விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்

அன்பிற்குரிய ஜெயமோகன்,
வணக்கம். பெருமாள்முருகன்.

சமீபகாலமாக இணையத்தைக் கொஞ்சமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன்.

விஷ்ணுபுரம் விருது ஆ.மாதவன் அவர்களுக்கு வழங்க உள்ள செய்தி கண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆ.மாதவனின் எழுத்துக்களில் எனக்கும் ஈடுபாடு உண்டு.

இத்தகைய விருது ஒன்றை உருவாக்கியமைக்கும் முதலில் ஆ.மாதவன் அவர்களைத் தேர்வு செய்தமைக்கும் பாராட்டுக்கள்.

உங்கள் செயல்பாடு பேருவகை தருகிறது.

அன்புடன்
பெருமாள்முருகன்,
www.perumalmurugan.blogspot.com

நாமக்கல் ‘கூடு’

அன்புள்ள பெருமாள் முருகன்,

உங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. வெறும் ஒரு நண்பர் குழாமாக இருக்கலாம் என்பதற்கு மேலாக ஏதாவது செய்யலாமென நினைத்தபோது இந்த எண்ணம் வந்தது. உங்கள் கடிதம் ஊக்கமூட்டுவதாக இருந்தது

நீங்கள் நிகழ்ச்சிக்கு வந்தால் மிகவும் மகிழ்வேன்.

ஜெ

அன்பிற்குரிய ஜெயமோகன்,
செயலூக்கம் உள்ள நண்பர் குழாம் நல்ல காரியத்தில் ஈடுபட்டிருப்பதைச் சந்தோசத்தோடு பலரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இலக்கியப் பரிசு இப்படி ஒரு நல்ல தொகையுடனும் அமைவது தமிழ்ச்சூழலில் அபூர்வமான விஷயம்.

என்னுடைய நாவல் ஒன்று ஜனவரியில் வெளிவர உள்ளது. அந்த வேலையில் இருக்கிறேன். முடிந்து விட்டால் விருது விழாவிற்கு வர முயல்கிறேன்.

அன்புடன்,

பெருமாள்முருகன்

===============================

திரு ஜெயமோகன் அண்ணனுக்கு வணக்கம்,

தமிழில் நீண்டகாலம் எழுதிவருபவரும், மிகச்சிறந்த சிறுகதைகளைப் படைத்தவரும்,நாவலாசிரியரும், இதுவரை சரியாகக் கண்டுகொள்ளப்படாதவரும்,  நல்ல மனிதருமாகிய திரு ஆ.மாதவன் அவர்களுக்கும் விஷ்ணு புரம் இலக்கியவட்ட விருது வழங்க ஏற்பாடு செய்தமைக்கும் நன்றி.

நட்புடன்,
சுதாகர்.ப

அன்புள்ள சுதாகர்,

நன்றி. ஆ.மாதவன் போன்ற படைப்பாளிகளைக் கௌரவிக்கும்போது நாம் செயல்பட்டுவரும் இந்த படைப்புச்சூழலையே கௌரவிக்கிறோம். இது நமக்காக நாம் செய்துகொள்வதே

ஜெ

==================-==============================================

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் இலக்கிய விருதுகளை நீங்களும் நண்பர்களும் வழங்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. நெடுநாட்கள் முன் திண்ணை இணைய இதழிலே நீங்கள் ஒரு நல்ல இலக்கிய விருது அமைக்கப்படவேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். உங்கள் வாசகர்கள் உங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்த்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. விருதின் நோக்கமும் உயர்வானதே. ஒரு விருது ஏன் அளிக்கப்படுகிறது என்பது முக்கியம். விருதுகளை அள்ளிவழங்குவது தமிழிலே ஒரு வழக்கமாக இருக்கும் நேரத்தில் முறையான கௌரவத்துடன் அளிக்கப்படும் விருதுக்கு மரியாதை அதிகம்

என்னைக்கேட்டால் ஒரு இலக்கியவாதிக்கு மிகச்சிறந்த விருது என்பது நல்ல இலக்கிய விமர்சகன் அவரைப்பற்றிய விரிவான கட்டுரையை எழுதுவதே . ஆ.மாதவனுக்கு அதை நீங்கள் முன்னரே செய்துவிட்டீர்கள். தமிழினி வெளியீடாக வந்த ஆ.மாதவன் கதைகளுக்கு நீங்கள் எழுதியிருக்கும் பின்னுரை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இலக்கியவிமர்சனக் கட்டுரைகளில் ஒன்று. தமிழில் பல இலக்கிய முன்னோடிகளுக்கு நீங்கள் மட்டுமே விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் என்ற உண்மையயும் நினைத்துக்கொள்கிறேன். ஆனால் ஆதவனைப்பற்றி நீங்கள் ஒன்றும் எழுதவில்லை என்பது வருத்தம்

இலக்கிய விருதுகளை ஒரு அமைப்போ அறக்கட்டளையோ கல்லூரியோ கொடுப்பதை விட நாடறிந்த இலக்கிய விமர்சகன் கொடுக்கும்போதுதான் அதற்கு பொருத்தம் அமைகிறது என்பது என்னுடைய எண்ணம். அவனுக்குத்தான் தெளிவான அளவுகோல்கள் இருக்கும். இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்

சிவம்

அன்புள்ள சிவம்

நன்றி. இந்த விருதை ஓர் இலக்கிய விமர்சகன் என்ற நிலையில் இருந்தே முடிவுசெய்கிறேன். ஆகவேதான் விருதுடன் ஒரு நூலும் வெளியாகிறது. விருது பெறுபவரின் தகுதியைப்பற்றிய மதிப்பீடு- அறிக்கை அது. சொல்லப்போனால் விருதை விட அந்நூலைத்தான் முக்கியமானதாக கருதுவேன்

ஜெ

=====================================================

அன்புள்ள ஜெ சார்

நான் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்னுடன் பேசும் சிலர் ஆ.மாதவனுக்கு நீங்கள் விருது அளிக்கக்கூடாது என்றார்கள். ஏனென்றால் அவர் மூத்த எழுத்தாளர் என்று சொன்னார்கள். விஷ்ணுபுரம் பேரில் விருந்தளிப்பது பொருத்தம் அல்ல என்றார்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புச்செல்வம்

அன்புள்ள அன்பு

மூத்த படைப்பாளிக்கு அவரைவிட மூத்த படைப்பாளிதான் விருதளிக்க வேண்டுமா? அப்படியென்றால் 80 வயதான யாராவது செய்தாகவேண்டும்

மூத்த படைப்பாளியைக் கௌரவிக்க வேண்டியவர்கள் இளைய தலைமுறையினரே. அந்த மூத்த படைப்பாளியின் வழித் தோன்றல்களாகத் தங்களை உருவகித்துக் கொள்பவர்கள். தங்களை அவருடன் இணைத்து அடையாளம் காண்பவர்கள். நம் இல்லப் பெரியவர்களை நம் கௌரவிப்பது போல!

விஷ்ணுபுரம் யார் சொன்னாலும் மறுத்தாலும் தமிழின் முதன்மையான இலக்கிய ஆக்கம். அதன் முக்கியத்துவத்தை மிகச்சிலரே இன்று உணர முடியும். தமிழில் என் வாசகர்குழு ஒன்று உருவாகும்போது அது விஷ்ணுபுரம் பெயரில் அமைவது மிக இயல்பானதே

இம்மாதிரி சில்லறைக் குரல்களை அலட்சியமாகத் தாண்டிச்சென்றே நான் அடைந்தவற்றை நெருங்கியிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைவிக்கிலீக்ஸும் நீரா ராடியாவும்
அடுத்த கட்டுரைமாதவம்