இடதிலக்கியம் கடிதங்கள் 2

na muthu
பேரா ந. முத்துமோகன்

 

அன்புள்ள ஜெ

முற்போக்கு இலக்கியம் பற்றிய விரிவான வரைபடத்துக்கு நன்றி. எப்போதும் நீங்கள்தான் ஒட்டுமொத்தமான சித்திரத்தை அளிப்பவராக இருக்கிறீர்கள். சுருக்கமான கட்டுரை என்றாலும் முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன, அதன் முன்னோடிகளில் எவர் எவர் முக்கியமானவர்கள் என விரிவாக அறிமுகம் செய்கிறீர்கள். மொழியாக்கம், இதழியல், கோட்பாடுவிவாதம் சார்ந்து அதில் செயல்பட்டவர்களை விரிவாகப்பட்டியலிடுகிறீர்கள் உங்கள் பட்டியலில் ந.முத்துமோகன் இல்லை என்பதை ஒருமுக்கியமான விடுபடலாக கருதுகிறேன்

 

கதிர் செல்வராஜ்

 

அன்புள்ள கதிர்,

நன்றி ந.முத்துமோகன் குறித்தும் எனக்கு சில குழப்பங்கள் இருந்தன. நான் பேசிக்கொண்டிருப்பது மார்க்சியக் கோட்பாட்டு –தத்துவ -அரசியல் விமர்சனங்களைப்பற்றி அல்ல. இலக்கியம் பற்றித்தான். அதில் அ.மார்க்ஸ், ந.முத்துமோகன் ஆகியோருக்கு என்ன பங்களிப்பு? ந.முத்துமோகன் மார்க்ஸிய தத்துவ இயல் சார்ந்துதான் பேசியிருக்கிறார் என நினைக்கிறேன். அவ்வகையிலேயே எஸ்.தோதாத்ரி அவர்களையும் மதிப்பிடுகிறேன்

என்னவாக இருந்தாலும் இது ஒரு விவாதத்தை உருவாக்கி இந்த வரலாறு கூர்மை அடைந்தால் நல்லதுதான்

 

ஜெ

ler
லிர்மந்தோவ்

 

அன்புள்ள ஜெ,

இடதுசாரி இலக்கியம் பற்றிய உங்கள் கட்டுரையை பல முறை வாசித்தேன். மிகச்சுருக்கமாக ஐம்பதாண்டுக்கால இடதுசாரி இலக்கிய வரலாற்றுப் பரிணாமத்தை பெரும்பாலும் அத்தனை முன்னோடிகளையும் குறிப்பிட்டு எழுதிமுடித்துவிட்டீர்கள். இடதுசாரித்தரப்பில் இருந்து இப்படி ஒரு முழுமையான தொகுப்பு இன்றுவரை வரவில்லை. ஆனால் இனி உங்களை கண்டபடி வசைபாடிவிட்டு இதே பட்டியலையும் இதே காலவகைப்படுத்தலையும் பட்டி டிங்கரிங் பண்ணி தாங்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். எங்கும் இந்தக்கட்டுரையை மேற்கோள்காட்டமாட்டார்கள். இதைப்பற்றி இடதுசாரி நண்பர்கள் பேசுவதைக் கேட்ட அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்

ஜெகதீசன்

 

அன்புள்ள ஜெகதீசன்,

சற்று முன் ஒரு நண்பர் எழுத்தாளர் முருகவேள் நான் லிர்மந்தேவ் பற்றி குறிப்பிட்டிருந்ததை கிண்டலடித்து எழுதியிருந்ததைப்பற்றிச் சொன்னார். அதாவது லிர்மந்தோவ் 1841ல் இறந்துவிட்டாராம். அப்போது இடதுசாரி அரசியலே இல்லையாம். ஆகவே அவர் முற்போக்கு எழுத்தாளர் அல்லவாம். .இப்படித்தான் இங்கே விவாதங்கள் நிகழ்கின்றன.

ஐம்பதுகளில் சோவியத் ருஷ்யாவில் சோஷலிச யதார்த்தவாதம் இடதுசாரி எழுத்தின் அழகியலாக முன்வைக்கப்பட்டபோது முன்னுதாரணமான படைப்பாளியாக முன்வைக்கப்பட்டவர் லிர்மந்தோவ். அதையொட்டி இங்கு எண்பதுகள் வரை கட்சிக்கூட்டங்களில் கார்க்கி. லிர்மந்தோவ்,ஐத்மாத்தவ்  ஆகியோர் முன்னுதாரண இடதுசாரி எழுத்தாளராக முன்வைக்கப்பட்டார்கள். [முறையே அரசியலை எழுத, வரலாற்றை எழுத, அடித்தள வாழ்க்கையை எழுத]

அவரை இடதுசாரி அரசியல்கொண்டவர் என நான் சொல்லவில்லை. சொன்னவர்கள் சோஷலிச யதார்த்தவாத கோட்பாட்டாளர்கள். அந்த முன்னுரையுடன்தான் அது ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.  அன்று எந்த ஒரு இடதுசாரி இலக்கிய அமைப்பிலும் இவர்களின் ஆக்கங்களே பரிந்துரைக்கப்பட்டன– எனக்கும்தான். ஒரு இருபதாண்டுகளுக்கு முன்புவரைக்கூட இங்கே இடதுசாரி எழுத்து எனப் பேசப்பட்டதை அறிந்த ஒருவர் முருகவேள் போல எழுதமாட்டார்.

என் கட்டுரை ஒரு பெரிய முன்வரைவை அளிக்கிறது. அதற்கான முற்கோள்களை உருவாக்குகிறது. மாற்றுத்தரப்பில் நின்றபடி விமர்சனங்களை முன்வைக்கிறது. அதை ஒட்டியும் வெட்டியும் பேச எவ்வளவோ இருக்கிறது. பலகோணங்களில் விரித்துக்கொண்டுசெல்லமுடியும். ஏன் இவர்களால் இவ்வகையில் ஒரு கட்டுரையை எழுதமுடியவில்லை என்பதை இவர்கள் இதன் மேல் உருவாக்கும் இத்தகைய அற்ப விமர்சனங்கள் வழியாகவே நாம் உணரலாம்.

ஜெ

 

இடங்கை இலக்கியம்
இடதிலக்கியம் – கடிதங்கள்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50
அடுத்த கட்டுரைஇந்த மாபெரும் சிதல்புற்று