யானைடாக்டர்- மொழியாக்கம், பிரசுரம்

image

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நான் பலப்பல நாட்களாக உங்களுக்கு “யானை டாக்டர்” குறித்து கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். கதையின் தாக்கம் என்னுள் சற்றே குறையட்டும் என்றெண்ணி காத்திருந்ததோ வீண்.

 

வலியைப் பற்றிய Dr.V.K வின் கருத்தாகட்டும், அருவருப்பை அவர் புழுவின் கோணத்திலிருந்து  கண்ட விதமாகட்டும், சிம்பிளான மருத்துவ சிகிச்சை கொடுப்பது ஆகட்டும், சமூக மற்றும் அரசியல் அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்டு தன்னளவில் மனநிறைவிற்கும் சந்தோஷத்திற்கும் உண்மையாக உழைத்த இவர் பலருக்கும் ரோல் மாடல் தான். இவரை வாசகர்களுள் அழகாய் செலுத்திய உங்கள் எழுத்து நடையை இங்கே பாராட்டாமல் இருக்கவே முடியாது.

 

யானை டாக்டர் படித்ததில் இருந்து என் கணவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் “life ல ஒரு தடவையாவது Dr.V.K வ மீட் பண்ணனும்னு” அவர் இறந்து 15 வருடங்கள் ஆகின்றன என சமீபத்தில் அறியும்வரை. ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு இந்த அனுபவத்தை கண்டிப்பாக கடத்துவோம்.

 

அழுவது என்பது எனக்கு சற்றும் பிடிக்காது அதுவும் பெண்கள் அழுதால் பிடிக்கவே பிடிக்காது. யானை டாக்டர் படித்து முடித்ததும் வெகு நேரம் என்னையும் இழந்து அழுது கொண்டே இருந்தேன். நல்ல வேளை அப்போது பக்கத்தில் யாருமில்லை!

 

மிருகங்களுக்கும் குழந்தைகளுக்கும் யார் உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் என பிரித்தறியும் அறிவு உண்டு என்ற என் நம்பிக்கையை இக்கதை மேலும் வளர்த்தது. யானைகள் மீது மதிப்பும், இயற்கை வழி வாழ்வு மீது எனக்கிருந்த பற்று அதிகப்படுத்தவும் “யானை டாக்டர்” ஒரு முக்கிய காரணம்.

 

நன்றிகளுடன்,

ரம்யா.

 

அன்புள்ள ரம்யா,

யானைடாக்டர் மலையாளத்தில் வெளிவந்தபோது மாத்ருபூமி பதிப்புக்கு நசீர் முன்னுரை எழுதியிருந்தார். அவரே ஒரு யானைடாக்டர் என்றார்கள். அவர் தன் வாழ்நாளை காட்டுயிர்களுக்காக அர்ப்பணம் செய்தவர். அத்தகைய பலர் நம்மைச்சூழ்ந்திருக்கிறார்கள். அறிய நாம் விழிதிறந்திருக்கவேண்டும், அவ்வளவுதான்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

யானைடாக்டர் ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளனவா? என் தமிழறியாத நண்பர்களுக்கு பரிந்துரைப்பதற்காகக் கேட்கிறேன்

 

டாக்டர்.செல்வக்குமார்

 

அன்புள்ள செல்வக்குமார்

பல மொழியாக்கங்கள் உள்ளன. ஒப்புநோக்கச் சிறந்தது  Tim Wrey செய்தது. இன்றைய நவீன ஆங்கிலப்புனைவுமொழியில் அமைந்துள்ளது

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

யானைடாக்டர் தமிழில் மலையாளத்தைப்போல தனியாக பல பதிப்புகளாக வெளிவந்துள்ளதா?

முகுந்த் நாராயணன்

 

அன்புள்ள முகுந்த்

என் நண்பர்கள் பலபதிப்புகளாக இலவசப்பிரதிகளாக வினியோகம் செய்துள்ளனர். குக்கூ போன்ற அமைப்புகள் வெளியிட்டுள்ளன. தனிநபர்களும் வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தமாக லட்சம்பிரதிகளை எட்டியிருக்குமென்று படுகிறது

முன்பு தீர்த்தமலையின் கழிவுகளைப்பற்றி எழுதியிருந்தேன். அதைப்பார்த்து விலங்குமருத்துவர் பழனி இளைஞர்களைச் சேர்த்து அந்த பகுதியைத் தூய்மைசெய்தார் என செய்தி வந்தது.

கோயில் பகுதியில் குவிந்த கழிவுகள் குறித்து எழுத்தாளர் வலைப்பதிவு: தன்னார்வலர்களின் தீவிர பணியால் தீர்த்தமலை புதுப்பொலிவு

பழனி அவர்கள் யானை டாக்டரை தன் நண்பர்களுக்காக வெளியிடுகிறார். அதற்கு நான் எழுதிய முன்னுரைக்குறிப்பு இது

 

“முன்னுதாரண மனிதர்கள் கண்ணுக்குத்தெரியாமல் ஆகிவிட்ட காலகட்டம் இது.
முன்பு இலக்கியங்களும் கலைகளும் அவர்களை முன்னிறுத்தின. இலக்கியம்
கேளிக்கையாகவும் அரசியலாகவும் உருமாறிவிட்டிருக்கின்றது இன்று. ஊடகங்கள்அனைத்தும் பரபரப்புகளை நாடுகின்றன. முன்னுதாரணமான மாமனிதர்கள் என்றுமிருப்பார்கள். நம் கண்களுக்கு அவர்கள் தட்டுப்படுவதில்லை, அவ்வளவுதான்.

 

அவர்களில் ஒருவர் டாக்டர் கே. அவரை வரலாற்றின்முன் அடுத்த தலைமுறையின்முன் கொண்டுசென்று நிறுத்துவதே இச்சிறுகதையின் நோக்கம். இதுநாம் இங்கே என்னவாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நாம் என்னவாக ஆகமுடியும் என்றும் சுட்டுகிறது

இதை பிரசுரிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைதி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பதும் பார்ப்பதும்