மன்மதன் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

“மன்மதன்” சிறுகதையை திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். கிருஷ்ணன், சிற்பங்களைக் பார்ப்பது போல நான் இந்தக் கதைகளின் வரிகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். உங்களுக்கேயுரிய பிறிதொன்றில்லாத விவரணை மொழி. துடைத்து வைத்த விளக்கைப் போல மினுங்கும் சொற்கள். பளபளக்கும் வார்த்தைகள் கூரிய வாட்களாய் கற்பனைக்குள் பாய்கின்றன. கண்களில் இருந்து வழுக்கி வழுக்கி விழும் பெண், அவளுடைய மார்புகள் அசைந்தபோது கிருஷ்ணனின் அகத்தில் கட்டிடங்களும் கோட்டைகளும் அதிர நிலம் நடுங்கும் அனுபவம், இவை யாவும் வாசிப்பவரின் அனுபவமாகவும் ஆகின்றன.

கலையின் அனுபவத்தைத் துய்க்க கண்கள் கூட தேவையில்லை என்ற கோணத்திலும் கதையை வாசிக்கலாம். கலையைத் துளி மிச்சமில்லாது ரசிப்பவனுக்கு அக்கலையே சூட்சுமமான கண்களை அளிப்பதுதான் கலையின் தனித்துவமான பேரனுபவம். இருபது வருடங்களாக சிற்பங்களைப் பார்த்து வரும் கிருஷ்ணன் ஒரு கண்ணில்லாத எளிய ரசிகனின் (“பாக்குறதுன்னாலே என்னான்னு தெரியாது சார்”) முன் தோற்கும் இடம் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவரை ஒரு பேரழகியை கண்ணில்லாத இந்த இளைஞன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து கிருஷ்ணனுக்குள் ஏற்படும் ஏதோ ஒரு கசப்பு கதையின் இறுதியில் கரைந்து போகிறது. கலையும் காமமும் ஒன்றுதானே. அந்த நுட்பமான அனுபவங்களைத் துய்க்க கண்கள் என்ற தூலமான உறுப்பை விடவும் கற்பனை என்ற சூட்சுமமான உறுப்பு ஒன்று போதுமே என்ற உணர்வை வாசிப்பவனுக்கு ஏற்படுத்துகிறது கதை.

கலையையும் காமத்தையும் ரசிக்கையில் தான் ஒரு தனித்துவமான ரசிகன் என்ற அகந்தையுடன் ரசிக்க நேர்கையில் நாம் பலவற்றைத் தவற விடுகிறோம், எந்த வித அகந்தையுமற்று ஒரு குழந்தை போல கலையின், காமத்தின் பேரொழுக்குக்கு தன்னை ஒப்புக் கொடுத்துக் கொள்ளும் ஒருவனே அதன் மெய்யனுபவத்தை அடைகிறான். குறத்தியும் அவனது தோளில் இருக்கும் அந்த இளவரசனும் உயிரோடு அலையும் ரூபங்களாக மல்லியின் வடிவிலும், ராஜுவின் வடிவிலும் கிருஷ்ணனுக்கு அறிமுகமாகிறார்களோ என்றும் தோன்றுகிறது. ஆம். ராஜுவை மல்லி ஒருபோதும் தன் தோளிலிருந்து இறக்கிவிட மாட்டாள். ரதியின் சிற்பம்தான் மன்மதனைப் பார்க்கவில்லை. ஆனால், மல்லி ராஜுவை எப்போதும் பார்த்துக் கொண்டேதான் இருப்பாள்.

“முல்லை அரும்பை பிடிக்கிற மாதிரி அதைப் பிடிக்கணும்னு சொல்றது சார் இந்தச் செலை” என்று ராஜு சொல்லிமுடிக்கவும், அவள், “மாமா, அரும்பு கட்டி தூண்பக்கத்துல வச்சிருக்கேன்” என்று சொல்லும் இடத்தில் மனம் அதிர்ந்தது. மன்மதன் சிற்பத்தின் அம்புக்கோ ஒரு அரும்புதான் இலக்கு. இந்த ரசிகனுக்காக காத்திருப்பவை எத்தனை அரும்புகள்! இத்தனை அரும்புகள் அவனுக்காக காத்திருக்கும் போது மன்மதனுக்குத்தான் ஆயுதத்தின் தேவை எதற்கு?

மிக்க அன்புடன்,

கணேஷ் பாபு

சிங்கப்பூர்

 

அன்புள்ள கணேஷ்

 

மன்மதன் கதையின் மையம் ஒரு சொல். அனங்கன் என்றால் மன்மதன். உடலிலி. சிவன் அவன் உடலை எரித்ததனால்.

உடலே தேவையில்லை!

ஜெ.

 

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நேற்று தான் “மன்மதன்” சிறுகதையைப் படிக்க நேர்ந்தது.

 

கிருஷ்ணன் அழகான காம உணர்வுடன் மல்லியை கண்டது ரசிக்கும்படியே இருந்தது. ஒரு படைப்பாளியால் மட்டுமே காமத்தை இவ்வளவு அழகாக வர்ணிக்க முடியும்.

 

“பெயர்கள்” பற்றிய உங்கள் பதிவினை படித்த அன்றே மன்மதனையும் படித்தேன். ராஜு கிருஷ்ணனிடம் முதல்முறை பேசும்போது “கும்பிடறேன் சாமி” என்றவுடன் எனக்கும் ஏதோ தவறு என்று தான் தோன்றியது.

 

எவ்வளவு காதல் மல்லிக்கு ராஜு மேல். கண் தெரியாத தன் கணவன் முன் வேறொரு ஆண் தன்னை வித்தியாசமாக பார்க்கிறான் எனத்தெரிந்தும், மல்லி தன் பார்வையை சற்றும் விலக்காமல் ராஜூவை மட்டுமே பார்த்து பேசுவது அருமை.

 

எவ்வளவு நம்பிக்கை ராஜுவிற்கு தன் (தொழில்) மேலும், தன் மனைவி மேலும்! ராஜு வாழ்க்கையை ரசித்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். “மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடயாது சார்அந்த கரும்புவில்லும் மலரம்பும் மட்டும் தான் ” எனும்போது ராஜூவே மன்மதன், மல்லியே ரதி ஆகி நிற்கிறார்கள்.

 

 

இப்படிக்கு,

ரம்யா.

 

 

அன்புள்ள ரம்யா,

 

ஒரு சிறுகதை என்பது வாசிப்புகளின் சாத்தியங்களால் ஆனதே. ஆகவே எல்லா வாசிப்பும் ஒட்டுமொத்த வாசிப்பை விரிவாக்குவதே நன்றி

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82
அடுத்த கட்டுரைஇருத்தலியல்,கசாக் -கடிதங்கள்