வாள் – கடிதம்

nija

இனிய ஜெயம்,

நீண்ட  வருடங்களுக்குப் பிறகு,  இன்று  வாள்  சிறுகதையை  மீண்டும் வாசித்தேன்.   மிக மிக தனித்துவமான  கதை. தமிழ் இலக்கியப் பரப்பில்  ”பிறிதொன்றில்லாத ”கதை.  ஆனாத்தா  என்று  சொன்னீர்களே அது.
விஷ்ணுபுரத்தில்  பவதத்தரும் அவரது  மைந்தனும்  சந்திக்கையில் வரும் உரையாடலில் ”விஷ்ணுபுரம்  எந்த மீறலையும் அனுமதிக்காது.  மீறி நிகழ்வதை  ஐதீகமாக மாற்றி இன் நகரின் ஆலயத்துக்குள் அடக்கி விடும் ”  என வரும். அதன் மற்றொரு பரிமாணத்தின் வடிவே இக் கதை.  விஷ்ணுபுரத்தில்   மீறலை  போட்டு அடைத்து வைக்க  ஐதீகம் துணைக்கு வருகிறது இந்தக் கதையில்  அதற்க்கு இடமில்லை.    எனில்   என்ன நிகழும்?   அதுவே இக் கதை.
பலநூற்றாண்டுகளாக செழித்து ,ஞானம் தழைக்க , அமைந்த நிறுவனம். அதில்   அடுத்த பூஜ்யபாதராக  வருவதற்கு ”தேர்ந்து ” எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நாயகன்.  பௌத்தம் போல  ஞான சாதகத்தில் படி நிலைகள் கொண்ட அவ் அமைப்பில் , முதல் நிலை  குருக்களில் ஒருவன்.  பூஜ்ய பாதரின் நிலைதான் அடுத்து எஞ்சி இருக்கும் ஒரே நிலை.
என்ன தத்துவத்தால் அந்த அமைப்பு கட்டி எழுப்பப் பட்டத்தோ,  எந்த தத்துவத்தால் அவனது அகம்  கட்டமைப்பட்டதோ  அதன் மீதே  அவனுக்கு சந்தேகம் .  அதாவது  ”அமைப்பாக” மாறும் எதன் மீதும் சந்தேகம்.
அமைப்பை  அதன் அடிப்படையை கேள்வி கேட்கும் எதையும் , தத்துவத்தின் வழியே அந்த அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்பின் வழியே அழியாத அதிகாரத்தின் மேல் அமர்ந்திருக்கும் அகந்தை விட்டு வைக்காது.   இங்கும் அதே  நிகழ்கிறது.   அந்த அகந்தை  இந்த ”மீறலை ” எவ்வாறு, கருணையுடன் கையாண்டு   களை எடுக்கிறது  என்பதில் மையம் கொள்ளும் , கருணையே அற்ற கதை.
யோசிக்க யோசிக்க  சிக்கல் இறுகி இறுகி வந்து ,குரல்வளையை நெறிக்கும் உணர்வு.  பூஜ்ய பாதருக்கு   ,சாதகனின்  தத்துவசிக்கலோ  ஞான தேட்டமோ ஒரு பொருட்டே இல்லை.  பல கோடி ”பக்தர்களை ” கொண்ட  பலநூற்றாண்டு  கண்ட  இந்த அமைப்பு  சரித்து விடக் கூடாது என்பதே ஒரே இலக்கு.
களையெடுக்கும்  செயலுக்கு  அவர் பயன்படுத்தும் வாள்  தத்துவம்.   கச்சிதமான பொறி.  நாயகன்  அவிசுவாசி , எனில்  நிச்சயம் அவன்  எதிரில் அமர்ந்திருப்பவன் அமைப்புக்கு நாய் போலும் விசுவாசி என்பது தெளிவு.
நாயகன் தற்கொலை செய்து கொண்டால் ,அமைப்புக்கு  நல்லது  மரணிக்க எந்த காரணமும் இல்லாவிடிலும்    கொலை வாள் முன்,  பாதரை எந்த கேள்வியும் கேட்காமல் அமரும்  அந்த மற்றொருவனுக்கு  இணையான ,ஞான குரு  இந்த அமைப்புக்கு கிடைக்க மாட்டான்.
கொலை  செய்யப்பட்டான்  என்றாலும்  அமைப்புக்கு நல்லதே.  நாயகனை ஒரு தளையில் பிணைத்தாயிற்று. பின் அந்த தளையில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை அந்த அமைப்பே  சொல்லித் தரும்.
நாயகன்  தான் தோற்பதாக  எண்ணத் தலைப்படும் போதே ,எதிரில் இருப்பவன் குரல்வளையை குதறி குருதி உறிஞ்சும் மிருகமாக மனத்துக்குள் மாறி ,தனது  வலிமையை மீட்டுக் கொள்கிறான்.   அந்தப் புள்ளியைத்தான் சரியாகப் பிடிக்கிறார் பத்மபாதர் .
கதையின் மைய முடிச்சே இங்குதான்  விழுந்து இருக்கிறது. இந்தப் புள்ளியை  அவர் எப்படி கச்சிதமாக பிடித்தார்?
ஆம்  அவருக்கு  முன்பான  பூஜ்ய பாதர் , அவருக்கு முன் இதே  வாளை  வைத்திருக்கிறார். இருபுறமும் கூரான தத்துவ வாள் .   அந்த வாளைப் பயன்படுத்திதான் அவர் இன்றைய பூஜ்ய பாதராக அமர்ந்திருக்கிறார்.  அன்று அந்த வாளைப் பயன்படுத்திய ?எந்த  இடரும் இன்றி அதை மீண்டும் இன்று பயன்படுத்துகிறார்.
என்ன செய்யப்போகிறான்  நாயகன்?   தற்கொலை , கொலை எதை செய்தாலும் அழியாமல் நீடிக்கப் போகிறது அதிகாரம். என்ன செய்யப் போகிறான் நாயகன்.
யோசிக்க யோசிக்க இந்தக் கணினி மேஜையை முட்டிக்கொள்ளத் தோன்றுகிறது. ஜெயம்  எப்படித்தான் இந்த கதையை யோசித்தீர்கள்?  இப்படி எல்லா பக்கமும்  அடைத்த கதவுக்குள்  சிக்கி மூச்சி முட்டுவதுதான் இக் கதை அளிக்கும் வாசிப்பின்பமா?   மீண்டும் சொல்கிறேன் கருணையே அற்ற கதை.
முந்தைய கட்டுரைஆலய அழிப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசங்கர மடங்களும் அத்வைதமும்