கழிவின் ஈர்ப்பு

DSC_0101

மலம் – சிறுகதை

கழிவின் ஈர்ப்பு, மந்தணம் பொதிந்து நாசியில் சுழல்கிறது. இது நான்! நான்! என அகம் கொப்பளிக்கும் பொழுது அதன் வழு வழுப்பில், மஞ்சள் குமிழும் தோல் நிறத்தில், சொத சொதப்பாய் வெண்மையில் படிந்த திட்டுக்களிலுமிருந்து அருவருப்பு வந்து கப்புகிறது. என் குதம் வழி அடையும் சுகத்தில் லயிக்க முனையும் போதே துர் நாற்றத்தின் ரகசிய கூர் உகிர்கள் நெறிக்கிறது. பின் கழுவுவதற்கு என் விரல்களால் தொடுகையில் நுனிகள் கூசி நடுங்குகிறது. அன்றாடச் செயலை இத்தனை அழுத்தமாக அவதானிக்க முயன்றதில்லை. கழித்து முடிந்ததும் கிண்ணத்தில் மிதக்கின்ற என்னை நான் திரும்பிப் பாராது ஒரு நாளும் சென்றதில்லை. ஏன் குரு நாதரின் உடல் மஞ்சள் வண்ணமாய் மாறியது. முழுக் கோளமாய் வியாபிக்கும் இருமையில், அழகுணர்ச்சியும் அருவருப்பும் ஒன்றை ஒன்று கவ்வ விளையும் சர்ப்பச்சுருள்களாய், கனலெரியும் கண்களுடன் குத்திட்டதை உணர்ந்தேன். அழகான பெண்ணைக் காணும் பொழுது, அவளது கழிவறையின் நாற்றம் முகத்திலறைகிறது. வெண்மை ததும்பும் கிண்ணத்தின் வனப்பு, அதில் கழிவிருக்கையில் புணரும் சுகம், கலவி நாற்றம் சலனிக்கும் சிறிய அறையில் என்னை நானே புணர்ந்து மயங்குகிறேனா என்ற பதற்றமும், மூழ்கத் தத்தளிக்கும் அலைவும் ஒருங்கே அகத்தில் அதிர்வுற்றது.

வெற்றுப்பாதையை, ஆள் அரவமில்லா மண் நிலத்தில் யாரோ வருகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாவது, அந்த பாதைக்காகவே வடிவமைந்த எருமையின் உருவமும் மடத்தின் தனிமையின் அலகுகள், போதியில் புண் ஒழுக்கின் சீழ் நாற்றத்தின் வாதையை மீள் செய்து சன்யாசத்தின் பாவனைகள் உதிர்ந்து பதை பதைக்கிறது எளிய மனம். வலி எனும் வல்லமையில் மனிதன், மலத்தில் புழுக்களாய் நெளிவுறும் காட்சிப்பிழை தோன்றி மறைந்தது. சப்தமின்றி என் கழிவறைக் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டே மலமிருக்கும் விளையாட்டை ஒரு முறை செய்ய முயன்றேன். என் நிர்வாணம் எந்த நேரத்திலும் யாரும் பார்த்து விடலாம் என்ற அவசரத்தில் கிண்ணத்தில் அமர்ந்து மலம் பீய்ச்சுகையில் மரணத்தின் சுகம். அவனும் அதற்காகத்தான் ஏங்கினானா? மாட்டு ஈக்கள் ரீங்கரிக்கும் கருத்த மலத்தின் அடர்ந்த இரைச்சல் கூட என் செவிகளில் உறைந்தது. தனிமையின், வெறுமையின், சலிப்பின் நிலைத்தன்மையின் பட்டவர்த்தமான வாழ் நாளில், மனிதன் செய்வதற்கு என்ன உண்டு, ஏழு முறை குளிக்கலாம் விதவிதமாய். நகங்களை சுத்தம் செய்து, கசாப்புகடைக்காரனின் லாவகத்தில் அதை அழுத்தி நறுக்கலாம். தலை மயிரை தினம் தினம் வழித்துக் கொள்ளலாம். ஆனால் எப்பொழுதும் இந்த இதே நிகழ்வுகள், இதே பாவனைகள். கழுவித் துடைத்த இதே சம்பாசனைகள்.

கொப்பளிக்கும் அகம் நேர் எதிர் நிலையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதுவே தம் நிலையான பாவனையை தொடர்ந்து நிகழ்த்துகிறது. சொந்த நம்பிக்கைகள் துடைத்தெறியும் காலம் வரை நம் நேர் நிலை பாவத்தை விட்டு விடத் துணிய மாட்டோம். சுத்தத்தின் எதிர் நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் போது, திரும்ப சுத்தத்தையே அவர்கள் நம்பினார்கள். அதனால் தான் நடுனடுங்க யாரும் அறியாமல் கழிக்கும் போதையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் வாழ்வினை மிகக் கூர்மையாக வாழ முற்பட்டார்கள். அதனால் தான் கழிவறையிலேயே குருவின் உயிர் போனது. எங்கு இதன் உச்சவழுக்கள் முடிவடைந்து பாதாளம் நுழைகிறது. சுத்தத்தின் அதீதத்தில் ஜோதி சுவாமியை சந்தேகித்து பிடிபட்டால், அந்த அரசிலைக் கிண்ணத்தை முத்தமிட வைக்க வேண்டும் என்ற வெறி அவர்களுள் கிளம்புகையில் மறுபக்கம் சாய்கிறார்களா? பின் அவர்களே முட்டையின் உள் ஓடு போன்ற வெளிர்மையில் மஞ்சள் படியும் கணத்தில் உருவான மனவெழுச்சியில் இருமையின் சுவர்கள் உடைந்து எல்லையின்மை உண்டானது போல உணர்ந்தேன்.

அது முடிவிலியாய் மனித அகத்தில் என்றும் இருக்கும். நாம் ஒவ்வொரு முறை பிரித்தறிய முயலும் தோறும் மிக வலுவாக அவைகள் மோதி இறுகிக் கொள்கிறது. கனத்து கனத்து வரும் அன்றாடம் முறிந்து சாகசம் செய்யும் நோக்குடன் அதிலேயே திளைக்க முயல்வோம். ஆனால் நாம் அந்த இருமைகளை உள்ளூற வெறுக்கவும் செய்கிறோம் என்பதில் தான் பிறள்கிறது. அவர்கள் கழுவாமல் விட்டுச் செல்லும் மலக்குழிகள் அவர்களுக்குள் நொதிக்கிறதா? தன் சொந்த அகத்தின் அசுத்தத்தின் கசிவினை வெளியில் உணர்ந்ததால் தான் புறத்தை ஒரு நிலைத்த சுத்தத்தில் மூழ்கடிக்க முயல்கிறோமா!

தெரியவில்லை. இருமை தொங்கும் சுருக்குகளில் தன்னைத்தான் முடிச்சிட்டுக் கொண்டு பிதுங்க முனைவதின் அர்த்தமின்மையும், அபத்தப் பரிகாசமும் கடிகார நொடி முள்ளின் முடியாத அலையாட்டமாய் மௌனத்தைக் காவு கேட்கிறது.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார்.

***

உச்சவழு ஒரு கடிதம்
பெருங்கனவு – நந்தகுமார்
சகரியாவின் ‘இதுதான் என்பெயர்’
ஒற்றைக்காலடி
ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்
முந்தைய கட்டுரைகைவிடப்படும் மரபு
அடுத்த கட்டுரைவரையறைகள் பற்றி..