ASYMPTOTE பரிசு -கடிதங்கள்-2

q

ஜெ அவர்களுக்கு

வணக்கம்..

மனமார்ந்த வாழ்த்துகள்..

பெரியம்மாவின் சொற்கள் படித்தேன்..மிக எளிமையானது போல் தோற்றம் கொள்ளும் ஆழமான கதை..

ஆற்றின் நீரோட்டக்குளுமையில் கை வைப்பது போல் படிக்க படிக்க, நானும் அப்பெரிய வீட்டில் அமர்ந்து உரையாடலை கவனிப்பது போல் உணர்ந்தேன்..

“Thankful என்று சொல்லலாமா? நாய்களைப்பற்றி அப்படிச் சொல்வதுண்டா? இல்லை grateful? ஆனால் அதெல்லாம் நாயின் குணமா? அச்சொற்களை நான் என் விண்ணப்பக் கடிதங்களில்தான் கையாண்டுவந்தேன்.” இவ்வரிகள் உங்களின் முத்திரை..

“அவ அங்க உள்ள குட்டியில்லா? அந்த ஊரிலே பொம்புளைக மனசுக்குப் பிடிச்சவன கெட்டிகிட்டு மானம் மரியாதயா சந்தோசமா இருக்காளுக” என்றாள்.”

இவ்வரிகள் போகிற போக்கில் சொல்வதைப் போல் இருந்தாலும், மிகப் பெரிய உண்மையை படிப்பவர் மனதில் விசையுடன் இறக்குகிறது..

பெண்ணின் மன உணர்வுகளை, பெண்கள் புரிந்து கொள்ள மொழி தேவையில்லை.. எந்த சமூகக் கட்டுப்பாடும், பெண் மனதை ஒன்றும் செய்து விட முடியாது.. அவர் மண ஊர்வலத்துக்குப் பின் காரில் ஏறவேயில்லை என்பது, கொள்ளுப் பேத்தியின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள எந்த விதத்திலும் தடையாய் இல்லை..

மிக அழகு ஜெயமோகன்..

மற்றொரு முறை பெண்ணின் மன உணர்வுகளை நுட்பமாய் சித்தரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்..

பவித்ரா

***

அன்புள்ள பவித்ரா,

நன்றி. இன்று இங்கே இலக்கியச்சூழலில் இலக்கியவாசிப்பு மிகமேலோட்டமானதாக மாறிக்கொண்டிருக்கிறது. படைப்பின் அர்த்தவிரிவை நோக்கிச் செல்பவர்கள் குறைந்துவருகிறார்கள். பெரியம்மாவின் சொற்களே கோவையில் ஒர் இலக்கியச்சந்திப்பில் ’ஆங்கிலத்தில் அருமையான சொற்கள் உள்ளன, அது தெரியாமல் எழுதப்பட்ட கதை’ என ஓர் இளம் விமர்சகரால் விமர்சிக்கப்பட்டதாக அறிந்தேன். அந்த வகையில் இந்தப்பரிசு முக்கியமானது. வாசிப்பு என்றால் என்ன என்று ஓர் அடிக்கோடு போடப்பட்டுள்ளது

ஜெ

***

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

பெரியம்மாவின் சொற்கள் சர்வதேச விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ரசித்துப் படித்த சிறுகதை. நகைச்சுவைக்கு அப்பால்அது உணர்த்துகின்ற அர்த்தங்கள் பல. மொழி வெளிப்படுத்துகிற அர்த்தங்கள் பண்பாட்டுடன் எவ்வளவு பிணைந்திருக்கிறதுஎன்பதையும் ,அதே சமயம் மனித உணர்வுகள் மொழி கடந்து அனைவரையும் இணைக்கின்றன என்பதையும் அழகாக சொல்லும் கதை. என் எழுத்தாளர் சர்வதேச விருது பெருவதும், தமிழ் கதைகள் சர்வதேச.கவனம்.பெருவதும் மிகுந்த உவகை அளிக்கிறது. வாழ்த்துக்கள்
அன்புடன்
A.ராமகிருஷ்ணன்

***

அன்புள்ள ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,

நன்றி. பரிசு என்பதைக்காட்டிலும் அக்கதை நுட்பமாகப் புரிந்துகொள்ளப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. அது எழுத்தின் சர்வதேசத்தன்மை குறித்த ஓர் உறுதிப்பாட்டை அளிக்கிறது

ஜெ

***

அன்புள்ள ஜெ.மோ அவர்களுக்கு,

பெரியம்மாவின் சொற்கள் சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு கிடைத்திருக்கிறது என்பதை வாசித்த கையோடு இதை எழுதுகிறேன்.

உலகத்தில் தன் துறையில் இவ்வளவு காதலோடு ஈடுபாடோடு உழைக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதுவும் பத்துப்பைசா லாபம் பெறாத தமிழிலக்கியத்திற்கு உடல்,உயிர் உருக்கி ஆன்மாவையே இறக்கி வைத்து எழுதும் உங்கள் இலக்கியத்தின் மீதான காதலை என்ன சொல்ல‌.

எங்கிருந்து இந்த சலியாத ஊக்கம் கைவரப் பெறுகிறது என்பது நினைத்து புருவமுயற்றி இருக்கிறேன். சில மாத‌ங்களுக்கு முன்பு உங்களுக்கு ‘சோம்பல் களைவது எப்படி ‘ என்ற மின்னஞ்சல் எழுதியிருக்கிறேன்.

உங்கள் உழைப்பையும் ஈடுபாட்டையும் எங்கள் ஐடி துறையில் தர‌ முடிந்தால், உங்கள் சம்பளத்தை எண்ண மெஷின் தேவை.

என்ன சொல்ல தலைவா, நீ லாம் வேற லெவல். இமயமலையில் காலைச் சூரியனில் முதல் கதிர்கள் விழும்போது ஓர் அத்வைத நிலை மனதில் பூக்குமே அதே மகோன்னதத்தோடே எப்பொழுதுமே உங்களை காண்கிறேன்.

உங்கள் உழைப்புக்கு விருதுகள் இணையா என்ன? இது அத்வைதம் இது. ஆதி சங்கரர் பல நூறு வருடங்களுக்கு முன் வெற்றுப் பாதங்களோடு காஞ்சியில் இருந்து காஷ்மீரம் போனாரே அதே காதல் இருந்தால் மட்டுமே இத்தகைய உழைப்பு சாத்தியம்.

அன்புடன்,

கார்த்திக்.

***

அன்புள்ள கார்த்திக்

நன்றி.

தமிழின் இன்றைய சூழலில் இலக்கியம் என்பது அந்தரங்கமான சில குறிப்புகளோ அன்றாட நிகழ்ச்சிகளின் தொகையோ அல்ல என்றும், அது ஓரு பண்பாட்டுத்தேடல் என்றும் சொல்லவேண்டியிருக்கிறது. இப்பரிசு அதற்கு ஒரு வழியாக அமைந்தால் நன்று

ஜெ

***

அன்புடன் ஆசிரியருக்கு

பொதுவாக உங்கள் புனைவுகளில் எப்போதுமே ஒரு சர்வதேச தன்மையை அல்லது மானுடம் தழுவிய பார்வையை உணர முடியும். சமகாலத்தை பிரதிபலிக்கும் உங்களது புனைவுகள் பெரும்பாலானவற்றில் கன்னியாகுமரியின் வழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிருப்பதால் உங்கள் எழுத்தின் விரிவை தேர்ந்த வாசகர்கள் மட்டுமே உணர முடிகிறது. உலகம் யாவையும் யானைடாக்டர் வெள்ளையானை போன்ற படைப்புகளில் வெளிப்படையாகத் தெரியும் தீவீரமும் கரிசனமும் பெரியம்மாவின் சொற்கள் போன்ற படைப்புகளில் மிக ஆழத்தில் பொதிந்துள்ளது.

ஒரு பக்கம் பெரியம்மாவுக்கும் கதை சொல்லிக்குமான காதல். அதாவது பெரியம்மா ஒத்து கொள்ள மறுக்கும் காதல் அல்ல! Bond போன்ற காதல். பிறகு இரண்டு மொழிகளும் தழுவிக்கொள்ளும் அழகு. கொசுவும் மஸ்கிட்டோவும் குடையும் அம்ப்ரல்லாவும் போல. அதன்பின் கிறிஸ்துவும் ராமனும் ஹெலனும் திரௌபதியும் அக்கிலிஸும் அர்ஜுனனும் ஹெக்டரும் கர்ணனும் என ஒவ்வொருவரும் தழுவியபடியே உள்ளனர். சுசித்ராவின் மொழிபெயர்ப்பு மூலத்தை வாசிக்கும் உணர்வைத் தருகிறது.

பெருமிதமாக உணர்கிறேன்.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள சுரேஷ்,

இந்த விருது எனக்கு முதலில் எழுப்பிய எண்ணம் ஒன்றுண்டு. தமிழ்ச்சூழலின் பெரிய கேடுகளில் ஒன்று நுண்ணுணர்வில்லாத டம்ப வாசகர்கள், உள்ளீடற்ற விமர்சகர்கள். இங்கு வரும் ஒரு நல்ல கதையை மிக எளிய அளவிலேகூட புரிந்துகொள்ள அவர்களால் இயலாது. ஆனால் உலக இலக்கியம் வாசிக்கிறோம் என்று பாவனைகாட்டுவார்கள். இங்குள்ள படைப்புக்களை மட்டம்தட்டுவது வழியாக, அதற்குச் சில வெளிநாட்டுப்பெயர்களை உதிர்ப்பதன்வழியாக, தங்களை மேலே நிறுத்திக்கொள்ள முயல்வார்கள்.

என்னைப்போல இப்படிப்பட்டவர்களின் இரண்டு தலைமுறைகளைக் கண்டவர்களுக்கு கேலிக்குரிய முயற்சியாகவே இது தெரியும். ஆனால் உங்களைப்போன்ற இளம்படைப்பாளிகளுக்கு இவர்கள் ஆழமான தாழ்வுணர்ச்சியை உருவாக்கிவிடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மேலைநாடுகளில் இலக்கிய உச்சங்கள் நிகழ்கின்றன போலும், நாமெல்லாம் ஒன்றுமே இல்லையோ என்ற பதற்றம் ஏற்படுகிறது அவர்களிடம்

இது மேலைநாட்டுப் பாணிகளை நகல் செய்யும் இடத்துக்கு நம்மைக் கொண்டுசெல்லும். நாம் மட்டுமே எழுதக்கூடிய தனித்தன்மைகொண்ட படைப்புக்களை நாம் எழுதத் தயங்குவோம். இந்தப்போலிகள் நுண்ணுணர்வற்றவர்கள் என்பதனால் இங்குள்ள போலி எழுத்துக்களை முன்வைக்கவும் செய்வார்கள். உளம்சோர்ந்து நாம் எழுதவேண்டியதை நாம் கைவிட நேரிடும்.

இத்தகைய அங்கீகாரங்கள் நமக்கு அளிப்பது ஒரு செய்தியை—நாம் எழுதும் நல்ல படைப்புக்கள் உலகளவில் எழுதப்பட்ட எந்த மிகச்சிறந்த படைப்புகளுக்கும் நிகரானவையே. நாம் மட்டுமே எழுதக்கூடிய நமது படைப்பை மட்டுமே ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ உள்ள நிபுணர்கள் மதிப்பார்கள். அவை உடனே அவர்களிடம் சென்றுசேராமல் போகலாம், இங்குள்ள சூழல் அத்தகையது. ஆனால் நாம் நமது தன்னம்பிக்கையை இங்குள்ள போலிகளைக் கண்டு இழந்துவிடக்கூடாது.

பெரியம்மாவின் சொற்கள் வெளிவந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. இங்கே எவராவது அதைக் கவனித்தார்களா,புரிந்துகொண்டார்களா என்று பாருங்கள். நாம் நின்றிருப்பதற்கு மிகமிகக்கீழே நின்றிருப்பவர்கள் இவர்கள். இவர்களை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் முன்செல்லும் விசை இளைய எழுத்தாளர்களிடம் எப்போதுமிருக்கவேண்டும்

ஜெ

***

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு
டேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்
ASYMPTOTE பரிசு -கடிதங்கள்


முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60
அடுத்த கட்டுரைவெண்முரசு புதுவைக் கூடுகை -6