இன்னொரு செப்டெம்பர் ஐந்து

FB_IMG_1505016362255

அன்புநிறை ஜெ,

இரண்டு செப்டெம்பர் ஐந்துகள்… படித்தேன். என் வாழ்வின் மிகச் சிறந்த தினமும் ஆசிரியர் தினம்தான்-சென்ற வருடத்து (05-09-2016) செப்டம்பர் ஐந்து – சிங்கையில் முதன்முறையாக உங்களை சந்திக்கக் கிடைத்த தினம். சொல்வளர்காடு நித்தம் மலர்ந்து கொண்டிருந்த நாட்கள்.நீங்கள் தங்கியிருந்த அறையில் வந்து சந்தித்தோம். அங்கிருந்து தொடங்கிய இந்த ஒரு வருடம் எண்ணற்ற மாற்றங்களையும் திறப்புகளையும் அளித்திருக்கிறது.

அந்த சந்திப்புக்கு முன் வரை வாசித்தவையும் அதன் பிறகு வாசித்தவையும் கற்றவையும் வேறு வேறு தளங்கள் என்றே கூறலாம். தன் பாதையில் சுற்றிக் கொண்டிருந்த எலக்ட்ரான் அடுத்த சுழற்சிப் பாதைக்குத் தாவிய quantum leap போல நிகழ்ந்த மாற்றம். ஒரு வருடம்தானா ஆகியிருக்கிறது என்று மிக வியப்பாக இருக்கிறது. அன்றாடம் செல்லும் வழியின் கல்லும் மரமும் கூட மனதில் பதிந்து அணுக்கமாகி விடுமல்லவா. எழுத்தின் வாயிலாக உணரும் அணுக்கம் ஒரு வருடத்தை மிக நீண்ட காலமாக விரித்து ஒவ்வொன்றையும் ஆழப் படிய வைத்திருக்கிறது..

வாசிப்பு அதன் முன்னரும் நிகழ்ந்து கொண்டுதானிருந்தது. எனில் கற்பாறை தடவும் காற்றுப் போல மேம்போக்கான பல வாசிப்புகளைக் கடந்து கற்றலின் முறையை தங்களிடம் நேரில் உரையாடிய முதல் தினத்திலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த முதல் சந்திப்பே அசையாது ஓரிடத்தில் வேர்பிடித்து அமர்த்திய ஆறு மணி நேரம்.

அன்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது எனது ஊர் மதுரை அருகே நாகமலை என்று சொல்லிவிட்டு அருகே ஒரு சமண மலை இருக்கிறது என்று அடையாளம் கூறினேன். அது குறித்த ஒரு நீண்ட உரையாடலில் தான் அருகர்களின் பாதை குறித்த அறிமுகமே எனக்கு உருவாயிற்று என்று கூறலாம்.

அதன் முன்பு வரை பக்திப் பாடல்கள் பரவலாக்கி வைத்திருக்கும் சமணர்களைக் கழுவிலேற்றிய கதையும், சம்பந்தருடன் அனல் புனல் வாதக் கதைகளுமாக மட்டுமே சமணர்கள் அறிமுகம் – அதுவும் மிக எதிர்மறையான ஒரு சித்திரம் மட்டுமே.

அன்று நீஙகள் வரலாற்றை அணுக வேண்டிய முறை குறித்து விளக்கியது ஒரு கதவைத் திறந்தது. எந்த ஒரு தனி வரலாறும் அந்தப் பிராந்திய வரலாறு இயைய வேண்டும்; அது தேசிய வரலாற்று வரைபடத்தில் பொருந்த வேண்டும்; அந்தத் தகவல்கள் உலக வரலாற்றோடு ஒத்திசைய வேண்டும் – என்ற இந்த அடிப்படைப் பார்வையை நம் கல்வியோ புத்தகங்களோ கற்றுத் தருவதில்லை. உங்களுடனான முதல் சந்திப்பின் முதல் மணித்துளியிலேயே இது ஆழமாகப் பதிந்தது.

வாசிப்பையும் எழுத்தையும் ஞானத்தின் தேடல் என்ற நோக்கோடு இடைவிடாது நிகழ்த்திக் கொண்டிருக்கும் உங்கள் ஞான வேள்விக்கு முன் அடிபணிந்து என்னை முழுமையாக ஒப்புக் கொடுத்திருக்கிறேன். அதன் ஒரு துளியேனும் என்னில் நிகழுமெனில் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உணர்வேன்.

எழுத்தாளன் குரு அல்ல – அவன் பறந்து கொண்டிருக்கும் நிலை அவன் எழுத்து, கீழிறங்கியதும் தயக்கங்களும் மயக்கங்களும் அவனுக்குண்டு என்று பல முறை சொல்லியிருக்கிறீர்கள்.

ஏணியில் ஏறிக் கொண்டிருப்பவன் சென்றடைந்தவன் அல்ல என்ற உங்கள் வரிகள் எனக்குப் புரிகிறது. எனினும்

சிறு கற்பாறை ஊர்ந்தேறிக் கொண்டிருக்கும் சிற்றெறும்புக்கு குன்றில் ஏறுபவனே ஆதர்சமாகவும் வழிகாட்டியாகவும் தெரிகிறது.

ஏறும் குன்றனைத்தும் இமயமே என்ற நம்பிக்கையோடு இந்த எறும்பும் ஊர்ந்து கொண்டிருக்கிறது.

மிக்க அன்புடன்,

சுபா

***

அன்புள்ள சுபா

ஆம், சென்ற ஆண்டு இதேபொழுதில் சிங்கப்பூரில் இருந்தேன். விரைந்து சென்றுவிட்டது காலம். நினைத்துப்பார்க்கையில் அருமையான நாட்கள். தொடர்ந்து நண்பர் சந்திப்புகள், உரையாடல்கள்.

1984 டிசம்பரில் நான் காசர்கோட்டில் ஓர் இளைஞனாக வேலைக்குச் சேர்ந்தேன். ஒருபுதிய ஊரில் வாழ்க்கையை ஆரம்பிப்பதன் உற்சாகம் பதற்றம். அதை மீண்டும் சிங்கப்பூரில் அடைந்தேன்

இனியநினைவுகளுக்கு நன்றி

ஜெ

***

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் அறம்
அடுத்த கட்டுரைநம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்