அஞ்சலி ஐ.வி.சசி

ivsasi

 

ஐ.வி.சசியை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவருடைய மாணவர் ஒருவர் இயக்கிய சிறிய படம் ஒன்றுக்கு நான் எழுதவேண்டும் என்று கோரி சந்திக்க அழைத்திருந்தார். நான் அவரை கோவளம் கடற்கரையில் ஒரு விடுதியில் சந்தித்தேன். வழக்கமான வெள்ளை ஆடை. வெள்ளைத்தொப்பி. ஆனால் நிதானமான தளர்ந்த நடை

 

நான் கல்லூரிக்காலம் முதலே அவருடைய ரசிகன். அன்றைய மலையாள திரை ரசிகர்களை கொந்தளிக்க வைத்தவை அவருடைய படங்கள். அவரை தமிழகம் முழுக்க அறியச்செய்த படம் அவளுடே ராவுகள். அதில் சீமா ஆண்கள் போடும் சட்டையுடன் ஒரு காட்சியில் வருவார். தொடை தெரியும். இன்று தமிழகத்தின் சிறிய நகர்களில்கூட பெண்கள் சாதாரணமாக குட்டைக் கால்சட்டை அணிகிறார்கள். ஆனால் அந்தக்காட்சி அன்று தமிழக இளைஞர்களை பித்து கொள்ளச் செய்தது. அவளுடே ராவுகள் தமிழக நகரங்களில் நூறுநாட்கள் ஓடியது. மிகச்சிறிய கறுப்புவெள்ளை சினிமா அது. அதன் வசூல்  எம்ஜிஆர் படங்களைக் கடந்தது

 

ஆனால் அவளுடே ராவுகள் ஒரு பலான படம் அல்ல. பாலியல்தொழில் செய்யும் ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கை வழியாகக் கடந்துசென்ற ஆண்களைப்பற்றிய படம் அது. மலையாளத்தின் இடைநிலை சினிமாக்களில் மிக முக்கியமானதாகவும், சினிமாக்கலையின் அடுத்த கட்ட நகர்வை உருவாக்கியதாகவும் அந்தப்படம் விமர்சகர்களால் இன்று கருதப்படுகிறது. மிதமான நடிப்பு, காட்சியமைப்புகளால் தொடர்புறுத்தல் என புதியசினிமாவின் இலக்கணங்களை வகுத்த படம் அது

 

ஐ.வி.சசி 1974 ல் உத்சவம் என்னும் சினிமா வழியாக மலையாளத்திரையுலகில் நுழைந்தார். அந்தப்படத்தின் பாதிப்பில் உருவானதே கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர். எர்ணாகுளம் அருகே ஒரு சிறிய தீவின் [மலையாளத்தில் துருத்து] தண்ணீர்ப்பஞ்சத்தையும் அங்கே படகில் குடிநீர் கொண்டுசெல்லும் ஒருவனின் வாழ்க்கையையும் சொல்லும் படம் அது. மலையாள சினிமாவின் சம்பிரதாயமான திரைமொழியை ஐ.வி.சசி அந்தப்படம் வழியாக மாற்றியமைத்தார்.

 

அடிப்படையில் சசி ஓவியர். கலை இயக்குநராக திரையுலகுக்குள் நுழைந்தார். பிரெஞ்சு புதிய அலை சினிமாக்களால் தூண்டப்பட்டவர் சசி. முதலில் அவர் மைய ஓட்ட சினிமாக்களுக்கு ஒரு எதிர்ச்சக்தியாக அறியப்பட்டார். ஆனால் காமத்தையும் வன்முறையையும் சித்தரிக்கும் அவருடைய திரைப்படங்களின் காட்சியமைவுகள் புகழ்பெறவே மிகவிரைவிலேயே வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் ஆனார். மலையாள சினிமாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றிப்பட இயக்குநர் சசிதான்

 

மொத்தம் 150  படங்களை சசி இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் மட்டும் 111. மிகவிரைவாக இயக்குபவர். ஆனால் அவர் படங்கள் அனைத்துமே நேர்த்தியான கட்டமைப்பும் வலுவான காட்சிமொழியும் கொண்டவை. ஒரு தொழில்நுட்பக்கலைஞனாக மலையாளம் கண்ட மாபெரும் இயக்குநர் சசிதான் என்பது கேரள விமர்சகர்களின் கூற்று. ஒரு கட்டத்தில் அவர் ஒரு நிறுவனம் போல ஆனார். அவருக்காக  ஷெரீஃப், பத்மராஜன், எம்.டி.வாசுதேவன் நாயர் முதலிய எழுத்தாளர்கள் ஒரே சமயம் எழுதினர். ஒரு படப்பிடிப்பில் இருந்து இன்னொன்றுக்கு சென்றுகொண்டிருந்தார். மலையாளத்தின் புகழ்மிக்க நடிகர்கள் இரண்டு தலைமுறைக்காலம் அவருடைய தொழிற்சாலையில் இருந்து வந்துகொண்டிருந்தார்கள்

 

ஆனால் கூடவே சசி மலையாளத்தின் முக்கியமான இடைநிலை சினிமாக்களை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தார். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி அவர் இயக்கிய இடைநாழியிலே பூச்ச மிண்டாப்பூச்ச, ஆள்கூட்டத்தில் தனியே போன்ற பல படங்களை உதாரணமாகச் சுட்டலாம்.

 

நான் அவர் படங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தன் நோய் பற்றிச் சொன்னார். புற்றுநோய் வந்து பல ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்தார். லட்சக்கணக்காகச் செலவு. பின்னர் ஒரு நாள் அனைத்து சிகிச்சைகளையும் உதறி வெளியேறினார். தொப்பியை வைத்துக்கொண்டு படம் இயக்க வந்தார். “டாக்டர்கள் ஆறுமாதம் கெடு அளித்திருந்தனர். இப்போது இரண்டு ஆண்டு கடந்துவிட்டது. நிறைய கனவுகள் உள்ளன. பெரிய படம் ஒன்றை எடுக்கவேண்டும் ” என்றார். அதைப்பற்றிய அறிவிப்புகள் வந்தன.

 

இன்று பார்க்கையில் முதன்மையான கலைஞன் என ஐ.வி.சசி தோற்றமளிக்கவில்லை. ஆனால் முக்கியமான திரைப்படங்களை எடுத்தவர், ஒரு காலகட்டத்தின் முதல்வர். அனைத்தையும்விட வற்றாத செயலூற்று

24- 10-2017 அன்று சென்னையில் தன் 69 வயதில் மகன் இல்லத்தில் ஐ.வி.சசி காலமானார்.

 

 

முந்தைய கட்டுரைமையநிலப் பயணம் – 1
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42