கல்வியும் வாழ்வும் -கடிதம்

 

art

அன்புள்ள ஜெமோ,

 

தங்கள் தளத்தில் ”அறிவியல்கல்வியும்கலைக்கல்வியும்” இன்று படித்தேன்.  என் மனதை மிகவும் பாதித்த பதிவு இது. கடந்த மூன்று ஆண்டு காலமாக என் மனதை வாட்டும் கேள்விகளை சிவா ராம்சந்தர் பதிவாகவும், அதற்கு என் மனதுள்ளே எழும் விடைகள் தங்கள் பதிவாகவும் காண்கிறேன். நான் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை செய்யும் ஓர் கணிப்பொறியாளன் (மேலே சொன்னது போல மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது பணியில் சேர்ந்து).

 

சிவா ராம்சந்தர் அடைந்த மீளா வெறுமையை நான் பணியில் சேர்ந்த ஒர் ஆண்டிலேயே கண்டடைந்துவிட்டேன். என்னுள் இருந்த தீராத் தேடலே இதற்கு காரணம் என எண்ணுகிறேன். என் மன தேடலோ என் அறிவின் தேடலோ அன்றி என் வயிற்றின் தேடலை மட்டும் பூர்த்தி செய்யவே என் அலுவலகத்திற்கு முடிந்தது (நாட்டளவில் இதுவே நிகழ்கிறது என்பது என் எண்ணம்).  இதனை பல தருணங்களில் பலரிடம் நான் விவாதிக்க நேர்ந்ததுண்டு அவர்களின் பார்வையில் என்னைப் போல ஆக சிறந்த முட்டாள் யாருமில்லை. என் வாதங்களோ என் செயல்களோ ஒர் அறிவிலியின் செய்கையாகவே அவர்கள் பார்க்கின்றனர். போட்டியில் வெற்றியை கண்ணாகக் கொண்டு ஓடும் குதிரைகளின் நடுவில் பொதி சுமக்கும் கழுதையாக நான் காட்சியமைக்கப்பட்ட நாட்கள் பல உண்டு.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக என் பாதையை நானே மறுசீரமைத்துக் கொண்டேன். அலுவலக நேரம் தவிர்த்து பிற நேரங்களில் நான் கண்டடைய துடிக்கும் கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் என என் பயணம் தொடர்கிறது. இம்மாற்றத்தின் முயற்சியில் எழுவது சதவீதம் வெற்றி கொண்டேன் என்ற போதும், என் சுற்றத்தை என்னால் அணுவளவும் மாற்றம் செய்ய இயலவில்லை. அவர்கள் என்னை மீண்டும் அவ்வெறுமையின் வழியில் கொண்டு போகவே முயல்கின்றனர் (பெரும்பாலும் அவர்களிடமிருந்து விலகிவந்துவிடுவேன்).  எனக்கு மிகவும் நெருங்கிய வட்டத்தில் மட்டுமே இத்தகைய விவாதத்தில் நான் இறங்கியதுண்டு ஆனால் அதிலும் தோல்வி என்பதாலே என் மனம் பல சமயம் வாட்டமடையும்.

 

இங்கே நான் அறிவானவன் என் சுற்றத்தார்கள் அறிவிலிகள் என நான் கூற விழையவில்லை. ஓர் நாளில் குறைந்தது 5 சதவிதமாவது அறிவின் தேடல் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம், ஆனால் சிவா ராம்சந்தர் சொன்னது போல் “வேலையும் சனிக்கிழமை கொண்டாட்டமும்தான் வாழ்க்கை. எதைப்பற்றியும் உருப்படியாக எதுவும் தெரியாது. நெட்டில் மேய்ந்து சில தகவல்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா. சங்கீதம் என்றால் அதேமாதிரி அமெரிக்க சங்கீதம். பேஷன். கொஞ்சம் மேலோட்டமான அரசியல். எல்லாவற்றையும் கிண்டலும் நக்கலுமாக பேசிக்கொள்வது. டிவிட் செய்வது .எஸ்ஸெம்மஸ் அனுப்புவது. எல்லாரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஒன்றுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதே தெரியவில்லை”. இதை தான் தினமும் என் கண் முன் காண்கிறேன்.

 

நல்ல நண்பர்களாலும், சுற்றத்தாலும் மட்டுமே நம் தன்னம்பிக்கையும் அறிவும் வளரும் என்பதே என் எண்ணம் அதனாலே என் இத்தகைய முயற்சிகள் இதில் ஓர் சுயநலம் கலந்த பொது நலம் இருப்பது உண்மையே. உதாரணம் சொல்ல கேட்டால் நான் எழுதி ஒரு நூறு கவிதைகள் என் அலுவலக நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன். அதை கடுகளவேனும் இரசித்து வாசித்தவர்கள் ஒருவர் உண்டா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் (என் கவிதைகள் குறைந்த பட்சம் வாசிக்க சலிப்புட்டாமல் இரசித்து வாசிக்க இயலும் என்பதே என் எண்ணம், எ.கா: சென்ற வாரம் எழுதிய ஒன்று தங்கள் பார்வைக்கு கீழே).

 

”யார் யார் சிரிக்கிறார்

யார் யார் அழுகிறார் – இங்கு

பூ மீது பயணமா இல்லை

முட்கள் உன்னை தீண்டுமா ?

 

சிதறிடு நெஞ்சே நீயும்

தோற்றிடும் பொழுது மறுகணம்

சேர்ந்திடு ஒன்றாய் நமக்காய்

ஓர் நாளையும் உண்டு !!

 

புதிதான பாதைகள் மண்ணில்

புதிரான பயணங்கள் இதிலே

வினா பல கோலங்கள் – அதிலே

விடை தேடும் மாயங்கள்

 

தேவையின்றி தொடர்ந்திடும் பின்

தேடும் போது உன்னைவிடும்

சோர்ந்துக் கொள்ள இடமின்றி

தொடரோட்டம் உன்னுள் அதிர்விடும் !!

 

வா வா முன்னே செல்லலாம்

வேதம் புதிதாய் சொல்லலாம்

தெரிந்தது கொண்டு வெல்லலாம்

தெரியாதன கல்லலாம்

 

போரிடும் வீரன் பணிவதுமில்லை

புயல் கண்ட இதயம் மாய்வதுமில்லை

தெற்கே வடக்கே இடம் மாற்று

எதிர்த்தால் தீண்டும் புது காற்று !!!

 

உயர்த்தாய் தேடல் நதியோடு

ஓடும் பயணம் கடலோடு !!!

முடிவது மனதில் உணராமல்

அலைபோல் நாளும் நடைபோடு !!!”

 

 

வெறும் முகஸ்துதிக்கு மட்டும் இரண்டு வரிகள் படித்துவிட்டு புகழாரம் பேசுபவர்களையே காண்கிறேன். அதனால் இப்போது இவையனைத்தும் வீண் வேலை என்றே எனக்கு படுகிறது. சிவா ராம்சந்தர் சொன்னது போல் இவர்களை உதரிவிட்டு தனித்து செல்லவே மனம் விழைகிறது. இது நான் மட்டுமன்றி என்னை போல், சிவா ராம்சந்தர் போல் பலரும் சந்திக்கும் அன்றாட சமுக பிரச்சனையாகவே இதை நான் பார்க்கிறேன். நான் மானசீகமாக ஏற்றுக்கொண்ட நல்லாசான்களுள் தாங்களும் ஒருவர் ஆகவே இத்தருணத்தில் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்: யார் என்ன சொன்னால் என்ன, என்ன செய்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி நின்று நம் வேலையை பார்ப்பது உசிதமா? இல்லை அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களையும் என்னோடு சேர்த்து இழுத்து வர முயல்வது உசிதமா?? இல்லை நம் மன ஓட்டத்திற்கு ஒத்திசைக்கும் இடத்தை தேடி அங்கே பணி செய்வது உசிதமா???

 

 

பி.கு: நான் கால தாமதமின்றி சுய மதிப்பீடுசெய்துவிட்டேன் என்றே எண்ணுகிறேன். என் போன்றவர்களுக்கு தங்கள் ஆலோசனையை கேட்க விழைகிறேன்.

 

 

– தோழமையுடன்

நவின்.க.சூ.ச.வே.

 

அன்புள்ள நவீன்,

முதலில் ஒன்றைச் சொல்கிறேன், நீங்கள் எழுதியிருப்பது கவிதை அல்ல, செய்யுள். ஆனால் செய்யுளுக்கான இலக்கண ஒழுங்கும் இசையமைதியும் கைகூடாதது.

மற்றபடி உங்கள் உணர்வுகளைப்புரிந்துகொள்கிறேன்.இரண்டுவகை மனிதர்கள் உண்டு. எல்லைகளை மீறும் எழுச்சியுடன் முட்டிக்கொண்டே இருப்பவர்கள். எல்லைகளுக்குள் வசதியாகச் சுருண்டுகொள்பவர்கள். அவர்களுக்குள் உரையாடலே சாத்தியமில்லை. ஆகவே பிறரை ‘மாற்றுவதை’ அவர்களை ‘புரிந்துகொள்ளச் செய்வதை’ தவிர்த்துவிடுங்கள்

உங்கள் பணி உங்களை மாற்றிக்கொள்வதே. உங்களை முழுமைநோக்கி கொண்டுசெல்வதே. கவிதை எழுத விரும்புகிறீர்கள் என்றால் தமிழில் இன்றுவரை எழுதப்பட்ட கவிதைகளை தேடித்தேடி வாசியுங்கள். கவிதைகுறித்து எழுதப்பட்டவற்றை அறிந்துகொள்ளுங்கள். நேற்றுவரை உங்கள் முன்னோடிகள் எழுதியவரிகளுக்குமேலதிகமாக நீங்கள் என்ன எழுதமுடியுமென நோக்குங்கள்

அப்படி ஐந்தாறுகவிதைகளை எழுதிவிட்டால்கூட மீறலுக்கு நியாயம்செய்துவிட்டீர்கள். அது அளிக்கும் நிறைவும் தன்னம்பிக்கையும் இன்றைய அலைச்சல்களிலிருந்து விடுவிக்கும்

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 9
அடுத்த கட்டுரைஉள்ளத்தின் நாவுகள்