தி ஹிந்துவின் திராவிட மலர்

mgr

அன்புள்ள ஜெ

திராவிட இயக்க வரலாற்றை ஒட்டி தி இந்து நாளிதழ் மலர் ஒன்றை வெளியிடுகிறது என்ற செய்தியை வாசித்தேன். விடுதலையோ முரசொலியோ, நமது எம்ஜிஆர் இதழோ செய்யவேண்டிய வேலை. அதிலும் அந்தத்தலைப்பில் இருக்கும் கேனத்தனம் கடுப்பேற்றுகிறது. அதோடு அந்த திராவிட இயக்க வரலாறு எம்ஜிஆரைத் தவிர்த்தே எழுதப்படுகிறது எனத்தெரிகிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ்

***

karunanidhi-759

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,

வழக்கமாக இதற்கெல்லாம் கருத்து சொல்வதில்லை. இதற்குஅவசரப்பட்டே கருத்து சொல்லலாம். ஏனென்றால் இது கருத்துச் சொல்ல அடிப்படையே இல்லாத ஒரு சில்லறைச் சமாச்சாரம்.

தி இந்து நாளிதழின் நாலாந்தர வணிகம் மட்டும்தான் இது. முன்பு அது எம்.ஜி.ஆர் பற்றி ஒரு தொடர் வெளியிட்டது. அதன்பின் என்னருமைத்தோழி என ஏதோ ஒரு ஆத்மா ஜெயலலிதாவைப்பற்றி எழுதிய தொடர். இரண்டுமே அதிமுக அமைச்சர்கள் ஹெலிகாப்டரைக் கும்பிட சேற்றில் குப்புற விழுந்து தவழ்வதை நினைவுறுத்தும் தன்மை கொண்டவை.

அதே மனநிலையில் இந்த இதழையும் தயாரித்திருப்பார்கள். ஒரு சமநிலைக்காக. ‘நமக்கு எல்லாருமே வேணுங்க’ என்னும் மளிகைக்கடை மனநிலை அது. அதை கொஞ்சபேர் வாங்கினார்கள். இதை மறுபக்கத்தவர் வாங்கிக் கொண்டாடுவார்கள். இரண்டு தரப்பிலும் எழுதப்படும் ஒரு வரிக்கும் அறிவார்ந்த ஒரு மதிப்பும் இல்லை. இதைப்பற்றி தீவிரமாகப் பேசுவதே ஒரு வகை சொறிதலின்பத்துக்காகத்தான். இதை வாசித்து எரிச்சலடைபவர் அதை வாசித்து இதம்கொள்ளவேண்டியதுதான்.

எல்லாப்பக்கத்தையும் ஒரேபோல விழுந்துகும்பிட்டு தரையில் புரள்வது நடுநிலை என நினைக்கிறார்கள் போல. அல்லது இந்த ’சளிப்பு’ நடையிலிருந்து விலக்கி திராவிட இயக்கத்தைப்பற்றிப் பேசமுடியாது போல. எப்படியானாலும் ஒரு தலைமுறை கடந்தாவது இந்தச்சேற்றில் இருந்து தமிழ்மனம் கரையேறும் என நம்பியிருந்த சிலருடைய ஏமாற்றமே தமிழ் ஹிந்துவின் மலர் குறித்த விவாதத்தில் வெளியாகிறது. ஏனென்றால் அது சிற்றிதழ் சார்ந்த ஒரு தொடர்ச்சியை, அறிவியக்கச் சார்பை பாவனை செய்துவருகிறது.

நாளிதழ்களின் தரம் என்பது அவை கொள்ளும் நடுநிலையால், செய்திகளின் நம்பகத்தன்மையால், மொழிநடையின் முதிர்ச்சியால் வருவது. தெற்கிலிருந்து சூரியன் போன்ற தலைப்புகளை எழுத இனிமேல் இந்துவின் உதவியாசிரியர்களுக்கே வாய்ப்பு கிடைக்கலாம். வாழ்த்துக்கள்.

mk

அதேசமயம் ஒன்றை நினைவுறவேண்டும்.திராவிட இயக்க வரலாற்றை கருணாநிதி இல்லாமல்கூட எழுதிவிடமுடியும், எம்ஜிஆர் இல்லாமல் எழுதிவிடமுடியாது. அவ்வியக்கத்தின் ஒரே ’மக்கள்முகம்’ அவர். அண்ணாத்துரையே சொன்னதுபோல அவரது முகத்தை மட்டும் நம்பியே அக்காலத்தில் அது வாக்கு கோரியது, வென்றது.

சிலமுறை எம்ஜிஆர் பேசி முடித்ததுமே மொத்தக்கூட்டமும் அண்ணாத்துரை உட்பட பிற அனைவரையும் புறக்கணித்துக் கலைந்த நிகழ்ச்சிகளை பல திமுக எழுத்தாளர்களே பதிவுசெய்திருக்கிறார்கள். தன் பலத்தை அண்ணாத்துரைக்குக் காட்ட அதைப் பயன்படுத்திக்கொண்டார் எம்ஜிஆர். கட்சியின் முதன்மைமுகம் தானே என அவர் அக்கட்சிக்கு நிரூபித்துக்கொண்டே இருந்தார்.

அண்ணாத்துரை மறைவுக்குப்பின் மூன்றாம்படிநிலையில் இருந்த மு.கருணாநிதி பதவிக்கு வந்ததே அவருக்குப்பின்னால் இருந்த எம்ஜிஆர் என்னும் ஆற்றலினால்தான். அண்ணாத்துரையின் தெரிவு நெடுஞ்செழியன்தான். தம்பி வா தலைமை ஏற்க வா என அவர் அழைத்தது நெடுஞ்செழியனையே

பின்னர் எம்ஜிஆர் தன் பங்கைக்கேட்கத் தொடங்கியபோது வெடித்த பூசலே அதிமுக. அவர் இருந்தவரை கருணாநிதியால் ஒர் உதிரிக்கட்சியையே நடத்த முடிந்தது. கூட்டணியால் சில்லறை வெற்றிகளை ஈட்டியதைத்தவிர்த்தால் மெய்யான திமுக முழுமையாகவே எம்ஜிஆரிடம்தான் இருந்தது.

திராவிட அரசியல் செய்திகளை மேலோட்டமாகவேனும்  வாசிப்பவர்களால் புரிந்துகொள்ளப்படக்கூடிய செய்திகள் இவை. ஆனால் இன்றைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரியாது. இவர்கள் முன்னால் வரலாற்றை மாற்றி எழுதிவைக்க முயல்கிறார்கள். அண்ணாத்துரைக்குப்பின் மு.கருணாநிதி வந்தார் என்றும் எம்ஜிஆர் ஊடே புகுந்து சினிமாக்கவற்சியால் கட்சியை உடைத்தார் என்றும் ஒரு பொய்ச்சித்திரம் திமுகவின் அடிமாட்டுத்தொண்டர்களிடம் உள்ளது. அதைத்திரும்பத்திரும்பச் சொல்லி நிறுவ முயல்கிறார்கள்

திராவிட இயக்கத்தை ஒரு பரப்பியல் [populist ] இயக்கம் என்று மட்டுமே வரையறுக்க முடியும். அதன் அறிவுத்தளப் பங்களிப்பும் பண்பாட்டுக்கொடைகளும்கூட இந்த எல்லையை வகுத்துக்கொண்டபின் பேசப்படவேண்டியவை. இடதுசாரி இயக்கம்போல, தனித்தமிழ் இயக்கம்போல அது ஓர் அறிவியக்கம் அல்ல. சென்ற சில ஆண்டுகளாக இந்தப்பார்வை வலுவாக உருவாகி வருகிறது. ஆகவேதான் அதை எதிர்த்துப்பேச அறிவுஜீவிகள் கொள்முதல்செய்யப்படுகிறார்கள். அவர்கள் பொதுவெளியில் இடைவெளியே இல்லாமல் கூச்சலிடுகிறார்கள்

திராவிட இயக்கத்தை ஓர் அறிவியக்கம் என்று கட்டமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னோடி அறிவுஜீவி என எம்.எஸ்.எஸ். பாண்டியனைச் சொல்லலாம். அவர்தான் அறிவியக்கமான திராவிட இயக்கத்தில் பரப்பியல்கூறுகளைக் கலந்து அதைக் கைப்பற்றிய பாவி என எம்.ஜி.ஆரை முத்திரையிட்டவர். [The image trap] அவரை இன்றைய வாசகன் திராவிடத்தரப்பின் குரல் என்றல்லாமல் ஆய்வாளன் என்றுகொள்ள முடியாது. திராவிட இயக்கத்தின் பரப்பியல் முகத்தை மறைக்க அவர் படும் கழைக்கூத்தாட்டம் பரிதாபத்தை உருவாக்கக் கூடியது. அன்றுமுதல் இந்த வெள்ளையடிக்கும் செயல் முழுவீச்சில் நிகழ்ந்து வருகிறது.

அதன் ஒரு நீட்சியே தி இந்துவின் மலர். அதை அறிய அதை வாசிக்கவேண்டிய தேவையே இல்லை. அதை முரசொலியே வெளியிடலாம். ஆனால் அது கட்சிசார் வரலாறாகவே எஞ்சும். தி ஹிந்து வெளியிட்டால் நடுநிலை அடையாளம் வருகிறது. இந்த நடுநிலைஅடையாளம் என்பது நல்ல விலைபொருள்.

***

ஜெ

தேவநேயப் பாவாணர் விக்கி

முந்தைய கட்டுரைநாகர்கோயிலும் சுச்சா பாரதமும்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36