காந்தி காமம் ஓஷோ

ஓஷோ தன் உரைகளில் மனதின் இரட்டை நிலைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் காந்தியை இழுக்கிறார் என்றே தோன்றுகிறது. மனம் நிச்சயமாக ஒருவழிப்பாதை இல்லை என்று ஏராளமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.

இந்தியாவின் பழமைவாத ஒழுக்கம் என்பது எப்பொழுதும் மனதின் ஒருவழிப்பாதையைப் பற்றி மட்டுமே பேசி வந்துள்ளது. ஒரே ஆணை வாழ்நாளெல்லாம் பூஜித்து வருவது, ஒருவனுக்கு ஒருத்தி, எத்தனையோ பொய் சொல்ல வேண்டிய தருணங்களிலும் வற்புறுத்தி உண்மையே பேசுவது, கோபம் பொத்துக்கொண்டு வரும் போதெல்லாம் அதை அடக்கி வைப்பது, சாந்தமாகப் பேச முயற்சி செய்வது. இதன் உச்சநிலையாக இயல்பாகக் கடந்து செல்ல வேண்டிய பாலுணர்வை, அடக்கி, காயப்படுத்தி, ஒரு நோயாளி போல் திரிவது. இந்த ஒருவழிப்பாதையில் மனம் பயணம் செய்தால்தான் வாழ்க்கை ஒரு நேர்கோடு போல சரியாக இருக்கும் என்பது தர்க்க மனதின் ஒரு தேற்றம்.

ஆனால் நிஜத்தில் மனம் இரட்டை நிலையைக் கொண்டுள்ளது. அதற்கு செக்ஸ் தேவைப்படுகிறது. கோபம், பொய், கபடம், வஞ்சம், வன்மம் எல்லாம் அதில் கலந்துள்ளது. ஒன்றின் இருப்பை இன்னொன்று ஞாபகப்படுத்துவது போல், சரியானது எப்பொழுதும் தவறானதை ஞாபகப்படுத்தி விடுகிறது. அதனால் இரட்டை நிலையைப் புரிந்துகொண்டவர்கள் சமன்நோக்கு பற்றி சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள்.

காந்தி தனது சுயசரிதையில் சொல்வதாக எப்பொழும் ஓஷோ குறிப்பிடுவது, தான் 20 ஆண்டுகளாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வந்தாலும் இப்பொழுதும் தூங்குவதற்கு முன்னால் பாலுணர்வு எண்ணங்களில் இருந்து மனதைக் காக்க புத்தகங்களை கண்சொக்கும் வரை படிக்க வேண்டியதிருக்கிறது என்று காந்தி கூறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனிதன் மனதின் இரட்டை நிலையை இத்தனை வருடங்களாகப் புரிந்து கொள்ளாமல் இப்படியா பாலுணர்வை ஒரு குளவிக்கூடு போல ஆக்கிக் கொள்வான் என்கிற ஆதங்க நிலையாகக் கூட இருக்கலாம்.

காந்தி உடலையும், மனதையும் வற்புறுத்துவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர். அவர் நிச்சயமாக ஒரு ஆன்மீக எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. ஆனால் காந்தி தான் எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்துக்காக எடுத்துக்கொண்ட நேர்மை அதீதமானது. அந்த அளவுக்கே அவரைக் கொண்டாடலாம்.

தன் பிரியத்திற்குரிய நானி இறந்தபோதுகூடக் கண்ணீர்விடாத ஓஷோ, காந்தி இறந்தபோது தாரை தாரையாகக் கண்ணீர் விட்டதாகக் கூறியுள்ளார். எதனால் அப்படி என்று தனக்கே விளங்கவில்லை என்று கூறியுள்ளார். காந்தியின் உடலைப் பார்ப்பதற்காக ரயிலேறிச் சென்றதாகக் கூறியுள்ளார். ஓஷோவின் தந்தை இந்தக் காட்சியை எல்லாம் பார்த்துவிட்டு உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறியதாகக் கூட எழுதியுள்ளார்.

ஓஷோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில்,

காந்தி ஏன் தனக்குத் துணையாக இரண்டு பெண்களை அருகில் வைத்துக் கொண்டார், என்று கேட்கப்பட்டது. அதற்கு ஓஷோவின் பதில்,

இது காந்தி பிரம்மச்சரியத்தில் செய்த மாபெரும் புரட்சி என்று எழுதியுள்ளார்.

அதாவது பிரம்மச்சரியத்தின் உச்சம் என்பது பெண்கள் மீதான முழுதான காமம் கடந்த நிலை, அந்நிலையில் பெண்களை அருகில் வைத்துக் கொள்வதில் எந்தவிதமான உள்மனக் குத்தலும், தயக்கமும் இல்லாமல் இயல்பாக காந்தியைப் போல் இருக்கமுடியம் என்பதாக அதன் அர்த்தம் என்றே நினைக்கிறேன்.

ஓஷோவின் காந்தி மீதான சில நுண்மையான வாதங்களை அவதானிக்கும்போது, அவருக்கு காந்தியின் நேர்மை மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்ட ஆதங்கம் மட்டுமே விரவலாக அவருடைய பேச்சில் தெரிவதால் காந்தியை வசைபாடுகிற ஓஷோவே பரவலாகக் காணப்படுகிறார்.

காண்டேகரின் யயாதி நாவலில் ஒரு இடத்தில் முகுலிகை (பணிப்பெண்) கூறுவாள், தன்னிடம் வரமாட்டேன் என்று முதல்நாள் கூறிவிட்டுச் சென்ற யயாதி (அரசன்), மறுநாள் அவளிடம் சரசம் செய்வதற்காக வந்து நிற்பான், ஆனால் முகுலிகை அவன் வரவை எதிர்பார்த்து தன்னை தயார்செய்து கொண்டு வாசலிலேயே நிற்பாள். யயாதி கேட்பான்,‘நான்தான் வரமாட்டேன் என்று சொன்னேனே, நீ எப்படி எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாய்”? அதற்கு முகுலிகை கூறுவாள்,

‘ஆண்களைப் பொறுத்தவரை பெண்களிடம் அவர்களின் பதில் வாயிலிருந்து வருவதில்லை கண்களிலிருந்துதான் வருகின்றன, நேற்று நீங்கள் பார்த்த பார்வையில் வருவேன் என்றுதான் கூறினீர்கள்.’

முகுலிகையைப் போல் அவதானிக்கத் தெரிந்தால், ஓஷோவுக்கு காந்தியின் நேர்மை மீதான மதிப்பு வெளிப்படையாகத் தெரியும் என்றே நினைக்கிறேன். அவரின் காந்தி மீதான வசவு, மனதின் இரட்டை நிலை மீதான வசவு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

-சூர்யா

அன்புள்ள சூர்யா,

உங்கள் கடிதத்தில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடே. சில மேலதிகக் குறிப்புகளை மட்டும் கொடுக்க விரும்புகிறேன், நான் முன்பே எழுதியவைதான்.

காந்தி கடைப்பிடித்த காமம் சார்ந்த நோக்கு என்பது இந்தியாவின் பழமைவாத அணுகுமுறை அல்ல. இந்தியாவின் மரபு காமத்தைப் பார்த்த விதம் மூன்று தளங்களில் இருந்தது எனலாம்.

ஒன்று சாதாரண மனிதர்களுக்கான அன்றாட ஒழுக்க நோக்கு. அது காமத்தை ஒரு பெரும்பாவமாக எண்ணி அதற்கு எதிராக புலன்களை இறுக்கி மனதை நெருக்குவதல்ல. முடிந்தவரை அதைச் சீண்டாமல் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது மட்டுமே. மனதை வேறுவிஷயங்களில் திசைதிருப்புவதும், காமத்தைக் கலையாக உன்னதப்படுத்திக்கொள்வதும் அதன் உத்திகள்.

இரண்டாவது தளம் துறவிகள் மற்றும் யோகிகளுக்குரியது. அது முழுமையான ஒரு பயிற்சியாக பல படிகளாக இங்கே வளர்ந்திருந்தது. காமத்தை அவதானிப்பது, அதைக் காமத்தைவிட பெரிய மனநெகிழ்வுகள் மூலம் விலக்குவது, சிந்தனைத்தளத்தில் அதை அற்பமானதாக சுருக்கிக்கொள்வது, அதற்கான உடல்சார்ந்த பயிற்சிகள், அதற்குரிய அக-புறச்சூழல்களை உருவாக்கிக் கொள்வது எனப் பல நடைமுறைவழிகள் அதற்குண்டு.

மூன்றாவது தளம் தாந்த்ரீகம். காமத்தைக் குறியீடாக ஆக்கிக்கொள்வது, அக்குறியீட்டுச் செயல்பாடுகள் மூலம் அதைக் கடந்துசெல்வது என அதற்கான வழிகள் இருந்தன.

இம்மூன்று வழிகளுக்குள்ளும் காந்தியின் காமம் சார்ந்த எண்ணங்களும் சோதனைகளும் அடங்காது. காந்தியின் காமம் சார்ந்த மனப்படிமம் அவரது குடும்பத்தின் சமணப்பின்னணியில் இருந்து வந்தது. அவரது ஆரம்பகால குருவான ராஜ் சந்திராவிடமிருந்து கற்றுக்கொண்டது. ஆனால் அவரிடமிருந்து புலனடக்கத்தை ஒரு யோகமாக முழுமையாகக் கற்க காந்திக்கு வாய்க்கவில்லை.

காந்தி இளவயதிலேயே பழகிய மேலைச்சூழலே காமம் சார்ந்த அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைத்ததில் பெரும்பங்கு வகித்தது. அவர் சமணத்தின் தரிசனத்தை விக்டோரிய ஒழுக்கவியலுடன் கலந்துகொண்டார். பிரம்மசரியம் என்பது யோகம். காந்தி அதைக் கிறித்தவமரபின் மூர்க்கமான புலனொறுத்தலுடன் இணைத்துக்கொண்டார்.

காந்தியின் பிரம்மச்சரிய சோதனைகளில் நிகழ்ந்த கொந்தளிப்புகளின் காரணம் இதுவே. ஒரு யோகமாகச் செய்யவேண்டியதை வெறும் பயிற்சியாகச் செய்தார். கடைசி காலத்தில் யோகப்பயிற்சிகளை முறையான குருவழிகாட்டல் இல்லாமல் செய்ய ஆரம்பித்தார்.

ஆனால் ஒன்றுண்டு, காமத்தைப்பற்றிய அறிதலில் காந்தி எந்த அளவுக்குத் தவறான முன்னுதாரணமோ அந்த அளவுக்கு ஓஷோவும் தவறான முன்னுதாரணம்தான். ஓஷோ சொன்னவை எல்லாமே எதிர்வினைகள். அதாவது காமத்தை அஞ்சி ஒடுங்கிய ஆசாரவாத மனதுக்கு அவர் அளித்த எதிர்ப்பு மட்டும்தான் அவை.

ஓஷோ காமம் பற்றிச் சொல்பவை எல்லாமே வெறுமே வாசிக்கவும் அரட்டையடிக்கவும் மட்டுமே உகந்தவை. அதற்கு அப்பால் எவராவது அதை முயற்சி செய்தால் முதல்படியிலேயே படுதோல்வியை உணர்வார். அது அவரை மனச்சிக்கல்களுக்கே கொண்டுவந்து சேர்க்கும்.

அதாவது காந்தி சொன்ன மூர்க்கமான காம ஒடுக்குதல் எந்த அளவுக்கு அபத்தமானதோ அதே அளவுக்கு அபத்தமானது ஓஷோ சொன்ன காமத்தை விடுதலைசெய்து அவதானிக்கும் வழிமுறை. ஓஷோவை வாய்க்கு அவலாக இல்லாமல் உண்மையாக அவதானித்தவர்கள் மிக விரைவிலேயே இதை அறிவார்கள்.

காந்தியின் வழிமுறையைக் கடைப்பிடித்தவர் இறுக்கமான மனிதராக ஆவார். ஆனால் அவர் அந்த அர்ப்பணம் காரணமாக பல தளங்களில் வெற்றியை சாதிக்க முடியும். ஆன்மீகதளத்திலும் மக்கள்சேவை தளத்திலும். அப்படி சாதித்த பலரை நாம் காணமுடியும்.

ஆனால் ஓஷோ சொல்லும் வழியைக் கடைப்பிடித்தவர் தன் ஆளுமையை இழப்பார். வெறும் கேளிக்கையாளராக, உணர்வடிமையாக ஆவார். காமத்தால் முற்றாக விழுங்கப்படுவார். ஓஷோவின் மாணவர்களில் ஒருவர் கூட எதையும் அடையவில்லை. மிகப்பெரும்பாலானவர்கள் மிகச்சீக்கிரத்திலேயே அவரை நிராகரித்தனர். மிச்சப்பேர் போலிகளாக ஆனார்கள்.

சொல்லப்போனால் காந்திக்கும் அவருக்கு நெருக்கமான பெண்களுக்கும் இடையேயான உறவை விட ஓஷோவுக்கும் அவரது பெண்களுக்கும் இடையேயான உறவென்பது வன்முறையும் சுரண்டலும் நிறைந்ததாக இருந்தது. ஒரு பெண்ணிடமும் ஓஷோ நல்லுறவை அடையமுடியவில்லை. முதல்முதலாக மா ஆனந்த ஷீலா ஓஷோவைப்பற்றி அளித்த பேட்டி என்னை அதிரச்செய்ததை நினைவுகூர்கிறேன்.

ஏன்? காமம் ஒருபோதும் தனித்துச் செயல்படுவதல்ல. காமம் எப்போதும் அகங்காரத்துடன் கலந்தது. உங்கள் சொந்த அந்தரங்கப் பகற்கனவுகளை மட்டும் கவனியுங்கள் புரியும். காமம் மட்டும் என்றால் அதற்கு ஓர் எல்லை உண்டு. அகங்காரம் அதை எல்லையற்றதாக ஆக்கிவிடுகிறது. ஒரு கண்ணாடி முன் இன்னொரு கண்ணாடியை வைத்தால் இரண்டுமே எல்லையற்றதாக ஆகிவிடுவதுபோல.

காமத்தின் இந்த எல்லையற்ற தன்மையே அதை அபாயகரமானதாக ஆக்குகிறது. ஓஷோ சொன்னார் என வெள்ளந்தியாக காமத்தை அறிவதற்காக அதில் இறங்குபவன் கடலில் இறங்கிய உப்பு பொம்மையாகவே ஆவான்.

காமத்தை அறிவால் அவதானிக்க மனிதனால் முடியாது. அகங்காரத்தால்தான் அவதானிப்பான். காமம் மனித மனத்தின் அகங்காரத்தைச் சீண்டி அதை விதவிதமான பாவனைகள் கொள்ளச்செய்கிறது. காமத்தை வெல்கிறேன், காமத்தை அவதானிக்கிறேன் என்ற பாவனைகளும் அவற்றில் சிலவே.

காமத்தைக் கடந்துசெல்ல இந்திய மரபு உருவாக்கிய வழிமுறைகள் நூற்றாண்டுகள் பழமையானவை. பல்லாயிரம் பேரால் பல கோணங்களில் பயிலப்பட்டு மேம்படுத்தப்பட்டவை. அவை நூல்வடிவில் இல்லை. கொள்கைகளாக இல்லை. அவை ஆசாரங்களாகவும் பயிற்சிகளாகவும் உள்ளன. ஒரு நேரடிகுரு இன்றி அவற்றுக்குள் எவரும் செல்லமுடியாது.

ஓஷோவின் நூல்களின் சிக்கலே இதுதான். அவை இந்திய தாந்த்ரீக மரபில் மிக நுட்பமாகச் சொல்லப்பட்டவற்றின் மிக எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்கள். அவற்றை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு சும்மா பேசிக்கொண்டிருக்கலாம்.

பெரும்பாலானவர்கள் பேசிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதுதான் ஆறுதலானது. பேச்சு பேச்சாக இருக்கும் வரை ஆபத்தில்லை.

ஜெ

காந்தியும் விதவைகளும்

ஆலயங்களில் காமம்

மேலதிக வாசிப்புக்கு முந்தைய கட்டுரைகள்

தேவியர் உடல்கள்

இங்கிருந்து தொடங்குவோம்…

எம்.எஃப்.ஹுஸெய்ன், இந்து தாலிபானியம்

தாந்த்ரீகமும் மேலைநாடுகளும்: கடிதம்

பொம்மையும் சிலையும்

தாந்திரீகம் பற்றி

காந்தியும் காமமும் – 4

காந்தியும் காமமும் – 3

முந்தைய கட்டுரைகிரிமினல் ஞானி
அடுத்த கட்டுரைபௌத்தம் கடிதங்கள்