்து அதை அஸ்தினபுரிக்குச் செல்லும் சாலையில் விரையச்செய்தார்.

முந்தைய கட்டுரைஇலக்கிய முன்னோடிகளின் தடங்கள்…
அடுத்த கட்டுரைவிஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…