குழந்தையிலக்கிய அட்டவணை

child

மதிப்பிற்குரிய ஜெ,

நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

நான் இங்கு கலிபோர்னியாவில் வாழ்ந்துகொடு இருக்கிறேன். இங்கு பள்ளியில் குழந்தைகளுக்கு ஆங்கில கதை புத்தகங்கள் பரிந்துரை செய்கிறார்கள், ஒவ்வொரு நாளும் 20 நிமிடம் கதை வாசிக்க சொல்லி அதை தினமும் கவனிக்கிறார்கள். கதை புத்தகம் பரிந்துரைக்க ஒவ்வொரு ஆசிரியரும் சில அளவுகோல் வைத்திருக்கிறார்கள்.

எப்படி அந்த கதை ஒரு மாணவருக்கு புதிய சொல் கற்றுக்கொடுக்கிறது?, அந்த கதை அந்த வயதிற்கு ஏற்றதா?, அந்த கதை சொல்லும் கருத்து  அந்த வயதிற்கு புரியுமா? என்பது போன்ற அளவுகோள்கள்.

நமது தமிழ் பிள்ளைகளுக்கு அப்படி எந்த பரிந்துரைகளும் யாரும் கொடுப்பது போல் எனக்கு தெரியவில்லை. நான் வாழும் இந்த ஊரில் நடக்கும் தமிழ் பள்ளிக்கு, நாங்கள் கதை புத்தகங்கள் வாங்க விழைகிறோம். நாங்கள் நமது தமிழ் பிள்ளைகளை ஒவ்வொரு வாரமும் ஒரு கதை புத்தகம் படிக்க சொல்லி அதை கண்காணிக்க உள்ளோம். உங்களால் எங்களுக்கு கதை புத்தகங்கள் பரிந்துரைக்கமுடியுமா? நீங்கள் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளீர்களா?

என் ஞாபகம் சரியாக இருக்குமேயானால், எஸ்ரா அவர்கள் குழந்தைகள் புத்தகங்களை பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வயது மற்றும் வகுப்பு வாரியாக புத்தகங்களை பரிந்துரை செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

நீங்கள் பரிந்துரை செய்தாலோ அல்லது யாரையேனும் தொடர்பு படுத்தினாலோ, அது மிகவும் உதவியாக இருக்கும்.

ஸ்ரீராம் காமேஸ்வரன்

vish
விஷ்ணுபுரம் சரவணன்

அன்புள்ள ஸ்ரீராம்,

தமிழ்ச்சூழலில் குழந்தைகளின் வாசிப்பு என்பது பள்ளியையும் பெற்றோரையும் ஏமாற்றி மிக ரகசியமாகச் செய்யவேண்டிய ஒன்றாகவே இன்று உள்ளது. பள்ளியில் புத்தகம் வாசித்ததற்காக [ஓய்வுநேரத்தில் மைதானத்தில் வைத்து] நான் அடிபட்டிருக்கிறேன். என் மகனும் அடிவாங்கியிருக்கிறான்

இங்கே பெற்றோர் குழந்தைகளுக்கு நூல்களை வாங்கிக்கொடுப்பதில்லை. அவை பிள்ளைகளைக் கெடுத்துவிடும்  என்றும் படிப்பில் இருந்து பிள்ளைகளின் கவனத்தைச் சிதறடித்துவிடும் என்றும் நினைக்கிறார்கள். பள்ளிகளில் நூலகங்கள் இருந்தாலும் புத்தகங்களைக் கொடுப்பதில்லை. அவை கூடுதல் வேலை என்றும் பிள்ளைகள் புத்தகங்களால் திமிர் பிடித்தவையாக ஆகிவிடும் என்றும் ஆசிரியர்கள் நினைக்கிறார்கள்

இதையும் கடந்து இங்கே மிகக்கொஞ்சமாகவே புத்தகங்கள் வாங்கப்படுகின்றன, அவையும் ஆங்கில நூல்களே. தமிழ் நூல்களை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் தமிழகத்தில் அனேகமாக இல்லை. தமிழ்வழிக்கல்வி படிப்பவர்கள் பரம ஏழைகள். அவர்களால் நூல்கள் வாங்கமுடியாது. கொஞ்சம் வசதியானவர்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தேர்ச்சி பெறவேண்டுமென ஆசைப்படுபவர்கள். தமிழில் வாசிப்பதை விரும்பமாட்டார்கள்

இச்சூழலில் குழந்தைநூல்கள் பெரும்பாலும் பயனற்றவை. அவை குழந்தைகளைச் சென்றுசேர்வதில்லை. பள்ளிகளுக்கு நூல்கள் வாங்க கரும்பலகைத்திட்டம் போன்ற சில நிதியுதவிகள் உள்ளன. ஆகவே நூல்கள் வெளியாகின்றன அவை வாங்கவும் படுகின்றன. ஆனால் பிள்ளைகளுக்கு அளிக்கப்படுவதில்லை. நூல்களை நன்கொடையாக அளித்தாலும் அவை பெட்டிகளில் தூங்கும் என்பதே யதார்த்தம்

yuma
யூமா வாசுகி

இன்றைய கல்விமுறையின் உச்சகட்ட போட்டியும் கண்மண் தெரியாத வேகமும் வாசிப்புக்கே எதிரானவை என்பதும் உண்மை. வாசிக்கும் குழந்தை போட்டியில் தோற்கவும் கூடும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்

நான் சிறுவர் நூல்களை அதிகமாக பின் தொடர்வதில்லை. என் நண்பரும் சுட்டி விகடன் ஆசிரியருமான விஷ்ணுபுரம் சரவணன் தமிழின் குறிப்பிடத்தக்க குழந்தையிலக்கிய எழுத்தாளர். அவரிடம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். யூமா வாசுகி குழந்தைநூல்கள் பலவற்றை மொழியாக்கம் செய்கிறார். வா. மணிகண்டன் பள்ளிகளுக்கு நூலகம் வைக்க அவருடைய அமைப்பாகிய நிசப்தம் வழியாக உதவுகிறார். குக்கூ குழந்தைகள் வெளி குழந்தைகளுக்கு நூல்களை நேரடியாகக் கொண்டுசென்று சேர்த்து அவர்கள் அவற்றை வாசிக்கவும் வைக்கிறது

ஜெ

 

பிகு

 ஆர்வம் உள்ள நண்பர்கள் வயதுவாரியாக சிறந்த குழந்தைநூல்களின் ஒரு பட்டியலைத் தயாரித்து அனுப்பினால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்

குக்கூ குழந்தைகள் வெளி மின்னஞ்சல் [email protected]
விஷ்ணுபுரம் சரவணன்  [email protected]
முந்தைய கட்டுரைஆழமற்ற நதி கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24