«

»


Print this Post

மையநிலப் பயணம் -3


cave 1

பிம்பேத்கா குகைகளுக்கு முன்மதியப்பொழுதில் சென்று சேர்ந்தோம். இன்றும்கூட பயணிகள் அதிகமாக வருவதில்லை. யுனெஸ்கோ ஆதரவு இருப்பதனால் இவை நன்றாகவே பேணப்படுகின்றன. பிம்பேத்கா குகை ஓவியங்கள் அழகியல்ரீதியாக நான்கு காலகட்டத்தை சார்ந்தவை எனலாம். வரலாற்றுப்பரிணாம ரீதியாக ஏழு காலகட்டங்களாகப் பிரிக்கிறார்கள்.

Cup marks எனப்படும் சிறிய குழிகள் பாறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெடுங்காலமாக அவை இயற்கையாக உருவானவை என்று நம்பப்பட்டு வந்தது. அவற்றிலிருந்த ஒழுங்கையும் ஒத்திசைவையும் கண்டபின் அவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர். மேலும் அடுத்த ஆய்வுகள் அவை விண்மீன்களை கல்லில் பதிவு செய்பவை என்று கண்டுபிடிக்கப்பட்டன. முழக்கோல் நட்சத்திரம் துருவ நட்சத்திரம் போன்ற புகழ்பெற்ற நட்சத்திரக்கூட்டங்கள் பாறைகளை ஏறத்தாழ சரியாகவே குடைந்து வைக்கப்பட்டுள்ளன.

cave 2

அன்று அவர்களுக்கு இவற்றின் நடைமுறை தேவை என்ன என்று தெரியவில்லை. இவற்றைக்கொண்டு எதையேனும் கணித்தார்களா எதையேனும் அடையாளப்படுத்தினார்களா என்று இன்று சொல்ல முடியவில்லை ஆனால் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் வருடங்களுக்கு முன்பு இவை உருவாக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பிம்பேத்கா குகையிலுள்ள இந்த கற்குழிகள் இந்தியாவில் மிகத் தொன்மையான் மானுடப் பண்பாட்டுத் தடங்கள் – அவர்களை மனிதர்கள் என்று சொல்லமுடியும் என்றால்.

ஏறத்தாழ முப்பதாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆண்டுவரைக்கும் தொன்மையான குகை ஓவியங்கள் இரண்டாவது கட்டத்தைச் சார்ந்தவை .இவை பெரும்பாலும் வெண்ணிறப் சுண்ணப்பாறையால் வரையப்பட்டவை. நிரைநிரையாக மேயும் விலங்குகள். பெரும்பாலும் மான்களும் எருதுகளும்தான். திமிலில் சடை முடி செறிந்த ஒருவகையான மான்கள் இங்குள்ளன, அமெரிக்க ஸ்டீர்களைப்போலத் தோற்றமளிக்கின்றன. இந்த மான்கள் இன்று இல்லை வழக்கொழிந்துவிட்டன. இங்குள்ள எருமைத்தோலும் மான் தலையும் கொண்ட விலங்கு பல இடங்களில் ஓவியங்களில் உள்ளது.

3c

விலங்குகளின் திமில்களையும் ஒசிந்த நோக்குகளையும் நிரைநிரையான நடைகளையும் தெளிவாக காட்டுகின்றன இவ்வோவியங்கள். பல ஓவியங்களில் மேலும் விலங்கின் உடம்புக்குள்ளே எலும்புகளை வரைந்திருக்கிறார்கள். எக்ஸ்-ரே பாணி ஓவியங்கள் என்று இவற்றைச் சொல்கிறார்கள். கொன்ற விலங்குகளை அறுத்து அவற்றின் எலும்புகளையும் உள்ளடக்கங்களையும் பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்த எலும்புகள் உள்ளே வரையப்பட்டதை வைத்துதான் இவை நேர்க்காட்சி அல்ல கனவுகளின் பதிவுகள் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மூன்றாவது காலகட்டம் ஐந்தாயிரம் முதல் ஈராயிரம் ஆண்டுகள் வரை தொன்மையானது. காவிச்சிவப்புச் சாயத்தால் வரையப்பட்ட ஓவியங்கள் இவற்றில் பெரும்பாலானவை. இவற்றில் விலங்குக்கூட்டங்கள் மிகுதி. அனைத்துமே வேட்டையாடப்படும் விலங்குகள். வேட்டை விலங்கென தெரிவது ஒரு கரடியும் பதுங்கியிருக்கும் புலியும் மட்டுமே. வேலேந்தி நடனமிடும் பூசகர்கள், பழக்கப்பட்ட யானைகள் போன்றவை வருகின்றன. யானை பழங்குடிகளாலேயே ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழக்கப்பட்டு வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டது என்பதற்கான தடயங்கள் இவை .ஆனால் எங்குமே வண்டிகள் கிடையாது. படகுகளோ பிற ஊர்திகளோ தென்படவில்லை.

நான்காவது கட்டம் வரலாற்றுக்காலகட்டம். மௌரியர் காலத்திலிருந்து கனிஷ்கர் காலகட்டம் வரையிலானது. இப்பகுதிகளில் வடக்கிலிருந்து பேரரசுகள் இங்கு வாழ்ந்த கோண்டு பழங்குடிகள் மீது படையெடுக்கவும் அவர்களை தங்கள் குடிமக்களாக மாற்றவும் செய்துள்ளன. வரிவசூல் தொடங்கியிருக்கிறது. இக்காலகட்டத்தின் ஓவியங்கள் அனைத்திலுமே குதிரைமேல் ஏறி படையெடுத்து வரும் வீரர்களைககாண முடிகிறது. அவர்கள் வேலேந்தியிருக்கும் விதமும் புரவிகள் பாய்ந்து வரும் விசையும் பல குகை ஓவியங்ளில் தீட்டப்பட்டுள்ளன.

biq

[விண்மீன் குழிகள்]

பல பாறைப்பக்கங்களில் ஒன்றின் மேல் ஒன்றாக இந்த நான்கு காலகட்டங்களுமே வரையப்பட்டுள்ளமையால் தனித்தனியாக பிரித்தறிவது ஆய்வாளர்களுக்கே உரிய சவாலான பணி. நான்காவது காலகட்டத்தில் கோண்டு பழங்குடிகள் சைவ மரபுக்குள் சென்றுள்ளதை காட்டலாம். ஏறத்தாழ சைவத்தின் தொன்மையைக்காட்டும் சான்றாககூட இது உள்ளது.  உடுக்கும் திரிசூலமும் ஏந்தி ஆடும் பூசகர்கள் சில குகைச்சித்திரங்களில் உள்ளன. பழங்குடிகள் இந்து மையமரபுக்குள் இல்லை என்னும் கூற்றுக்கான வலுவான மறுப்பு இது

உழுவதும், வேளாண்மை செய்வதும், தலைச்சுமையாகப் பொருட்களை கொண்டு போவதும் பல ஓவியங்களில் காணக்கிடைக்கிறது. இங்கு வாழ்ந்த மக்கள் வேளாண்மை செய்யவில்லை. அன்றைய மாளவத்துடன் அவர்களுக்கிருந்த உறவையே இது காட்டுகிறது. அவர்களின் வாழ்க்கை என்பது வேட்டை, தேனெடுத்தல் போன்றவையே. மீன்பிடிக்கும் கூடைகள் தென்படுகின்றன. கைகோத்தபடி நடனமாடும் பெண்களின் காட்சிகள் ஏராளமாக உள்ளன. இக்காலகட்ட ஓவியங்களில் நீலம் பச்சை முதலிய வண்ணங்கள் சற்றே எஞ்சியிருக்கின்றன

bim6

 

இங்குள்ள மிகப்பிரம்மாண்டமான ஓவியப்பரப்பென்பது மிருகக்காட்சி சாலை என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படும் மாபெரும் விலங்குச் சித்தரிப்பு. எண்ணிப்பார்த்தால் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட விலங்குருவங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன. மான்கள், காட்டு ஆடுகள், வரையாடுகள், காளைகள், யானைகள் என ஒரு சிக்கலான ஓவியப்பரப்பு. அது ஒரு அசையும் திரை என்றே எனக்குத் தோன்றியது. நோக்க நோக்க பிம்பங்கள் பெருகி மேலும் மேலும் விலங்குகள் தென்பட்டுக்கொண்டே இருந்தன.

பதினைந்தாயிரம் ஆண்டுகள் தொன்மையான ஓவியக்காலம் தொடங்கி கனிஷ்கர் காலகட்டத்தின் இறுதி வரை ஒன்றின்மேல் ஒன்றாக பல கால அடுக்குகள் ஒரே பார்வையில் கண்ணுக்குப்படும் விந்தை இது. குறியீட்டு ரீதியாகவே அது எனக்கு மானுட உள்ளம் என்று தோன்றலாயிற்று ஒவ்வொரு மனித உள்ளமும் அத்தனை தொன்மையானது. காலம் ஒரு ஒற்றைப்பரப்பென ஆகி ஒன்றுக்கு மேல் ஒன்றென படிந்துள்ளது. தெரிதாவின் புகழ்பெற்ற பாலிம்ஸெஸ்ட் உவமையை விடவும் வலுவானது இது என்று தோன்றியது.

bhim2

இங்குள்ள சுவாரசியமான விஷயங்களில் ஒன்று குதிரைகளை ஜியோமிதி வடிவங்களாக ஆக்கியிருப்பதுதான். குகை ஓவியங்களில் மனிதர்களின் மார்பையும் இடுப்பையும் ஒரு x ஆக அடையாளம் கண்டுகொண்டிருப்பார்கள். இதில் குதிரையை கிடைமட்ட x ஆக கண்டுகொண்டிருக்கிறார்கள். அசல்வடிவக்குதிரை அருகிலேயே கோட்டோவிய ஜியோமிதிவடிவக் குதிரையும் வரையப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு குதிரை மிக வியப்புக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது

பிம்பேத்கா ஒரு நாளில் பார்த்துமுடிக்கக்கூடிய இடமல்ல. பல நாட்கள் தங்கி விரிவாக ஆராய்ச்சி செய்பவர்களே இதை முழுமையாக் புரிந்துகொள்ள முடியும் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒட்டுமொத்தமான கனவுச்சித்திரம் மட்டுமே இங்கு கிடைக்கிறது எங்கள் வழிகாட்டியான ராய் ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக்காட்டி நல்ல ஆங்கிலத்தில்  விளக்கினார். அவரைப்ப்போன்ற வழிகாட்டிகள் பயண இடங்களில் அமைவது மிக அரிது. தன்னை ஷத்ரிய குலத்தவர் என்றும் தன் முன்னோடிகளே அப்பகுதியை ஆட்சி செய்தவர்கள் என்றும் சொன்னார். நான் சதுரங்கக்குதிரை நாவலை நினைத்துக்கொண்டேன்.

bim1

மொத்தம் பன்னிரண்டு குகைகள் இங்கே உள்ளன. இவற்றை குகை என்று சொல்வதை விட பாறைத் தங்குமிடம் என்று சொல்வ்துதான் பொருத்தம் பெரும்பாலும் மழையால் அரிக்கப்பட்ட அரை வட்ட வடிவிலான பாறை பள்ளங்கள்தான் இவை .நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளவை. மழைநீர் வராதென்பதனால் அக்கால மக்கள் இங்கு தங்கி தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் வருடங்க்ளுக்கு முன்பு தொடங்கி ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை தொடர்ச்சியாக மக்கள் குடியேற்றம் வாழ்க்கை நிகழ்ந்த பகுதிகள் இவை .ஏராளமான பானை ஓடுகள் எலும்பு மற்றும் மரக்கருவிகள் எலும்புக்கூடுகள் இங்கே கிடைத்துள்ளன அவை அங்கேயே ஒரு நல்ல அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளன என்று வழிகாட்டி சொன்னார். எங்கள் திட்டம் அவற்றை விரிவாகப்பார்ப்பதற்கு பொழுது ஒதுக்குவதாக இல்லை. அப்போதே நாங்கள் கிளம்ப வேண்டியிருந்தது.

wakanakar

பிம்பெத்கா குகைகளை பற்றி முதல் சர்வேக்களில் குறிப்புகள் உள்ளன. அப்போது அவற்றை பௌத்தக்குகைகள் என குறிப்பிட்டிருக்கிறார்கள். நேரில் வந்து பார்க்காமல் பதிவுசெய்திருக்கிறார்கள். அக்குகைகளின் பண்பாட்டு முக்கியத்துவத்தை ஆராய்ந்து உலகுக்கு அறிவித்தவர் புகழ்பெற்ற மராட்டிய மானுடவியலாளாரான விஷ்ணு ஸ்ரீதர் வாகாங்கர் Vishnu Shridhar Wakankar (4 May 1919 – 3 April 1988) அவர் இக்குகைகளைப்பற்றி முப்பதாண்டுக்காலம் ஆராய்ந்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

ராஜமாணிக்கம் அவரைப்பற்றி பொங்கிப்பிரவாகமெடுத்துக்கொண்டே இருந்தார். ஏனென்றால் வாகாங்கர் தீவிரமான ஆர்.எஸ்.எஸ் ஊழியரும்கூட. நெருக்கடிநிலை காலகட்டத்தில் கைதானார். பத்மஸ்ரீ விருது பெற்றமையால் உடனே விடுதலை செய்யப்பட்டார். 1957ல் வாகாங்கர் இக்குகைகளை கண்டுபிடித்தார் 1970ல் இக்குகைகளை யுனெஸ்கோ கவனத்திற்குக் கொண்டுசெல்வதில் வெற்றிபெற்றார். ஒவ்வொரு ஆய்வுக்கும் அறிதலுக்கும் பின்னால் அவரைப்போன்ற எவரோ இருக்கிறார்கள். அவர்களை அறிவதும் அடுத்த தலைமுறைக்குச் சொல்வதும் அவசியமானது. அவர்களே நம் குழந்தைகளுக்குரிய முன்னுதாரணங்கள்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/103292