நவகாளி யாத்திரை வெளியீடு

gandhi card copy

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

காந்தியம் தோற்கும் இடங்கள் என்ற தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரை எங்களின் மனதுக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு விடையாகவும் புதிய மடைதிறப்பாகவும் அமைந்தது.அதில் நீங்கள் குறிப்பிடும் நவகாளி யாத்திரை குறித்த சொற்கள் தான் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கான முக்கிய காரணம் .இயல்வாகை பதிப்பகத்தின் வழியே வெளியிடப்படும் இந்த புத்தகத்தினை யானை டாக்டர் புத்தகத்தை போலவே அனைவருக்கும் கொண்டு சேர்த்திட உறுதி கொண்டு உள்ளோம் .

காந்தி என்கிற கருத்தின் காலஅவசியம்…

கடந்தவருடம் வரை குளத்துக்கரை களிமண்ணை எடுத்து கைப்பட பிள்ளையார் செய்து கும்பிட்டுக்கொண்டிருந்த புளியானூர் கிராமத்துக் குழந்தைகள் இம்முறை மிதமிஞ்சிய விலைக்கு பாரிஸ் சாந்து விநாயகரை வாங்கிப் பூஜித்து ஊர்ப்பொது ஏரியில் கரைத்து வழிப்பட்டு மகிழ்ந்ததை நேர்காண்கிறோம். ஓராண்டு இடைவெளிக்குள் ஒரு மரபுத்தொடர்வு அறுந்து பழங்கதையாக மாறிவிட்டிருக்கிறது. பக்தி என்பது வெளிக்காட்டல் என்றளவில் சுருங்கித் தேய்கிறது. கடவுள் சாயம் கலந்த நீரில் செத்து மிதக்கின்றன மீன்கள் முதல் சிறு நீருயிரிகள் வரை எல்லாமும்.

அதிகார நிறுவலுக்குள்ளும், வணிக விழுங்களுக்குள்ளும் ஆன்மீகம் சரிந்து உள்விழுவதை சமகால நிகழ்சம்பவங்கள் வெளிச்சமிடுகிறது. வழிபடுதல் ஒரு விளம்பரநிலைக்கு கீழ்மைப்படுத்தப் பட்டிருக்கிறது. புண்ணியங்கள் தரப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. எளிய அறங்கள் கூட சந்தைபடுத்தப்பட்டு சீரழிவில் ஆழ்கிறது.

கூட்டுமனப்பான்மைக்கும் ஒற்றைப்படத்தன்மைக்கும் இடையில் ஊசலாடியே தரைப் பெயர்கிறது சமூகம். மதங்கள் உருவாக்கும் தனிப்படுத்தல்கள், தவிர்க்கமுடியாத ஒன்றை நியாயப்படுத்தும் தர்க்க உரையாடல்கள், அடையாளங்களைத் துறந்து கடந்துபோவதில் உள்ளெழும் சிக்கல்கள், நம்பிய ஒன்றின் மீதான கண்மூடித்தனங்கள் என இவ்வாழ்வில் நாம் அடையும் அத்தனை உணர்ச்சிகளையும் அதற்கான மீட்சிகளையும் ஒரு மையப்புள்ளியில் வைத்து நம்மால் உற்றுநோக்க முடிந்தால் இந்திய பண்பாட்டைப் பொறுத்தவரை அது ஒற்றை மனிதனாக உருத்திரளும். அது காந்தி.

நவகாளி யாத்திரை – இரத்தமும் சதையும் கொப்பளிக்க சக உயிர்கள் அழிதொழிக்கப்பட்டு மனிதப் பகைமையின் உச்சமாக இந்நிலத்தில் நிகழ்ந்த குரூரம் நவகாளி கலவரம்.

தன்னுடைய ஆன்மபலத்தை மட்டும் நம்பி அங்குசென்று அங்குள்ள மனங்களுக்குள் அமைதியை துளிர்ப்பித்த காந்தியின் கால் நடையாகப் பயணித்த யாத்திரையின் சிற்றறிமுகம் இந்நூல்.

சாவியின் எளிமையான உரைநடைக் கட்டுரைகளும், கோபுலுவின் ஓவியக் கோடுகளும் இப்புத்தகத்தை சிறிதும் உறுத்தாமல் உயிர்படுத்தியிருக்கிறது.  காந்தி மண்ணில் வீழ்ந்து உயிர்துறந்த காலகட்டத்தில் வெளியானது இந்நூலின் முதற்பதிப்பு.

கருத்தாக காந்தியை அகப்படுத்தும் சிற்செய்கையாக இயல்வாகை ‘நவகாளி யாத்திரையை’ பதிக்கிறது. பேரமைதிக்கான முதல் மெளனமாக மாறட்டும் இம்மலர்வு.

இடம் : தென்பரங்குன்றம் சமண குகைக்கோயில்,மதுரை.

நாள்: 06.09.2017 காலை 7 மணி முதல்.

முந்தைய கட்டுரைஅலெக்ஸ் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈர்ப்பதும் நிலைப்பதும் பற்றி…